தினமணி கதிர்

பேல்பூரி

3rd Oct 2021 06:00 AM

ADVERTISEMENT

 

கேட்டது


(திருவாரூர் தெற்கு வீதியில் இருவர்)

""ஏன் சார் போன்ல பேசிக்கிட்டே இருந்த நீங்க, திடீர்னு என் கிட்டே "வாங்க... உட்காருங்கனு' சொல்லிட்டு, போன்ல பேசிக்கிட்டிருந்தவர்ட்ட , நண்பர் வந்து இருக்கார், அப்புறம் நானே கூப்புடுறேன்னு சொல்லி கட் பண்ணிட்டீங்களே ஏன்?''
""அந்த அறுவைகிட்டேயிருந்து தப்பிக்க எனக்கு இதைவிட வேற வழி தெரியலே''


வரதன்,
திருவாரூர்.

ADVERTISEMENT


(சென்னை மாநகரப் பேருந்தில்நடத்துநரும் முதியவரும்)

""பெரியவரே டிக்கெட் வாங்கிட்டீங்களா?''
""அதுக்குத்தாம்பா வெயிட்டிங், இன்னும் வேளை வரலியேப்பா''
"நீங்க நூறு வருஷம் நல்லாஇருப்பீங்க... இப்ப டிக்கெட் வாங்குங்க!"


ஆர்.ஸ்ரீகாந்தன்,
சென்னை-50.


கண்டது

(நாட்றாம்பள்ளி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

ஏழரைப்பட்டி
 

ப நரசிம்மன்,
தருமபுரி-1

 

(தஞ்சை மாவட்டம் பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

இரும்புத் தலை.


க.இளங்கோவன்,
நன்னிலம்.

 

(பரமக்குடி அருகில் ஒரு தனியார் பேருந்தின்பின்புறத்தில்)

மிரட்டும் இசை, அரட்டும் ஒலி

சி.முருகேசன்,
மாப்பிள்ளைக்குப்பம்.

 

(சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை அருகே ஓர் ஆட்டோவில்)

சோம்பல் இல்லாதவன் சாம்பல் கூட...
சரித்திரம் படைக்கும்.

பீ.ஆர்.பூஜாரமேஷ்,
சென்னை-28.

 

யோசிக்கிறாங்கப்பா!

அடியே படாமல் வலிக்கச் செய்வது வார்த்தைகள் மட்டுமே...
மருந்தே இல்லாமல் குணப்படுத்துவது அன்பான ஆறுதல் மட்டுமே.

ந.சண்முகம்,
திருவண்ணாமலை.

 

மைக்ரோ கதை


""மேஸ்திரி ஐயா... நாளைக்கு எனக்குப் பிறந்த நாள். செலவுக்குப் பணம் வேணும். கடனா கொடுத்தீங்கன்னா, சீக்கிரம்அடைச்சுடறேன்''

என்றான் சித்தாள் வேலை செய்யும் மோகன்.

நீயெல்லாம் பிறந்தநாள் கொண்டாடலைன்னு யார்அழுதா? ஒரு ரூபா சம்பாதிக்கறது எவ்வளவு சிரமம் தெரியுமா உனக்கு? கடனை வாங்கி, வீண்செலவு செய்வதை விட்டுட்டு, பணத்தைச் சேமிக்கப் பாருடா''- அறிவுரை சொன்னார் மேஸ்திரி.

""சரி... கஞ்சி குடிச்சி இந்த வார வீட்டுச் செலவைக் குறைத்துக் கொண்டு, பிறந்தநாள் செலவைச் சமாளிக்கலாம்' எண்ணிக் கொண்டே வேலையைத் தொடர்ந்தான் மோகன்.

மறுநாள்காலை. இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மேஸ்திரி, சட்டெனப் பேருந்துநிலைய வாசலில் வண்டியை நிறுத்தினார். அங்கு, கசங்கிய சட்டை , பழுப்பேறிய வேட்டியுடன் மோகன் நின்றிருந்தான். அவன் கையில் ஒரு பெரிய பை இருந்தது. சற்றுநேரம், அவனைக் கவனித்தார் மேஸ்திரி.

பையிலிருந்த இட்லி, சட்னி, சாம்பார்அடங்கிய பொட்டலங்களை, பேருந்துநிலைய வாசலில் இருந்த முதியவர்களுக்கும் ஆதரவற்றோர்களுக்கும் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான் மோகன்.

பூபதிபெரியசாமி,
புதுச்சேரி - 9.

 

எஸ்.எம்.எஸ்.

உன்கிட்ட சொன்னா நீ சந்தோஷப்படுவே என்று
பகிரப்படும் மகிழ்ச்சிகளிலும்,
உன்கிட்ட சொன்னா நான் சரியாகிவிடுவேன் என்று
பகிரப்படும் துயரங்களிலும்,
நிறைந்திருக்கிறது நேசம்!

எல். மோகனசுந்தரி,
கிருஷ்ணகிரி-1.

 

அப்படீங்களா!


காப்பி, பேஸ்ட் என்றால் என்ன என்று இப்போது எல்லாருக்கும் தெரியும். கணினி அந்த அளவுக்கு நம் வாழ்க்கையோடு கலந்துவிட்டிருக்கிறது. ஆனால் காப்பி&பேஸ்ட் என்ற பெயரில் வந்திருக்கும் இந்தக் கருவி, கணினியில் நாம் பயன்படுத்தும் காப்பி, பேஸ்ட் அல்ல. இது சற்று வித்தியாசமானது.

ஏதேனும் ஒரு புகைப்படத்தை அச்சிட வேண்டுமானால், முதலில் அதை ஸ்கேன்
செய்யும் இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்படி ஸ்கேன் செய்யப்பட்டதை வைத்து அதை அச்சிடும் இயந்திரத்தின் மூலம் அச்சிட முடியும்.

ஆனால் இந்தக் கருவியின் அடிப்பகுதியில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால், நீங்கள் எந்தப் படத்தையும் ஸ்கேன் செய்ய முடியும். அப்படி ஸ்கேன் செய்யப்பட்ட படத்தை நீங்கள் இந்தக் கருவியில் உள்ள இன்னொரு பட்டனை அழுத்தினால், இந்தக் கருவியைக் கொண்டு இன்னொரு காகிதத்திலோ, வேறு எந்தப் பொருளின் மீதோ பிரிண்ட் செய்ய முடியும். மிக எளிதாக காப்பி, பேஸ்ட் வேலையைச் செய்ய இந்தக் கருவி உதவுகிறது.

என்.ஜே.,
சென்னை-58.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT