தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 26

பரபரப்பாக இருந்தது தில்லியின் அரசியல் சூழல். மண்டல் கமிஷன், அத்வானியின் ரத யாத்திரை இரண்டும் ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிளவை ஏற்படுத்தி இருந்தன. ஒட்டுமொத்த இந்தியாவும் பிளவுபட்டுக் கிடந்தது. மக்களின் மனதில் ஏற்பட்டிருந்த ரணத்தை ஆற்றுவதற்கும், பிளவின் கடுமையைப் போக்குவதற்கும் வி.பி. சிங் அரசு அகற்றப்பட்டால்தான் தீர்வு ஏற்படும் என்கிற கருத்து பரவலாகவே ஏற்பட்டிருந்தது.

ஆட்டோ ரிக்ஷா பிடித்து அக்பர் சாலை காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்தேன். மதிய உணவுக்காகத்தான் அங்கே சென்றேன் என்றாலும்கூட, காங்கிரஸின் நிலைப்பாடு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். மாலையில் மூத்த ஜனதா தள தலைவர் சந்திரசேகரை சந்திப்பது என்றும் திட்டமிட்டிருந்தேன்.

காரியக் கமிட்டி கூடும் அறையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் குழுமி இருந்தனர். வி.பி. சிங் ஆட்சி கவிழ்ந்தால், அடுத்து என்ன செய்யலாம் என்கிற யோசனையில் இருந்தது காங்கிரஸ் கட்சி. சுமார் இரண்டு மணிநேரக் கலந்தாலோசனைக்குப் பிறகு கூட்டம் கலைந்தது. பிரணாப் முகர்ஜியும், ஜி.கே. மூப்பனாரும் வெளியே வந்தபோதே என்னைப் பார்த்து விட்டனர். மூப்பனார் வழக்கம்போல தலையசைத்துப் புன்னகைத்தார். 

பிரணாப் முகர்ஜியின் அறையில் நான் காத்திருந்தேன். சுமார் ஒருமணி நேரத்துக்குப் பிறகுதான் வந்தார். உள்ளே போய் அமர்ந்ததும் என்னை அழைத்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் அவரை சந்திக்கிறேன். என்ன சொல்வாரோ என்கிற பதற்றம் என்னுள் இருந்தது.

""அயோத்தி எப்படி இருக்கிறது?'' என்பதுதான் அவரிடமிருந்து எழுந்த கேள்வி.
நான் எனது அனுபவத்தையும், நிலைமையையும் விளக்கினேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டார்.

""காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போகிறதா?'' - கட்டுக்கடங்காத ஆர்வத்துடன் கேட்டேன். தனது பைப்பைப் பற்ற வைத்தார். புகையை இழுத்துவிட்டபடி அவர் சொன்னார்-

""வி.பி. சிங்குக்குப் பதவியில் தொடர வேண்டும் என்பதில் இருக்கும் ஆசை, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் ராஜீவ் காந்திக்கு இல்லை. 142 உறுப்பினர்கள் உள்ள ஜனதாதளம் ஆட்சியிலும், 197 உறுப்பினர்கள் உள்ள காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவும் இருக்கும் விசித்திரம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது...''

தனது அரசியல் கருத்துகளை இப்படியெல்லாம் வெளிப்படுத்துபவர் அல்ல பிரணாப் முகர்ஜி. அதிலும் என்னைப் போன்றவர்களிடம் எதைப் பேச வேண்டும், எப்போது பேச வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பவர். அப்படிப்பட்டவர், இப்படிச் சொன்னதிலிருந்து அவரது விரக்தியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

நான் அதற்கு மேலும் அவரிடம் எதையும் கேட்க விரும்பவில்லை. அப்படிச் செய்வது அவருக்குப் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். இந்திராகாந்தி இருந்திருந்தால், இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டிருக்க மாட்டார் என்று எனக்குத் தோன்றியதுபோலவே, அவருக்கும் தோன்றியிருக்க வேண்டும்.

பிரணாப்தாவை சந்திக்க ராஜேந்திர குமாரி பாஜ்பாயும், மாதவ்சிங் சோலங்கியும் உள்ளே நுழைந்தனர். இரண்டு பேருமே இந்திரா காந்திக்கு நெருக்கமானவர்கள். இனியும் அங்கிருப்பது சரியல்ல என்று நான் மெதுவாக நகர்ந்து விட்டேன்.

வி.பி. சிங் அரசுக்கு அளித்து வந்த தனது ஆதரவை  பாஜக விலக்கிக் கொண்டது. எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் எந்தவித முயற்சியும் எடுக்காமலேயே வி.பி. சிங் ஆட்சி கவிழ்ந்தது.

ஆட்சி கவிழ்ந்தால் தேர்தல் வரும். அயோத்தி ராமர் கோயிலுக்கான அத்வானி ரதயாத்திரையின் பின்னணியில் வெற்றி பெறுவோம் என்று கருதியது பாஜக. மண்டல் கமிஷன் பிரச்னைக்காக ஆட்சியைத் துறந்தவர் என்கிற தியாகி முத்திரையின் அடிப்படையில் வி.பி. சிங்கின் தலைமையில் தங்கள்கட்சி பெரும் வெற்றி பெறும் என்று ஜனதா தளமும் கணக்குப் போட்டது. 

ஆட்சி கவிழ்ந்தால் தேர்தல் அறிவிக்கலாம் என்றால் மண்டல் கிளர்ச்சி, அயோத்தி பிரச்னை ஆகியவற்றின் பின்புலத்தில், தேசம் பிளவுபட்டுக் கிடக்கிறது. இந்தப் பின்னணியில் தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது என்பதுதான் பரவலான கருத்தாக இருந்தது.

பிரதமராகும் தனது ஆசையால் சந்திரசேகர் ஜனதா தளத்தைப் பிளவுபடுத்தி காங்கிரஸின் ஆதரவில் ஆட்சி அமைத்தார் என்கிற கருத்து நிலவுகிறது. அது தவறு. 

ராஜீவ் காந்தியை ஆட்சி அமைக்கச் சொன்னபோது, தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க தான் தயாராக இல்லை என்று அவர் மறுத்துவிட்டார். துணைப் பிரதமராக இருக்கும் தேவிலால் ஆட்சி அமைக்கத் தயாராக இருந்தாலும், அந்தச் சூழலில் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க யாருமே தயாராக இருக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் வற்புறுத்தலைத் தொடர்ந்துதான் சந்திரசேகர் பிரதமராக ஒப்புக்கொண்டார்.

3, செளத் அவென்யூ லேன் எப்போதும் இல்லாத பரபரப்புடன் காணப்பட்டது. சந்திரசேகரின் இல்லம் அமைந்த அந்தத் தெருவுக்குப் பல காங்கிரஸ் தலைவர்கள் படையெடுத்தனர். மிகவும் மோசமான பொருளாதாரச் சூழல் ஒரு
புறம் என்றால், அரசியல் களம் கொதிப்படைந்து காணப்படுகிறது. அவப்பெயருடன் ஆட்சியில் அமர வேண்டுமா என்று சந்திரசேகர் தயங்கினார். இதெல்லாம் நான் நேரடி சாட்சியாக இருந்து பார்த்த நிகழ்வுகள்.

""பூனைக்கு யாராவது மணி கட்டித்தான் தீர வேண்டும். தேர்தலுக்கான சூழல் இல்லை. 

அதனால் நீங்கள் தைரியமாகப் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று சந்திரசேகரை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் சுப்பிரமணியம் சுவாமி; இன்னொருவர் "துக்ளக்' ஆசிரியர் "சோ' ராமசாமி.

நவம்பர் மாதம் 10-ஆம் தேதி வி.பி. சிங் ராஜிநாமா செய்ததும், காங்கிரஸின் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமராகப் பதவி ஏற்றதும் மின்னல் வேகத்தில் நடந்தன. 

சந்திரசேகருடனும், தேவிலாலுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான ஏற்பாட்டுக்கு வழி கோலியதில் பிரணாப் முகர்ஜியின் பின்னணிப் பங்கு நிறையவே உண்டு. அப்போது பிரணாப் முகர்ஜிக்கும், சந்திரசேகருக்கும் இடையே சில தகவல்களைப் பரிமாற நான் உதவ முடிந்தது.

சந்திரசேகர் பதவி ஏற்றுக்கொண்ட இரண்டாவது நாள், ஜன்பத்திலுள்ள வெஸ்டர்ன் கோர்ட்டில் ஜி.கே. மூப்பனாரை சந்தித்தேன். அவர் எங்கோ வெளியில் சென்றுவிட்டு அப்போதுதான் திரும்பி இருந்தார். பிரணாப் முகர்ஜியைக் கேட்க முடியாத கேள்விகளை மூப்பனாரிடமும், கருணாகரனிடமும் என்னால் கேட்க முடியும். வெளிப்படையாகவே விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

""ஏன் ராஜீவ் காந்தி ஆட்சி அமைக்கவில்லை? சந்திரசேகரின் "மைனாரிட்டி' அரசால் செயல்பட முடியுமா?''

சிரித்தார் மூப்பனார். காரணம் இல்லாமல் இல்லை என்பதை அவரது சிரிப்பு தெரிவித்தது.

""மண்டல் கமிஷன், அயோத்தி பிரச்னை இரண்டிலுமே காங்கிரஸ் எந்தவொரு முடிவையும் எடுத்துவிட முடியாது. மண்டல் கமிஷன் விஷயத்தில் தீவிரமாக இருக்கும் முலாயம் சிங் யாதவும், லாலு பிரசாத் யாதவும் சந்திரசேகரின் சிஷ்யர்கள். அவர்களை அவர் சமாளித்து, அடக்கி வைத்து விடுவார். நாங்கள் சொன்னால் கேட்கமாட்டார்கள்.''

""அயோத்தி பிரச்னையைச் சந்திரசேகர் தீர்த்து விடுவாரா?''

""அவர் ஒருவரால்தான் சுமுகமாக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். முஸ்லிம் தரப்பினர் அவருக்கு நெருக்கமானவர்கள். அதேபோல, பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்பினரை காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி போன்றவர்களின் உதவியுடன் அவர் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வர
வழைப்பார். அடுத்த மூன்றே மாதங்களில் சந்திரசேகர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்.''

ஜி.கே. மூப்பனார் சொன்னபோது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் அடுத்த ஒரே மாதத்தில் அயோத்தி பேச்சுவார்த்தை தொடங்கியபோது, நான் ஆச்சரியப்பட்டேன். மண்டல் கமிஷன் பிரச்னையும், வி.பி. சிங்கின் ஆட்சி அகன்றதும், பொங்கிய பால் தணிவதுபோலத் தணிந்து விட்டது.

சந்திரசேகர் பிரதமரான சில நாள்களில் நான் சென்னை திரும்பி விட்டேன். இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. வி.பி. சிங் ஆட்சியின்போது, இலங்கையிலிருந்து இந்திய ராணுவம் திரும்பப் பெறப்பட்டுவிட்ட நிலையில், ஈழத் தமிழர் பிரச்னை மீண்டும் கடுமையாகத் தொடங்கியது. தமிழகத்தில் பல்வேறு போராளிக் குழுக்களின் நடமாட்டம் அதிகரித்தது. அதற்கு திமுக அரசின் மறைமுக ஆதரவு இருந்தது என்பது உண்மையும்கூட.

தில்லியிலிருந்து பத்திரிகை நண்பர் ஒருவர் என்னை அழைத்தார். உடனடியாகப் பிரணாப்தாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளச் சொன்னார். அழைத்தபோது பிரணாப்தாவே போனை எடுத்தார்.

""சென்னையில் நிலைமை எப்படி இருக்கிறது?'' என்று அவர் கேட்டபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை.

""இங்கே எந்தப் பிரச்னையும் இல்லையே. எல்லாமே எப்போதும் போலத்தான் இருக்கிறது.''

""விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும், தமிழகம் ஈழப் போராளிகளின் புகலிடமாகி இருப்பதாகவும் சொல்கிறார்களே, உண்மையா?''
""போராளிகள் பலர் இங்கே இருக்கிறார்கள். அவர்களுக்குள் சண்டை நடக்கிறது. அதனால் அன்றாட சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நான் வேண்டுமானால் சற்று தீவிரமாக விசாரித்து உங்களை அழைக்கட்டுமா?''

""அதெல்லாம் வேண்டாம். சில ஆதாரபூர்வத் தகவல்கள் ஏற்கெனவே கிடைத்திருக்கின்றன. உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் உன்னை அழைக்கச் சொன்னேன்.''

பிரணாப்தா தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார்.

தில்லியில் ஏதோ நடக்கப் போகிறது என்பது எனக்குப் புரிந்தது. 1980-இல்  மக்களவைத் தேர்தல் தோல்வியைக் காரணம் காட்டி அன்றைய எம்ஜிஆர் ஆட்சியைத் திமுக கலைத்ததுபோல, இப்போது திமுக ஆட்சி கலைக்கப்படக்
கூடும் என்று பொறி தட்டியது.

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியின் பத்திரிகையாளர் சந்திப்பு. என்னதான்  சொல்கிறார் என்று தெரிந்து கொள்ளச் சென்றிருந்தேன். தனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு தில்லியில் சதி நடப்பதாக அவர் தெரிவித்தபோது, பிரணாப் முகர்ஜியின் அழைப்புக்குக் காரணம் புரிந்தது.

பொங்கல் முடிந்த இரண்டாவது நாள். அப்போது அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் இருந்த எனது "நியூஸ்கிரைப்' அலுவலகத்திற்கு நான்கு பேர் காரில் வந்தார்கள். என்னிடம் ஒரு கவரைத் தந்தார்கள். அந்தக் கவரில் பிரதமர் சந்திரசேகரின் முகவரி எழுதப்பட்டிருந்தது.

""நீங்கள் பிரதமர் சந்திரசேகருக்கு நெருக்கமானவர் என்று விசாரித்துத் தெரிந்து கொண்டோம். இந்தக் கவரில் சில முக்கியமான விவரங்கள் இருக்கின்றன. இதை பத்திரமாக அவரிடம் நீங்களே கொண்டுபோய் நேரில் கொடுத்து உதவ வேண்டும்'' என்றார்கள்.

""கவரில் என்ன இருக்கிறது? கடிதமா?''

""இல்லை, சில விவரங்கள். அது என்னவென்று உங்களிடம் தெரிவிக்க முடியாது. ஆனால், மிக முக்கியமான தகவல்கள் அதில் இருக்கின்றன. தயவு செய்து இதை எங்களுக்காக நீங்கள் பிரதமரிடம் சேர்த்து உதவ வேண்டும்!''

அவர்களை நான் கூர்ந்து கவனித்தேன். அவர்களது முகத்தில் மிரட்சி இருந்தது. அதே நேரத்தில் உண்மையும் இருந்தது. யார், என்ன என்கிற எந்த விவரத்தையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை. அப்படியிருந்தும்கூட எனக்கு அவர்களிடம் எதனால் நம்பிக்கை பிறந்தது என்று தெரியவில்லை.

""சரி, பிரதமரிடம் நானே நேரில் கொண்டுபோய்க் கொடுக்கிறேன்'' என்று ஒப்புக் கொண்டேன். அடுத்த நாள் அதிகாலை விமானத்தில் ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததால் தில்லிக்குக் கிளம்பினேன்.

விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகு, தான் ஏன் இந்தத் தேவையில்லாத வேலையை ஏற்றுக் கொண்டேன்; அதுவும் இந்த நேரத்தில் என்று நினைத்தபோது சிரிப்பு வந்தது.

என்னை வந்து சந்தித்து அந்தக் கவரைத் தந்த  இளைஞர்கள் நான்கு பேரும் ஈழத் தமிழர்கள்!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT