தினமணி கதிர்

திரைக்கதிர்

24th Oct 2021 06:00 AM

ADVERTISEMENT


சமீபத்தில் மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்  நடிகர் சிவகுமார். 

""1965 ஏப்ரலில் ஜெயலலிதாவின் முதல் ஜோடியாக  "வெண்ணிற ஆடை' படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார்.  ஈரோட்டில் பிறந்து, அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்து,  பாலசந்தரால் மேடை நடிகராகப் பிரபலமடைந்த வெங்கி என்கின்ற ஸ்ரீதர், "மேஜர் சந்திரகாந்த்' என்ற   நாடகத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் ஸ்ரீகாந்த். படத்தில் அறிமுகமாகும்போது அதே பெயரையே ஒப்புக் கொண்டு நடித்தார். 

நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தார். வாலி கவிதையால் கரை கண்டார். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட போது, தன் கையால் சமைத்து போட்டு, மாம்பலம் கிளப் ஹவுசில் இருவரையும் காப்பாற்றியவர் ஸ்ரீகாந்த். "சில நேரங்களில் சில மனிதர்கள்' ,

"ராஜநாகம்' போன்ற  படங்களில் முத்திரை பதித்தார்.  என்னோடு இணைந்து, "மதன மாளிகை', "சிட்டுக் குருவி', "இப்படியும் ஒரு பெண்', "அன்னக்கிளி', "யாருக்கும் வெட்கமில்லை', "நவக்கிரகம்' என பல படங்களில் நடித்தவர்'' என நெகிழ்ந்துள்ளார் நடிகர் சிவகுமார்.

ADVERTISEMENT

-----------------------------------------------------

அறிமுக இயக்குநர்  ஜி.வி.பெருமாள் வரதன் எழுதி இயக்கவுள்ள படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.  1000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னன் நந்தி வர்மன், சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார். அப்போது நடக்கும் போரில் அவர் வாழ்ந்த அந்த ஊரே பூமிக்கு அடியில் புதைந்து விடுகிறது. அந்த சம்பவத்தில் இருந்து, அந்த ஊரில் மாலை 6 மணிக்கு மேல் பல அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. அதனால் தற்போது அந்த ஊரில் வசிக்கும் மக்கள் 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். இதற்கிடையே, அந்த ஊரில் நந்திவர்மன் புதைந்த இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக தொல்லியல்  துறையினர் வருகிறார்கள். அவர்களும் ஒருவர் பின்  ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். அதன் பின்னணி என்ன என்பதே கதை. சுரேஷ் ரவி,  ஆஷா கவுடா,  நிழல்கள் ரவி, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  

-----------------------------------------------------

தீபாவளி ரேஸிஸ் இந்த முறை இணைந்துள்ளார் நடிகர் சூர்யா. வரும் நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது "ஜெய் பீம்'. நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட "ஜெய் பீம்' திரைப்படத்தின் டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது.

த. செ. ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.  பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன்,  லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

உலகம் முழுவதும்  தமிழ்,  தெலுங்கு மொழிகளில் அமேசனின் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகிறது. தங்களுக்கென சொந்தமாக நிலம் இல்லாத, தலைக்கு மேல் ஒழுங்காக ஒரு கூரையில்லாத, ஆனால் எளிமையில் சந்தோஷம் காணும் ஒடுக்கப்பட்ட அப்பாவிப் பழங்குடி மக்களின் கடின உழைப்பு நிறைந்த வாழ்க்கையைப் பற்றிய கதையை  "ஜெய் பீம்'  விவரிக்கிறது. 

இதற்கான முன்னோட்டத்தை இந்த இப்படத்தின் டீஸர் காட்டியுள்ளது. வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில்  சூர்யா நடிக்கிறார்.  ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். 

-----------------------------------------------------


முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி தன் வாழ்க்கை வரலாற்று நூலை "நெஞ்சுக்கு நீதி' என பெயரிட்டு எழுதினார்.   தற்போது அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்துக்கு "நெஞ்சுக்கு நீதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ்  இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வரும் நிலையில், "நெஞ்சுக்கு நீதி' என இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் மோஷன் போஸ்டர்  இணையதளங்களிலும், வலைதளங்களிலும் வெளியாகியுள்ளது.  உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரங்களில்  ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர்,  மயில்சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, "ராட்சசன்' சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். போனி கபூர் இப்படத்தைத் தயாரிக்கிறார்.  இசை - திபு நினன் தாமஸ்.  ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன்.  படத்தொகுப்பு - ரூபன்.  கலை - வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா.  சண்டைப்பயிற்சி -  சாம். வெகு வேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

-----------------------------------------------------


மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "கட்டில்'. இ.வி.கணேஷ்பாபு இயக்கி, தயாரித்து, நடிக்கிறார். சிருஷ்டி டாங்கே, கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதுவரை பல திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ள இப்படம், பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது.  20 நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது. 

-----------------------------------------------------

அதில் சிறந்த இயக்குநருக்கான விருதை இ.வி. கணேஷ் பாபு பெற்றார். ""காலம் முழுக்க ஜல்லிக்கட்டு காளைகளைத் தயார் செய்வதிலேயே வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், பறவைகளுக்கான ஆராய்ச்சிக்காகவே தன்னை அர்ப் பணித்தவர்கள், பாம்புகளின் புதிர்களைத் தெரிந்துக் கொள்வதையே பயணமாக்கிக் கொண்டவர்கள்... இப்படி பல மனிதர்கள் ஒரு அதிசயம் போல் நம்மைக் கடந்து கொண்டே இருக்கிறார்கள்.

 இதிலும் அப்படித்தான் ஒரு குடும்பத்தோடு பல தலைமுறைகள் கடந்து பயணிக்கிறது ஒரு கட்டில். அது சார்ந்த சம்பவங்களே கதை. எடிட்டர் பீ.லெனின் கதை,  திரைக்கதை,  வசனம் எழுதி இருக்கிறார். இப்படத்துக்காக கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளன. இதைத் தொடர்ந்து படம் திரைக்கு வருகிறது'' என்றார் இயக்குநர்.

Tags : kadhir Thiraikadhir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT