தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை நோய்... வாழைப்பழம்!

எஸ். சுவாமிநாதன்

நான் மனஅழுத்தத்தால் துன்புறுகிறேன்.சர்க்கரை உபாதை உள்ளது. மதிய உணவு சாப்பிடும்போது ஏப்பம் வருகிறது. பேயன்பழம், மலை வாழைப்பழம், பச்சை நாடா வாழைப்பழம் ஆகியவற்றை நான் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் கூடுமா?

கா.திருமாவளவன்,
திருவெண்ணெய்நல்லூர்.

மன அழுத்தம் ஏற்பட காரணங்கள் பல இருந்தாலும், அழுத்தத்திற்குக் காரணமாக விளங்கும் ரஜஸ் - தமஸ் எனும் மனோதோஷங்களின் சீற்ற வலிமையைச் சரி செய்து கொள்வதுதான் ஒரே வழி. உணவு, ஆசரணைகள், நடத்தைகள், மனதின் செயல்பாடுகள், சேர்க்கைகள் முதலியவை பரிசுத்தமானதாகவும், கேடற்றதாகவும், முன்னோர் வகுத்த நல்முறைப்படியும் கடைப்பிடிக்கப்பட்டால், உடலைச் சார்ந்த வாத, பித்த, கபதோஷங்களும், மனதைச் சார்ந்த ஸத்வரஜஸ் தமஸ்களும் நற்குணங் களைந்து உடலிலும் மனதிலும் நன்மைகளைச் செய்யும்.

மன அழுத்தத்தைக் குறைக்கும் ஸத்வகுணத்தின் முக்கிய அம்சம் புத்தி மேதை. அதனை வளர்க்கும் பிராம்ஹீ கிருதம் எனும் நெய்மருந்து, சியவனப்பிராசம் லேகியம், பிராம்ஹ ரசாயனம், திரிபலாசூரணம், வல்லாரை, அதிமதுரம், சங்கபுஷ்பீ, சிலாஜது போன்றவை புத்தி ஸத்வத்தை வளர்ப்பதுடன், உடல் தாதுக்களுக்குத் திடத்தையும் ஆரோக்கியத்தையும் நன்கு வளர்ப்பவை.

தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்படும், மெய்யே பேசுகிறவன், சினமற்றவன், கள் மற்ற லாகிரி வஸ்துவை விலக்கினவன், பிரம்மசர்யம் வழுவாதவன், அஹிம்சா விரதமுள்ளவன், தனது உடல் உள்ளத்தை துன்புறுத்திக் கொள்ளாதவன், பூரண அமைதியுடையவன், அன்புடன் பேசுபவன், ஜபத்திலும், உடல் அழுக்கை அகற்றுவதிலும் எப்போதும் ஈடுபடுபவன், தைரியசாலி, நித்யம்தானம் செய்பவன், சகல பிராணிகளையும் கருணையுடன் பார்ப்பவன், தவம்புரிகிறவன், தெய்வம், பசு, வேதியர், வித்தையைக் கற்பித்தவர், உபதேசித்தவர், முதியோர் இவர்களை முறைப்படி வழிபடுபவன், எப்போதும் கள்ளம், கபடம், பொல்லாங்கு அற்றவன், பகல் இரவு விதிப்படி விழிப்பும் தூக்கமும் உள்ளவன், என்றும் இருவேளையும் பால், நெய் சேர்த்தே உண்ணுபவன், காலதேச சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்பவன், பின் விளைவை ஊகிப்பவன், கர்வம், அகந்தையில்லாதவன், நல்லொழுக்கமுடையவன், தீயவர்களுடன் சேராதவன், புலனடக்கமுடையவன் போன்றவற்றாலும் மன அழுத்தமானது நன்கு குறைந்து சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்த உபாதைகளையும் கட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய உயர்ந்த முறைகளாகும்.

ரஜோ குணத்தை வளர்க்கும் பூண்டு, வெங்காயம், மாமிச உணவு வகைகள், மதுபானம் போன்றவையும் தமோ குணத்தைத் தூண்டும் கஞ்சா, அபின், குரோசாணி ஓமத்தின் இலை, தூக்கத்தை உண்டு பண்ணும் மருந்து மாத்திரைகள், தனிப்பாக்கு, பகலில் மிதமிஞ்சிய உறக்கம், எருமை, கழுதை, ஆடுகளின் பால், புளித்த பழைய சாதம் ஆகியவையும் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் சூழ்நிலைகளுக்கு அனுகூலமானவை என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வயிற்றின் வெற்றிடத்தில் உணவு வந்து சேரும்போது, அதன் மேற்பரப்பிலுள்ள வாயுவானது இடம் பெயரும்போது ஏப்பமாக மதிய உணவில் வெளியாகிறது. உணவிற்குப் பிறகு இரண்டு வாயுகுளிகை எனும் மாத்திரைகளை சீரக வெந்நீருடன் சாப்பிட உகந்தது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியான நிலையிலிருந்தாலும் ஏற்படும் அதிமூத்திரம் எனும் நீரிழிவு உபாதையால் உடல் வலிமைக்கு வேண்டிய இன்றியமையாத உணவுப் பொருட்கள் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் உடல் நலிவை ஈடுகட்ட பேயன் பழம், மலைவாழை, பச்சை நாடா போன்ற வாழைப் பழங்களை சிறிய அளவில் மதியம் உணவு உண்ட உணவு செரித்த நிலையில் சாப்பிடலாம். ஆனால் ஆமவாதம் எனும் மூட்டுப் பிடிப்பு உபாதை, ஜீரண சக்தியற்றவர்கள், நாட்பட்ட சர்க்கரை உபாதையால் அவதியுறும் மதுமேஹிகள் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அது அதிகப்படுத்தவே செய்யும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

SCROLL FOR NEXT