தினமணி கதிர்

திரைக்கதிர்

28th Nov 2021 06:00 AM | ஜி.அசோக்

ADVERTISEMENT

 

பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான படம் "காலாபானி' .

மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை தமிழில் "சிறைச்சாலை' என்ற பெயரில் கலைப்புலி தாணு வெளியிட்டார். தற்போது "காலாபானி' வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் மீண்டும் மோகன்லாலும், பிரபுவும் மலையாளப் படமான "மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் . இந்த படத்தையும் பிரியதர்ஷன் இயக்குகிறார்.

ADVERTISEMENT

தமிழில் இப்படம் "மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' எனும் பெயரில் கலைப்புலி தாணு வெளியிடுகிறார் .

அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ், நெடுமுடி வேணு, அசோக் செல்வன், பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். ஐயப்பன் நாயர் படத்தொகுப்பினைக் கவனிக்கிறார். ஆர்.பி.பாலா இப்படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார் . வரும் டிசம்பர் 2 -ஆம் தேதி தமிழகமெங்கும் இப்படம் வெளியாக உள்ளது.

""25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நம் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார் தாணு.


-------------------------------------------------------------------------


"மரகத நாணயம்' , "ராட்சசன்', "புரூஸ்லி' உள்ளிட்ட படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், "கன்னி மாடம்' படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஜி.வி.பெருமாள் வரதன், 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

வரலாற்றுச் சம்பவத்தை மையப்படுத்திய சஸ்பென்ஸ், த்ரில்லர், நகைச்சுவையை சேர்த்து, இப்படத்தை இயக்கி வரும் ஜி.வி.பெருமாள் வரதன், சில வரலாற்றுக் காட்சிகளைப் படமாக்குவதற்காக செங்கல்பட்டு பகுதியில் பிரமாண்டமான அரங்குகள் சிலவற்றை அமைத்துள்ளார். அதில் முக்கியமாக, அக்காலத்து குருகுலம் ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான முறையில் உருவாக்கியுள்ளனர்.

படத்தின் மிக முக்கியமான காட்சியை படமாக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த குருகுலம் செட், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் முழுவதும் சேதமடைந்து படக்குழுவினருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கூறிய இயக்குநர், ""இந்த விபத்தால் எங்களுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், விபத்தில் யாருக்கும் எந்த ஓர் ஆபத்தும் ஏற்படாமல் இருந்தது பெரும் ஆறுதலாக இருக்கிறது. குறிப்பாக விபத்து நடக்கும் போது அங்கிருந்த படக்குழுவினர் நூலிழையில் உயிர் தப்பினார்கள்.

உற்சாகத்தோடு படப்பிடிப்பைத் தொடங்கிய எங்களுக்கு எதிர்பாராத இந்த விபத்து சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், இதில் இருந்து மீண்டு, மீண்டும் படப்பிடிப்பை விரைவில் தொடங்குவோம்'' என்றார்.

சுரேஷ் ரவி, ஆஷா கவுடா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


-------------------------------------------------------------------------இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் படம் "நான் கடவுள் இல்லை' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். இதில் எஸ் .ஏ. சந்திரசேகர் பேசும் போது...

""டிசம்பர் 3- ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் ஆடியோவை யார் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும்? என எண்ணினேன். சமூக அக்கறை கொண்ட படம் என்பதால், சமூகத்தின் மீது பேரன்பும், அக்கறையும் கொண்ட இயக்குநர் அமீர் கலந்து கொண்டு, வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அவரை போனில் தொடர்பு கொண்டு அழைத்தேன்.

விஷயத்தை தெரியப்படுத்திய போது எத்தனை மணிக்கு வர வேண்டும்? எங்கு வர வேண்டும்? அதை மட்டும் சொன்னால் போதும் என்றார்.

ஓர் இயக்குநராக அமீர் அருகில் அமர்ந்ததை பாக்கியமாக கருதுகிறேன். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எண்ணிக்கை பெரிதல்ல. தரம்தான் முக்கியம். ஆனால் இந்தப் படத்தை நான் அமீருக்குப் போட்டியாகத் தான் இயக்கி இருக்கிறேன். இந்த வயதிலும் உங்களைப் போன்ற இயக்குநர்களுடன் பயணிப்பதை பெருமையாகக் கருதுகிறேன். இந்தப் படத்தை நீங்கள் பார்க்க வேண்டும். பார்த்துவிட்டு கால்ஷீட் கொடுக்க வேண்டும்.

ஆரம்பத்தில் புதிது புதிதாக நடிகர்களை உருவாக்கி, வாய்ப்பளித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் இருந்த உத்வேகம் இப்போது இல்லை. இயக்குநர்களுக்கு நடிக்க வாய்ப்பு அளிப்பதில் சில வசதிகள் இருக்கிறது. படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல், உதவி இயக்குநராகவும், வசனத்தில் உதவி செய்பவராகவும், காட்சிகளை சுவாரஸ்யமாக மேம்படுத்துவதிலும், படப்பிடிப்புத் தள நிர்வாகத்திலும் உதவுவார்கள்'' என்றார்.


-------------------------------------------------------------------------


இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்கியுள்ள படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்'. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயர் "ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஹூந்திரன்' என்றும், சுருக்கமாக "ராம்போ' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமந்தாவின் பெயர், கதீஜா. நயன்தாராவின் பெயர் கண்மணி. தவிர, இப்படம் அடுத்த மாதம் தியேட்டர்களில் வெளியிடப்படும் என்பதையும் பதிவு செய்துள்ளனர்.

சில வாரங்களாகவே இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல் பரவி வந்த நிலையில், அது வதந்தி என்று கூறியுள்ளது படக்குழு.

ADVERTISEMENT
ADVERTISEMENT