தினமணி கதிர்

அன்னையின் ஆணை!

30th May 2021 06:00 AM | - ந.ஜீவா

ADVERTISEMENT

 

கோடைக்காலத்தில் பகல் நேரத்தில் வெளியே சென்றால் நமக்கு தலைசுற்றிவிடுகிறது. நாக்கு வறண்டு போகிறது. வியர்வையில் உடல் நனைந்துவிடுகிறது. அதிலும் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் நிலையோ இன்னும் மோசம். முகத்தை முற்றிலும் மறைக்கும் முகக்கவசத்தை அணிவதுடன் கூட, அவர்கள் கரோனாவின் பிடியிலிருந்து தப்பிக்க முழு உடலையும் மறைக்கக் கூடிய பாதுகாப்பு உடையை அணிய வேண்டியிருக்கிறது.

வெப்பத்தைத் தாங்க முடியாமல் வியர்வையில் குளிப்பதுடன், சொல்ல முடியாத துன்பத்தை ஒவ்வொரு நாளும் இந்த கோடைக்காலத்தில் அனுபவித்து வருகிறார்கள்.

புணேவில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருபவர் பூணம் கவுர் ஆதார்ஷ் எனும் பெண் மருத்துவர். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான கரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பவர். மருத்துவமனையில் பணிபுரிந்துவிட்டு, வீட்டுக்கு வந்ததும், ஒவ்வொரு நாளும் எப்படி கடும் வெப்பத்தால் துன்பப்படுகிறார் என்று தன் மகன் நிஹால் சிங் ஆதார்ஷிடம் புலம்பியிருக்கிறார்.

ADVERTISEMENT

நிஹால் சிங் ஆதார்ஷ் மும்பையில் உள்ள கே.ஜே.சோமயா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்கில் பொறியியல் பயிலும் இரண்டாமாண்டு மாணவர்.

"தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்' என்பார்கள். தன் தாய் படும் வேதனையைக் கேட்ட நிஹால், இதற்கு என்ன தீர்வு என்று யோசித்தார். தாயின் தேவையே இங்கு ஒரு கண்டுபிடிப்புக்கான தூண்டுதலை அவருக்கு அளித்திருக்கிறது.

பாதுகாப்பு ஆடைக்குள் காற்றோட்டம் இருப்பதில்லை. அதுதான் உடலின் வெப்பநிலையை அதிகரித்து, அதை அணிந்தவர்களை வியர்வையில் குளிக்க வைக்கிறது. எனவே, பாதுகாப்பு ஆடைக்குள் காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நிஹால் நினைத்தார்.

கரோனா தொற்று நோய் தொடர்பான மருத்துவக் கருவிகளை வடிவமைப்பதில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆராயும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் நிஹால் கலந்து கொண்டார். அங்கே புணேவில் உள்ள நேஷனல் கெமிக்கல் லேபரட்டரியைச் சேர்ந்த மருத்துவர் உல்ஹாஸ் ஹாருல் என்பவரின் அறிமுகம் அவருக்குக் கிட்டியது. அவரைச் சந்தித்த 20 நாள்களுக்குள் நிஹால் தான் நினைத்த காற்றோட்டக் கருவியை உருவாக்கிவிட்டார்.

நிஹால் உருவாக்கிய காற்றோட்டக் கருவி, பாதுகாப்பு ஆடைக்குள் உள்ள காற்றை வெளியேற்றி, வெளிக்காற்றை அதனுள் செலுத்தக் கூடியதாக இருந்தது. ஆனால் உள்ளே செலுத்தக் கூடிய காற்றும், ஆடைக்குள் இருந்து வெளியே வரக் கூடிய காற்றும் கரோனா தீநுண்மி இல்லாமல் வடிகட்டப்பட வேண்டும். எனவே அவர் உருவாக்கிய கருவியை மேலும் மேம்படுத்த வேண்டியிருந்தது. உல்ஹாஸ் ஹாருல் கூறிய ஆலோசனையின்படி அதற்கு எப்படிப்பட்ட வடிகட்டியைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டார் நிஹால். அடுத்த ஆறு மாதத்துக்குள் கடினமாக உழைத்து அந்த காற்றோட்டக் கருவியை அவர் தயாரித்துவிட்டார். அவர் உருவாக்கிய அந்தக் கருவி கழுத்தில் கட்டக் கூடியதாக, ம வடிவத்தில் இருந்தது.

அந்தக் கருவியை புணேவில் உள்ள மருத்துவர் விநாயக் மணே என்பவரிடம் கொடுத்து பயன்படுத்தச் சொன்னார். தனது கருவியைப் பற்றி அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தார் நிஹால்.

""பாதுகாப்பு ஆடையை அணிந்திருந்தாலும் இந்தக் கருவி உடலைக் குளிர்ச்சியாகிவிட்டது. ஆனால்...?''

நிமிர்ந்து பார்த்தார் நிஹால்.

""எப்போதும் கழுத்துக்குப் பக்கத்தில் ஒரே சத்தமாகவும் வைப்ரேஷனாகவும் இருந்தால் நோயாளிகளை டென்ஷன் இல்லாமல் மருத்துவர்கள் எப்படி பார்ப்பது?''

விநாயக் மணேவின் கேள்வி நிஹாலைச் சிந்திக்கத் தூண்டியது.

அதற்குப் பின் அந்தக் கருவியை இன்னும் மேம்படுத்தி, இடுப்பு பகுதியில் பொருத்தும்படி அதை மாற்றி அமைத்தார். கருவியில் இருந்து வரும் ஒலியின் அளவையும், அதிர்வையும் குறைத்தார்.

இந்தக் கருவிக்கு "கோவ் - டெக் வென்டிலேசன் சிஸ்டம்' என்று பெயர் வைத்தார்.

""நான் உருவாக்கியுள்ள கருவியில் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 6-8 மணி நேரம் வரை இந்தக் கருவி இயங்கும். பாதுகாப்பு ஆடைக்குள் உள்ள காற்றை நூறு விநாடிகளுக்குள் வெளியேற்றி புதிய காற்றை அதனுள் செலுத்திவிடும்'' என்கிறார் நிஹால்.

இப்போது நிஹாலின் அம்மா இந்தக் கருவி இணைக்கப்பட்ட பாதுகாப்பு ஆடையை அணிந்து கொண்டுதான் மருத்துவமனைக்குச் செல்கிறார். வெயில் கொடுமையாக இருக்கிறது; ரொம்ப வியர்க்கிறது''

என்றெல்லாம் அவர் இப்போது புலம்புவதில்லை.

Tags : அன்னையின் ஆணை!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT