தினமணி கதிர்

தெய்வங்கள்... ஓவியங்கள்!

பெரியார் மன்னன்


ஆன்மிகத்தின் மீது நம்பிக்கையும் நாட்டமும் கொண்டவர்கள், வழிபடுவதில் தொடங்கி,விரதமிருத்தல், துதி பாடுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், சிலை வைத்தல், கோவில் அமைத்தல், புனரமைத்தலென, தமது எண்ணத்திற்கேற்ப பக்தியை வெளிப்படுத்துவது வாடிக்கை.

ஆனால், ஆன்மிகத்தின் மீது அளவற்ற நம்பிக்கை கொண்ட வாழப்பாடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர், சாஸ்திரங்கள், ஆகமவிதிப்படி தெய்வங்களுக்கே உருவம் கொடுத்து, பிரபல ஓவியர்களைக் கொண்டு 150 வண்ண ஓவியங்களை உருவாக்கியுள்ளார். சொத்துகளை விற்று, 350-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த தெய்வங்களின் அரிய ஓவியங்களையும், 10 ஆயிரம் வின்டேஜ் பிரிண்ட் படங்களைச் சேகரித்தும், பாதுகாத்தும் ஆன்மிக உலகில் அளப்பரிய சாதனை படைத்துள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் பாலமணிகண்டன். மதுரை அருகிலுள்ள உசிலம்பட்டி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 13 வயதிலேயே தனது தந்தையை இழந்ததால், பள்ளிப் பருவத்திலேயே, தந்தையின் தொழிலான இனிப்பு மற்றும் கார வகைகளைத் தயாரிக்கும் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

கல்லூரிக்குச் சென்று படிக்காவிட்டாலும் பல ஆன்மிக நூல்களைப் படித்ததால், இவரது எண்ணம், செயல் ஆகியவை அனைத்தும் ஆன்மிகத்தின் மீது திரும்பியது.

இந்த ஈர்ப்பினால், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்ற பாலமணிகண்டன், அங்கு அருள்பாலிக்கும் தெங்வங்களின் உருவ அமைப்புகளை ஆய்வு செய்யத் தொடங்கினார். இவரது இஷ்ட தெய்வமான வீரபத்திரருக்கு, தனது எண்ணத்தில் உதித்த கோலத்தில், சிற்ப சாஸ்திரங்களின்படி பல வண்ண ஓவியத்தை உருவாக்க விரும்பினார். பிரபல ஓவியர் சிவகாசி முருககனியிடம், வரைகோடிட்டு கொடுத்து, புராண சுவடுகளுக்கேற்ப, பல வண்ண ஓவியமாக வரையச் செய்து முதன்முறையாக புதிய உருவத்தை உருவாக்கினார்.

இதனையடுத்து, தோஷம் நீக்கி நலவாழ்வளிக்கும், நவ கிரக குருபகவான் ப்ருஹஸ்பதிக்கு, இவரது மனைவி தாராதேவியுடன் விருட்ச வாகனத்தில் அருள் பாலிப்பதைப்போல, நவ கிரக புராணத்தின்படி வண்ணப் படத்தை முதன்முறையாக உருவாக்கி, காஞ்சிசங்கராச்சாரியார், மதுரை ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம் ஆகியோரது பாராட்டுதலைப் பெற்றார்.

இவரது படைப்புகளுக்கு பக்தர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்ததால், 9 நவ கிரக தெய்வங்களுக்கும் மனைவியுடனும், 28 நட்சத்திரங்களுக்கும் உயிரோட்டமான உருவம் கொடுத்து, புகழ்பெற்ற ஓவியர்களின் கை வண்ணத்தில் வண்ணப்படங்களை உருவாக்கினார்.

இதுமட்டுமின்றி, அஷ்டதிக் பாலகர்கள், அஷ்டலட்சுமி, லட்சுமிநாராணயன், அறுபடைமுருகன், சரபேஸ்வரர், பிரத்யங்கராதேவி, 18 கரங்கள் கொண்ட மகாலட்சுமி, துர்க்கையம்மன், பஞ்சமுக சரஸ்வதி, 32 கரங்கள் கொண்ட மகாவீரபத்திரர், ஏகபாதமூர்த்தி, பஞ்சமுக ஈஸ்வரர் உள்பட 150-க்கும் மேற்பட்ட தெய்வங்களுக்கு, சாஸ்திரம், புராணங்களில் குறிப்பிட்டவாறு உருவம் கொடுத்து, வண்ண ஓவியங்களாக உருவாக்கி, பாலமணிகண்டன் சாதனை படைத்துள்ளார்.

தெய்வங்களின் வண்ண ஓவியத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், தனது வீடு, மனை உள்ளிட்ட சொத்துகளை விற்று, மறைந்த புகழ்பெற்ற ஓவியக்கலைஞர்களான சி.கொண்டையா ராஜு, டி.எஸ்.சுப்பையா, எம்யூ. ராமலிங்கம், கே.மாதவன், இந்திரசர்மா, பி.சர்தார், சபார் பிரதர்ஸ், ஜே.பி.சிங்கால், ரங்ரூப் போன்றவர்கள் வரைந்த அபூர்வமான, பழமையான, 350-க்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்களை, 20 ஆண்டுகளுக்கு மேலாக சேகரித்து, பொக்கிஷமாகக் கருதி பாதுகாத்து வருகிறார்.

இதுகுறித்து பாலமணிகண்டன் கூறியதாவது:

"சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையிலும், மறைந்த புகழ்பெற்ற ஸ்தபதி கோ.திருஞானம் வரைகோட்டு ஓவியங்களைக் கருத்தில் கொண்டும், எனது அனுபவ எண்ணங்களோடு சேர்த்து, புகழ்பெற்ற ஓவிய மேதை சில்பியின் பாணியில், மதுரைமீனாட்சி, காஞ்சி காமாட்சி, திருக்கடையூர் அபிராமி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி, தஞ்சாவூர் பங்காரு காமாட்சி, கூத்தனுôர் சரஸ்வதி, சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் அகிலாண்டஈஸ்வரி, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, திருநெல்வேலி காந்திமதியம்மன், மயிலாப்பூர் கற்பகாம்பாள், திருவேற்காடு கருமாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அனைத்து ஆபரணங்களோடு, பிரபல ஓவியர்களைக் கொண்டு வண்ண ஓவியங்களை உருவாக்கியுள்ளேன்.

ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், தெய்வங்களுக்கு சாஸ்திரப்படி உருவம் கொடுத்து வண்ண ஓவியங்களை உருவாக்கியும், சேகரித்தும் பாதுகாத்து வைத்துள்ளதையே, ஆன்மிக உலகிற்கும், என் சந்ததிக்கும் நான் சேர்த்து வைத்த மிகப்பெரிய சொத்தாக கருதுகிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT