தினமணி கதிர்

காப்பிக்கு கடிச்சுக்க மிளகாய் பஜ்ஜி!

எஸ். ராமன்


""நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன்... காலையிலிருந்து விழுந்து, விழுந்து எதையோ தீவிரமா தேடிக்கிட்டு இருக்கிறது, உங்க திருட்டு பார்வையிலேயே தெரியுது.  என்னிடம் மூடி மறைக்காதீங்க... எதைத் தொலைச்சீங்க?  என்ன நான் ஒருத்தி இருக்கிறது மறந்து போச்சா?'' வீட்டின் மூலை முடுக்குகளில் புகுந்து, விழுந்து, எழுந்து தீவிரமாக தேடிக் கொண்டிருந்த என்னை தேடிக் கண்டுபிடித்து சண்டைக்கு வந்தாள் அருமை மனைவி.
அவள்தான், தினமும் எதையாவது தொலைத்துவிட்டு தேடுவது வழக்கம். தொலைத்து, அவள் முன் தேடுவதை கெளரவக் குறைச்சலாக கருதுபவன் நான். அபூர்வமாக, இன்று  தொலைத்துவிட்டு, பேனாவும் கையுமாக அவளிடம் மாட்டிக் கொண்டேன். 
தொலைத்ததை மூடி மறைக்க, வசனத்தை திசை திருப்ப முயற்சித்தேன்.
""சே...சே...உன்னை எப்படி தொலைக்க முடியும்... தொலைந்து போற உருவமா இது?'' என் நாக்கில் சனி
பகவான் நர்த்தனம் ஆடினார்.
உடனே அவள் நர்த்தனம் ஆட ஆரம்பித்தாள்.
""ஆமா... தொலைக்கறதுக்கு, எந்த திருவிழாவுக்கு என்னை கூட்டிக்கிட்டு போயி, வளையல் அடுக்கி விட்டிருக்கீங்க... எனக்கு பிடிச்ச ரங்க ராட்டினத்தில் உட்கார வச்சுருக்கீங்க... பொறுத்து பொறுத்து எனக்கு மனசு உடைஞ்சு போச்சு''
""நீ உட்கார்ந்தால், ரங்க ராட்டினம் உடைஞ்சு, அது தொங்க ராட்டினம் ஆயிடுமே...''என்னையும் அறியாமல் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு, என்ன நடக்குமோ என்ற பயத்தில் விழிகள் பிதுங்கி நின்றேன். 
""என்ன... வழக்கம்போல முழிக்கிறீங்க... கொஸ்டீன் பேப்பரை பார்த்ததும், இப்படி முழிச்சு, முழிச்சுதானே, பிரமோஷன் பரீட்சை எதுவும் பாஸ் பண்ண முடியாமல், குமாஸ்தாவா குப்பை கொட்டிக்கிட்டு இருக்கீங்க''
பவுன்சர் என்று நினைத்து அவளை நோக்கி நான் போடும் பந்துகளை, சிக்ஸராக மாற்றிக் கொண்டிருந்தாள் மனைவி. அதற்கான ஆரவாரமும், சியர் கேர்ல்ஸ் மட்டும்தான் மிஸ்ஸிங்.
""அதற்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டா போச்சு'' என்றவளைப் பார்த்து திகைத்து நின்றேன்.
நான் நினைப்பதை கூட அறியும் மோப்ப சக்தியைப் பெற்று விட்டாளா என்ற பயம் தொற்றிக் கொண்டது.
""அதற்கெல்லாம் ரொம்ப செலவாகுமே'' நாக்கு, என் கட்டுப்பாட்டில் இல்லாமல், பெரிய புத்திசாலி போல் கேள்விக் கணையைத் தொடுத்தது.
""செலவை பார்த்தால், கெளரவம் போயிடும். என்னுடைய தோழிகளின் ஹஸ்பென்ட்ஸ் எல்லோரும் ஆபீஸர் போஸ்ட்டில் இருக்காங்க. ஆகவே...''
அந்த "ஆகவே' பெட்டகத்திற்குள் என்ன டைம் பாம் இருக்கிறதோ என்பதை நினைத்து எனக்கு வயிற்றைக் கலக்கியது.
""கோச்சிங் கிளாஸில் சேர்றீங்க... புத்திசாலியாக மாறுறீங்க... பரீட்சை பாஸ் பண்றீங்க... ஆபீஸர் ஆகறீங்க!'' அந்த ஒவ்வொரு "றீங்க'வும் என் காதுகளில் போர் முரசாக ரீங்காரமிட்டது.
என்னால் முற்றிலும் முடியாத சமாசாரங்களை, தேடிக் கண்டுபிடித்து, அவற்றை என் மீது வலுக்கட்டாயமாகத் திணித்து, களிப்பு அடைவது, அவளுடைய உப பொழுது போக்குகளில் ஒன்று. 
தொந்தரவு தாளாமல், அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கோச்சிங் கிளாஸ் போனவன், கடைசி பெஞ்சில் உட்கார்ந்து, அவள் தொல்லை இல்லாமல் அப்படியே நிம்மதியாகத் தூங்கி விட்டேன். வகுப்பு முடிந்து, அவர்களும் கதவைப் பூட்டிக் கொண்டு போய்விட்டார்கள்.  டி.வியில் எல்லா சீரியல்களும் முடிந்த பிறகு, என்னை மறந்து, அவளும் தூங்கிவிட்டிருக்கிறாள். காலையில் நான் வீட்டுக் கதவை தட்டியதும், உள்ளே போய் நான் இருக்கிறேனா அல்லது தொலைந்து போய் விட்டேனா என்பதை  செக் செய்து விட்டு, கதவை திறந்து, நடந்தவற்றைக் கேட்டு, என் முதுகாக நினைத்து, தன் தலையில் ஓங்கி அடித்துக் கொண்டாள்.
நினைவலைகளிலிருந்து வெளியே வந்து, அவளுடைய சவாலைச் சமாளிக்கத் தயாரானேன்.
""அதற்கு அடுத்த ஜென்மம் எடுக்கணும்'' பெ..ரி..ய்..ய வாய்தாவாக வாங்கினேன்.
""இந்த வாய்தா வாங்கற வித்தையெல்லாம் எங்கிட்ட செல்லாது... நான் சொன்னால், சொன்னதுதான்''
"அதென்ன...செல்லாது...செல்லாதுன்னு. பெரிய மோடின்னு மனசுலே நினைப்போ...' மனதில்தான் நினைத்துக் கொண்டேன்.
""பரீட்சை எழுதி பாஸ் ஆகணும்னா, எனக்கு இந்த ஆவி வந்த பேனா வேணும். ஆனால்...''
""ஆனால் என்ன?''
""அதனுடைய மூடி, ஆவியாகி, தொலைந்து போயிடுச்சு. அதைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன். 
அதற்குள் நீ வந்து தொலைச்சுட்டே...''
""தொலைச்சது நீங்க... நான் இல்ல... மூடி இல்லாட்டி என்ன?''
""மூடி இல்லாத பேனாவும், மிளகாய் இல்லாத பஜ்ஜியும் குப்பையிலேன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க... மூடி இல்லாத பேனாவை எடுத்துப் போனால், சட்டையெல்லாம் இங்க் ஆயிடும். அதற்கு வேற உன்னிடம் டோஸ் வாங்கணும்...''  முகத்தில் எவ்வளவு சோகத்தை ஏற்றிக் கொள்ள முடியுமோ, அவ்வளவு கிலோ சோகத்தை ஏற்றி டைலாக் டெலிவரி செய்தேன்.
""இப்பத்தான் ஜாலியா பேசிக்கிட்டு இருந்தீங்க... அதுக்குள்ள சோகமா... நீங்க ரொம்ப மூடி டைப்''
""மூடி தொலைத்த டைப்னு சொல்லு...''
""கொஞ்ச நேரத்திற்கு முன்னால் பழமொழின்னு ஏதோ புரளி கிளப்பினீங்களே... ஆ... அதான்...குப்பையிலே''
""இப்ப எதுக்கும், எதுக்கும் நீ முடிச்சு போடப் போறே?''
""கடைக் கோடி குப்பை தொட்டி வரை தேடுவேன். தேடுகிற வேலையை என்னிடம் விட்டுட்டு, படிச்சுட்டு, ஆபீஸ் கிளம்பற வேலையைப் பாருங்க...''
வீட்டில் எது தொலைந்தாலும் அதை தேடும் ஏக போக உரிமை அவளுக்கு மட்டும்தான் உண்டு என்பதில் அசாத்திய நம்பிக்கை கொண்டவள் அவள். தொலைந்த, தொலையாத பொருள்களைத் தேடுவதற்கென்றே மனித ஜென்மம் எடுத்து வந்தவள். அவள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும்போது, 
மற்றவர் எவரும் அவள் கூட சேர்ந்து தேடக் கூடாது என்பது எழுதப் படாத விதி. மீறினால், விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பது அனுபவித்த எனக்குத்தான் தெரியும்.
தொலைந்ததைத் தேடுவது அல்லது ஒன்றை தேடிக் கொண்டிருக்கும் போதே இன்னொன்றைத் தொலைப்பது என்பது அவளுக்குக் கைவந்த கலை. தேடுவது என்பது அவளுடைய பொழுதுபோக்காக இருந்தாலும், தேடுவதிலேயே வாழ்நாளில் பெரும் பகுதியை அந்த பொழுது போக்கிலேயே கழித்திருப்பாள்.
அவளுடைய சுயசரிதை மனதில் ஓடிக் கொண்டிருக்கும் போதே, என் கையில் இருந்த மூடி இழந்த பேனாவைப் பிடுங்கி, தன் வசம் ஆக்கி, அதன் நீள அகலங்களை கண்ணால் அளந்து, ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து முடித்தாள்.
இன்றைக்கு வீடு அமளி, துமளி படப்போகிறது என்பது, அவளுடைய முக பாவங்களிலிருந்து எனக்கு தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
வீடு முழுவதும், ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த சாமான்கள் உருளும் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், "தேடுதல் எபிசோட்' தொடங்கி விட்டதை ஊகிக்க முடிந்தது.
""மூடியைத் தேடிக்கிட்டு இருப்பதால், உங்களுக்கு இன்றைக்கு வெளியிலேதான் சாப்பாடு...'' மூடி மறைக்காமல் அறிவிப்பை வெளியிட்டு, தேடுதல் படலத்தைத் தொடங்கினாள்.
சிறிது நேரத்தில், மூலை முடுக்குகளிலிருந்த குப்பைகள் எல்லாம், வீட்டின் மத்திய பகுதியில் குவிக்கப்பட்டு, மேஜை நாற்காலி, பீரோ இத்யாதிகள் கவிழ்த்து, உருட்டி போடப்பட்டு, வீடே அல்லோகலப்பட்டது.
அடுத்த வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த பொது குப்பைத் தொட்டியை கிளறுவது வரை, அவள் என் பார்வை வட்டத்திற்குள் இருந்தாள்.
ஆபீஸ் போவதற்காக, நான் வீட்டுக்கு வெளியே வந்தபோது, அந்த வழியாக சென்ற குப்பை லாரியைக் கை காட்டி, ஸ்டாப் சொல்லி, தடுத்த நிறுத்த முயன்று கொண்டிருந்தாள்.
""இது பஸ் இல்லை... லாரி...'' என்று டிரைவர் நக்கலடித்தும் அவள் விடுவதாக இல்லை.
""சாரி... நிறுத்துங்க... இந்த பேனோவோட மூடி இருக்கா பார்க்கணும்.'' தன் கையில் இருந்த சிலம்பை காட்டி, பாண்டிய மன்னனிடம் நீதி கேட்ட கண்ணகியாக, "தேரா டிரைவர்' என்று சொல்லாத குறையாக முறையிட்டாள்.
அவள் முறையிடுவதைப் பார்த்து, எனக்கு வெட்கமாக இருந்தது. அதனால், அவளுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லாதது போல், சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தேன்.
""என்னம்மா... விளையாடறயா... இம்மா பெரிய குப்பை கூளத்தில, இந்தம்மாத்தூண்டு மூடியை எப்டி தேடறது... அதுக்கெல்லாம், தனியா பணம் கட்டணும்...'' டிரைவர் கறாராகப் பேசினார்.
""ஏம்பா... லேடீஸ் கேக்கறாங்க... கொஞ்சம் உதவி பண்ணலாமில்ல'' தள்ளி  நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனின் வாய் வழக்கப்படி "கம்'முனு இருக்க மறுத்தது. இந்த மாதிரி அதிகப்பிரசங்கி காமெண்ட்டுகளால் நொந்து போனவள், டி.வி சீரியல்களைப் பார்க்கும்போது, என் வாயில் குறுக்கும், நெடுக்குமாக பிளாஸ்திரியை ஒட்டி விடுவாள். அதனால்தான், வீட்டு மாதாந்திர மளிகை சாமான் லிஸ்ட்டில், பிளாஸ்திரியும்  ஓர் ஐட்டமாக இருப்பது வழக்கமாகிவிட்டது.  
""எதுக்கு மாதா மாதம், மளிகை சாமான்களோடு இவ்வளவு ப்ளாஸ்திரி வாங்கறீங்க... ப்ளாஸ்திரியில் சாம்பார் வைப்பீங்களா... உங்களுக்காக ஸ்பெஷலா, மளிகை வியாபாரத்தில் ப்ளாஸ்திரியிலும் முதலீடு செய்ய வேண்டியதா இருக்கு!'' என்ற பலத்த சந்தேகத்தை மளிகைக் கடைக்காரர், நீண்ட காலமாக எழுப்பி வருகிறார். அதற்கான விடையைத் தேடி, முடியை பிய்த்துக் கொண்டவரின் தலையில் நீண்ட வழுக்கையும் விழுந்து விட்டது.  
""தோ பார்றா... பெரிசா சிபாரிசுக்கு வந்துட்டாரு... மூடிக்குனு போவியா''
""மூடிக்குனு போக, மூடி இல்லையே..அதைத்தான் தேடறாங்க... கொஞ்சம் உதவி செய்யப்பா''
""உன் மூஞ்சிக்காக இல்லாங்காட்டியும், ஏதோ மகாலட்சுமியாட்டம் இருக்கிற அக்கா கேட்கிறாங்கன்னு டிரை பண்றேன்'' என்றவர், லாரியை விட்டு கீழே இறங்கினார்.
நைட்டி போட்ட மகாலட்சுமியை நான் இதுவரை போட்டோவில் பார்த்தது இல்லை என்பதால், எனக்கு சிரிப்பு பீறிட்டு வந்தது. சிரிப்பையும், சிறுநீரையும் அடக்கக்கூடாது என்பதால், சிரித்துத் தொலைத்து விட்டேன்.
""ஏய்யா... எங்க பொழைப்பைப் பார்த்தா சிரிக்கும்படியா இருக்கா... நாங்க இல்லைன்னா நாறி பூடுவீங்க...''என்றவர், கோபித்துக் கொண்டு, லாரிக்குள் ஏறினார்.
கண்ணுக்கு எட்டிய குப்பை, கைக்கு எட்டாமல் போன கோபத்தில்,  பார்வையால் என்னை சுட்டெரித்தவள், ஒரு தீர்மானத்தோடு மீண்டும் வீட்டுக்குள் போய், டிரஸ் மாற்றிக் கொண்டு, வெளியே வந்து, பழக்கப்பட்ட ஏரியா ஆட்டோவில் ஏறினாள்.
அந்த ஆட்டோ டிரைவருக்கு, மூலை முடுக்குகள் எல்லாம் அத்துப்படி என்பதால், நடமாடும் கூகுள் மேப் என்ற பட்டத்தை ஏரியா வாசிகள், அவருக்கு வழங்கி கெளரவித்திருந்தார்கள்.
""அக்கா... எதுவானாலும், தேடி கண்டுபிடிச்சுடலாம்... ஏறி உக்காருங்க...'' அவள் வெளியே கிளம்பினாளே, எதையோ தொலைத்து விட்டு, தேடப் போகிறாள் என்பது வரை, அவளுடைய சாதனைகள் டிரைவருக்கு அத்துப்படி.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, போன் வந்ததும், நடுங்கிப் போனேன். மனைவிதான் பேசினாள்.
""எங்கிருந்து பேசறே?''அடுத்து எந்த குண்டை போட்டு தொலைக்கப்போகிறாளோ என்ற பயத்தில், என் குரலில், எனக்கே 5 ரிக்டர் அளவில் நடுக்கம் தெரிந்தது.
""ஏன்... குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்குதோ?'' அவள் குரலில் கோபம் கொப்பளித்தது.
""நெஞ்சு குறு குறுக்க, கருணை கிழங்கு சாப்பிடணும்... ஆனா, அந்த கிழங்கை உனக்கு சமைக்கத் தெரியாதே''  என் கொழுப்பு என்னை விட்டுப் போகவே போகாது.
""ஆமா...கொஞ்சம் கூட கருணையே இல்லாம, உங்களை எனக்கு கட்டி வச்சு, மூடி இல்லாத பாழுங் கிணற்றில் இப்படி தள்ளி விட்டுட்டாங்களே''
""எதுக்கு இப்ப நீ இப்படி கண்மூடித்தனமா  ஃபீல் பண்றே... நான்தான், சமத்தா படிச்சு, பாஸ் பண்ணி, அடுத்த ஜென்மத்தில் ஆபீஸரா ஆயிடறேன்னு வாக்கு கொடுத்திருக்கேனே'' போர் சிக்னல் கிடைத்ததும், சமாதானமாக பேசினேன்.
""சமத்தாவா... சமந்தாவா... இப்ப நீங்களா மாட்டிக்கிட்டீங்களா...யாரு அந்த சமந்தா?''
""எதற்கு திடீர்னு சமந்தாவை பற்றி கேட்கிறே ? ஏதாவது சினிமா போஸ்டர் பார்த்தியா? நீ தேடிப் போன மூடி கிடைச்சுதா இல்லையா?''
""மூடிக்கு பதிலா, நீங்க இதுவரை மூடி மறைச்ச உங்க காதல் விஷயம் வெட்ட வெளிச்சமாயிடுச்சு. அந்த சிறுக்கிக்கு நீங்க எழுதி, இரண்டா கிழிச்சுப்போட்ட காதல் கடிதங்கள் எல்லாம் இப்ப என் கையில் சிக்கிடுச்சு. கிழிச்சதுதான் கிழிச்சீங்க... சுக்கு நூறா கிழிக்காம விட்டுட்டு, என்னிடம் இப்ப வகையா மாட்டிக்கிட்டீங்க''
""அந்த கடிதங்கள் நான் எழுதியதுதான்னு உனக்கு எப்படி தெரியும்?'' பெரிய வம்பில் மாட்டிக் கொண்டுவிட்டேன் என்பது மட்டும் புரிந்தது.
""தெரியுமாவா... அந்த கோழி கிறுக்கல், வேறு யாருடையதா இருக்க முடியும்... உங்க கைப்பட எழுதற மாதாந்திர மளிகை லிஸ்ட் என்னிடம் இருக்கு. இரண்டையும் வச்சு, ஒப்பிட்டு பார்த்ததில் கொஞ்ச நஞ்ச சந்தேகமும் தீர்ந்துச்சு... இந்த கேவலமான கையெழுத்தால்தானே பரீட்சையிலும் பெயில்...'' என்னை ஆஃப் செய்து வேடிக்கை பார்ப்பதில், அவளுக்கு நிகர் அவள்தான்.
 ""மூடியை நான் எங்கே மறைச்சேன்..?தொலைச்சேன்னு சொல்லு...'' 
""செய்வதையும் செய்துட்டு ஒன்றும் தெரியாதது போல் உளறாதீங்க... உங்களால், நான் இப்ப என் வாழ்க்கையையே தொலைச்சுட்டு நிற்கிறேன்'' டி.வி. சீரியல் வசனத்தோடு, மறுமுனையில் கேவல் சத்தம் கேட்டது.
""என்ன நடந்துடுச்சுன்னு இப்ப அழுது தொலைக்கற... இதனால்தான், தேடுதல் என்ற பெயரில் பழைய குப்பையை எல்லாம் கிளறாதேன்னு அடிக்கடி அறிவுரை சொன்னேன்''
""பழைய குப்பை இல்லை. இதை போன வார குப்பையிலிருந்து எடுத்தேன்''
""எங்கே... வீட்டு குப்பையிலிருந்தா?''
""ஹும்... குப்பை பிரிக்கும் சென்டருக்கு வந்திருக்கேன். அங்கே, தரம் வாரியாக குப்பைகளைப் பிரிச்சு, தேதி வாரியாக தனித்தனியா வச்சுருக்காங்க. நம்ம தெரு குப்பையை, குப்பை உள்ளம் படைத்த ஒருவர் அடையாளம் காட்டினாரு. மூடியை தேட அந்த குப்பையை கிளறின போதுதான், இந்த குப்பை கிடைச்சுது... முழு விசாரணை முடியாமல், உங்களுக்கும், எனக்கும் இனி பேச்சு வார்த்தை கிடையாது''
கடந்த வாரம், மனைவி வீட்டில் இல்லாத போது, மாடியில் பதுக்கி வைத்திருந்த  பழைய  குப்பைகளை கிழித்து, நேரடியாகக் குப்பை தொட்டியில் வீசி எறிந்தது ஞாபகத்துக்கு வந்ததும், முகத்தில் வியர்வை ஊற்று எடுத்து, அருவியாகக் கொட்ட ஆரம்பித்தது. 
""எனக்கு இரண்டு நாள் அவகாசம் கொடு'' நம்பிக்கை வாக்கெடுப்பு போல், அவகாசம் கேட்டேன்.
""இல்லை...இன்று இரவு வரைதான் அவகாசம். அதற்குள், சரியான விளக்கம் சொல்லவில்லையென்றால், என்னுடைய அம்மா, அப்பா இருக்கிற ஊருக்கு கிளம்பி போயிடுவேன்'' உச்ச நீதிமன்றம் போல், அவள் அதிரடி தீர்ப்பு வழங்கினாள்.
எதிர் நடவடிக்கைகளுக்காக தீவிரமாக யோசிக்க ஆரம்பித்ததில், சில பொறிகள் தட்டின.  கண்டதை காப்பி எடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கம்,  இந்த தருணத்தில் நிச்சயம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கை துளிர் விட்டது. ஆபீஸில் லேட்டாக உட்கார்ந்து யோசித்து, ஒரு முடிவுடன் வீட்டுக்கு  கிளம்பினேன்.
பேச்சு வார்த்தை இல்லாததால், கதவைத் தட்டாமல் உள்ளே நுழைவதற்கு ஏற்றபடி, வீட்டு வாசல் கதவு, உள் புறமாக தாளிடப்படாமல்,  திறந்திருந்தது.
வீட்டிற்குள் நுழைந்ததும், உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினேன். நான் தேடுவதைப் பார்த்து, எதை தேடுகிறேன் என்று தெரியாமல், என்னிடம் எதுவும் பேசாமலேயே, பழக்க தோஷத்தில், அவளும் தேட ஆரம்பித்தாள். திடீரென்று உதித்த யோசனையில், ஜன்னலில் கால்களை வைத்து, சர சரவென்று மேலே ஏறி, பரணுக்குள் தாவி குதித்து, பழைய பெட்டியிலிருந்த குப்பையைக் கிளறி,  முத்து குளிப்பது போல், ஒரு கட்டு பேப்பர்களை எடுத்து, தூசி தட்டி, கீழே குதித்தேன்.
""கண்டேன் காப்பியை'' என்று துள்ளி குதித்தவனை, ஆத்திரத்துடன் பார்த்தாள் மனைவி.
""நீ குப்பையில் கண்டெடுத்த கடிதங்களில் இருந்த கையெழுத்தும், இந்த நகல்களில் இருக்கிற கையெழுத்தும் ஒத்துப் போகுதான்னு பாரு''
பேச்சு வார்த்தையை துவங்கினேன்.
சிறிது நேரம் கூர்ந்து பார்த்தவள், ""ஆமா... ஒத்துப் போகுது... ஆனா, அந்த சமந்தா யாரு?'' அவள் விடுவதாக இல்லை.
""அதற்கு முன்னால், இந்த கடிதங்களின் ஓரத்தில், "பெற்றுக் கொண்டேன்'னு யாரோ கையெழுத்து போட்டு வாங்கி இருக்காங்களே... அது யாருடைய கையெழுத்துன்னு அடையாளம் கண்டு பிடிக்க முடியுதா?''
மீண்டும் உற்று பார்த்தாள். ""ஆமா..இது என்னுடைய கையெழுத்துதான்... அது எப்படி இங்க வந்தது?''
""இதெல்லாம், நம்ம காதல் சகாப்தத்தின் போது, நான் உனக்கு எழுதிய கடிதங்கள்தான். அப்ப நான் உனக்கு வச்ச செல்ல பெயர் சமந்தா. அப்பொழுதிலிருந்தே உனக்கு ஞாபக மறதி அதிகம். நீ எழுதின கடிதத்திற்கு நான் பதில் கொடுக்கலைன்னு சண்டை போட்டு, என்னிடம் பேசாமல் இருப்பே. அதனால், நான் ஒவ்வொரு முறை உனக்கு பதில் கடிதம் கொடுக்கும்போதும், அதற்கு ஒரு காப்பி எடுத்து, அதில் உன் கையெழுத்தை வாங்கி பத்திரப்படுத்தும் வழக்கத்தை வைத்திருந்தேன். நம் காதலின் நினைவு சின்னங்களான அந்த  கடித காப்பிகளின் சேகரிப்புதான், என் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முறியடிக்க இப்ப உதவியா இருக்கு. அதெல்லாம், உனக்கு மறந்திருக்கும்னு நினைக்கிறேன்''
""இல்லைங்க... நீங்க சொன்னப்புறம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் வருது... உங்களை சந்தேகப்பட்டதுக்கு சாரிங்க''
""சாரியெல்லாம் ஏத்துக்க முடியாது... நீ உன்னோட அப்பா, அம்மா இருக்கிற ஊருக்கு கிளம்பற''
""ஏங்க... என் மேல கோபம் போகலையா?''
""ஹும்... பரீட்சை எழுதாமலேயே, சீனியாரிட்டி படி எனக்கு பிரமோஷன் கிடைச்சுடுச்சு. உன்னோட அப்பா, அம்மா ஊரில்தான் போஸ்ட்டிங். முதலில் நீ 
கிளம்பு. அடுத்த வாரம் நான் வர்றேன்''
சந்தோஷத்தில் மிதந்தவள், எனக்கு பிடித்த மிளகாய் பஜ்ஜியை தயார் செய்வதற்காக, மிளகாயைத் தேட ஆரம்பித்தாள். அவள், அதைத் தேடி கண்டுபிடிப்பதற்குள், பொழுது விடிந்து விடும். எனவே, நாளை காலை, காப்பியோடு கடிச்சுக்க மிளகாய் பஜ்ஜிதான்னு இப்பவே நிச்சயமா சொல்லிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT