தினமணி கதிர்

திருக்குறள் ஒப்புவிப்பதில் உலக சாதனை!

எஸ்.​ பால​சுந்​த​ர​ராஜ்

பழந்தமிழ் இலக்கியத்தில் திருக்குறளுக்கென்று தனியிடம் உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள், இன்றைக்கும் உயிர்ப்போடு வாழ்கிறதென்றால்,  அதற்குக் காரணம், அதில் கூறப்பட்டுள்ள பல கருத்துகள் இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளதே.

உலகில் உள்ள பல மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தமிழ் படிக்கும் மாணவர்களிடையே  திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் பவளமலைப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5 } ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜெ.மோகன்குமார் 1000 திருக்குறளை 45 நிமிடம் 22 நொடியில் ஒப்புவித்து "ட்ரிம்ப் உலக ரிக்கார்டு' சான்று பெற்றுள்ளான்.

இது குறித்து அந்த மாணவனுக்கு திருக்குறள் குறித்து பயிற்சி அளித்தவரும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான வி.கௌசல்யா தேவி நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""மாணவன் ஜெ.மோகன்குமார் எங்கள் பள்ளியில் 4-ஆம் வகுப்பு சேர்ந்தான். அப்போது அவன் 200  திருக்குறள் மனம்பாடம் செய்திருந்தான். 5 -ஆம் வகுப்பு படிக்கும் முன் 500 குறள் மனப்பாடம் செய்து விட வேண்டும் என அந்த மாணவனிடம் கூறியிருந்தேன்.

கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, பள்ளி மூடப்பட்டது. எனினும் அந்த மாணவன் மனம் தளராமல், வீட்டிருந்தபடியே தினமும் 5 முதல் 10 குறள் வரை மனப்பாடம் செய்யத் தொடங்கினான்.

தினசரி மனப்பாடம் செய்த குறளை என்னிடம் செல்லிடை பேசி மூலம் ஒப்புவிப்பான். நானும் மாணவனின் ஆர்வத்தைப் பார்த்து, மாணவனுக்கு செல்லிட பேசி மூலம் குறிப்புகள் கூறி வந்தேன். 

மேலும் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை எனது வீட்டிற்கு வந்து குறளைப் படித்து ஒப்புவிப்பான். செல்லிடை பேசி மூலமாகவோ, நேரடியாகவோ ஒப்புவிக்கும் போது , தவறுகளை உடனடியாகச் சுட்டிக்காட்ட மாட்டேன். அவன் கூறும்போது என்னென்ன தவறுகள் உள்ளன என ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்துக் கொண்டு, குறள்களை கூறி முடித்ததும் அவனைப் பாராட்டி விட்டு, குறைகளைச் சுட்டிக்காட்டுவேன். 

இதனால் மாணவன் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் திருக்குறளைப் படித்து மனப்பாடம் செய்யத் தொடங்கினான். ஓர் ஆண்டு பயிற்சிக்குப் பின்னர் மோகன்குமார் 1000 திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்றான். 

அவனது திறமையை வெளி உலகத்திற்குக் கொண்டு வரவேண்டும் என சிவகாசி தொழில் நகர் அரிமா சங்கத் தலைவர் டி.சமுத்திரபாண்டியனை அணுகினோம். இதையடுத்து அரிமா சங்கத்தினர் மாணவன் குறளை ஒப்புவிப்பதை வீடியோ எடுத்து "ட்ரிம்ப் உலக ரிக்கார்டு'  சான்றளிக்கும் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்தார்கள். அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் அந்த அரிமா சங்கத்தினர் அக்டோபர் 10 - ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மாணவன் ஜெ.மோகன்குமார் , 45 நிமிடம் 22 நொடியில் 1000 திருக்குறளை ஒப்புவித்து சாதனை புரிந்தான். இதனை "ட்ரிம்ப் உலக ரிக்கார்டு'   சான்று அளிக்கும் பி.எம்.சம்பத்குமார் மற்றும் எம்.ஜெயமேரி ஆகியோர் ஏற்றுக்கொண்டு மாணவனுக்கு "ட்ரிம்ப் உலக ரிக்கார்டு' சான்றிதழை வழங்கினார்கள். 

படிப்பதற்கு மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தால், முறையாக ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தால் வெற்றி கிடைக்கும் என்பதே எனது அனுபவமாகும்'' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT