தினமணி கதிர்

திரைக் கதிர்

3rd Oct 2021 06:00 AM | - ஜி.அசோக்

ADVERTISEMENT

 

தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு நாளுக்கு நாள் பெரிதாகப்பேசப்பட்டு வருகிறது.

அதன்படி ஒரு சில சம்பவங்களும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் நடந்து வருகின்றன. ஆம். சமீபத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான "லவ் ஸ்டோரி' படத்தின் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமீர் கான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு ஹைதராபாத்தில் நாகார்ஜுனாவின் குடும்பம் விருந்தளித்துள்ளது. அதில் நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா, மகன்கள் நாக சைதன்யா, அகில் மற்றும் "லவ் ஸ்டோரி' பட இயக்குநர் சேகர் கம்முலா, படத்தின் கதாநாயகி சாய் பல்லவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ஆனால் அந்த விருந்தில் சமந்தா காணப்படவில்லை. இதனால் தற்போது இந்த விஷயமும் பெரிய செய்தியாக இணையத்தில் பரவி வருகிறது.

 

----------------------------------------------------------------------------------

 

தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் எனப்படும் "சைமா விருதுகள்' ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

2019, 2020 -ஆம் ஆண்டுகளுக்கான "சைமா விருதுகள்' வழங்கும் விழா ஹைதாராபாத்தில் நடைபெற்றது.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

தமிழில் வெளியான "க/பெ.ரணசிங்கம்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த இந்தத் திரைப்படம் கரோனா ஊரடங்கு காரணமாக ஓடிடியில் வெளியானது. மிகவும் உருக்கமான, நெகிழ்ச்சியான இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டது.

அதேபோல், "வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' படத்துக்காக விமர்சகர்கள் தேர்வாக சிறந்த நடிகை விருதைப் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படம் இயக்குநர் க்ரந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராஷி கண்ணா நடித்துள்ள தெலுங்கு படமாகும். காதல் படமான இது விமர்சனரீதியாவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு விருது கிடைத்துள்ளது.

 

----------------------------------------------------------------------------------

 

யோகிபாபுவும், ஓவியாவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிவந்த நிலையில்,அந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

யோகிபாபு, ஓவியா கூட்டணியில்தயாராகும் படத்திற்கு "கான்ட்ராக்டர்நேசமணி' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அத்துடன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் வடிவேலு நடித்ததால் பிரபலமானது. அதேவேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுரையில் இந்தப் பெயர் அடிபட, உலக அளவில் "கான்ட்ராக்டர் நேசமணி' ட்ரெண்டானது. அந்த சமயத்திலேயே, கான்ட்ராக்டர் நேசமணி தலைப்பில் தமிழில் படமெடுக்கபலரும் விருப்பம் தெரிவித்தனர்.

இப்போது அதற்கு அறிமுக இயக்குநர் ஸ்வாதீஷ் எம்.எஸ். வடிவம் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தை ஸ்வாதீஷ் எம்.எஸ். இயக்க, அன்கா மீடியா சார்பில் "வால்டர்' படத்தின் இயக்குநர் யு.அன்பு, "பகைவனுக்கு அருள்வாய்'

படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்தி கே தில்லை ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். அன்கா மீடியாவின் முதல் படைப்பாக தயாராகிறது. இயக்குநர் ஸ்வாதீஷ் எம்.எஸ்., "வால்டர்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இயக்குநர் யு.அன்பு கதை எழுதியிருக்கிறார். தர்மபிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு, சுபாஷ் தண்டபாணி, ஒளிப்பதிவு செய்கிறார். "மிருதன்' பட புகழ் வெங்கட் ரமணன் படத்தைத் தொகுக்க, ஏ.ஆர்.மோஹன் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை "ராட்சசன்' படப் புகழ் விக்கி அமைத்திருக்கிறார். "சார்பட்டா பரம்பரை' படப் புகழ் மெட்ராஸ் மீரான் பாடல்களை எழுதியுள்ளார்.

 

----------------------------------------------------------------------------------

 

சூர்யாவின் நடிப்பில் வெளியான "சூரரைப்போற்று' சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாக்களில் கலந்துகொண்டு தொடர்ந்து விருதுகளைக் குவித்து வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒன்பதாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் "சூரரைப்போற்று' ஏழு விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டில் அமேசான் ப்ரைம் டிஜிட்டல் தளத்தில் வெளியான படம் "சூரரைப் போற்று' விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த "சூரரைப் போற்று' 78 ஆவது கோல்டன் குளோப் விருதிற்கான போட்டிப் பிரிவில் இந்தியா சார்பில் திரையிடத் தேர்வானது. அதையடுத்து மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 12-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த படமாக "சூரரைப்போற்று' தேர்வு செய்யப்பட்டது. அத்துடன் சிறந்த நடிகராக நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒன்பதாவது சைமா விருது வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படங்களுக்கான பல்வேறு பிரிவுகளில் "சூரரைப்போற்று' படம் இடம்பெற்றது. இதில் சிறந்த நடிகர், சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி பாடகர் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று, ஏழு விருதுகளை வென்றிருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT