தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 63

சூரஜ்குண்ட் காங்கிரஸ் மாநாட்டில் என்.டி. திவாரி பொருளாதார  தீர்மானத்தை முன்மொழிந்து பேசத் தொடங்கினார். நான் பந்தலுக்கு வெளியே விரைந்தேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

மாதவராவ் சிந்தியாவும், அஜித் ஜோகியும் சற்று தள்ளி நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. இருவருமே என்னிடம் மனம்விட்டுப் பேசுபவர்கள் என்பதால் அவர்களை நோக்கி நகர்ந்தேன். 

நான் எதற்காகப் பதற்றத்துடன் வருகிறேன் என்பதை ஊகித்துவிட்டார் அஜித் ஜோகி என்று நினைக்கிறேன். அவர் மாதவ்ஜியிடம் ஏதோ சொல்ல இருவரும் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

""நரசிம்ம ராவ்ஜி என்ன முடிவெடுப்பார் என்பது யாருக்கும் தெரியாது என்பதால், பிரணாப் முகர்ஜியே கூட  சலனப்பட்டிருக்க மாட்டார்'' என்று கூறி சிரித்தார் மாதவராவ் சிந்தியா. 

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் மாதவராவ் சிந்தியா அமைச்சரவையில் இருந்து அகற்றப்பட்டிருந்தார். அதில் அவருக்கு நிறையவே வருத்தம் உண்டு என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் கூட, எதையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் மாதவ்ஜியின் பெருந்தன்மை அவரது ரத்தத்தில் கலந்தது. குவாலியர் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் என்கிற பந்தாவோ பதவிசோ சிறிதும் இல்லாமல் அவரால் எப்படி இப்படிப் பழக முடிகிறது என்று நான் மட்டுமல்ல, பலரும் வியந்திருக்கிறார்கள்.

""அதோ பிரணாப் முகர்ஜி உள்ளே போகிறார்'' என்றார் அஜித் ஜோகி. ஒரு அம்பாசிடர் காரிலிருந்து பிரணாப் முகர்ஜியும், எஸ்.பி. சவானும், என்.கே.பி. சால்வேயும் இறங்கி மாநாட்டுப் பந்தலுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். ""நாமும் உள்ளே போவோம்'' என்றபடி மாதவராவ் சிந்தியாவும், அஜித் ஜோகியும் கிளம்பினார்கள்.

தமிழக எம்பி-க்களான கோவை சி.கே. குப்புசாமி, மதுரை ஏ.ஜி.எஸ். ராம்பாபு, மத்திய சென்னை இரா. அன்பரசு மூவரும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இணைந்து கொண்டேன். 

ஆவடி காங்கிரஸ் மாநாட்டின்போது காவல்துறைப் பணியில் இருந்ததையும், அப்போது சுட்டெரிக்கும் வெயிலில் மாநாட்டு மைதானத்தில் குடிக்கத் தண்ணீர் கூட  கிடைக்காமல் அவரும் ஏனைய காவல்துறையினரும் அவதிப்பட்ட கதையையெல்லாம் சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் சி.கே. குப்புசாமி.

"பைசன்' ராமசாமியும், "டெக்ஸாஸ்' குப்புசாமியும் இணைபிரியா நண்பர்கள். திருப்பூர் பனியன் நகரத்தின் அன்றைய முக்கியமான இரண்டு ஆளுமைகள் அவர்கள். காவல்துறைப் பணியிலிருந்து விலகித் தொழிலதிபராகி, 1984 மக்களவைத் தேர்தலில் சிவாஜிகணேசனுக்கான ஒதுக்கீட்டில் கோவையில் போட்டியிட்டுத் தேர்வானவர் சி.கே. குப்புசாமி. தொடர்ந்து எட்டு, ஒன்பது, பத்தாவது மக்களவைகளில் உறுப்பினராக இருந்தவர். குப்புசாமி இருக்கும் இடத்தில் கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது.

தனது ஆதரவாளர்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தார் ரயில்வே அமைச்சராக இருந்த ஜாபர் ஷெரீப். நான் வணக்கம் சொன்னதும் திரும்பிப் பார்த்த ஜாபர் ஷெரீபின் கவனம் என்னுடன் வந்து கொண்டிருந்த மூன்று தமிழ்நாடு எம்பி-க்கள் மீதும்தான் திரும்பியது. சிரித்தபடியே, ""மூன்று தஸ்கர வீரர்கள் எங்கே ஒன்றாகப் புறப்பட்டு விட்டீர்கள்?'' என்று அவர்களிடம் அவரது பாணி ஆங்கிலத்தில் கேட்டுச் சிரித்தார்.

தமிழும் கன்னடமும் கலந்த அவரது பேச்சின் இடையிடையே ஆங்கிலமும், இந்தியும் இழையோடும். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அகன்றார் ஜாபர் ஷெரீப். தமிழகத்திலிருந்து வந்திருந்த சில காங்கிரஸ் தொண்டர்கள் நெருங்கி வரவே, கலகலப்பானார்கள் குப்புசாமி, அன்பரசு, ராம்பாபு மூவரும். எனது சிந்தனை ஜாபர் ஷெரீப்பைச் சுற்றி வந்தது.

ஜாபர் ஷெரீப் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் தில்லி அரசியல் வட்டாரத்தில் அப்போது பிரபலம். அவர் அரசியல் முக்கியத்துவம் பெற்றதன் பின்னணியே வித்தியாசமானது, விசித்திரமானது. 

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தனது 85-ஆவது வயதில் காலமான ஜாபர் ஷெரீபின் நீண்ட அரசியல் பயணம் 1971-இல் தொடங்கியது. அது பற்றிய சுவாரஸ்யமான கதை உண்டு. அதன் உண்மைத்தன்மை குறித்து உறுதியளிக்க முடியாவிட்டாலும், அதை ஒட்டுமொத்தமாக மறுத்து விடவும் முடியாது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த எஸ். நிஜலிங்கப்பாவின் நம்பிக்கைக்குரிய கார் ஓட்டுநராக இருந்தவர் ஜாபர் ஷெரீப். நிஜலிங்கப்பாவின் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டரான செல்லக்கரே கரீம் ஜாபர் ஷெரீப் அவரது நம்பிக்கைக்குரிய கார் ஓட்டுநரானதில் வியப்பில்லை. அப்படி இருக்கும்போதுதான் 1969- இல் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது.

காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா, காமராஜர், சஞ்சீவ ரெட்டி, எஸ்.கே. பாட்டீல், அதுல்யா கோஷ் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கும், பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் இடையேயான மோதல் அதிகரித்துவந்த நேரம் அது. காமராஜரும் மூத்தத் தலைவர்களும் நிஜலிங்கப்பாவுடன் கட்சி அலுவலகத்திலும், அவரது வீட்டிலும், கார் பயணத்தின்போதும் பல அரசியல் வியூகங்கள் குறித்து விவாதிப்பார்கள். இந்திரா காந்தியையும் அவரது ஆதரவாளர்களையும் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்துப் பேசுவார்கள்.

ஒவ்வொரு நாளும் நிஜலிங்கப்பா தலைமையிலான மூத்த தலைவர்கள் என்னென்ன பேசுகிறார்கள், வியூகம் வகுக்கிறார்கள் என்பதையெல்லாம் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு ஜாபர் ஷெரீப் தெரிவித்து வந்தார் என்பதுதான் அவர் மீதான மிகப் பெரிய குற்றச்சாட்டு. ஒரு கட்டத்தில் விஷயம் நிஜலிங்கப்பாவுக்குத் தெரியவந்தபோது, அவரது கோபத்துக்கு ஆளானார் ஜாபர் ஷெரீப். அவர்மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதுபோல, கட்சி பிளவுபட்டபோது, நிஜலிங்கப்பாவின் கார் ஓட்டுநராக இருந்த ஜாபர் ஷெரீப், இந்திரா காந்தியின் அணியில் இணைந்தார்.

தன் வாழ்நாளின் கடைசி வரை நிஜலிங்கப்பா ஜாபர் ஷெரீபை மன்னிக்கவே இல்லை. அவருடன் முகம் கொடுத்துப் பேசுவதற்குக் கூட மறுத்துவிட்டார். ஜாபர் ஷெரீபுக்கு நிஜலிங்கப்பா சூட்டியிருந்த பெயர் "மீர் ஜாஃபர்'. அவரைப் பற்றி பேச்சுவந்தால் "மீர் ஜாஃபர்' என்றுதான் நிஜலிங்கப்பா ஏளனமாகக் குறிப்பிடுவார். 

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றில் மீர் ஜாஃபர் என்று அழைக்கப்பட்ட சையத் மீர் ஜாஃபர் அலிகான் பகதூருக்கு முக்கியமான பங்குண்டு. வங்காள நவாப்பாக இருந்த சிராஜ் உத்தவ்லாவின் தலைமைத் தளபதியாக இருந்தவர் மீர் ஜாஃபர். 1757-இல் நடந்த பிளாஸி யுத்தத்தில் தனது நவாப்பான சிராஜ் உத்தவ்லாவை ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்களுக்கு காட்டிக்கொடுத்து, அதன் மூலம் அவர்களுடைய உதவி பெற்று நவாப் ஆனவர் மீர் ஜாஃபர். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலூன்ற அவர்தான் காரணம். நம்பிக்கைத் துரோகத்துக்கு அடையாளமாக விளங்கிய முந்தைய மீர் ஜாஃபரின் மறுபிறவிதான் ஜாபர் ஷெரீப் என்பது எஸ். நிஜலிங்கப்பாவின் கருத்து.

கட்சிப் பிளவின்போது தனக்கு தகவல் தந்து உதவிய ஜாபர் ஷெரீபை பிரதமர் இந்திரா காந்தி மறக்கவில்லை. 1971-இல் மக்களவைக்குப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, கர்நாடக மாநிலம் கனகபுரா மக்களவைத்தொகு தியில் தனது கட்சி வேட்பாளராக ஜாபர் ஷெரீபை அறிவித்தார் அவர். 1977 முதல் 1996 வரை தொடர்ந்து ஐந்து முறையும், பிறகு 1998, 1999 தேர்தல்களிலும் பெங்களூர் வடக்குத் தொகுதியிலிருந்து அவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1980-இல் இந்திரா காந்தி அமைச்சரவையில் ரயில்வே இணையமைச்சராகவும், 1991-இல் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் ரயில்வே துறையின் கேபினட் அமைச்சராக 1995 வரையிலும் இருந்த ஜாபர் ஷெரீப், கர்நாடக அரசியலில் பெரும் பங்கு வகித்தார் என்பதை உலகறியும். இவரைப் பற்றி இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் உண்டு.

ஜாபர் ஷெரீபின் மகள் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மிஷன் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். பெங்களுருக்கும் சென்னைக்கும் இடையே தினந்தோறும் வந்துபோவதற்கு லால்பாக் எக்ஸ்பிரஸ் என்கிற புதிய விரைவு ரயில் 1992 ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. தனது மகளின் கல்லூரி நேரத்துக்கு ஏற்ப அந்த ரயிலின் பயண நேரத்தை நிர்ணயித்து, அவருக்காகவே காட்பாடியில் ரயில் நின்று போவதற்கும் ஏற்பாடு செய்தார் ரயில்வே அமைச்சராக இருந்த ஜாபர் ஷெரீப் என்கிற குற்றச்சாட்டு உண்டு. 

அரசியல்ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஜாபர் ஷெரீப் குறித்துப் பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டாலும், கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, ரயில்வே அமைச்சராக இருந்தபோது அவர் செய்த நன்மைகள் ஏராளம். 

ஜாபர் ஷெரீப் குறித்த சிந்தனையில் மூழ்கி இருந்த என்னை யாரோ அழைப்பது கேட்டது. அந்த சத்தத்திற்கிடையிலும் என்னைப் பெயர் சொல்லி அழைப்பவர் யார் என்று திரும்பிப் பார்த்தேன். என்னை நோக்கி வந்து கொண்டிருந்தவர் "ஜென்மபூமி' குஜராத்தி நாளிதழின் தில்லி தலைமை நிருபராக இருந்த குந்தன் வியாஸ். எனது "நியூஸ்கிரைப்' செய்தி நிறுவனத்துடன் தொடர்புடைய நாளிதழ் என்பதால் எங்களுக்குள் நெருக்கம் அதிகம்.

மாநாடு குறித்தும், அங்கே நடக்கும் அரசியல் குறித்தும் பேசிக் கொண்டே நாங்கள் இருவரும் மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைந்து பத்திரிகையாளர் பகுதியில் சென்று அமர்ந்தோம்.

சூரஜ்குண்ட் காங்கிரஸ் மாநாடு குறித்து நான் எழுதிய வைத்திருக்கும் குறிப்பை சமீபத்தில் எடுத்துப் படித்துப் பார்த்தேன். காங்கிரஸ் கட்சியைத் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் பிரதமர் நரசிம்ம ராவ் கொண்டுவந்திருந்ததன் அடையாளம் என்று குறித்து வைத்திருக்கிறேன். இப்போது சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னால் யோசித்துப் பார்க்கும்போது, இன்னொரு கோணம் எனக்குத் தெரிகிறது. சோனியா காந்தியின் அரசியல் பிரவேசத்தின் தொடக்கமாகவும் 1993 சூரஜ்குண்ட் மாநாடு அமைந்தது  என்று ஏன் சொல்லக் கூடாது என்றும் தோன்றுகிறது.

மாநாடு முடிந்து தில்லி திரும்பிய இரண்டு நாள் கழித்து வர்த்தகத்துறை அமைச்சகம் இருக்கும் உத்யோக் பவனில், முன்கூட்டியே அனுமதி பெற்று, வர்த்தக அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியை சந்திக்கச் சென்றேன். அவர் அலுவல்களில் மூழ்கி இருந்தார் என்பது மட்டுமல்ல, அவரைச் சந்திக்கப் பலர் காத்துக் கொண்டிருந்தனர்.

அங்கே அவரைச் சந்திப்பதற்காக காத்திருந்த தொழிலதிபர்களைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியில் மயங்கி விழாத குறை. தொடங்க இருக்கும் மோடி லுஃப்ட் விமான நிறுவனத்தின் தலைவர் எஸ்.கே. மோடி அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். பிரபல ஜெர்மன் நிறுவனமான லுஃப்தான்ஸாவுடன் இணைந்து மோடி லுஃப்ட் விமான சேவை அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. 

இன்னொருபுறம் அமர்ந்திருந்தார் டால்மியா குழுமத்தின் தலைவர் சஞ்சய் டால்மியா. அங்கே இருந்த இன்னொரு தொழிலதிபர் அப்பல்லோ குழுமத்தின் நிறுவனத் தலைவர் ரோனாக் சிங். தனது வாழ்க்கையை சாதாரண தினக்கூலியாகத் தொடங்கி, தனது மனைவியின் நகைகளை வெறும் ரூ.8,000-க்கு அடகு வைத்து வியாபாரத்தைத் தொடங்கி பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் மிகப் பெரிய தொழிலதிபரானவர் ரோனாக் சிங். அப்பல்லோ டயர்ஸ், பாரத் கியர்ஸ், பாரத் ஸ்டீல் டியூப்ஸ் என்று பல நிறுவனங்களைத் தொடங்கி ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கிய தொழிலதிபர் அவர். அவரைப்போல இன்னும் பல தொழிலதிபர்கள் அங்கே அமர்ந்திருந்தனர். 

அவர்களையெல்லாம் பார்த்தபோது, சம்பிரதாயச் சந்திப்புக்காக வந்திருக்கும் நான் பிரணாப்தாவின் நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும் என்று தோன்றியது. அவரது உதவியாளரிடம், ""இன்னொரு நாள் வருகிறேனே... நிறையப் பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று தெரிவித்தேன். என்னை விசித்திரமாகப் பார்த்தார் அவர்.

என்னிடம் மேஜையில் இருந்த ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினார். அதைப் பார்த்ததும் நான் திகைத்துப்போய் சொல்வதறியாது நின்றுவிட்டேன். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

SCROLL FOR NEXT