தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: டெங்கு காய்ச்சலுக்கு மருந்து!

எஸ். சுவாமிநாதன்

டெங்கு காய்ச்சல் மறுபடியும் வேகமாகப்பரவத் தொடங்கியுள்ளதே! இதற்கு ஆயுர்வேத மூலிகை ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றனவா? ஏதேனும் மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தால், அது பற்றிய விவரம் தெரிவித்தால் வாங்கிப் பயன்படுத்தலாம்.

மோகன்,
அண்ணாநகர், சென்னை.

காய்ச்சல், சிவப்பு நிறத்துடன் ஏற்படும் தொண்டை அழற்சி, எலும்புகளில் தடியால் அடித்தது போன்ற வலி, ருசியின்மை, பசியின்மை, வாந்தி, கண்கள் சிவப்பு நிறம் அடைதல், உடல் நெருப்பாகக் காய்தல், தோலில் படைகள் சிவப்பு நிறத்தில் ஏற்படுதல், நாடித்துடிப்பு துரிதப்படுதல், தலைசுற்றல், தூக்கமின்மை, உடல் சோர்வு, பலவீனம் போன்ற அறிகுறிகளால் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அறியலாம்.

முன்பு ஒரு கட்டுரையில் எழுதப்பட்ட க்ளெவிரா மாத்திரை மற்றும் டானிக் மருந்தில் சேர்க்கப்படும் பப்பாளி இலைச்சாறு, மலை வேம்பு, நில வேம்பு, வெட்டி வேர், பேய்ப்புடல், கோரைக் கிழங்கு, இஞ்சி, குறுமிளகு, பற்பாடகம் மற்றும் சீந்தில் கொடி ஆகியவற்றின் கூட்டு, நல்லதொரு மருந்தாக ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. டெங்குக் காய்ச்சல் ஏற்படாதவாறு ஒரு தடுப்பாற்றலையும் அதே சமயம் காய்ச்சல் ஏற்பட்டுவிட்டால், நோய் நிவாரணியாகவும் பயன்படுத்தலாம்.

பப்பாளி இலைச்சாறு டெங்கு எதிர்ப்பு மற்றும் பிளேட்லெட் அதிகரிப்பு நடவடிக்கைக்குப் பெயர் பெற்றது. நில வேம்பு மற்றும் மலைவேம்பு ரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயல்பாட்டையும், நச்சு வளர்சிதை மாற்றங்களை நீக்கி, அழற்சி எதிர்ப்பு, காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. வெட்டிவேர் வீரியத்தில் குளிர்ச்சியானாலும், பசியைத் தூண்டி, செரிமானத்தைத் துரிதப்படுத்துகிறது. பேய்ப்புடல் மூவகை தோஷங்களாகிய வாத - பித்த - கபங்களின் சீற்றத்தை அடக்கக் கூடியது. கோரைக்கிழங்கு அழற்சி எதிர்ப்பு, மூட்டுவலி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. காய்ச்சலைக் குறைக்கிறது. இஞ்சி பசி மற்றும் செரிமானத்தை மீட்டெடுத்து இரைப்பை நொதியின் சுரப்பைத் தூண்டுகிறது. வெப்பமும் காரச்சுவையும் கொண்ட மிளகு திமிர்வாதத்தையும் குடல் வாயுவையும் கண்டித்துக் காய்ச்சலைத் தணிக்கும். பற்பாடகம் கைப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. மலமிளக்கும். பசியைத் தூண்டும். வியர்வையைப் பெருக்கும். உடலைத் தேற்றிக் காய்ச்சலைத் தணிக்கும். சீந்தில் கொடி உடல் பலத்தை அதிகரிக்கும். முறைக்காய்ச்சலைத் தீர்க்கும்.

இம்மூலிகை மருந்துகளின் கூட்டுச் சேர்க்கையினால் வெளிவரும் க்ளெவிரா மாத்திரைகள் மற்றும் டானிக்குகளின் தற்போதைய ஆய்வின் முடிவுகள் மற்றும் விவாதங்களிலிருந்து இந்த மருந்து த்ரோம்போசைட்டோபீனியாவை மாற்றி அமைப்பதில் பாதுகாப்பானது மற்றும் திறமையானது என்பது தெளிவாகிறது. இதனால் பிளேட்லெட் எண்ணிக்கையை இயல்பாக்குகிறது. அதனால் நல்ல வைரஸ் எதிர்ப்பு காய்ச்சல் மற்றும் வலி நிவாரணி, மூட்டுவலி எதிர்ப்பு மற்றும் இம்யூனோமாடுலேட்டரி பண்புகளைக் கொண்ட இந்த மூலிகையின் கலவை மருந்தைப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதன் அறிகுறிகளைப் போக்கவும் விரைவாகக் குணமடையவும் மற்ற டெங்குக் காய்ச்சலுக்காகத் தரப்படும் எந்த மருந்தோடும் அரை - ஒரு மணி நேர இடைவெளியில் பயன்படுத்தலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT