தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 38

30th May 2021 06:00 AM | கி. வைத்தியநாதன்

ADVERTISEMENT

 

பிரணாப் முகர்ஜிக்கு மிகவும் நெருக்கமானபத்திரிகையாளர்கள் என்று ஒரு சிலர் உண்டு. நெருக்கமானவர்கள் என்பதை விட, அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்று கூடச் சொல்லலாம். தான் மனம்விட்டுப் பேசும் பல நிகழ்வுகளை அவர்கள் செய்தியாக்கிவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை வந்தால்தான், பிரணாப்தா அவர்களை நெருங்க விடுவார். அன்று அவருடைய அறையில் குழுமியிருந்த நாங்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள்தான்.

பிரணாப்தா விட்ட இடத்திலிருந்து மேலும் தொடர்ந்தார்:""நான் அந்தப் பெயரை முன்மொழிந்தபோது, யாருடைய முகத்திலும் சலனமே இல்லை. இதற்கு முன்னால், இந்திராஜியின் மரணத்தைத் தொடர்ந்து நாங்கள் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்குத் தனி விமானத்தில் திரும்பும்போது, "ராஜீவ் காந்தி உடனடியாகப் பிரதமராக வேண்டும்' என்று நான் சொன்னபோது, அனைவரும் அதை வழிமொழிந்து ஆமோதித்ததுபோல, இப்போது யாருமே உற்சாகமாக எனது கருத்தை வரவேற்கவில்லை.

எனக்கே அது சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஒவ்வொருவரும் தங்களது பெயரை நான் முன்மொழிவேன் என்று எதிர்பார்த்தார்களோ என்னவோ, தெரியவில்லை. ஆனால், யாருமே எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கருணாகரன்ஜி, சீதாராம் கேசரிஜி, நான் மூவரும் ஏற்கெனவே இந்த முடிவை எடுத்திருந்தோம் என்பதால், எங்களை மீறி எதுவும் பேச யாரும் துணியவும் இல்லை.

ADVERTISEMENT

நான் நரசிம்ம ராவ் பெயரை முன்மொழிந்திருந்தால் கூட யாரும் அதிர்ச்சி அடைந்திருக்க மாட்டார்கள். ஆனால், சோனியா காந்தியின் பெயரை நான் முன்மொழிவேன் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

"சோனியாஜி ஏற்றுக் கொள்வாரா?'

என்கிற சந்தேகத்தை எழுப்பிய பல்ராம் ஜாக்கரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. நாங்கள் அனைவருமாக 10, ஜன்பத்திற்குப் போய் சோனியா காந்தியை சந்தித்து எங்கள் முடிவைக் கூறினோம்.

அசாதாரணமான அந்த சூழலில் அவர் தலைமையேற்க ஒப்புக்கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று நாங்கள் கருதுவதாகச் சொன்னோம். அவரது முகத்தில் எந்தவித பாவமும் வெளிப்படவில்லை. கணவர் இறந்த துக்கத்தில் இருக்கும் சோனியாஜியை மேலும் வற்புறுத்த வேண்டாம் என்பதால், அவரது முடிவுக்குக் காத்திருப்பதாகக் கூறித் திரும்பிவிட்டோம்.

எதிர்பார்த்தது போலவே சோனியா காந்தி அரசியல் பொறுப்பை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்கிற தகவல் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் ஒரு முறை காங்கிரஸ் செயற்குழுவைக் கூட்டி சோனியா காந்தி தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுகோள் விடுப்பது என்று முடிவானது. மூப்பனார்ஜிதான் அதை வலியுறுத்தினார். அவரே கூட இரண்டு மூன்று முறை நேரிடையாக சோனியாஜியை சந்தித்துப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதும் எனக்குத் தெரியும்.

எங்களது இரண்டாவது முறை வேண்டுகோளுக்கும் சோனியாஜியிடமிருந்து பதில் வரவில்லை. தனக்கு அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வம் இல்லையென்றும், தன்னைத் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள காங்கிரஸ் கேட்டுக் கொண்டதற்கு நன்றி என்றும் தெரிவித்து அவரிடமிருந்து ஓர் அறிக்கைதான் வெளி வந்தது. அப்படிப்பட்ட சூழலில்தான், உடனடியாக யாராவது கட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்கிற நிர்பந்தம் எழுந்தது. குழப்பமான சூழலைப் பயன்படுத்திக் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு ஆரம்பத்திலேயே இருக்கவில்லை.

அதிலும் கட்சியை விட்டு வெளியேறித் திரும்பி வந்த நிலையில், நான் அப்படி ஆசைப்படுவதும் தவறு என்று நினைத்தேன். தலைவராக வேண்டும்; தேர்தல் முடிவுகள் வந்தால் பிரதமராக வேண்டும் என்கிற ஆசை அர்ஜுன் சிங்குக்கும், சரத் பவாருக்கும் இருந்தது என்பதை நான் அறிவேன்.

சோனியா காந்தி மெளனம் காத்ததுபோல இன்னொருவரும் தலைவராவதில் அக்கறை இல்லாதவராகவே இருந்தார். அவர்தான் பி.வி. நரசிம்ம ராவ். அவருக்கு தில்லி அரசியல் வெறுத்துவிட்டது என்று நினைக்கிறேன். ஊருக்குத் திரும்பிவிடலாம் என்கிற மனநிலையில்தான் அவர் தொடர்ந்தார்.

சோனியாஜி தலைவராக விரும்பவில்லை என்றபோது, அடுத்த தேர்வு பி.வி. நரசிம்ம ராவ்தான் என்று முடிவெடுத்தது ஜி.கே. மூப்பனாரும், கே. கருணாகரனும். அவர்களது கருத்துடன் நானும் இணைந்து கொண்டேன்.

பல்ராம் ஜாக்கரைப் போலவே, காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்கிற ஆசை சீதாராம் கேசரிக்கும் இருந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கும் அந்த அதிர்ஷ்டம் நமக்குக் கிடைக்காதா என்கிற நப்பாசை இருக்கத்தான் செய்தது.

பி.வி. நரசிம்ம ராவைக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்கிற செயற்குழுவின் முடிவுக்கு முன்பு, எங்களுக்குள் பல கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ் செயற்குழு கூடுவதற்கு முன்பே ஜி.கே. மூப்பனார், கே. கருணாகரன், நான் மூவரும் பி.வி. நரசிம்ம ராவ்தான் தலைவராக வேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம்.

""நீங்கள் மூன்று பேரும் பி.வி. நரசிம்ம ராவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடிவு செய்ததற்கு ஏதாவது காரணம் உண்டா? சரத் பவார் போல தலைவராவதற்கான ஆளுமை அவரிடம் இல்லை என்பதுதான் பரவலான கருத்து'' என்று அங்கிருந்த மேற்கு வங்கப் பத்திரிகையாளர்களில் ஒருவர் கேட்டார்.

""காங்கிரஸ் செயற்குழுவில் மிக மூத்த உறுப்பினர் என்றால் அது பி.வி.தான். 1976 முதல் செயற்குழுவில் இருந்து வருகிறார். நாங்கள் யாருமே அந்த அளவுக்கு "சீனியர்' கிடையாது. அது மட்டுமல்லாமல், அவர்தான் அப்போது மத்திய தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்தார். எனக்கு, கருணாகரன்ஜிக்கு, மூப்பனார்ஜிக்கு எல்லாம் ஒரு பலவீனமுண்டு. எங்களுக்கு சரளமாக ஹிந்தி பேசத் தெரியாது. ஆனால், பி.வி. நரசிம்ம ராவ் அப்படியல்ல. அவரால் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் சரளமாகப் பேச முடியும். அதைக் கருத்தில் கொண்டுதான் பி.வி. நரசிம்ம ராவின் பெயரை முன்மொழிந்து, அதை செயற்குழுவை ஏற்றுக் கொள்ள வைத்தோம்.''

""நரசிம்ம ராவைத் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் சோனியா காந்தியின் ஒப்புதலைக் கேட்டீர்களா? அவர் ஏற்றுக் கொண்டாரா?'' - கேட்டது நான்.

""இப்படி ஏதாவது கேட்பாய் என்று எனக்குத் தெரியும். சோனியாஜி எங்களை சந்திப்பதையே தவிர்த்தார். அவர் துக்கத்தில் இருந்த நேரம் அது. பி.வி. நரசிம்ம ராவ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படிருக்கிறார் என்பது அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவரிடமிருந்து எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியின் இறுதிச் சடங்கின் போதும், அலகாபாதில் உள்ள திரிவேணி சங்கமத்தில் அஸ்தியைக் கரைக்கச் சென்றபோதும், சோனியாஜியுடன் பி.வி. சென்றார். பி.வி.யைத் தேர்ந்தெடுப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தால் அனுமதித்திருக்க மாட்டார்.''

பி.வி. நரசிம்ம ராவ் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து பிரணாப் முகர்ஜி தெளிவுபடுத்தியபோதுதான், முன்பு ராஜீவ் காந்தி பிரதமராவதற்கு எப்படி அவர் காரணமாக இருந்தாரோ, அதேபோல பி.வி. நரசிம்ம ராவ் பிரதமரானதற்கும் பிரணாப் முகர்ஜிதான் காரணம் என்பது தெளிவானது. அதைப் பதிவு செய்யாமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், அந்த நிகழ்வுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பிரணாப்தாவுடனான அந்த சந்திப்பை இங்கே விவரமாக எழுத விழைந்தேன்.

பி.வி. நரசிம்ம ராவ் தலைமையில்தான் ஜூன் 12, ஜூன் 15 இரண்டு கட்டவாக்குப் பதிவுகளுக்கான பிரசாரம் நடந்தது. அந்த இரண்டு கட்டப் பிரசாரங்களின் போதும், பி.வி. நரசிம்ம ராவ் இந்தியா முழுவதும் சுற்றி வந்தார் என்றாலும், ராஜீவ் காந்தியின் படுகொலைதான் பின்னணியில் இருந்தது. பல மாநிலங்களில் பிரசாரம் என்பது பெயரளவுக்குத்தான் நடந்தது எனலாம்.

தமிழகத்தைப் பொருத்தவரை, ராஜீவ் படுகொலைக்குப் பிறகு திமுகவினரால் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு எதிர்ப்பலை காணப்பட்டது. ராஜீவ் காந்தியின் படுகொலைக்குத் திமுகதான் காரணம் என்கிற எண்ணம் மக்கள் மனதில் பரவலாகவே எழுந்தது. அதிமுக - காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெறப்போகிறது என்பது வாக்குப்பதிவுக்கு முன்பே தெரிந்துவிட்டது.

ராஜீவ் காந்தி படுகொலை நடக்காமல் இருந்திருந்தாலும் அதிமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெறும்; ஜெயலலிதா தலைமையில் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என்பதை 1989 நவம்பர் மக்களவைத் தேர்தல் ஏற்கெனவே உறுதிப்படுத்தி இருந்தது. பிளவுபடாத அதிமுகவும், காங்கிரஸூம் இணைந்தால் தமிழகத்தில் அதுதான் பலமான அரசியல் சக்தி என்பதை அந்தத் தேர்தல் நிரூபித்திருந்தது. அதனால், ராஜீவின் மரணத்தைத் தொடர்ந்து, அதிமுக அணியின் வெற்றி சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகிவிட்டது.

தமிழகத்தில் அப்படியென்றால், அகில இந்திய அளவில் நிலைமை வேறு மாதிரி இருந்தது. ராஜீவ் படுகொலைக்கு முன்னர், காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறும் நிலையில் கூட அல்ல, மக்களவையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்குமா என்பதே கூட சந்தேகம்தான். ராமகிருஷ்ண ஹெக்டே கணித்ததுபோல, பாஜக ஒருவேளை 1996-இல் பெற்ற 161 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காங்கிரஸூம் 140 இடங்களுடன் ஆட்சி அமைக்க முடியாமல் போயிருக்கலாம். ஒருவேளை ஐக்கிய முன்னணி 1991-லேயே அமைந்திருக்கலாம்.

ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து, இரண்டாம், மூன்றாம் கட்டத் தேர்தல் நடந்த தொகுதிகளில், காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற முடிந்தது. தனிப்பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும் 232 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மைக்கு வெறும் 45 இடங்கள் மட்டுமே தேவை என்கிற அளவில் இருந்ததால், ஆட்சி அமைப்பதில் எந்தவிதத் தடையும் வரவில்லை.

ஆந்திராவில் முதற்கட்டத்தில் தேர்தல் நடந்த 15 இடங்களில் வெறும் 5 இடங்களை மட்டுமே வெற்றி பெற முடிந்த காங்கிரஸ், ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தேர்தல் நடந்த 27 தொகுதிகளில் 20 தொகுதிகளை வென்றது. ராஜஸ்தானில் முதல் கட்டத் தேர்தலில் 15 இடங்களில் 5 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற முடிந்தது என்றால், படுகொலைக்குப் பிறகு வாக்குப்பதிவு நடந்த 10 தொகுதிகளில் 8 தொகுதிகளை வென்றது.

தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியபோதே, மத்தியில் காங்கிரஸூம், மாநிலத்தில் அதிமுகவும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. அடுத்த நாளே, நான் தில்லிக்கு ரயிலேறி விட்டேன். பரபரப்பான அந்த அரசியல் சூழலை நேரில் பார்க்காமல் இருந்தால் எப்படி? ஜூன் 20-ஆம் தேதி காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்பார்த்ததுபோல, பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவது சுலபமாக இருக்கவில்லை. பிரதமர் பதவிப் போட்டியில் சரத் பவார் நேரடியாகவும், அர்ஜுன் சிங் மறைமுகமாகவும் களமிறங்கி இருந்தனர். பிரணாப் முகர்ஜியை சந்திப்பது இருக்கட்டும், பார்க்கக் கூட முடியவில்லை. பி.வி. நரசிம்ம ராவுக்கு ஆதரவு திரட்டுவதில் மும்முரமாக இருந்தார் பிரணாப் முகர்ஜி. தென்னிந்திய எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டுவதில் ஜி.கே. மூப்பனாரும்,

கருணாகரனும் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தனர் என்றால், ஒடிஸா, பிகார், மேற்கு வங்கம், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவைப் பிரணாப் முகர்ஜி உறுதி செய்தார். வடமாநில எம்.பி.க்களின் ஆதரவையும், இந்திரா காந்தி விசுவாசிகளின் ஆதரவையும் நரசிம்ம ராவுக்குத் திரட்டித் தந்ததில் ஆர்.கே. தவானின் பங்கு கணிசமானது.

பெரும்பாலான எம்.பி.க்களின் ஆதரவு நரசிம்ம ராவுக்கு இருந்ததால், 1991 ஜூன் 20-ஆம் தேதி நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ராஜீவ் காந்தி இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து ஜூன் 21-ஆம் தேதி பி.வி. நரசிம்ம ராவ் இந்தியாவின் பத்தாவது பிரதமராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

அவரைக் கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்த பிரணாப் முகர்ஜி என்ன ஆனார்? அதுதான் விசித்திரமான திருப்பம்...

(தொடரும்)

Tags : pranab mukherjee பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் K Vaidiyanathan கி.வைத்தியநாதன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT