தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தோல் வறட்சி... குதிகால் வெடிப்பு!

DIN


என் வயது 43. சுமார் ஆறு ஆண்டுகளாக சர்க்கரை உபாதை உள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டு குணமான பிறகு, என் கால் பாதத்தின் தோல் பகுதியிலும், கட்டை விரலைச் சுற்றியும், குதிகாலிலும் வெடிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. விரல் இடுக்கில் குழிப்புண் ஏற்பட்டு ஆறாமல் இருக்கிறது. இது எதனால்? தேங்காய் எண்ணெய் தடவலாமா? வேறு ஏதேனும் ஆயுர்வேத களிம்புகள்
உள்ளதா?

ராஜு, மடிப்பாக்கம்,
சென்னை.

சர்க்கரை உபாதை உள்ளவர்கள் இனிப்பு, நெய், எண்ணெய் போன்ற பொருள்களை அதிகம் பயன்படுத்த முடியாமற் போவதாலும், வறட்சி தரும் கசப்பு, துவர்ப்புச் சுவைகளை அதிகம் சேர்க்க வேண்டியிருப்பதாலும், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாலும் ஏற்படக் கூடிய வாயுவின் சீற்றத்தினால், அதன் குணங்களாகிய வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி போன்றவற்றால் தோலில் வறட்சியை ஏற்பட்டு, விண்டு கீறிவிடும் நிலைக்குத் தள்ளுகிறது.

பாதத்தின் தோல் இயற்கையாகவே சற்று வறண்டிருப்பதால், வெடிப்பு ஏற்படுவது இயற்கையே. அதுவும் கரோனா தொற்றிற்குப் பிறகு, இந்த வெடிப்பின் ஆதிக்கம் கூடுவதற்குக் காரணமாக, குடல் உட்புற வறட்சியைக் காரணமாகக் கூற முடியும். கபத்தினால் ஏற்படும் இருமல், காய்ச்சல், தும்மல் போன்றவற்றைக் குறைப்பதற்காக கரோனா தொற்றின்போது, எடுக்கப்படும் மருந்துகளால் குடல் வறட்சி ஏற்படுவதை நாம் அறிவதில்லை. அவ்வறட்சியை நீக்கும் தேங்காய்ப்பால், எள் சாதம், நெய் போன்றவற்றை உணவில் சேர்க்காமல் போனால், அதிக நீர் வேட்கை, தோல் வறட்சி, மலச்சிக்கல் போன்றவை வரிசை கட்டிக் கொண்டு தொடரும்.

சர்க்கரை உபாதை உள்ளவர்கள் தேங்காய் எண்ணெய்யை உள்ளும் புறமும் பயன்படுத்துவது நல்லது. செரிப்பதில் கடினமானது. ஆனால் இளைத்த தாதுக்களுக்குப் புஷ்டி தந்து பெருக்கச் செய்யும். ஆஸ்துமா, இருமல், காசநோய், நீரிழிவு உபாதைகளில் பத்தியமானது, மூளையின் ஞாபகசக்தியை வளர்க்கும். சுட்ட புண்கள், வெட்டுக்காயங்கள், பாத வெடிப்பு, சொறி சிரங்குகள், கரப்பான்கள் போன்ற உபாதைகளுக்கு மேலுக்குப் பூசுவதினால் நல்ல குணம் கிடைக்கும்.

நன்கு விளைந்த தேங்காயைத் துருவி அதன் நீரை(இளநீர்)யும் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, பாலைப் பிழிந்து, கெட்டித்துணியில் பிழிந்து எடுத்துள்ள பாலை சிறிது சூடேறக் காய்ச்சி, அதில் புளித்த மோரை வார்த்து, பாலை புரை செய்வது போல் வைக்கவும். சுமார் 12 மணி நேரம் கழிந்த பிறகு தேங்காய்ப்பாலின் மேல்பாகம் வெண்ணெய் போல் கனமாகவும், அடியில் மோர் போல் தெளிவும் பிரிந்து நிற்கும். மேல் பாகத்தை எடுத்துச் சட்டியில் இட்டுக் காய்ச்சினால், தெளிவான எண்ணெய் உருவாகும். இது மிகவும் உயர்ந்தது. மூக்கையும், நாக்கையும், கண்களையும் மணம், ருசி, ரூபம் எல்லாவிதத்திலும் கவரும். குணங்களிலும் உத்தமமானது. ஜீவசத்து (வைட்டமின்ஸ்) குறையாமல் நிறைந்து நிற்கும்.

பாத வெடிப்பைக் குணமாக்க மேலும் சில எளிய வழிகள்:

அரிசி மாவை தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து கஞ்சி பதத்தில் இறக்கித் தேய்த்துவிட்டு, வெந்நீரில் சிறிது நேரம் கழுவித் துடைத்து ஈரம் காய்ந்ததும், பிண்ட தைலம் எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலத்தை தடவித் தேய்த்துவிடலாம். இதை தினமும் இருமுறை செய்ய, சில நாட்களில் காலின் வெளித் தோல் பரப்பு வரை ரத்த ஓட்டம் ஏற்பட்டு வெடிப்பு மறையும்.

மஞ்சள், அதி மதுரம், வேப்ப இலைச்சாறு, கார்போக அரிசி விதைத் தைலம், தகரவிதை, வாலுளை, தேவதாரு, வல்லாரை, கறிவேப்பிலை, மஞ்சிட்டை, ரக்தசந்தனம், யூகலிப்டஸ் தைலம் போன்ற மூலிகைகளின் கலவையினால் வெளிவரும் களிம்பையும் இரவில் படுக்கும் முன் பயன்படுத்தலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT