தினமணி கதிர்

உப்பைத் தின்றவன்

ப. கோவிந்தராசு

மெளசைப் பிடித்துத் தடவியபடி சிஸ்டத்தில் கண்களைப் பதியவிட்டிருந்த இராமநாதனை இடது பக்கமாய் டேபிள் மீதிருந்த மொபைல் போனின் அழைப்போசை திரும்பும்படியாகச் செய்தது.

"கதிரவன் காலிங்' டிஸ்பிளேயைப் பார்த்தவுடன் மருமகள் கோபித்துக் கொண்டு போனது விஷயமாகத்தான் ஏதோ பேசப் போகிறார் என்று நினைத்து திடுக்கிட்டுப் போனார் இராமநாதன்.

கதிரவன் நண்பர் மட்டுமல்ல. ஒரு மாதத்திற்கு முன்பு அவரின் உறவுக்காரப் பெண்ணை தன் மகனுக்கு மணமுடித்து வைத்திருந்த வகையில் உறவுக்காரரும் கூட. மாமியார் மாமனாருடன் மனக்கசப்பு மற்றும் கருத்து வேறுபாட்டினால் பிறந்த வீட்டிற்குச் சென்றிருந்த மருமகள், நேற்றுதான் வந்திருந்தாள். இந்தச் சூழ்நிலையில் கதிரவனின் மொபைல் அழைப்பு சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியது.

"அம்மா, அப்பாவிடம் மருமகள் சொல்லியிருக்கக் கூடும். அவர்கள் நிச்சயம் இவரிடம் கேட்டிருப்பார்கள். இவர் நம்மிடம் அது விஷயமாக ஏதோ கேட்பதற்காகத்தான் போன் செய்கிறார்' என்கிற சிந்தனை நெருப்புப் பொறி பட்டதுபோல உடம்பைத் தகிக்கச் செய்தது அவருக்கு.

அதேசமயத்தில் ஃபைல் அட்டாச்மெண்ட் முடிந்து கவரிங் லெட்டர் எழுதி அவசரமாய் அனுப்ப வேண்டிய மெயில் ஒரு பக்கம் கண்களில் திரையிட்டது. மானிட்டரைப் பார்க்கிறார். கை அனிச்சையாய் மெளசைப் பிடித்துத் தடவி நகர்த்தியது. ஒருவித பதட்டத்தில் அனிச்சையான செயலாய் திரை வந்ததா? வரவில்லையா? என்பதைக் கூட கவனிக்காமல் பார்வை மீண்டும் செல்போன் பக்கம் திரும்பியிருந்தது. "கதிரவன் காலிங்' ஒலித்தபடியிருந்து கொண்டிருந்தது.

ரிங் டோன் கட்டாவதற்குள் எடுத்துப் பேசவில்லையென்றால் அதற்கும் கோபித்துக் கொள்வார். போனை எடுக்கவில்லையே என்று கோபப்பட்டுவிடக்கூடாது என்கிற மரியாதை நிமித்தமான அவசரமும் இராமநாதனுக்கு இருந்தது. சின்னவிஷயம், "பூதாகரமாக வெடித்துவிட்டதே' என்று மனம் சஞ்சலப்பட்டார்.

ஒருநாள் மதியம் சாப்பாட்டின்போது குழம்பில் உப்பு சற்று தூக்கலாக இருந்ததினால் ""என்னம்மா... கொழம்பு நீ வச்சியா... அத்தை வைச்சாங்களா?'' என்று கேட்டிருக்கிறார்.

""நான்தான் வைச்சேன். ஏன் நல்லாயில்லையா...''என்றிருக்கிறாள் மருமகள்.

""ஒன்னும் குறையில்லம்மா... கொழம்பு ரொம்ப அருமையா வச்சிருக்கே. உப்பு மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியாப் போயிடுச்சி. கொறைச்சியிருந்தீன்னா இன்னும் நல்லாயிருந்திருக்கும்'' என்று புகழ்வதுபோல சொல்லி குழம்பில் உப்பு அதிகமாகப் போனதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் இராமநாதன்.

"என்னா... இந்தப்பொண்ணு இப்படி கொழம்பு வச்சிருக்குது. உப்புப் பதம் கூடவா தெரிஞ்சிக்காம இருக்கும். அள்ளிப்போட்டு வச்சிருக்குதே...' என்று நினைத்த மாமியார் ""ஏம்மா ஒரு அளவு தெரிய வேணாமா... நீ பாட்டுக்க அள்ளிப் போட்டு வைச்சிருக்க'' என்று சொல்லவும் தன்னைப் பரிகசித்து ஏளனப்படுத்துகிறாரோ என்றெண்ணிய மருமகளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.

""அத்தை உங்ககிட்ட காமிச்சேன். இன்னும் கொஞ்சம் சேத்துப் போடுன்னு நீங்கதான் சொன்னீங்க. போட்டுட்டேன். இப்ப நான்தான் அள்ளிப் போட்டுட்டேங்கறீங்க. இவ்வளவு பேசறீங்களே... அந்த உப்ப நீங்க வாங்கி போட்டிருக்கலாம். இல்ல... இந்தக் கொழம்பையே நீங்க வைச்சிருந்திருக்கலாமில்ல'' என்றிருக்கிறாள் மருமகள்.

""நான் வைக்க எனக்குத் தெரியாதா... நீ எப்பத்தான் கத்துக்கிறதுன்னு'' இவுங்க சொல்லியிருக்காங்க.

அவர்கள் இருவருக்குள் வாக்குவாதம் முற்றி அந்தப்பெண், ""நீங்க கட்டிக்கிட்டு வந்தப்ப உங்க மாமியார்தான் உங்களுக்கு கத்துக்குடுத்தாங்களா... எனக்கு யாரும் கத்துக்குடுக்க வேணாம். எல்லாம் எனக்குத் தெரியும்'' என்று காரசாரமாய் பதில் சொல்லவே அடுத்து இராமநாதனின் மனைவி வாய் திறப்பதற்குள் முந்திக்கொண்டு, ""மொதல்ல உங்க வாக்குவாதத்த நிறுத்துங்க. இது ஒரு பிரச்னையே இல்ல. கொழம்புல உப்புப் போடுங்க... போடாமப் போங்க. இனிமே எதுவும் நான் கேக்கல'' என்று அவர்களைச் சமாதானப்படுத்தும் விதமாக சற்றுக் குரலுயர்த்திக் கத்தியிருக்கிறார் இராமநாதன்.

யாரிடமும் எந்தப் பேச்சும் இல்லாமல் சில நிமிடங்கள் அமைதியாகக் கழிந்திருக்கிறது. இராமநாதன் விட்ட இடத்திலிருந்து தொடங்கும் விதமாக தட்டிலிருந்த சோற்றைப் பிசைந்து ஒரு கவளம் வாய்க்குக் கொடுத்திருக்கிறார். உப்பு கரிக்கவே செய்திருக்கிறது. தொண்டைக்குள் இறங்க மறுத்த உணவை வலுக்கட்டாயமாய் விழுங்க முயற்சித்து அதனால் ஏற்படக்கூடிய அசெளகரியங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல், சாப்பிடுவதை மனைவி கவனிப்பதையும்,

மருமகள் கவனிப்பதையும் ஜாடையாக உற்று நோக்கியபடி அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார் இராமநாதன். அவரின் மனைவி அதனைப் புரிந்திருக்க வேண்டும். ""தண்ணி குடிச்சிட்டு சாப்பிடுங்க'' என்றிருக்கிறாள்.

முதலில் யார் வாய் திறப்பது என்றிருந்தவர்கள் போல அவரின் மனைவி தண்ணிக் குடிச்சிட்டு சாப்பிடுங்க என்றதும், மருமகள், ""உப்பை குறைங்கிறீங்க. கூட்டுங்கிறீங்க ஒரே குழம்புல ரெண்டு மூணு விதமா ஜாலம் பண்ண எனக்குத் தெரியில. யாரும் சொல்லிக் கொடுக்கவுமில்லை'' என்றிருக்கிறாள்.

மாமியார்காரிக்கு வந்தது ரோஷம். ""என்னா இந்தப் பொண்ணு இப்படிப் பேசுது'' என்றிருக்கிறார்.

""ஆமாம் மனசுல பட்டதுன்னா பட்டுன்னு இப்படித்தான் பேசுவேன்'' என்றிருக்கிறாள்.

"மீனு செவுளால அடிக்கிற மாதிரி எது சொன்னாலும் அததுக்கும் டக்கு டக்குன்னு பதில் சொல்றாளே' என்று நினைத்த மாமியார்க்காரி, ""சரியான வாயாடியா இருப்பா போலிருக்கே''என்று பொறுமையாகத்தான் சொல்லியிருக்கிறார்.

""மனசுல தோணுனத பட்டுன்னு சொல்றதுக்குப்பேர் வாயாடின்னா அப்படியே வச்சிக்குங்க'' என்று மறுபடியும் பட்டென்று பேச்சால் அடித்திருக்கிறாள் மருமகள்.

பொறுமையிழந்த இராமநாதன், ""அடடே... பிடிக்கலேன்னா ஒரு விஷயத்த அப்படியே விட்டுத் தொலைக்க மாட்டீங்களா'' என்று பொதுவாகச் சொல்லி, ""நீதான் கொஞ்சம் நாவடக்கி இரேம்மா... பொம்பளப்புள்ளைக்கு இவ்வளவு வாய் நீளம் கூடாது'' என்றிருக்கிறார். இதுதான் நடந்திருக்கிறது.

வேலைக்குப் போய் வந்த மகனிடம் என்ன சொன்னாளோ மருமகள். மறுநாளே ஊருக்குக் கிளம்பிச் சென்று விட்டிருந்தனர் இருவரும். அவளைக் கொண்டுபோய் ஊரில் விட்டுவிட்டு வந்தவன் அம்மாவிடம், ""ஏம்மா... நான் இல்லாதப்ப அவளோட சண்டை போடுறீங்களாம்'' என்று வருத்தத்தோடு கேட்டிருக்கிறான்.

""இப்ப என்ன சொல்லிட்டோம்ன்னு ஊருக்கு கிளம்பிப் போயிருக்கா? உப்புக்குப் பெறாத விஷயத்துக்கெல்லாம் குதிச்சிக்கிட்டு இப்படி கோச்சிக்கிட்டு ஓடினாள்ன்னா என்னடா அர்த்தம்? காலத்துக்கும் உங்கிட்ட எப்பிடிடா இவ குடும்பம் பண்ணப் போறா?'' என்று தன் பக்கம் எதுவும் தவறில்லாதவளாய்க் காட்டிக் கொள்ள முயற்சித்திருக்கிறாள், அவனின் அம்மா.

""அதெல்லாம் நான் பாத்துக்கறேம்மா... நீ உப்புப்பெறாத விஷயம்ங்கற. அவ அதுதான் பிரச்சனைங்கறா... உப்புப் பத்தலேன்னா தனியா எடுத்து கொஞ்சம் போட்டுக்க வேண்டியதுதான. இதப்போயி பெரிசு பண்ணிக்கிட்டிருக்கீங்க''.

குழம்பில் உப்புக் கம்மியாக இருக்கிறதென்று கேட்டுத்தான் பிரச்னை போலிருக்கு என்று தவறாக புரிந்து கொண்டு அவன் அவ்வாறு கேட்டிருந்தான்.
""உப்பு கொறைச்சலில்லடா.. அதிகமாப் போச்சின்னு அப்பா சொல்லிச்சி'' என்று சொல்லி, அடுத்ததாய் என்ன நடந்தது என்று சொல்ல அவள் வாயெடுப்பதற்குள்ளாக முந்திக் கொண்ட அவன், ""சரி அதிகமாப் போவட்டும். நீ வச்சப்ப எல்லாம் பட்டதும் படாததுமா சாப்பிட்டுக்கலையா... அப்படி சாப்பிட்டுக்க வேண்டியதுதான'' என்றிருக்கிறான்.

""அது காதுல ஒறைக்கிற மாதிரி சொல்லுடா'' என்று தன் கணவனைச் சுட்டும் விதமாகச் சொன்னாள் இராமநாதனின் மனைவி.

""தோ... பாரும்மா.. நான் யாருக்கும் ஒறைக்கணும்ங்கறதுக்காக சொல்லல. யதார்த்தமா சொன்னேன். அதுதான் உண்மை. தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொல்லிக்கிட்டிருந்தீங்கன்னா எப்படிம்மா?'' என்றிருக்கிறான்.

""யப்பா... நான் ஒன்னும் ஒம்பொண்டாட்டியகுத்தம் சொல்லலடா. நானும் யதார்த்தமாத்தான் சொன்னேன். அவ குத்தமா எடுத்துக்கிட்டா. இனிமே நான் வாய் தெறக்கலடா'' என்று மகனிடம் படபடவென பேசியிருந்தாள் அவனின் அம்மா.

மருமகப் பொண்ணு நேத்துதான் வந்திருந்தாள். வந்தவுடன் எடுத்து வந்திருந்த கட்டைப் பையிலிருந்து ஒவ்வொன்றாய் எடுத்து வெளியில் வைத்தாள். சில்வர் சாப்பாட்டு டப்பா இரண்டு. ஒன்றில் மெதுவடையும், மற்றொன்றில் பாயசமும் இருந்தது. ""வீட்ல அம்மா செஞ்சது அத்த... உங்களுக்கும் மாமாவுக்கும் எடுத்து வந்தேன்'' என்றாள்.

இருவரும் மருமகள் பெண்ணை நேருக்கு நேராகப் பார்க்க சங்கோஜப்பட்டவர்களாய் ஒருவாறு நெளிந்தபடி ஜாடையாக அவள் முகத்தைப் பார்த்தனர். அந்தப் பெண்ணே எதுவும் நடக்காததுபோல சாதாரணமாக பேசுகிறாளே என்கிற தைரியத்தில் நாமளும் ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காய் தங்களுக்கும் எதுவும் கோபமில்லை என்பதனை நாசூக்காய் காட்டிக் கொள்வதற்காகவும் பையிலிருந்து எடுத்து கீழே வைத்திருந்த ஒரு டப்பாவைக் காட்டி, ""அது என்னம்மா'' என்றாள் மாமியார்.

""பலாச்சுளை அத்தை... பழமா தூக்கிக்கிட்டு வரலாம்ன்னு பாத்தேன். அத வைச்சிக்கிட்டு எப்படி வண்டியில ஒக்காந்துக்கிட்டு வர்றது. அதான் அறிஞ்சி சுளையா எடுத்துக்கிட்டு வந்திட்டேன்'' என்றவள் டப்பாவைத் திறந்து அத்தையிடம் நீட்டினாள். உடனே சாப்பிடவேண்டும்போல சுளையின் வாசனை வீடு முழுக்க "கமகம'வென்று பரவியிருந்தது. அடுத்ததாய் இன்னொரு சின்னப் பையை வெளியே எடுத்தவள், ""அம்மா பச்ச மல்லாட்ட குடுத்தனுப்பிச்சிருக்காங்க அத்தை'' என்று தன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தவற்றை சந்தோஷமாய் சிரித்த முகத்துடன் எடுத்துக் கொடுத்தபடியிருந்தாள்.
சில நேரங்களில் கோபம் இருப்பது மாதிரியும், உபசரிப்பவளாயும் அல்லது உதாசீனப்படுத்துபவளாயும் அவளின் செய்கை ஒரு வித மாய விளையாட்டாய் அவர்கள் கண்ணுக்குத் தெரிந்து கொண்டிருந்தாலும் இப்போது அவள் முகத்தில் இவர்கள் மீது கோபம் இருப்பதற்கான அறிகுறி எதுவுமில்லாமல் இருப்பது அவர்களுக்கு சந்தோஷத்தைத் தந்தது.
உண்மையிலேயே கோபப்பட்டுத்தான் ஊருக்குப் போனாளா? இல்ல ஊருக்குப் போய் வரவெண்டுமென்பதற்காகத்தான் அப்படி பேசிவிட்டு போனாளா? ஒரு வாரத்திற்கு முன்பு நடந்து முடிந்திருந்த நிகழ்வுகளின் எந்த சலனமும் அவளிடம் காணாது சாதாரணமாக அவள் பழகியதைப் பார்த்து அவர்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. பலகோணங்களில் அவளைக் கவனித்துக் குழம்பிப் போயிருந்தனர். ஆனாலும் இவளைப்போய் கடுமையாக பேசி விட்டோமே என உள்மனம் உறுத்தியது. "சின்னப்பொண்ணு அவ. இப்ப என்ன தெரியும் அவளுக்கு. நாமதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போயிருக்கணும். கூட கூடப் பேசி அந்தப் பொண்ண சங்கடப்படுத்தியாச்சு' என்று நினைத்து கணவன் மனைவி இருவருமே வருத்தப்பட்டுக் கொண்டனர்.
கதிரவன் அது விஷயமாக ஏதாவது கேட்பதற்காகத்தான் போன் செய்கிறாரோ என எண்ணி "போனை எடுப்பதா... தவிர்ப்பதா...' என்கிற குழப்பமான மனநிலையில் தவித்துக்கொண்டிருந்தார் இராமநாதன். குற்ற உணர்வில் சிறைபட்ட உள்ளமாய் குறுகிப்போயிருந்தது அவரின் முகம்.
போன் டிஸ்பிளேவும் மானிட்டர் ஸ்கிரினும் மாறி மாறி அவருக்கு கண்ணாமூச்சிக் காட்டிக்கொண்டிருந்தன. மானிட்டர் சிலிப்பிங் மோடுக்கு போயிருப்பதுபோல கருப்பாய் இருந்தது. சிறிது நேரம் அதனை உபயோகப்படுத்தாமலிருந்தால் அப்படித்தான். ஆனால் மொபைல் ஸ்கிரின் மட்டும் தன் பணியை முடித்துக் கொள்ளாமல் இன்னமும் "கதிரவன் காலிங்' என்றே திரையிட்டுக் கொண்டிருந்தது.
மொபைலை ஆன்செய்து கதிரவனிடம் பேசுவதா... மெளசை ஆட்டி ஸ்கிரீனை உயிர்ப்பித்து மெயில் அனுப்புவதா... என்று பதற்றமாய் இருந்தார். "கட்' ஆவதற்குள் எடுத்தாக வேண்டும். இல்லையேல் போனை எடுக்காமல் போனதற்கும் காரணம் சொல்லியாக வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.
""ஹலோ...''
""ம்... கதிரவன் பேசறேன். ரொம்ப நேரமா ரிங் அடிச்சிக்கிட்டிருக்கு. எடுக்கவேயில்ல...?''
""ஓ... சாரி... நான் கவனிக்கல. இப்பத்தான் சத்தங்கேட்டுப் பாக்குறேன். உங்க காலா இருக்கு. எப்படியிருக்கீங்க கதிரவன். நல்லாருக்கீங்களா?'' சம்பிரதாய விசாரிப்புகளுக்காய் வழக்கம்போல புன்முறுவலோடு சிரித்தபடி கேட்டாலும் உள்ளுக்குள் குற்றம் புரிந்தவரின் மனநிலையாய் ஒருவித உறுத்தல் இருந்து கொண்டிருந்தது.
இராமநாதனுக்குப் பதில் சொல்லும் விதமாக, ""ம்... செளரியத்துக்கு ஒன்னும் கொறைச்சலில்லை. நல்லாருக்கேன். நீங்க எப்படியிருக்கீங்க'' என்று கதிரவன் கேட்கவும், ""நான் நல்லாருக்கேன்' என்று பதில் சொன்னவர் அடுத்து அவரிடம் பேச முடியாதவாறு அதிகாரி பஸ்சரை அழுத்தியதனால் வரும் "க்குவிங் க்குவிங்... க்குவிங்.. ...க்குவிங்ங்ங்' ஒலி அவரை மட்டுமல்ல, அங்கு இருப்பவர்களையெல்லாம் ஒருவித அச்சத்திலாழ்த்தும் விதமாக அலற அடித்துக்கொண்டிருந்தது. மெயில் அனுப்புவதற்காக அட்டாச்மெண்ட் கொடுத்து கவரிங் லெட்டர் டைப் செய்யப்படுவதற்காக தயார் நிலையிலிருந்துக் கொண்டிருந்தது.
பஸ்சரின் ஒலி கதிரவனுக்கும் கேட்டிருக்க வேண்டும், ""பிசியா'' என்றார்.
கதிரவனின் குரலுக்குப் பதில் சொல்லமுடியாத பதட்ட சூழ்நிலையில், ""போப்பா... போ. என்னான்னுக் கேளு. மெயில் கேட்டார்ன்னா அனுப்பிக்கிட்டேயிருக்கேன்னு சொல்லு'' என்று அங்கே நின்று கொண்டிருந்த அட்டன்டர்களில் ஒருவரிடம் சொன்னார் இராமநாதன்.
உள்ளே சென்று வந்த அட்டன்டர், ""சார் உங்களைத்தான் வரச் சொல்றார்'' என்றார்.
""கதிரவன் கொஞ்சம் லைன்ல இருங்க. நான் வந்து பேசறேன்''
""பிசியா?''
""நான் பேசறேன்...'' என்று சொல்லிக் கொண்டே போனை கீழே வைத்துவிட்டு
அவசர அவசரமாய் அதிகாரி இருக்கும் அறையினுள் நுழைந்தார் இராமநாதன்.
""என்ன... மெயில் அனுப்பியாச்சா?''
""தோ...''
""என்ன... தோ...? அனுப்பியாச்சா இல்லையா?''
""அனுப்பப் போறேன் சார்...'' கண்களில் மிரட்சித் தெரிய விரல்களைக் குவித்து கெஞ்சுவது போன்ற பாவனையில் கையை நீட்டி, குதிகால் தரையில் படியாத
படிக்கு மேலெழுந்த வாரியாக ஓடத் தயாராய் இருப்பது போலவே நின்று கொண்டிருந்தார் இராமநாதன்.
""என்ன... இவ்வளவு நேரம் தூங்கிக்கிட்டிருந்தியா? ஒரு மெயில் அனுப்ப எவ்வளவு நேரம்?'' கடு
கடுத்த முகம். கடுங்கோபத்தில் ரத்தச் சிவப்பாய் மாறிப் போயிருந்த கண்கள். சாதாரணமாக எப்போதும்போல் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலல்லாமல் சற்று நிமிர்ந்து அவர் பார்த்த பார்வை, அவர் கேட்ட தோரணை எல்லாமே பயம் காட்டும் விதமாக இருந்தது. கைகால்கள் உதறலெடுத்தது இராமநாதனுக்கு.
""என்ன பதிலையே காணோம். ஒரு மெயில் அனுப்ப எவ்வளவு நேரம். ஸ்கேன் பண்ணிட்டியா?
ஒரு கேள்விக்காவது தன்னிடம் பதில் உள்ளதே என்பது போல பட்டென்று, ""பண்ணிட்டேன் சார்'' என்றார்.
""அப்புறமென்ன... அனுப்ப வேண்டியதுதானே?''
""தோ... அனுப்பிடறேன் சார்''
""இங்கேயே நின்னுக்கிட்டு அனுப்பிடறேன்... அனுப்பிடறேன்னா... எப்ப அனுப்புறது? சீக்கிரம்'' என்று தலைகுனிந்து ஃபைலைப் பார்க்கும் தன் பணியில் மூழ்கினார் அதிகாரி.
இராமநாதன் அதிகாரி அறையிலிருந்து ஓட்டமாய் வெளியில் வந்திருந்தார். மெளசைப் பிடித்து ஓர் ஆட்டு ஆட்டி சைலண்டாகியிருந்த ஸ்கிரீனை உயிர்ப்பித்தார். "அய்யோ... கதிரவன் லைன்லயே இருக்கிறாரா... கட் பண்ணிடுங்க... அப்புறம் பேசறேன்னு சொல்லியிருந்திருக்கலாம். லைன்லயே இருக்கச்சொல்லிட்டமே'' என்கிற பதட்டத்தில் போனை எடுத்து, ""ஹலோ'' என்றார்.
இராமநாதன் நினைத்தது போலவே கதிரவன் லைனில் இருந்து கொண்டிருந்தார். அவரும் பதிலுக்கு "ஹலோ' என்றவர், ""உங்க பேச்சுல பதற்றம் தெரியிறாப்பல இருக்கு. நான் வேணா அப்புறம் பேசட்டுமா'' என்றார் கதிரவன்.
""ஓ... சாரி... நான் வேறொரு வேலையில கவனமா இருந்ததுனால...'' என்றிழுத்தார் இராமநாதன்.
""இருந்ததுனாலவா... இருக்கிறதுனாலவா?''
""இல்லையில்லை. நீங்க சொல்லுங்க''
""பதட்டமா பேசறாப்பல தெரியுதே... அதான் பிசியான்னுக் கேட்டேன்''
""அதெல்லாம் ஒன்னுமில்ல. நான் சாதாரணமாத்தான் பேசறேன். நீங்க சொல்லுங்க''
""இன்னைக்கு நேரத்துல வீட்டுக்கு வருவீங்களான்னு தெரிஞ்சிக்கத்தான் போன் பண்ணினேன்''என்றார்.
வழக்கமாக அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும்போது இரவு எட்டுமணி ஒன்பது மணி கூட ஆகிவிடுவதுண்டு. அதனால்தான் அவர் அப்படிக் கேட்கிறார் என்று நினைத்த இராமநாதன், அவருக்கு என்ன பதில் சொல்வது என்பதினால் மெளனமாயிருந்தார்.
எதுவும் குரலில்லாமல் மெளனமாயிருப்பதினால் கதிரவன் தொடர்ந்தார்.
""ஒன்னுமில்ல... இன்னைக்கு வீட்டுக்கு நேரத்துல வந்தீங்கன்னா... பேசலாம்ன்னுப் பாத்தேன்'' என்றார்.
"நீங்க நல்லாப் பார்த்துப்பீங்கன்னுதானே எங்க உறவுக்காரப் பொண்ண பாத்து வைச்சேன். இப்படிப் பொண்ண ஆளாளுக்கு பேசறீங்களாமேயென்று' கேட்டு விடுவாரோ என்கிற பயம் தொற்றிக் கொள்ள, அவருக்கு என்ன பதில் சொல்வது இதுவே மற்ற தினமாய் இருந்திருந்தால், "சொல்லுங்க கதிரவன், நீங்க சொன்னீங்கன்னா உடனே கிளம்பிடறேன். அதனால என்ன இருக்கு' என்று பட்டென்று உற்சாகத்தோடு சொல்லியிருப்பார். ஆனால், "எப்பவும் போலத்தான்' என்று சொல்லலாமா... ஏதாவது நினைத்துக் கொள்வாரா... அல்லது நேரத்தில் வந்து விடுகிறேனென்று சொல்வதா'என்று புரியாதவராய் குழம்பிப் போயிருந்தார் இராமநாதன்.
மெயில் நினைவுக்கு வர சிலிப்பிங் மோடிலிருந்த மானிட்டர், இவர் மெளசைப் பிடித்து ஆட்டியவுடன் உயிர்ப்பித்திருந்தது. கை எடுத்து தலையைச் சொறிந்து கொண்டார். பித்துபிடித்தது போலிருந்தது அவருக்கு.
""என்ன சைலண்டாயிட்டீங்க?'' இன்னொரு கையில் இருந்த போன் லைனில் கதிரவன் கேட்டுக் கொண்டிருந்தார்.
உப்புத் தின்னவன் தண்ணிக்குடிச்சியே ஆவணும் கதையா வேறு வழியில்லை. அவரிடம் ஏதாவது பேசித்தான் ஆகணும்ங்கிற நிர்ப்பந்தத்தில், ""முடிஞ்ச வரையிலும் நேரத்துல வர்றதுக்கு முயற்சி பண்றேன். ஏதாவது முக்கியமான வேலைங்களா'' என்றிழுத்தார் இராமநாதன்.
கதிரவன் சொன்னவுடன் பெருமூச்சு விடாத குறையா நிம்மதியடைந்து, "அப்பாடா' என்று மனதுக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு, ""நேரத்துல வந்திடறேன். அவசியம் வீட்டுக்கு வாங்க'' என்று புன்முறுவலோடு அழைத்தவர், டேபிள்மீது போனை வைத்து மூச்சு விட்டவராய், பாட்டிலில் இருந்த தண்ணீரை நிமிர்ந்து "மடக்கு மடக்'கென்று குடித்து, ""ஒன்னுமில்லீங்க... பாப்பாவையும் பையனையும் வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட வரணும். நீங்க வீட்ல இருந்தீங்கன்னா உங்கள்ட்டயும் நேருல பேசுனாப்பல இருக்கும். அதுக்குத்தான் கேட்டேன். நேரத்துல வர முடியுங்களா'' என்று கதிரவன் சொன்னதை அசைபோட்டபடி அனுப்புவதற்கான கடிதத்தை எழுதி மெயில் சென்ட் கொடுத்தார் இராமநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT