கண்டது
(தஞ்சை ஆட்டோ ஒன்றில்)
நிற்பது விழும்
நகர்வது வாழும்.
ஜி.அழகிரிவேல்,
ஒதியடிக்காடு.
(ஓசூர் மருத்துவமனை லிப்ட் ஒன்றில்எழுதப்பட்டிருந்த வாசகம்)
அவசரத்துக்கு என்னை பயன்படுத்துங்கள் - லிஃப்ட்
ஆரோக்கியத்துக்குஎன் குருநாதரைப்பயன்படுத்துங்கள் - ஸ்டெப்ஸ்
மா.பழனி,
தருமபுரி.
(திருத்தணி திருமண மண்டபம் ஒன்றில்)
ஒரு சொல்லில் கவிதை என்றால்அது அம்மா.
ஒரு சொல்லில் சரித்திரம் என்றால்அது அப்பா.
க.அருச்சுனன்,
செங்கல்பட்டு.
கேட்டது
(திருச்சி -மளிகைக் கடை ஒன்றில்)
""என்ன தம்பி... ஐ.டி. கம்பெனியில வேலை
கிடைச்சிடுச்சாமே? வாழ்த்துகள். என்ன வேணும் சொல்லுங்க?''
""கம்ப்யூட்டர் சாம்பிராணி வேணும் அங்கிள்''
""ஏன் சாதா சாம்பிராணியெல்லாம் இப்ப யூஸ்
பண்றதில்லையா? அது சரி! படிச்ச புள்ள... அதான் கம்ப்யூட்டர் சாம்பிராணி கேட்குறீங்க''
-சிவம்,
திருச்சி.
(புவனகிரி பேருந்து நிலையம் வாசலில்இரு மாணவர்கள்)
""என்னடா மச்சி என்கிட்டபேசுறதே இல்ல?''
""நானும் பார்த்துட்டு தான்டாஇருக்கேன்... பேஸ்புக்ல நான் போடுற ஒரு போஸ்ட்டுக்குக் கூட நீ லைக் போடுறதும் இல்ல; கமெண்ட் போடுறதும் இல்லை''
""டேய்... ரொம்ப நல்லாவே நவீனமா கோபப்படுறடா''
பா.பரத்,
சிதம்பரம் - 2.
யோசிக்கிறாங்கப்பா!
அடுத்தவர் தவறுகளுக்கு
சிறந்த வழக்கறிஞராக
வாதாடுபவர்கள்தாம்,
தன்னுடைய தவறுகளுக்கு
சிறந்த நீதிபதியாகி விடுகிறார்கள்.
மீ.யூசுப் ஜாகிர்,
வந்தவாசி.
மைக்ரோ கதை
தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து, கரும்பலகையில் 1000 என்றுஎழுதிவிட்டு, அவனது கணித ஆசிரியர், ""இதுஎவ்வளவு?'' என்று கேட்டார்.
நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்' என்று அவன் பதிலளித்தான்.
இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் "10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.
""பத்தாயிரம்'' என்று உடனடியாகப் பதில் வந்தது.
இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் "010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.
""அதே பத்தாயிரம்'' என்று அவன் பதில் கூறினான்.
ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, ""ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின் தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது. அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை. அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது. அதுவே தலைகீழாக அமைந்தால்? பதில் உனக்கேதெரியும்'' என்று முடித்தார்.
ஜி. மஞ்சரி,
கிருஷ்ணகிரி-1
எஸ்.எம்.எஸ்.
ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம்.
எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விடும்.
சு. நாகராஜன்,
பறக்கை.
அப்படீங்களா!
டிரோன்கள் பயன்படாத துறைகளே இப்போது இல்லை என்று சொல்லலாம். குறிப்பாக மனிதர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு டிரோன்களை அனுப்பி தேவையான வேலைகளை இப்போது செய்ய முடிகிறது.
அண்மையில் ரஷ்யாவில் உள்ள டிரோன் தயாரிப்பு நிறுவனமான "க்ரான்ஷ்டாட் கம்பெனி' போரின்போது பயன்படக் கூடிய ஒரு டிரோனை உருவாக்கியுள்ளது. பெயர்: காமிகாட்ஸ் டிரோன் ஆர்மடா.
போர் நடக்கும்போது ஜெட் விமானங்கள் எந்த அளவுக்கு ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் சுமந்து சென்று தற்போது பறந்து சென்று தாக்குதல் நடத்துகின்றனவோ, அந்த அளவுக்கு இந்த டிரோனும் ஆயுதங்கள், வெடிகுண்டுகளைச் சுமந்து கொண்டு தாக்கும் திறன் உள்ளதாக இருக்கிறது.
அதுமட்டுமல்ல, போரின்போதும், பிற நாடுகளை உளவு பார்க்கும்போதும் வானில் பறந்து செல்லும் பத்து சக டிரோன்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளதாகவும் இந்த டிரோன் இருக்கிறது. இந்த டிரோன் எஸ்யூ -35 மற்றும் எஸ்யூ-57 வகையான போர் ஜெட் விமானங்களுடன் இணைந்து பணியாற்றும் தன்மை உடையது.
இரண்டு டன் எடையுள்ள வெடிமருந்துகளைத் தூக்கிக் கொண்டு 12 கி.மீ. உயரம் வரை பறக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு டிரோன், ஒருமுறை எரிபொருள் நிரப்பப்பட்டால், 700 கி.மீ. தூரம் வரை பறந்து செல்லும்.
3 கி.மீ. தூரம் முதல் 70 கி.மீ. தூரம் வரை உள்ள இடங்களைக் குறி வைத்துத் தாக்கும் திறன் படைத்தது.
என்.ஜே.,
சென்னை-58.