தினமணி கதிர்

திரைக் கதிர்

DIN


திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இவ்விழாவில் அவர் பேசும் போது... ""வீட்டு வாடகை என்பது மிகப்பெரிய பாரம். சில இடங்களில் ஏதோ பாகிஸ்தானில் குடி இருக்கிறோம் என்ற உணர்வு வரும். வீட்டு உரிமையாளர்கள் விதிக்கும் நிபந்தனைகள் அப்படி இருக்கும். நான் நடித்த "ஆண்டவன் கட்டளை' படத்தில் இடம் பெற்றது போல், துணி காய போடக் கூடாது. சுவரில் ஆணி அடிக்கக் கூடாது. இப்படிப் பலப்பல புதிய புதிய நிபந்தனைகள் இருக்கும். உறவினர்கள் வரக்கூடாது. வந்தால் உடனடியாகத் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் இங்கு குளிக்கக் கூடாது.. என ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பார்கள்.

அதனால் சொந்த வீடு கனவு என்பது எல்லா தொழிலாளர்களுக்கும் இருக்கும் ஒரு கனவு. அந்தக் கனவு... அந்த ஆசை... இன்று நிறைவேறத் தொடங்குகிறது. கண்டிப்பாக இந்த கனவை என்னால் மட்டும் சுமக்க இயலாது. ஏனெனில் இதற்காக செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதனால் இந்தத் திட்டம் சிறப்பாகத் தொடங்கி, சிறப்பாக நிறைவடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்'' என்றார்.

----------------------------------------------------

அமேசான் பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2- ஆம் தேதி, சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் "ஜெய் பீம்' படம் பிரத்யேகமாக வெளியாகிறது என அறிவித்திருக்கிறது. த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் "ஜெய் பீம்' படத்தை 2டிஎன்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள்.

மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்தப் படத்தில் பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மிஸ்டரி டிராமா ஜானரில் தயாராகியிருக்கும் "ஜெய் பீம்' படத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும், ஆழமாகவும் பேசுகிறது. ராஜ்கண்ணு கைதுசெய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கிருந்து அவர் காணாமல் போகிறார். விசாரணைக்காகச் சென்ற தன்னுடைய கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ராஜ்கண்ணுவின் மனைவி செங்கேணி, வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார். வழக்கறிஞர் சந்துரு உண்மையை வெளிக் கொணரவும், மாநிலத்தில் ஆதரவற்ற பழங்குடி இன பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பொறுப்பேற்கிறார். நீதி கிடைத்ததா? என்பதே கதை.

----------------------------------------------------

ஜீ5 தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளது. "விநோதய சித்தம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தம்பி இராமையா, முனிஸ் காந்த் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

சமுத்திரகனி கூறுகையில், ""மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படைக் கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்தப் படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி'' என்றார்.

தம்பி இராமையா பேசும் போது... ""இந்த கதை அனைத்து மக்களையும் இணைக்கிறது. பார்வையாளர்கள் ஒரு தத்துவ நாவலை முடிப்பது போல் உணர்வார்கள், மிகவும் விரும்புவார்கள்'' என்றார்.
 

----------------------------------------------------

இயக்குநர் ஜேம்ஸ் கிரண். ஜி இயக்கியுள்ள படம் "அந்தகா'. "அந்தகா' (அந்தகாசூரன்) என்பது சமஸ்கிருத வார்த்தை, இருளின் ராஜா என்பது அதன் பொருள். ஹாரர் காமெடி பாணியில் பயணிக்கும் இப்படம் ஒரு சைக்கோ த்ரில்லராக உருமாறி, பல ஆச்சரியங்களைத் தரும் படைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நாயகன் நாயகி இல்லாமல் வித்தியாசமான படைப்பாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, ரிலீஸýக்குத் தயாராகி வருகிறது.

ஒரு சராசரியான நபராக இருக்கும் மனிதன், தான் விரும்பிய சிறிய விஷயங்களைக் கூட அடைய முடியாத போது, அதை அடைய, எதையும் செய்யலாம் என்று முயற்சி செய்யும்போது சைக்கோவாக மாறுகிறான். அப்படியான ஒரு மனிதனின் கதை தான் இந்த படம்.

மனதில் இருளின் ராஜாவாக வாழும் ஒரு சைக்கோவின் கதை தான் இந்த படம். முற்றிலும் புது முகங்கள் நடித்துள்ள இப்படத்தில் நாயகன் நாயகி இல்லை. மூன்று பெண் கதாபாத்திரங்கள் இரண்டு ஆண் பாத்திரங்களை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படம் முழுக்க முழுக்க சென்னையைச் சுற்றி ஈ சி ஆர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ்,தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.
 

----------------------------------------------------
 

மணி தாமோதரன் பாடல்களையும் எழுதி இயக்கியுள்ள படம் "ஷார்ட் கட்'.

கே எம் ரயான் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை விஜய் கிருஷ்ணா மற்றும் மகேஷ் ஸ்ரீதர் கையாண்டுள்ளனர். படத்தொகுப்புக்கு விது ஜீவா பொறுப்பேற்றுள்ளார் கையில் சுத்தமாக பணமே இல்லாத நான்கு பேர் திடீர் "ஞானோதயம்' பெற்று அடுத்தவர்களை ஏமாற்றி ஒரே நாளில் எவ்வாறு கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்பதே இப்படத்தின் கதை. இந்த கதாபாத்திரங்களை ஸ்ரீதர், பாரி, சந்தோஷ் மற்றும் சுரேந்தர் ஆகியோர் நடிக்கின்றனர். உபாசனா, தஸ்மிகா லஷ்மன், எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன் மற்றும் "அறம்' ராம்ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சர்வதேசப் புகழ்பெற்ற டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சமூக பிரச்னைகளைப் பிரதிபலிக்கும் சிறந்த படத்திற்கான விருதை இப்படம் பெற்றுள்ளது.

மேலும், இந்த படத்தில் நான்கு கேரக்டர்களில் ஒரு கேரக்டரை ஏற்று நடித்துள்ள ஸ்ரீதர், டொராண்டோ தமிழ்ப் பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சிறந்த நடிகருக்கான (அறிமுகம்) விருதைப் பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT