தினமணி கதிர்

ஞானக்கண்

சிவ.கனகசபை வேலாயுதம்பாளையம்

"உங்களுக்கு வயதாகிவிட்டது. இதற்குமேல் நீங்கள் பாட்டெல்லாம் கற்றுக் கொள்ளமுடியாது. அப்படியே கற்றுக் கொண்டாலும், உங்களால் தாளம் தப்பாமல் பாட முடியாது! அதெல்லாம் சிறு பிள்ளையிலிருந்து வந்தால்தான் கற்றுக் கொள்ள முடியும்' என்று இந்த இசையாசிரியர் நேருக்குநேர் சொல்லிவிட்டால் கூட பரவாயில்லை. அதை விட்டுவிட்டு,"கொஞ்ச நேரம் போய் ஒக்காருங்க... இவுங்கள முடிச்சு அனுப்பிட்டு வர்றேன்! அப்பறம் நம்ம பேசுவோம்' என்று அவர் சொன்னதுதான் மச்சசாமிக்கு இப்போது வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கின்றது. பாட்டுக் கற்றுக் கொள்ள வந்திருப்பவர்களுக்கு முன், மச்சசாமி மனம் வேதனைப்படும்படி எதுவும் சொல்லி விடக் கூடாதென்பதற்காக அவரைத் தனியாக உட்கார வைத்திருக்கின்றாரோ, என்னவோ தெரியவில்லை.
புதிதாக பள்ளிக்கு வந்திருக்கும் மாணவனைப் போல்தான் அந்தப் பயிற்றறையைப் பதற்றமாகப் பார்க்கின்றார். அந்த அறை முழுவதும் இசை மணம் கமழ்ந்து கொண்டிருக்கின்றது. வடமேற்குப் பக்கம் தபேலாவும், கிட்டாரும் சுவரோரமாக சாய்த்து வைத்திருக்கின்றார்கள். எதாவது நிகழ்ச்சியென்றால் பார்வையாளர்கள் உட்காருவதற்காக ஐம்பது அறுபது சேர்கள் தென்கிழக்குப் பக்கம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதிலிருந்துஎடுத்துதான் ஆறேழு சேர்கள் இசையாசிரியருக்கு முன் போடப்பட்டிருக்கின்றன. மச்சசாமி அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் சேருக்குப் பக்கத்தில்தான் உட்கார்ந்து கொண்டு சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
வீட்டிலிருந்து கிளம்பிவரும் போதே அவருடைய மனைவி சொன்னாள்: ""ரிட்டையர்டு ஆயிட்டோம்! இனிமே வீட்லேயிருந்து என்னபண்ணப் போறோம்? பாட்டாவதுபோய் கத்துப்போம்ன்னுதானே நெனைக்கறீங்க. இந்த வயசுல பாட்டுக் கத்துக்கிட்டு என்னப் பண்ணப் போறீங்க? வீட்ல என்ன வேலையாயில்ல?'' என்றாள்.

தங்களுடைய இரண்டு மகள்களும் குழந்தைப்பேறு பெற்று வீட்டில் இருப்பதால், அவர்களுக்கு எதாவது கூடமாட உதவி செய்யாமல், இந்த நேரத்தில் போய் பாட்டு கிளாஸ் போகிறேனென்று சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றாரே! நாம் ஒருவர் மட்டும் எப்படி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதென்ற கவலையில் கூட, அவரது மனைவி அப்படிக் கேட்டிருக்கலாம்.

இவரும், வீட்டு வேலையெல்லாம் செய்ய வைத்து எங்கே தன்னை பெண்டு கழற்றி விடுவாளென்று பயந்து போய் இந்த முடிவெடுத்திருக்கின்றாரோ, என்னவோ தெரியவில்லை.

""இதுவரைக்கும் வேலைக்குப் போய்க்கிட்டிருந்தேன், பாட்டு கத்துக்கப் போக முடியல! ரிட்டையர்டு ஆனதுக்கப்பறமாவதுபோய் அதை மொறையாக் கத்துக்கிட்டு ஒரு பாட்டாவது மேடையேறி பாடறதுதான் என்னோட லட்சியமா வச்சிருக்கிறேன்னு ஓங்கிட்ட எத்தனை தடவ சொல்லியிருக்கேன். என் ஆர்வத்துக்கு ஏன் தடை போடுறே? இதையே சாக்கா வச்சி, வீட்டு வேலை எதுவும் செய்யமாட்டேன்னு நெனைக்கறியா? அது வேற, இது வேற! அப்படியே நான் கத்துக்கிட்டு வந்தேன்னா... என்னைப் பாத்துட்டு என் பேர புள்ளைங்களும் கத்துக்கும். அப்படிக் கத்துக்கிட்டா, தமிழ் உச்சரிப்பு, நினைவாற்றலெல்லாம் பெருகும். அது மட்டுமில்லாம, இசைக்கு முன்னாடி... கோபதாபமெல்லாம் பொட்டிப் பாம்பா அடங்கிடும் தெரியுமா?'' என்று அதன் பெருமைகளை மனைவியிடம் எடுத்துச் சொன்னார்.

சிறு வயதிலிருந்தே சினிமாப் பாட்டுக் கற்றுக் கொள்ளவேண்டுமென்கிற தீராத ஆர்வத்தினால்தான் அறுபது வயதைத் தாண்டி விட்டாலும், இருபது வயது இளைஞனைப்போல் சுறுசுறுப்பாக, மாலை ஆறுமணிக்கெல்லாம் தன்னுடைய ஜென்ம சாபமே நீங்கப்போவதுபோல் அந்த இசைப் பயிற்சிக் கூடத்திற்கு முன் வந்து சேர்ந்தார் மச்சசாமி.

வீட்டிலிருந்து வேக வேகமாகப் புறப்பட்டு வந்து விட்டாரேயொழிய வண்டியை நிறுத்தும்போதே, "வாங்கையா வாத்தியாரையா... வரவேற்க வந்தோமையா' என்ற திரை இசைப்பாடலின் வாயிலாக அந்த இசையாசிரியரின் கானக் குரலைக் கேட்டு அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார். நல்ல விஷயத்தையெல்லாம் தள்ளிப் போடக் கூடாதென்று மனதை தேற்றிக் கொண்டாலும், அவர் பாட்டுப் பாடும்போது எப்படிப் போய் குறுக்கே நிற்பது? தொந்தரவு செய்வது போலாகிவிடுமே என்று அப்போது அவருக்கு ஒருவித தயக்கம் ஏற்பட்டது. அந்தத் தயக்கமே கூச்சமாக மாறி, அவரைத் திருப்பி அனுப்பப் பார்த்தது. நல்லவேளை ஆறுமணிக்கே இருட்டி விட்டதால் யாரும் தன்னைப் பார்த்து, ""என்ன இந்தாளு, இந்த வயசுல போய் பாட்டுக் கத்துக்கப் போறான்'' என்று கிண்டலடிக்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, எங்கிருந்தோ இரண்டு நாய்கள் வாலாட்டிக் கொண்டேஓடிவந்து, "லொள்... லொள்...' என்று குரைத்தது. உச்சுக் கொட்டுவதுபோல் அதைப்பார்த்து "த்தூ...த்தூ...' என்று சமாதானப்படுத்த முயற்சித்தார்.
நம்மைப் பார்த்து பயந்து விட்டானென்று அது நினைத்திருக்க வேண்டும். அதனால்தான் சிறிது நேர குரைப்பிற்குப் பின் இரண்டும் அவருடைய பேண்ட்டையும், கால்களையும் முகர்ந்து பார்த்துவிட்டு ஓடி விட்டன. நல்லவேளை அங்கே நின்று காலைத் தூக்கி தன்மேல் எங்கே ஒன்றுக்குப் போய்விடப் போகிறதென்று பயந்து போனார். அதனுடைய குரைப்புச் சத்தம் உள்ளிருப்பவர்களுக்கு யாரோ வெளியே வந்திருக்கின்றார்களென்று தெரிவிப்பது போலிருந்தது.
வண்டியில் வைத்திருந்த இரண்டு பைகளை எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் நகர்ந்ததும் "இப்படியே தயங்கித் தயங்கி நின்னுக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? நாங்கெல்லாம் ஒங்க வயிலேர்ந்து எப்ப வர்றது?' என்பதுபோல் அந்தத் தேனிசையே தென்றலாக வந்து அவர் கையைப்பிடித்து கொண்டுப்போய் அந்த இசையாசிரியர் முன் நிறுத்திவிட்டது. அனுதினமும் தெய்வீக ராகங்களும், திகட்டாத தாளங்களும் புழங்கிக்கொண்டிருக்கும், அந்த இசை மணம் கமழும் அறைக்குள் செல்லவே அவரது கால்கள் தயங்கியிருக்கின்றன. இவர் வந்து நிற்பதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த இசையாசிரியர் கண்களை மூடியபடியே... கீ போர்டுக்கு முன் அமர்ந்து கொண்டு,"எந்தன் பொன் வண்ணமே... அன்பு பூ வண்ணமே' என்று அவருடைய விரல்கள் அனைத்தும் நாட்டியமாடுவதுபோல் பி ஜி எம் வாசித்தபடியே, ஒரு மாணவனுக்கு, ராகமாகப் பாடிக் காட்டிக்கொண்டிருந்திருக்கின்றார்.
அந்த மாணவனும் அவரைத் தொடர்ந்து,"எந்தன் பொன் வண்ணமே அன்பு' என்று பாடி முடிப்பதற்குள்ளே, அவன் பக்கம் ஒரு விரலை நீட்டி, ""நான் பொன் தானே சொன்னேன்... நீயேன் புண் வண்ணமேன்னு பாடுற. பாடுறது முக்கியமில்ல. பாடுற ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமா உச்சரிக்கணும். புரிஞ்சுதா?'' என்று சரி செய்துகொண்டிருக்கும்போதே,""சார், யாரோ ஒங்களப் பாக்க வந்திருக்காங்க''என்று மெல்லிய குரலில் ஒரு மாணவன் அவர் காதில் ஓதினான். அவன் அப்படிச் சொன்ன பிறகு, தனது நெற்றியைச்சுருக்கி, இந்த நேரத்தில் யார் வந்து தொந்தரவு செய்வதென்பதுபோல் நினைத்துக் கொண்டே அந்த இசையாசிரியர் தன்னுடைய இசை உலகத்திலிருந்து புற உலகத்திற்கு வந்தார்.
பெரும்பாலும், அவரே எப்போது கண்களைத் திறக்கின்றாரோ அதுவரை யாரும் அவரைத் தொந்தரவு செய்யமாட்டார்கள். பாட்டுக் கற்றுக் கொள்பவர்கள் வீட்டிற்குச் செல்வதாக இருந்தாலும் கூட "வர்றேங்கையா...' என்று சொல்லிவிட்டு, அவர் கண் திறக்கும்வரைக் காத்திருக்காமல் போய்க் கொண்டிருப்பார்கள். அவரைப் பற்றி தெரிந்தவர்கள் யாரும் இப்படி இடையில் வந்து தொந்தரவு செய்யமாட்டார்களென்பது அவருக்குத் தெரியும். அப்படியென்றால் இது யாராகயிருக்குமென்றுதான் அவரும் கண் திறந்து பார்த்தார். ஏதோ வழி தெரியாமல், இடம் மாறிவந்து விட்டவரைபோல்தான் திருதிருவென்று விழித்திருக்கின்றார் மச்சசாமி.
""வாங்க, என்ன வேணும்?'' என்றிருக்கின்றார், மெல்லிய குரலில். அவர் பாடும்போது இருந்த சத்தத்தில் நூற்றில் ஒரு பங்குகூட அப்போதில்லை. வார்த்தையில் அவ்வளவு சாந்தம். என்ன சொல்லப் போகிறார் என்பதுபோல் அவருடைய கூரிய விழிகள் வந்தவரையே உற்றுப் பார்த்தன. அந்தப் பார்வையின் தகிப்பை எதிர்கொள்ள முடியாதவராய் குனிந்து நிமிர்ந்தார் மச்சசாமி. "நானும் பாட்டுக் கத்துக்கப் போறேன், பாட்டுக் கத்துக்கப் போறேன்' என்று வீட்டில் வீராவேசமாகப் பேசிவிட்டு வந்தவர், புலியைக் கண்ட பூனை போல் பட்டென்று வார்த்தைகள் எதுவும் வராமல் தவித்திருக்கின்றார்.
அவரிடம் பாட்டுக் கற்றுக்கொண்டும், பாடிக் கொண்டுமிருந்தவர்கள் மச்சசாமியின் முகத்தையும் இசையாசிரியர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்திருக்கிறார்கள். எல்லோரும் தன்னையே பார்ப்பது, அவருக்கு வெட்கமாக இருந்திருக்கின்றது. இருந்தாலும், அந்த வெட்கத்தையெல்லாம் ஒதுக்கி ஓரம் கட்டிவிட்டு, ""ஐயா, நான் உங்ககிட்ட... பாட்டுக்கத்துக்க வந்திருக்கறேன்'' என்ற அவரது பிசிரடித்த வார்த்தைகள் அந்த அறை முழுவதும் பரவியது. ஏதோ ஓர் அதிர்ச்சியான தகவலைச்சொன்னதுபோல் மற்றவர்கள் எல்லோரும் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
அவருடைய ஆர்வத்தைப் பார்த்து பட்டென்று எந்தப் பதிலும் சொல்லி அனுப்பிவிட முடியாதவராய் இருந்திருக்கின்றார் அந்த இசையாசிரியர். அவருடைய ஆழ்ந்த யோசனை மச்சசாமிக்கு சற்று கலக்கத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அந்தப் பதற்றத்தையெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ளாமல், தான் கற்க வந்த இசைவாணியை மனதில் நினைத்துப் பார்த்து தைரியப்படுத்திக் கொண்டார். ஒருவேளை வாசலிலே நிற்பதால் அந்நியப்பட்டுபோய் இருப்பதுபோல் அவருக்கு தோன்றியதோ என்னவோ! சற்று நகர்ந்து முன்னுக்கு வந்தார். இருட்டிலிருந்து மீண்டு வந்ததுபோல் அவருக்கு ஒரு மகிழ்ச்சி. தலைவாசலுக்கு மேலுள்ள டியூப் லைட் வெளிச்சத்தில் தன்னை முழுமையாக அவருக்குத் தெரியும்படி காட்டிக் கொண்டிருந்தார்.
அப்படியும் அவர் முகம் இசையாசிரியருக்கு தெளிவாகத் தெரியவில்லை. அதற்காக அவர் வேறெந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஓமக்குச்சியைப்போல் ஓர் ஒல்லியான உருவம். வெளுத்துப் போன தலைமுடியை வாக்கெடுத்து சீவியிருக்கின்றார். ஏதோ கடைக்குச் சென்றுவிட்டுவருவதுபோல் அவரது இரண்டு கைகளிலும் பைகள் இருக்கின்றன. அதில் ஒருபக்கம் குரு தட்சணைக்குத் தேவையான வெற்றிலை பாக்கு, பழம், பூவும், மறுபக்கம் நோட்புக்கெல்லாம் வைத்திருக்கின்றார். எப்படியும் அவர் தன்னைச் சேர்த்துக் கொள்வாரென்று நம்பிக்கையில்தான் எல்லாம் முறையாக வாங்கி வந்துள்ளார்.
"இவர் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாரே' என்பதுபோல், அவர் சந்தேகமாகப் பார்க்கும் பார்வையை வைத்தே, நேருக்கு நேர் சொன்னால் மனம் வேதனைப்படுமென்று, ""எனக்கு, அதுக்கெல்லாம் இப்ப நேரமே கெடையாதே'' என்று எங்கே அப்படிச்சொல்லி அனுப்பி விடப்போகிறாரென்று பயந்து போய் மச்சசாமியே பேச ஆரம்பித்தார்.
""ஐயா, நான் ஒங்களுடைய தீவிர ரசிகன். எனக்குத் தெரிஞ்சி கிட்டத்தட்ட இந்த முப்பது வருஷத்துல ஒங்க பாட்டுக் கச்சேரி,
நம்மூர்ல்ல எங்க நடந்தாலும், நான் அங்கிருப்பேன். சிங்கம் மாதிரி கம்பீரமா ஸ்டேஜில நின்னுக்கிட்டு, ரெண்டு கையையும் மேல தூக்கி, பாட்டுக்கேத்த மாதிரி ஒங்க வெரலும் தாளம் போட்டுக்கிட்டிருக்கும். அப்பெல்லாம் ஒங்க கிட்டயே யாரும் நெருங்க முடியாது. அவ்வளவு பிசியாயிருப்பீங்க. அப்படியும் ஒன்னு ரெண்டுமுறை ஒங்ககிட்ட ஆசி பெறவும் ஆட்டோகிராப் வாங்கவும் மேடைகிட்ட வந்துருக்கேன். அப்ப ஒருத்தரு என்னன்னு விஷயத்தைக் கேட்டுட்டு, கச்சேரி முடியட்டும் பாத்துக்களாம்... போய் ஒக்காருங்கன்னுசொல்லி அனுப்பி வுட்டுடுவாரு...
பாட்டுக் கச்சேரி சிலநேரம் பன்னென்டு மணிவரைக்கும்கூட நடக்கும். அப்பியாவது ஒங்களைப் பாத்துப் பேசிட மாட்டமான்னு நின்னுக்கிட்டிருந்திருக்கேன். கச்சேரி முடிஞ்சதும் ஒருத்தர் மைக்குல, "இதுவரை இந்த இன்னிசையைக் கேட்டுக்கொண்டிருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்கள் இசைக்குழுவின் சார்பில் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்'னு அவர் சொல்லிக் கிட்டிருக்கும்போதே நீங்க அந்த மேடைக்குப் பின்பக்கம் போற மாதிரிதான் தெரியும். அதுக்கப்பறம், எந்த வழியா வெளியே போறீங்கன்னே இதுவரைக்கும் யாருக்குமே தெரியாத ரகசியம் அது. அதுலேர்ந்து எப்படியாவது ஒங்களைப் பாத்து, என்னோட இசை ஆர்வத்துக்கு ஒரு வடிகால் கிடைக்காதான்னு அலைஞ்சிக்கிட்டிருந்திருக்கேன். நானும் அப்ப வேலைக்கு போய்க்கிட்டிருந்ததால... முழுமையா இது மேல கவனம் செலுத்த முடியல. சரி, எதாயிருந்தாலும் ரிட்டையர்டு ஆனதுக்கப்பறம் பாத்துப்போம்னு மனச தேத்திக்கிட்டேன்...
அது போலவே இப்ப நான் ரிட்டையர்டு ஆயிட்டேன். ஒரு நாளு என்னுடைய நண்பர் ஒருவரைப் பார்த்துப் பேசிக்கிட்டிருக்கும்போது அப்பதான் அவரு சொன்னாரு,வேலையில இருக்கும்போதே பாட்டுக் கத்துக்கணும்னு சொல்லிக்கிட்டிருப்பீங்களே... ஒங்க நல்லநேரம்... இப்ப அந்த இசைவேந்தர், நம்மூர் பண்பாட்டு கழகத்திலதான் பாட்டு சொல்லிக் குடுத்துக்கிட்டிருக்கறாருன்னு சொன்னாரு. அதிலிருந்து நானும் ஒவ்வொரு நாளா வரணும் வரணும் பாத்துக்கிட்டுதான் இருக்கறேன், எதாவது ஒரு வேலை வந்து போவுது. எவ்வளவு வேலை வந்தாலும், நமக்குப் புடிச்சத செய்யறதுக்குன்னு கொஞ்சம் நேரம் ஒதுக்கித்தானே ஆகணும். அதுக்குத்தான் இப்ப ஒங்களத் தேடி வந்துருக்கேன்'' என்று அந்த இசையாசிரியரைப் பார்த்து தன்னுடைய ஆதங்கத்தையெல்லாம் கொட்டித் தீர்த்திருக்கின்றார்.
இசை ஆசிரியர் அவருடைய அனுபவத்தில் இவரைப்போல் நிறைய பேரைப் பார்த்திருக்க வேண்டும். அந்தப் பட்டறிவால்தான் எந்தவித புகழ்ச்சிக்கும், உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுத்திடாமல் ஆழ்கடலைப்போல் அமைதியாகயிருந்தவர், ""இதுக்கு முன்னாடி எங்கியாவது பாட்டு கத்துக்கிட்டீங்களா?'' என்றிருக்கின்றார்.
""இல்லைங்கையா...'' என்றார் மச்சசாமி, பவ்யமாக.
"வல்லினம், மெல்லினம், இடையினம்போல் மூன்று ஸ்ருதியில் எப்படி இவரால் "தம்'கட்டிப் பாட முடியும். பாட்டுக் கற்றுக்கொள்வதென்றால் சாதாரண விஷயமா? அடிநாத கமலத்திலிருந்து ஆத்மார்த்தமாகப் பாடக் கூடியதல்லவா! அதை எப்படி இவர் சாதாரணமாக வந்து கேட்கிறார். சிறு வயதிலிருந்து கற்றுக் கொள்பவர்களுக்கு ஒன்றும் பிரச்சனை இருக்காது. திடீரென்று ஆர்வக்கோளாறில் உச்ச ஸ்தாயில் பாடப் போய் எதாவது ஒன்று கடக்க ஒன்று ஆகிவிட்டால், என்ன செய்வது?' அந்தப் பயமெல்லாம் இசையாசிரியரையும் விட்டு வைக்கவில்லை. ஆளைப் பார்த்து குறைத்து மதிப்பிடுபவரல்ல! இருந்தாலும், அவரது அச்சம் மனதிற்குள்ளே நிற்காமல் வெளியே வந்து விட்டது.
""இந்த வயசுல எப்படி நீங்க''என்று இழுத்தவர்,
""சின்னப் புள்ளைங்களே முழுமையா கத்துக்கறதுக்கு ரெண்டு வருஷத்துக்கும் மேலாயிடுது... நீங்க என்ன பண்ணுவீங்களோ... தெரியலையே?''என்று அவர் மனம் காயப்பட்டு விடக்கூடாதென்று நினைத்தாலும் இவரால் முணுமுணுக்காமல் இருக்க முடியவில்லை.
"முடியாதுன்னு மட்டும் சொல்லி என்னை திருப்பி அனுப்பிடாதீங்க' என்று இறைஞ்சுவதுபோல் அவரது பார்வை இருந்திருக்கின்றது. இதெல்லாம் இசை மேலிருந்த தணியாத தாகம்தான் அவரை அப்படியே அமைதியாக நின்றிருக்க வைத்திருக்கின்றது. இவர் போகாமல் நின்று கொண்டே இருப்பதைப் பார்த்த மாணவ மாணவியர்களுக்கு, "இப்போதுதான் வந்துகேட்கவேண்டுமா? இவரால் நமக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்ததும் கெட்டுவிட்டதே' என்றுதான் எல்லோரும் எரிச்சலாகப் பார்த்திருக்கின்றார்கள். கீ போர்டு வாசித்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் அப்படியே நிறுத்திவிட்டு, இவர்கள் இருவரையுமே "ஆ..'வென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர். ஆடி மாதத்திற்காக அம்மன் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த இரண்டு பெண்களும் அப்படியே சாமி வந்து ஆடிவிடுவதுபோல், ""அதான், சார் சொல்லிட்டாருல்ல... போங்களேன்'' என்பதாக இவர்களும் முறைத்து பார்த்திருக்கின்றனர். எல்லோருக்கும் இவருடைய வரவு எரிச்சலாகத்தான் இருந்திருக்கின்றது.
இந்த வயசான காலத்துல... இப்ப எதுக்கு, இவருக்கு இந்த வீண் வேலை? என்று யாரோ காழ்புணர்ச்சியை காற்றோடு கலந்து விட்டதை அந்த இசையாசிரியர் காதில் வாங்கத் தவறவில்லை. கோபத்தில் "யாரது' என்பதுபோல் வேகமாகத் திரும்பிப் பார்த்திருக்கின்றார். அவர்கள் அப்படிச் சொல்வது மச்சசாமி காதிலும் விழத்தான் செய்திருக்கின்றது. இருந்தாலும், அது தன் காதில் விழுந்ததுபோல் காட்டிக் கொள்ளவில்லை. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமான்னாலும் சொல்லி விட்டுப்போகட்டும் அதைப் பற்றியெல்லாம் தனக்கு எந்தக் கவலையுமில்லை, எப்படியாவது இசைப் பயிற்சியில் சேர்த்து கொண்டாலே போதுமென்பதுபோல் நின்று கொண்டிருந்திருக்கின்றார். இவருடைய சூழ்நிலையைப் புரிந்து கொண்டுதான் அந்த அறையிலே ஒரு ஓரமாக உட்கார வைத்து விட்டார் இசையாசிரியர்.
நேரம் இப்போது என்னவென்று அண்ணாந்துப் பார்க்கின்றார் மச்சசாமி. சரியாக எழு மணியாகியிருந்தது. இதற்கு மேலும் அவரைக் காக்க வைக்கக் கூடாதென்று நினைத்தாரோ என்னவோ, அந்த இரண்டு சிறுவர்களையும் பார்த்து,""ஒங்கப்பா வந்துட்டாரான்னு பாருங்க'' என்று சொன்னவருக்கு கவனமெல்லாம் இப்போது மச்சசாமி பக்கம்தான் இருக்கின்றது. இவருக்கு என்ன சொல்லிப் புரியவைப்பது. எப்படிப் புரிய வைப்பதென்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கின்றார். அந்தப் பசங்களும் எழுந்து போய் வெளியே எட்டிப்பார்த்துவிட்டு வந்து,""இன்னும் வரலைங்க சார்''என்றனர்.
""சரி, அது வரைக்கும் கீ நோட்ச எடுத்து, இதோ எந்தன் தெய்வமும், ஆடலுடன் பாடலைக் கேட்டு... அந்த ரெண்டு பாட்டுக்கும் பிஜிஎம் வாசிச்சிக்கிட்டிருங்க'' என்றதும், இருவரும் படபடவென்று போட்டிப் போட்டுக் கொண்டு அந்தப்பாட்டுக்கு பிஜிஎம் வாசிக்கத் தயாரானார்கள்.
""இன்னிக்கு நமக்கு அவ்வளவுதான் பொழப்பு'' என்று இரண்டு பெண்களும் குசுகுசுவென்று பேசிக்கொண்டே எடுத்து வந்திருந்த நோட்புக்கெல்லாம் மடித்து தனது கைப்பைக்குள் வைத்துவிட்டு, அழைத்துச் செல்ல கணவன்மார்கள் வருகிறாராயென்று அவ்வப்பொழுது வாசலையே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பக்கம் கையை நீட்டி,""நீங்க இப்ப பாடுன பாட்ட பாடுங்கம்மா''என்றதும், இருவரும் சேர்ந்து கொண்டு, "மஞ்சளிலே நீராடி குங்குமத்தால் பொட்டு இட்டு பூவாடைக் காரியம்மா... அம்மா நீ மருளாடி வந்திடம்மா'' என்று பாடத் தொடங்கினார்கள்.அவர்கள்மட்டும் பாட்டைக் கற்றுக் கொண்டு சிறப்பாகப் பாடுகிறார்களேயென்று ஏக்கமாகப் பார்த்தாலும், அந்தப் பாடல்களின் ராக, தாளத்தில் தன்னையே மறந்து ரசித்துக் கொண்டிருக்கின்றார். கைகளும் கால்
களும் அதற்கேற்றார்போல் தாளம் போட ஆரம்பித்தன. மகுடிக்கு மயங்கிய பாம்பைப் போல் மச்சசாமி இப்படித்தான் எந்தப் பாட்டைக் கேட்டாலும் அப்படியே அதன் லயிப்பில் மறந்து மயங்கிப் போய்விடுவார்.
"மணமகளே மருமகளே வாவா' என்றபாடலும் "வாராயன் தோழி வாராயோ... மணப்பந்தல் காணவாராயோ' என்ற பாடல்களெல்லாம் கல்யாண வீடுகளில் கேட்கும்போது, அந்தப் பாட்டோடு தானும் சேர்ந்து பாடிப் பார்ப்பார். அப்போது சரியாகப் பாடுகிறோமென்று எண்ணிக் கொண்டாலும், அதன் பிறகு வீட்டிற்கு வந்து அதே பாட்டை தனியாகப் பாடிப் பார்த்து, ராக தாளமெல்லாம் மாறிப்போய், எதோ வார்த்தையை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதுபோல் கக்கிக் கொண்டிருப்பார். அந்த அவஸ்தையெல்லாம் வீட்டில் இருப்பவர்கள்தான் சகித்துக் கொண்டிருப்பார்கள். சிலநேரம் ஆர்வத்தில் சத்தமாகப் பாடி அக்கம்பக்கத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிடுவார்.
""நேத்து என்ன... ஒங்க வீட்டுக்காரர் சத்தம் தெருவரைக்கும் கேட்டுச்சி! வீட்ல்ல எதாவது சண்டையா?'' என்று கேட்டவர்களும் உண்டு. அவர்கள் தெரிந்து கேட்கிறார்களோ தெரியாமல் கேட்கிறார்களோ... அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான் கொண்ட கொள்கையில் குறியாக இருந்தவர். யார் என்ன சொன்னாலும், பாடும் ஆர்வம் மட்டும் அவருக்கு குறையவில்லை. பஸ்ஸில் பயணம் செய்யும்போது கண்களை மூடிக்கொண்டு,"தானா வந்த சந்தனமே... ஒன்னை தழுவ தினம் சம்மதமே' இது போன்ற பாட்டுகளையெல்லாம் இதற்குமுன் எத்தனையோ முறை அவர் கேட்டிருந்தாலும், அப்போதுதான் புதிதாகக் கேட்பதுபோல் மனதில் ஒருவித மயக்கத்தையும், உந்துதலையும் ஏற்படுத்தும். அந்தப் பாட்டுக்கு ஏற்றவாறு மனம் கூத்தாட ஆரம்பித்துவிடும். அப்போது மட்டும் வீட்டில் இருக்க நேர்ந்திருந்தால் ஒரு குத்தாட்டம் போடாமல் இருக்கமாட்டார். சொக்க வைக்கும் ராக, தாளத்தில் லயித்துப்போய் மெய் மறந்து தூங்கி, அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கி வந்த அனுபவமெல்லாம் அவருக்கு உண்டு.
இரண்டு சக்கரவாகனத்தில் செல்லும்போது கூட ஹெல்மெட்டுக்குள் பாடிக் கொண்டுதான் செல்லுவார். எப்படிப் பாடினாலும் யாருக்கும் கேட்கப் போவதில்லையென்கிற தைரியத்தில் அவரது பாடல்கள் அங்குதான் நிறைய அரங்கேறும். என்ன ஒன்று அந்த ஹெல்மெட்டுக்குள் எந்தப் பூச்சி பொட்டுகளும் அண்டாது. அவருடைய அம்மா காலமான பிறகு, "அம்மாயென்று அழைக்காத உயிரில்லையே...அம்மாவை வணங்காத உயர்வில்லையே...' என்று அந்தப் பாடலை அவர் எத்தனை முறை அழுது கொண்டே பாடியிருப்பாரென்று அவருக்கே தெரியாது.
அப்போது மட்டும் ராக, தாளமெல்லாம் சுத்தமாக ஒய்வெடுத்துக் கொள்ளும். மற்ற நேரத்தில் மட்டும் சரியாக இருந்து விடுமாயென்றெல்லாம் கேட்கக் கூடாது. இப்படியெல்லாம் ராகம், தாளம், ஸ்ருதி தப்பி அபஸ்வரமாக பாடாமல், ஏதோ... தன்னால் என்ன பாட முடிகிறதோ அதையாவது ஒழுங்காக கற்று ஒரு பாட்டாவது இவரது கச்சேரியில் பாட மாட்டோமா என்று ஆர்வமாக வந்தவரைத்தான், சூழ்நிலை சூது செய்து அவரை ஓரமாக ஒதுக்கி உட்கார வைத்து விட்டது.
""வர்றங்கையா''என்று பாட்டுக் கற்றுக்கொள்ள வந்தவர்களெல்லாம் சொல்லிச் சென்றபோதுதான் இசைக்கடலில் மூழ்கி எழுந்ததுபோல் அந்தச் சேரில் நிமிர்ந்து உட்கார்ந்தார் மச்சசாமி. நாலு பேர் முன் நம்மை எதாவது கேள்வி கேட்டு அசிங்கப்படுத்தாமல் இப்படித் தனியாக உட்கார வைத்தது கூட நல்லதுதான். அதனால்தான் நல்ல நல்ல பாடல்களையெல்லாம் காது குளிர கேட்க முடிந்ததென்று நினைத்துக் கொண்டிருந்தார். மற்றவர்களெல்லோரும் போய்விட்டார்களென்று தெரிந்ததும் இவரைத் திரும்பிப் பார்த்த இசையாசிரியர், ""இங்க வந்து ஒக்காருங்க''என்று தன் இருக்கைக்கு முன் கையைக் காட்டினார்.
ரொம்ப பவ்யமாக எழுந்து வந்து அந்த இசையரசரின் முன்பு மெதுவாக உட்கார்ந்து அவரையே உற்றுப் பார்த்தார். இதுவரை இவ்வளவு அருகில் அவரைப் பார்த்ததே இல்லை. அப்படிப் பார்ப்பதே தான் பெரும்பேறு பெற்றதுபோல் எண்ணிக் கொள்கின்றார்.
சற்று நேர அமைதிக்குப் பின்,""கிட்ட தட்ட ஒங்களுக்கும் எனக்கும் ஒரே வயசாதான் இருக்கும்ன்னு நெனைக்கறேன்! இருந்தாலும், எம் புள்ளைங்கெல்லாம் இப்ப நல்ல வேளையிலதான் இருக்காங்க. அவுங்கெல்லாம், இந்த வயசுல எதுக்குப்பா ஒனக்கு இந்த வேலை? வீட்லேயிரு...ன்னுதான் சொல்றாங்க. என்னால அப்படியிருக்க முடியல. எனக்குத் தெரிஞ்ச இந்த கலையை... உண்மையாவே ஆர்வமா கத்துக்க வர்றவங்களுக்காகத்தான்... இந்த வயசுலயும் நான் இங்க வந்து சொல்லிக் குடுத்துக்கிட்டிருக்கறேன்.
நிறையப்பேர் பாட்டுக்கத்துக்கறேன்னு ஆசையா வந்திருக்காங்க. அவுங்ககிட்ட சரளி வரிசையில, மாயா மாளவ கெளளை ராகத்துல, ஆதி தாளம் எட்டு அக்சரம் இருக்கு. அதுல மூணு தடவை தட்டினா ஒருலகுன்னும், ரெண்டு தடவை தட்டி திருப்பின்னா அதுதிருதம்ன்னும் சொல்லுவேன். அதுவே மூணு காலத்துல பாடணும், முதல் காலத்துல ஒருதட்டுக்கு ஒரு சுரம் பாடணும், அடுத்த காலத்துக்கு ஒருதட்டுக்கு ரெண்டு சுரம் பாடணும், மூன்றாவது காலத்துல ஒரு தட்டுக்கு நாலு சுரம் பாடணும்னு சொல்லி, சரிகமபதநிச, சநிதபமகரிசன்னு ஏற்ற இறக்கமா சொல்லிக் குடுக்கும்போது, எல்லாம் புரிஞ்ச மாதிரி தலைய வேக வேகமா ஆட்டிட்டு, இங்கிருந்து போனதற்கப்பறம் இந்தப் பக்கமேதிரும்பிக் கூட பாக்க மாட்டேங்கறாங்க.
பாட்டு கத்துக்கறதுக்கு வயசு முக்கியமில்ல... ஆர்வம்தான் தேவை. ஆர்வமிருந்தா எல்லா பாண்டியத்தியமும் கத்துக்கலாம். பாண்டியத்தியம் வரணும்ன்னா பொறுமை தேவை. அந்தப் பொறுமையும் இசையார்வமும் ஒங்கக்கிட்ட நிறையவே இருக்கு. ஒங்கக்கிட்ட இருக்கறது ஆசையா ஆர்வமான்னு பாக்கறதுக்குத்தான்... எல்லாரும் பாடும்போது ஒங்கள இங்க, தனியா ஒக்காரவச்சி, கேக்க வச்சேன். அவுங்க பாடுற பாட்டோட ராக, தாளத்துக்கு தகுந்த மாதிரி, ஆர்வத்துல ஒங்க மனசு துள்ளுறதையும் என்னால கவனிக்க முடிஞ்சுது'' என்று சொல்லிக்கொண்டே இரண்டு கைவிரல்களும் மோதியபடி, சேரில் சாய்ந்து, கண்களை மூடிக்கொண்டார் இசையாசிரியர்.
அடுத்து இவர் எப்போது கண் திறப்பார்... என்னச் சொல்வாரென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார். இந்த இசையாசிரியர் பாட்டுக் கற்றுக் கொடுக்கும்போது, பெரும்பாலும் அவரது ஞானக்கண்தான் திறந்திருக்குமென்று போகப் போகத் தெரிந்து கொள்வார் மச்சசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT