தினமணி கதிர்

திரைக்கதிர் 

DIN


"காவியத் தலைவன்' படத்திற்கு பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி வரும் படம் "ஜெயில்'. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அபர்ணதி நடிக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார்,"பசங்க' பாண்டி, நந்தன் ராம், ரவி மரியா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தின் கதையை இயக்குநர் வசந்தபாலனுடன் இணைந்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் வசனத்தை பாக்கியம் சங்கரும் எழுதியிருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து, கரோனா காரணமாகத் திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் தள்ளி வைக்கப்பட்ட இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

வசந்தபாலன் பேசுகையில், ""அதிகாரத்தின் பெயரால் பூர்வீக வாழிடம் பறிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் படமாக "ஜெயில்' உருவாகியிருக்கிறது. எப்போது நீங்கள் குரல் உயர்த்திப் பேசுகிறீர்களோ... அப்போது உங்கள் முன்னால் ஒரு ஜெயில் என்ற தலைப்பு வந்து நின்றுவிடும். இந்த படத்தில் ஒரு படிமமாக-ஓர் அடையாள குறியீடாக அது முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. மானுட வளர்ச்சிக்கும், மானுட சமூகத்தின் நலனுக்கும் எவையெல்லாம் இடையூறு ஏற்படுத்துகிறதோ... அவை அனைத்தும் "ஜெயில்' தான்'' என்றார்.

------------------------------------------------

தெலுங்கில் "சத்யம்', "பிரம்மாஸ்திரம்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சூர்யா கிரண் நேரடி தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.

ராசி மீடியா மேக்கர்ஸ், வி.வி பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே.ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

வரலட்சுமி சரத்குமார் கதையின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். கார்த்திக் ராஜு, சித்தார்த் ராய், சந்தானபாரதி, அபிஷேக், சாப்ளின் பாலு, அந்தோணி தாஸ், மீரா, "கலக்கப்போவது யாரு' சிவா, ஹரி ஆகியோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

செல்வா. ஆர் ஒளிப்பதிவு செய்ய விபின் சித்தார்த் இசையமைக்கிறார். பாடல்களை ஆவடி. சே.வரலட்சுமி, முருகானந்தம் ஆகியோர் எழுதுகின்றனர்.
சென்னை அருகில் கேளம்பாக்கம் வி.ஐ.டி கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்கள் பற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.


------------------------------------------------


சமூக அக்கறையும் சகமனிதன் மீது பேரன்பும் கொண்ட ராஜகிருஷ்ணா தன் இளைய மகள் ஸ்ரீநிதியுடன் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான மற்றொரு வாடகை வீட்டில் பல்வேறு கனவுகளோடு பல தரப்பட்ட மனிதர்களும் வாடகைக்கு குடி இருக்கிறார்கள். இவர்களது இயல்பு வாழ்க்கை கரோனா பேரிடர் காலத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டு உணவுக்கே வழியின்றி தவிக்கின்றனர். இவர்களின் லட்சியங்களும் கனவுகளும் பிரதிபலிக்கும் விதமாக எதார்த்தமாக உருவாகி வரும் படம் "அம்மா உணவகம்'.

வெங்கட்பிரபு கதாநாயகனாக நடித்த "வசந்தம் வந்தாச்சு', மாஸ்டர் மகேந்திரன் நடித்த "என்றுமே ஆனந்தம்' போன்ற படங்களை இயக்கிய விவேக பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்திரன், சசி சரத், அஸ்வின் கார்த்திக், ஸ்ரீநிதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஆர்.வி.உதயகுமார், சுப்ரமணியம் சிவா, ஷரவண சக்தி, பாத்திமா, நாட்டுப்புறக் கலைஞர் மன்னை ஸ்ரீமூர்த்தி, சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் படம் திரைக்கு வருகிறது.


------------------------------------------------


தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்து வரும் இவர், "இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து "ரஜினி முருகன்' படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து "தொடரி', "பைரவா', "ரெமோ', "சாமி 2', "நடிகையர் திலகம்', "சர்க்கார்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து ரஜினியுடன் "அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துவிட்டார். தொடர்ந்து அருண் மாதேஷ் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து "சாணிக் காயிதம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதேபோன்று தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் "சர்காரு வாரி பாட்டா' படத்திலும் நடித்துவருகிறார்.

இந்நிலையில் தனது செல்லப்பிராணியுடன் கொஞ்சி மகிழும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் எப்போதும் இருக்கும் கீர்த்தியின், இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.


------------------------------------------------


1980-களில் நடைபெறும் சைக்கோ திரில்லர் கதையாக உருவாகி வருகிறது "பட்டாம்பூச்சி'. பல கொலைகளைச் செய்த ஒரு கொடூர சைக்கோ கொலைகாரனுக்கும், பொறுப்புகளைத் தவிர்த்து அமைதியாக வாழ நினைக்கும் ஒரு காவல்துறை அதிகாரிக்கும் இடையே நடக்கும் கதை. ஒருவரை ஒருவர் புத்திசாலித்தனத்தாலும் உடல் பலத்தாலும் முந்தத் துடிப்பது திரைக்கதையில் கூடுதல் பலம்.

கொடூர சைக்கோவாக முதன்முறையாக நெகட்டிவ் ரோலில் ஜெய்யும், அவரைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரத் துடிக்கும் காவல்துறை அதிகாரியாக சுந்தர்.சியும் நடிக்கின்றனர். கதாநாயகியாக ஹனிரோஸ், முக்கிய கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி,பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கின்றனர். திரைக்கதை நரசிம்மன் மகா கீர்த்தி, கதை, வசனம், இயக்கம் பத்ரி. குஷ்பூ சுந்தர் தயாரிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT