தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கீரை வெந்த நீர்... வேண்டாம்!

3rd Oct 2021 06:00 AM

ADVERTISEMENT

 

நான் காய்கறி வாங்கப் புறப்பட்டாலே, என் அம்மா ஏதாவது கீரை வாங்கி வரச் சொல்கிறார். கீரை சாப்பிட்டால் அத்தனை நல்லதா?

விஜயன்,
மயிலாடுதுறை.

கறிகாய்களைப் பொதுவாக நாம் இலை (கீரை), பூ, காய், தண்டு, கிழங்கு என ஐந்துவிதமாகப் பிரிக்கலாம். அவற்றில் எளிதாகவும் விரைவிலும் ஜீரணமாகக் கூடியது கீரை. அதைவிட பூவும் காயும்தண்டும் கிழங்கும் வரிசைகிரமத்தில் ஜீரணமாகத் தாமதமாகக் கூடியவை என்பதாலேயே உங்கள் அம்மா கீரையை தேர்ந்தெடுக்கிறார் போலும்.

ADVERTISEMENT

கீரைகள் பொதுவாகவே குடலில் சில இயற்கையாக வளரும் ஜீரண கிருமிகளுக்கு உணவாவதிலும், மலத்தைப் புளிக்கவிடாமல், அதிக கெட்ட வாசனை ஏற்படாமல் எளிதில் வெளியேறச் செய்வதற்கும் பயன்படுகின்றன.

ஆனால் ஜீரண சக்திக்கு அதாவது, வயிற்றுச் சூட்டிற்கு, அங்குள்ள செரிமான சக்திக்கு, ஜீரண திரவங்களுக்கு எரிபொருளாக மாறி ஊட்டம் தருவதற்கும், உணவுச் சத்தாக மாறி, உடலிலுள்ள தாதுக்களுக்கு உணவாகி அவற்றைப் புஷ்டியாக்குவதற்கும் கீரை அதிகம் பயன்படுவதில்லை.

உங்களுடைய அம்மா கீரையில் சத்து அதிகம் உள்ளது என நம்பித்தான் அதை தினமும் வாங்கி வரச் சொல்கிறார். ஆனாலும் அதை அதிக அளவில் உணவில் சேர்ப்பது, இரவில் அதிக அளவு சாப்பிடுவது ஆகிய இரண்டும் நல்லதல்ல.

செரிமானம் கெடாமலிருக்க கீரையை அலம்பி, அரிந்து, நன்கு வேக வைத்துக் கடைந்து, வெந்த நீரை இறுத்து வடிகட்டி, எண்ணெய் விட்டு வதக்கி, மிளகு, சுக்கு, உப்பு, பெருங்காயம், இஞ்சி இவற்றில் கிடைத்த வகைகளைச் சேர்த்து தாளித்து பின்னர் உட்கொள்வதே நலம்.

கீரை வெந்த நீரை அகற்றாவிடில், கீரையும் கனத்த உணவாகச் சிலருக்கு மாறக் கூடும். வெந்த நீருடன் கீரையின் சத்தும் அகன்றுவிடக் கூடுமே என்ற பயத்துக்கு இடம் இல்லை. அதற்குக் காரணம், கீரை வெந்த நீரை அகற்றாவிட்டால், அவித்தகீரையின் சத்து உடலில் சேராமல், பெருமலமாகி கீரை வெளியேறிவிட வாய்ப்பிருக்கிறது. அது ஜீரண சக்தியைப் பாதிக்கக் கூடும்.

எனவே "சத்து... சத்து' என்று எது ஒன்றையும் வீணாக்காமல், பச்சையாகவும், வேகாமலும், வெந்த நீரை அகற்றாமலும் வயிற்றைக் குப்பைத் தொட்டியாக மாற்றிக் கொள்வது சிறந்ததல்ல.

கீரையை அதிக அளவில் இரவில் சாப்பிட்டால், இரவின் குளிர்ச்சியாலும் தூக்கத்தாலும் மந்தமாக இருக்கக் கூடிய ஜீரண சக்தியினால் இவை சரியாகச் செரிக்காமல், கீரைப் பூச்சிகளுக்கு இடமளிக்கும். பெருமலப் போக்கு,

வயிற்றிரைச்சல், வயிற்று உப்புசம்முதலியவற்றுக்கு இடம் தரும்.

கீரையைச் சுவையுடன் தயாரிக்க பொடிபொடியாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து வேக வைத்து, எண்ணெய் சேர்த்து, கடுகு, பெருங்காயம், மிளகு, சுக்கு, புளிப்பு மாதுளை சேர்த்து மறுபடி வேக வைத்துச் சாப்பிட கேடு விளையாது.
வயிற்றில் மல அடைப்பை ஏற்படுத்தாது. சுவையூட்டும்.

வாக்படர் எனும் முனிவர், ""கறிகாய் அனைத்துமே குளிர்ச்சி தருபவை, மலத்தையும் சிறுநீரையும் அதிக அளவில் வெளியாக்குபவை. தாமதித்தும் குடலை அடைத்துக் கொண்டுமே செரிக்கும். அதனால் வேக வைத்து வெந்த நீரைப் பிழிந்து அகற்றி எண்ணெய் சேர்த்து பக்குவப்படுத்தியது அதிகக் கேடு விளைவிக்காது'' என்கிறார்.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT