தினமணி கதிர்

கொன்னக்கோல் கலைஞர்!

28th Nov 2021 06:00 AM | பொ.ஜெயச்சந்திரன்

ADVERTISEMENT

 

கொன்னக்கோல் என்பது கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் ஓர் உப பக்க வாத்தியம். இதற்கு கலைஞர்களின் குரலே இசைக்கருவியாகும். அதாவது வாயால் உச்சரிக்கப்படும் தாளலயம் அல்லது வாயால் சொற்கட்டுகளுடன் வாசிப்பது கொன்னக்கோல் என்று கூறலாம். மிருதங்கம், கஞ்சிரா, கொன்னக்கோல் அனைத்திலும் சிறப்பு பெற்ற கலைஞர் திருச்சி ஆர்.தாயுமானவன் தன் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்-உங்களுடைய குருகுலவாசம் எப்படி உருவானது?

என் தந்தை, உடன் பிறந்த மூவரும் வயலின், பாட்டு ஆகிய துறையில் ஈடுப்பட்டிருந்த காரணத்தால் என்னை லய வித்தையில் ஈடுபடச் செய்ய வேண்டுமெனக் கருதி சிறுவயதிலேயே கும்பகோணம் மிருதங்க வித்வான் ராஜப்ப ஐயரிடம் கொண்டு போய் சேர்த்தனர். மிருதங்கக் கலையில் பயிற்சி பெறவும் ஏற்பாடும் செய்தனர்.

அவரிடம் குருகுலவாசம் செய்ய தொடங்கி சுமார் மூன்று ஆண்டுகள் ஆன போது, மிருதங்கம், கஞ்சிரா வித்வான் புதுக்கோட்டை தெட்சிணாமூர்த்தி ஆச்சாரியார் என்னைப் பற்றி அறிந்து தன்னுடைய சிஷ்யனாக 1945-ஆம் ஆண்டு திருச்சிக்கு அழைத்து வந்தார். அவரிடம் 12 ஆண்டுகள் தொடர்ந்து குருகுலவாசம் செய்து லய சம்பந்தமான நுணுக்கங்கள், மிருதங்கம் வாசிக்கும் முறை எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்.

ADVERTISEMENT

கொன்னக்கோலை நீங்கள் கையாண்ட விதம் பற்றி?

மிருதங்கம், கஞ்சிரா, கொன்னக்கோல் ஆகிய கலைகளுக்கு ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட சொற்கட்டுகள் உண்டு. அதாவது மிருதங்கத்தில் வாசிக்கின்ற சொற்கட்டு கஞ்சிராவில் வாசிக்க முடியாது. கஞ்சிராவில் வாசிக்கின்ற சொற்கட்டு அப்படியே கொன்னக்கோலில் பண்ண முடியாது. கொன்னக்கோல் என்றால் அளவுடன் சொல்வது என்று பொருளாகிறது. கொன்னம் அல்லது கொன்னப்பித்தல் என்றால் சொல்வது என்று பொருள் எதை, எங்கே, எப்படி அளவுடன் சொல்வது தான் இக்கலையின் அடிப்படையாகும். நான் கையாண்ட விதம் தான் எனக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மிருதங்கத்தில் தரிகிட தக.. தரிகிட தக அப்படி என்று சொல்வோம். ஆனால் நான் தரியை நீக்கிவிட்டு ஹரியை சேர்த்து கொள்வேன். என்னுடைய கொன்னக்கோலில் "ஓம்' என்ற ஒலிக்குறிப்பு இறுதியில் ஒலிக்கும்படி செய்வேன். இதை இசை ஆர்வலர்களும் விமர்சகர்களும் வரவேற்றனர்.

கொன்னக்கோலுக்கு கிடைத்த அங்கீகாரத்ததை கூறலாமே?

அமெரிக்கா வாழ் கிளீவ்லாண்ட் சுந்தரம், ""நீங்கள் எப்படியாவது யு.எஸ். வரவேண்டும் அங்குள்ள மக்களுக்கும் இந்த கலையை சொல்லிக் கொடுக்க வேண்டும்'' என்று கூறினார். கிட்டத்தட்ட 25 நாட்கள் அங்கே தங்கியிருந்தேன். அதில் எண்ணிலடங்கா கச்சேரிகள் நடத்தினேன். மிருதங்கத்தில் வயது மூத்த கலைஞர்களில் ஒருவரான திருச்சி சங்கரன் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் மிருதங்க பேராசிரியராகப் பணியாற்றினார். அவரோடும் சேர்ந்து சில நிகழ்ச்சிகள் நடத்தினேன்.

ஆல் இண்டியா ரேடியோவில் இருந்த எஸ்.வி பார்த்தசாரதி அவர் கூட பணிபுரிந்த வயலின் வித்வான் சுந்தரேசன் இவர்கள் இருவரும் ஒரு நாள் என்னை அழைத்து அகில இந்திய வானொலி நிலையத்தில் கொன்னக்கோல் நிகழ்ச்சி நடத்தச் சொன்னார்கள். சென்னை மியூசிக் அகாதெமியில் உமையாள்புரம் சிவராமன், டி.கே.மூர்த்தி இவர்களோடு இணைந்து நிறைய நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். எனது கொன்னக்கோலுக்கு முதன்மை ஸ்தானம் கொடுத்து, கொன்னக்கோலின் அத்தாரிட்டி திருச்சி ஆர்.தாயுமானவன் தான் என்ற மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தனர்.

கிடைத்த விருதுகள்?

தமிழக அரசின் கலைமாமணி விருது, காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் முன்னாள் ஜனாதிபதி சு.வெங்கட்ராமன் கொடுத்த சிறந்த கொன்னக்கோல் கலைஞர் விருது, குன்றக்குடி அடிகளார் வழங்கிய லயஞானச் சித்தர் விருது, லால்குடி நாடுகாண் குழு தந்த பெரும்பாணநம்பி விருது, கி.ஆ.பெ.விஸ்வநாதன் அளித்த கொன்னக்கோல் லய அரசு விருது, திருச்சி ரசிக ரஞ்சனா சபா கொடுத்த லயஞான மாமேதை விருது, பொள்ளாச்சி மகாலிங்கம் சார்பில் இசைக் கலைச்செல்வர் விருது, சென்னை மியூசிக் அகாதெமி வழங்கிய விருது, அமெரிக்காவில் ஆச்சாரியார் ரத்னகரா ஆகிய விருதுகளும் பெற்றுள்ளேன்.

Tags : kadhir கொன்னக்கோல் கலைஞர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT