தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 64

28th Nov 2021 06:00 AM | கி. வைத்தியநாதன்

ADVERTISEMENT

 

பிரணாப் முகர்ஜியின் உதவியாளர் என்னிடம் காட்டிய காகிதம் உண்மையில் ஒரு பட்டியல். அன்றைய சந்திப்புகள் குறித்தும், சந்திக்க இருப்பவர்கள் குறித்தும் தட்டச்சு செய்யப்பட்டிருந்த பட்டியல் அது. அதிலிருந்த எனது பெயர் வட்டமிடப்பட்டிருந்தது.

""இன்றைய கடைசி சந்திப்பு. அவர் போய்விட வேண்டாம். காத்திருக்கச் சொல்லுங்கள்'' என்று எனது பெயருக்கு அருகில் பிரணாப் முகர்ஜியால் கைப்பட எழுதப்பட்டிருந்தது.

புன்னகையுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த உதவியாளர். நான் அந்தக் காகிதத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு ஓர் ஓரமாகச் சென்று அமர்ந்தேன். அவர் மீண்டும் என்னை அழைத்தார்.

ADVERTISEMENT

""ஏன் ஓரமாகச் சென்று உட்காருகிறீர்கள், சோபாவில் போய் உட்காருங்கள். அவர்களெல்லாம் வெளியுலகுக்கு பெரிய மனிதர்களாக இருக்கலாம். இந்த அலுவலகத்தில் நீங்கள்தான் இப்போதைக்கு அமைச்சரின் கவனம் பெற்ற சிறப்பு விருந்தினர்'' என்றார் அவர்.

நான் சந்திக்க வருவது பிரணாப்தாவின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது என்பதும், சம்பிரதாயச் சந்திப்பாக இல்லாமல் என்னிடம் அவர் தனிப்பட்ட முறையில் பேச விரும்புகிறார் என்பதும் தெரிந்தது. மாலை வரை உரிமையுடன் அவர் என்னைக் காத்திருக்கச் சொன்னது எனக்குப் பெருமிதமாக இருந்தது. அன்றைய நாளின் கடைசி சந்திப்பு என்பதால் அவரிடம் நிறையவே பேச முடியும் என்கிற மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

நான் சிரித்தபடியே அங்கிருந்த சோபா ஒன்றில் சென்று அமர்ந்தேன். அதற்குப் பிறகு பொழுது சாயும் வரை எனக்கு ராஜ உபசாரம்தான். அருகிலிருந்த இன்னொரு அறையில் மதிய உணவு வரவழைக்கப்பட்டு எனக்குத் தந்தார்கள்.

அந்த வரவேற்பறையில் நான் உட்கார்ந்திருந்தபோது, நீலகிரி மக்களவை உறுப்பினராக இருந்த பிரபு, அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க வந்தார். பிரபுவுக்கும் பிரணாப்தாவுக்கும் இடையேயான உறவு நெருக்கமானது. தமிழகத்தைப் பொருத்த வரையில் பிரணாப் முகர்ஜியின் நம்பிக்கைக்கு உரிய காங்கிரஸ்காரராக இருந்தவர் பிரபு என்பது அனைவருக்கும் தெரியும்.

20ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில், அப்போது வர்த்தகத்துறை துணை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியிடம் என்னை அறிமுகப்படுத்தியவர் பிரபுதான் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அங்கே என்னைப் பார்த்ததும் பிரபுவுக்கும் இன்ப அதிர்ச்சி.

""அப்பாயின்ட்மெண்ட் இருக்கிறதா, நான் வேண்டுமானால் சொல்லட்டுமா?'' என்று கேட்டார் பிரபு.

""இல்லை, என்னை காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்''

""அப்படியானால் நீங்கள் அவரது நெருங்கிய நம்பிக்கை வட்டத்துக்குள் இருக்
கிறீர்கள் என்று அர்த்தம். நேரம் கிடைக்கும்போது என்னைச் சந்தியுங்கள்....'' என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது உள்ளே அழைக்கப்பட்டார். அமைச்சரை சந்தித்து விட்டு உடனே கிளம்பி விட்டார் பிரபு.

நான் அங்கிருந்த ஆங்கில வர்த்தக இதழ் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். சாதாரணமாக நான் படிக்கத் தொடங்கிவிட்டால் அக்கம் பக்கம் நடப்பது எதுவும் என் கவனத்தை ஈர்க்காது. அன்றும் கூட அப்படித்தான். வர்த்தகம் தொடர்பான அந்த ஆங்கில இதழில் வெளி வந்திருந்த கட்டுரையில் மூழ்கியிருந்தேன்.

படித்து முடித்து அந்த இதழைக் கீழே வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தேன். திடுக்கிட்டேன். அந்த இதழில் யாரைப் பற்றிய கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேனோ, அதே நபர் என் அருகில் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்து புன்னகைத்தபடி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது நான் சற்று திகைத்துதான் போய்விட்டேன்.

அந்த ஆங்கில இதழில் அட்டைப்படக் கட்டுரையாக வெளிவந்திருந்ததைப் படித்துவிட்டு, அதே பிரமுகரை அருகிலிருந்து பார்ப்பது என்றால் எப்படி திகைப்பு ஏற்படாமல் இருக்கும்? 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே ஆச்சரியப்பட வைத்த தொழிலதிபர் மனு சாப்ரியாதான் என் அருகில் அமர்ந்திருந்தார். மனு சாப்ரியாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் என்கிற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதலாம்.

டாட்டா, பிர்லா, கோத்ரெஜ், கிர்லோஸ்கர் போன்ற பாரம்பரிய தொழிலதிபர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல மனு சாப்ரியா என்று பரவலாக அறியப்பட்ட மனோகர் ராஜாராம் சாப்ரியா. திருபாய் அம்பானி, கௌதம் அதானி போல எளிமையான பின்னணியில் இருந்து தொடங்கி, பல நூறு கோடி மதிப்பிலான தொழிலதிபராக உயர்ந்தவர். அம்பானியும், அதானியும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டதுபோல மனு சாப்ரியாவால் தனது வர்த்தக சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்துக் கொள்ள முடியவில்லை.

மும்பையிலுள்ள லேமிங்டன் சாலையில் பிலிப்ஸ் ரேடியோக்களை விற்பனை செய்வது, பழுது பார்ப்பது என்று இயங்கியது அவரது குடும்ப நிறுவனமான ராஜா ரேடியோ. 1973-ஆம் ஆண்டு மனு சாப்ரியா துணிந்து துபாய்க்குச் சென்று அங்கே சிலருடன் கூட்டுச் சேர்ந்து "ஜம்போ எலக்ட்ரானிக்ஸ்' என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போதைய துபாய் இப்போதுபோல மிகப்பெரிய வர்த்தக மையமாக இருக்கவில்லை. சொல்லப்போனால் துபாயும், ஐக்கிய அரபு அமீரகமும் மிகச் சாதாரணமான பாலைப் பிரதேசங்களாக இருந்தன. எண்ணெய் வளம் கண்டறியப்படவில்லை.

ஏற்கெனவே குடும்பத் தொழிலான ரேடியோ வியாபாரம் தெரிந்திருந்ததால் ஜப்பானின் சோனி நிறுவனத்தின் ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த விற்பனையாளரானார் சாப்ரியா. 1973-இல் துபாய் வளர்ச்சியடையத் தொடங்கியது முதல் மனு சாப்ரியாவின் வளர்ச்சியும் தொடங்கியது. இந்தியாவில் முதல்முதலில் கருப்பு வெள்ளை, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தயாரித்தது அவரது ஆர்ஸான் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்தான் என்பதைப் பலர் மறந்துவிட்டார்கள். ஓனிடா, வீடியோகான் நிறுவனங்கள் வருவதற்கு முன்பே அவரது ஆர்ஸான் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் இறங்கிவிட்டது.

அதில் ஈட்டிய மிகப்பெரிய லாபத்தை வைத்துக் கொண்டு, நலிவடையும் மிகப்பெரிய நிறுவனங்களை குறைந்த விலைக்கு ஒன்றன் பின் ஒன்றாக வாங்கத் தொடங்கினார் மனு சாப்ரியா. "டேக் ஓவர் டைக்கூன்' என்று அழைக்கப்பட்ட மனு சாப்ரியா ஃபால்கன் டயர்ஸ், ஷா வேலஸ், கார்டன் வுட்ரோஃப் உள்ளிட்ட பல நிறுவனங்களை ஒன்றன் பின் ஒன்றாக வாங்கியபோது ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை வாய் பிளந்தபடி ஆச்சரியப் பார்வை பார்த்தது.

அப்படிப்பட்ட நேரத்தில்தான் வர்த்தகத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வரவேற்பரையில் அவருக்கு நான் அறிமுகமானேன். அப்போது அவரது வர்த்தக குழுமத்தின் சொத்து மதிப்பு சுமார் 600 மில்லியன் டாலர் என்று நான் வாசித்துக் கொண்டிருந்த இதழிலிருந்து தெரிந்து கொண்டேன். தனது தகுதிக்கு மீறி அகலக்கால் வைத்ததால் அவரால் அந்த கார்ப்பரேட் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்த முடியாமல் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளானார் என்பது வருங்கால சோகம்.

2002-இல் தனது 56-ஆவது வயதில் மாரடைப்பால் மனு சாப்ரியா காலமானபோது அவரது கனவுகளும் கலைந்தன. அந்த நிறுவனங்கள் அவரது குடும்பத்தினரால் இப்போதும் நடத்தப்படுகின்றன என்றாலும் பங்குச்சந்தையில் அதிக மதிப்புள்ள பங்குகளாக இல்லை.

மனு சாப்ரியாவின் சற்றும் எதிர்பாராத மரணம் நிகழாமல் இருந்திருந்தால் அவரும் அம்பானி, அதானிபோல இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பாரோ என்னவோ, யாருக்குத் தெரியும்?

சிநேக பாவத்துடன் கைக்குலுக்க தனது கரத்தை நீட்டினார் மனு சாப்ரியா. நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். நான் வாசித்த கட்டுரை குறித்து சில சந்தேகங்களை அவரிடம் கேட்டதாக நினைவு. அதிகம் பேசவில்லை. ஆனால் அந்த சில நிமிட சந்திப்பு எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது. அந்த நெருக்கம் அவரது மரணம் வரை தொடர்ந்தது. ஆண்டுதோறும் தவறாமல் எனக்கு ஷா வேலஸ் காலண்டரும், ஃபால்கன் டயர்ஸ் நிறுவன டயரியும் அனுப்ப அவர் மறந்ததில்லை.

மாலைப் பொழுது கடந்து சுமார் 7.30 மணிக்கு நான் அமைச்சரின் அறைக்கு அழைக்கப்பட்டேன். சந்திக்க வந்திருந்த எல்லாரும் போயிருந்தார்கள். உள்ளே தனது மேஜைக்கு பின்னால் களைப்புடன் அமர்ந்திருந்தார் அமைச்சர் பிரணாப் முகர்ஜி. கையசைத்து வரவேற்று என்னை அமரச் சொன்னார். அறைக்கு உள்ளேபோய் அமர்ந்ததும், முதலில் அவரே பேசத் தொடங்கினார்.

""சூரஜ்குண்டில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாய், கவனித்தேன். காட்கில்ஜீயின் உதவியாளராக மாறிவிட்டாயோ என்று கூட நினைத்தேன்'' என்று சிரித்தபடி சொன்னார்.

எனக்குள் தேக்கி வைத்திருந்த கேள்வியை அதற்கு மேலும் அடக்க முடியவில்லை.

""நீங்கள் ஏன் பொருளாதாரத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசவில்லை?''

அவர் சிரித்தார்.

""உன்னைத் தவிர வேறு யாரும் இதுபற்றி யோசித்திருப்பார்களா என்று தெரியவில்லை. அந்தத் தீர்மானத்தை நானும், மன்மோகன்ஜியும், பிரதமரும்தான் தயாரித்தோம். யார் வாசித்தார்கள் என்பதா முக்கியம்?''

""அப்படியல்லவே. காங்கிரஸ் மாநாட்டில் உங்களுக்குத் தரப்பட வேண்டிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்று பலரும் பேசிக் கொண்டார்கள்''

""அதையெல்லாம் பெரிதுபடுத்தக்கூடாது. பிரதமர் தனது கரத்தை வலுப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். அதற்காக அவர் சில முடிவுகளை எடுக்கும்போது அதற்கு இடையூறாக நாம் இருக்கக் கூடாது''

அதற்குப் பிறகு எங்களது பேச்சு தமிழகம் குறித்துத் திரும்பியது. வாழப்பாடி ராமமூர்த்தியின் தலைமையில் சில எம்பிக்கள் அர்ஜுன் சிங்குக்கு ஆதரவாக இருக்கக்கூடும் என்று நான் சொன்னேன். அந்தப் பட்டியலில் ரங்கராஜன் குமாரமங்கலமும் இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது என்றார் அவர்.

அடுத்த இரண்டு நாள்களில் நான் சென்னை திரும்புவதாக அவரிடம் தெரிவித்துவிட்டு நான் கிளம்ப முற்பட்டேன். அவரும் எழுந்துவிட்டார். அவர் வீட்டுக்கு கிளம்பிச் சென்ற பிறகு நானும் அங்கிருந்து புறப்பட்டேன்.

சென்னைக்கு போவதற்காக தில்லி விமான நிலையத்துக்கு போனபோது வி.பி.சிங் அமைச்சரவையில் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த பி.உபேந்திராவை சந்தித்தேன். தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து அவர் விலக்கப்பட்டிருந்தார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த உபேந்திரா அப்போது காங்கிரஸில் சேர்ந்திருக்கவில்லை.

தில்லி விமானநிலையத்தில் உள்ள பிரமுகர்களுக்கான அறைக்கு என்னையும்
அழைத்துச் சென்றார் அவர். அங்கே மார்க்கரெட் ஆல்வா, ரேணுகா சௌத்ரி இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மார்க்கரெட் ஆல்வா அப்போது மத்திய இணையமைச்சராக இருந்தார்.

நான் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் அங்கே வந்தார் தொழிலதிபர் மனு சாப்ரியா. உபேந்திராவிடம் கைகுலுக்கியபடி அமைச்சர் ஆல்வாவிடமும், ரேணுகா சௌத்ரியிடமும் நலம் விசாரித்தார். என்னைத் தனியாக அழைத்தார். நாங்கள் இருவரும் சற்று தள்ளியிருந்த சோபாவில் சென்று அமர்ந்தோம்.

""நான் உங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் பரபரப்பு செய்தியொன்று தரப் போகிறேன். மிகவும் நம்பத் தகுந்த நபரிடம் இருந்து எனக்குக் கிடைத்திருக்கும்
தகவல் இது. நீங்கள் அதை செய்தியாகப் பயன்படுத்திக் கொள்வதோ அல்லது அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு தெரிவிப்பதோ உங்கள் விருப்பம்''

""அப்படியென்ன பரபரப்பான செய்தி?''

""பிரதமர் நரசிம்மராவின் ஆட்சியே கூடக் கவிழலாம். இன்னும் இரண்டு நாள்களில் பம்பாயில் ஒரு பூகம்பம் வெடிக்கப் போகிறது''

நான் நிமிர்ந்து பார்த்தேன். என்னருகில் வந்து காதோடு அவர் சொன்ன செய்தியைக் கேட்டு நான் அதிர்ந்தேன். பம்பாய் விமானத்துக்கான அறிவிப்பைத் தொடர்ந்து மனு சாப்ரியா கிளம்பிப் போய்விட்டார்.

சென்னை திரும்புவதா? இல்லை பயணத்தை ரத்து செய்துவிட்டு பிரணாப்தாவைச் சந்தித்து விஷயத்தைச் சொல்வதா? என்கிற குழப்பம் எனக்கு.

(தொடரும்)

Tags : கி.வைத்தியநாதன் K Vaidiyanathan பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் pranab mukherjee
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT