தினமணி கதிர்

உயிர்

ச.மதனகல்யாணி

சந்தியா கல்லூரிக்கு கிளம்பினாள். காலைச் சிற்றுண்டி சாப்பிடாததால் களைப்பாக இருந்தது. பதினைந்து நாள்களாகத்தான் இந்த காலை விரதம்.
அதற்குக் காரணம் இருந்து.

சந்தியா விலங்கியல்துறை பேராசிரியை. அது மட்டுமல்லாமல், கோவையில் ஒரு பிரபலமான வன உயிரின ஆர்வலரும் கூட. வனத்துறையுடன் இணைந்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, காடுகளில் விலங்குகளின் கணக்கெடுப்புப் பணிகளிலும் பிற ஆய்வுகளிலும் மாணவர்களோடும் மற்ற இயற்கை ஆர்வலர்களோடும் பங்கேற்பது என்று எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருப்பாள்.

சில நாள்களுக்கு முன் ஒரு சிறு மாணவர் குழுவோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குச் சென்றிருந்தாள். அங்கு, "வன உயிர்களின் பாதுகாப்பு' குறித்த ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பலர் உரையாற்றினார்கள். சந்தியாவும் தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினாள். நிகழ்ச்சி முடிந்து கிளம்ப மணி நான்காகி விட்டது.

டிரைவரிடம், ""சுந்தர், கொஞ்சம் வேகமாய் போங்க. யானை ஏதாச்சும் க்ராஸ் பண்ணினால் சங்கடம். இருட்டறதுக்குள்ள திம்பம் மலைப்பாதையைக் கடந்து விட்டால் நல்லது'' என்றாள்.

கல்லூரிக்குத் தானே காரை ஓட்டிக் கொண்டு போவாள். வெளியூர்ப் பயணங்
களுக்கு சுந்தர்தான் டிரைவர்.

ஆசனூர் செக் போஸ்டைத் தாண்டியதும் கார் வேகமெடுத்தது. காட்டுப் பாதையில் அதிக வேகம் கூடாது. சாலையைக் கடக்கும் விலங்குகள் மேல் மோதி விடும் அபாயம் இருந்தது. என்றாலும், இருட்டுவதற்குள் கீழே சென்று விட வேண்டும் என்பதால் வேகமாகப் போக வேண்டியிருந்தது.

தூரத்தில் சாலை நடுவில் இரண்டு மைனாக்கள் உட்கார்ந்திருந்தன. பறவைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அப்படியே உட்கார்ந்திருக்கும். வண்டி நெருங்கியதும் சட்டென்று பறந்து விடும். இது பலமுறை இவர்களது பயணத்தில் பார்த்ததுதான். ஆனால், அன்று விதி வேறு விதமாக இருந்தது. கார் வந்த வேகத்தில் அப்பறவைகள் அப்படியே உறைந்து போயினவோ என்னவோ தெரியவில்லை. நகராமல் அங்கேயே இருந்தன.

""சுந்தர்.... ஸ்டாப்!'' அலறினாள் சந்தியா.

""பறந்துடும் மேடம்'' என்று சொல்லிக் கொண்டே சுந்தர் காரை ஓட்ட கார் பறவைகளைக் கடந்தது.

அதிர்ச்சியோடு எல்லோரும் திரும்பிப் பின்னால் பார்க்க, தூரத்தில் ஒரு மைனா மட்டும் உட்கார்ந்திருப்பது போலவும், அருகில் ஒரு சிறு உருவம் சாய்ந்து கிடப்பது போலவும் தெரிந்தது.

""ஆண்ட்டி, ஒரு மைனா அடிப்பட்டுடுச்சு போலிருக்கு'' என்றான் நித்தின்.

""ஆமாம் ஆண்ட்டி, ஒண்ணு உட்கார்ந்திருக்கு. இன்னொன்று விழுந்துடுச்சு'' என்றாள் மித்ரா.

இத்தனையும் கண் சிமிட்டும் நேரத்தில் நடந்து விட்டன. காரோ நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தது.

அந்த மைனாவுக்கு அடிபட்டதா இல்லை அது பறந்து விட்டதா என்று சரியாகத் தெரியவில்லை. என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் கார் வெகுதூரம் வந்து விட்டது.

அன்று இரவெல்லாம் சந்தியா தூங்கவில்லை. அந்த மைனாவின் சிறு உருவம் நினைவில் வந்து அவளை வாட்டியது.

"காரைத் திருப்பிக் கொண்டு போய் அந்த மைனா பறந்து விட்டதா என்று உறுதி செய்திருக்கலாமோ ?'

"ஒரு வேளை அடிபட்டிருந்தால் செக் போஸ்டில் வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைத்திருக்கலாமே !'

"விலங்கியல்துறை பேராசிரியை, வன உயிரின ஆர்வலர் நானே இப்படி விதிகளை மீறி நடந்து கொண்டு விட்டேனே' அவளது மனசாட்சி உறுத்தியது.
ஒரு முடிவிற்கு வந்தாள். இனி காலை உணவு சாப்பிடுவதில்லை. அதை ஒரு பிராயச்சித்தமாக நினைத்துக் கொண்டாள். கணவன் குமார் கேட்டால், விரதம் என்று சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். உண்மை காரணத்தைச் சொன்னால் , ""ஒரு மைனாவுக்காக இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டுமா ?'' என்று கேலி செய்யலாம்.

அன்றிலிருந்து இன்று வரை காலை வேளை விரதம் ! அவளுக்கு ஒரு மன நிம்மதி.

மறு நாள் ஞாயிற்றுக்கிழமை. அன்று குரூப் 2 முதல் நிலைத் தேர்வுகள் நடைபெறுகின்றன. அவளது கல்லூரி ஒரு தேர்வு மையம். அவளுக்கும் மேற்பார்வை பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டாள்.

""குமார், ராகுலை ட்யூஷனில் கொண்டு விட்டுட்டு நீங்க ஃபேக்டரிக்குப் போங்க. ராகுல் நீ கால் டாக்ஸியில் வீட்டுக்குத் திரும்பிடு. நான் வர லேட்டாகும்'' என்று சொல்லி விட்டுக் காரை எடுத்தாள்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் ட்ராபிக் அதிகம் இல்லை.

"அப்பாடா! இரண்டு சிக்னல் நிற்காமல் தாண்டியாச்சு!' மூன்றாவது சிக்னலை நெருங்கியதும் சிவப்பு ஒளிர்ந்தது. எப்படியும் இரண்டு நிமிடங்களாவது காத்திருக்க வேண்டும். அவளுக்கு முன்னால் இடப்பக்கத்தில் டூ வீலரில் சுடிதார் அணிந்த ஓர் இளம் பெண்.

பச்சை ஒளிர்ந்த அந்த விநாடியில் அது நடந்தது. சுடிதார்ப் பெண் வண்டியை எடுக்க, பின்னால் எங்கிருந்தோ அசுர வேகத்தில் வந்த ஒரு பைக் அவளை மோதித் தள்ளி விட்டு நிற்காமல் அதே வேகத்தில் சென்றது. சந்தியாவின் கண் முன்னே அப்பெண் தூக்கி எறியப்பட்டுத் தரையில் விழுந்தாள்.

முன்னால், பின்னால் சென்ற எல்லா வண்டிகளும் "டக் டக்' கென்று நின்றன. சந்தியா காரை அப்படியே நிறுத்தி விட்டு இறங்கி அப்பெண்ணிடம் ஓடினாள்.

அருகில் நின்ற ஓர் ஆட்டோவிலிருந்து டிரைவரும் இன்னொருவரும் இறங்கி ஓடி வந்தார்கள். பின்னால் நின்ற டெம்போவிலிருந்து டிரைவரும் ஓடி வந்தார். கூட்டம் கூடி விட்டது.

""108-க்குப் போன் பண்ணுங்க''
""போலீஸ்காரங்களையே காணோமோ !''
""அந்த டூவீலர் நம்பரை நோட் பண்ணீங்களா ?''
""ரெண்டு பசங்கதான் அதில் இருந்தானுங்க !''

""வாங்க, அவனுங்களைப் புடிச்சிருவோம்,'' என்று சிலர் துரத்திச் சென்றார்கள்.
ஆட்டோக்காரரும் டெம்போக்காரரும் ஆளுக்கொரு பக்கமாக அந்தப் பெண்ணைத் தூக்கினார்கள்.

""பார்த்து, பார்த்து... என் காரில் ஏத்துங்க. இதோ பக்கத்துல ஹாஸ்பிடல் இருக்கு. கொண்டு போயிரலாம்'' சந்தியா காருக்கு ஓடினாள்.

இன்னுமிரண்டு பேர் சிதறிக் கிடந்த அப்பெண்ணின் பொருள்களை அள்ளிக் காரில் போட்டனர். அவளைப் பின் சீட்டில் படுக்க வைத்து ஆட்டோ டிரைவர் உட்கார்ந்து கொள்ள, டெம்போ டிரைவர் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டனர்.
""இது பக்கத்திலேயே ஹாஸ்பிட்டல் இருக்கு. சீஃப் டாக்டர் என்னோட நண்பர்தான். அஞ்சு நிமிஷத்துல போயிரலாம்''
சந்தியா காரை ஓட்டினாள். கைபேசியில்டாக்டர் ஆனந்தை அழைத்தாள்.

""ஆனந்த்! இட்ஸ் அன் எமர்ஜென்ஸி ! நீ ஹாஸ்பிட்டல்ல இருக்கீயா ? ஒரு பொண்ணை டூவீலர்க்காரங்க அடிச்சிட்டுப் போயிட்டாங்க. அதிகமாக ரத்தம் போகுது. என் கார்ல எடுத்துப் போட்டுக்கிட்டு வர்றேன். ப்ளீஸ் ஹெல்ப்''
""நான் ஹாஸ்பிட்டல்லதான் இருக்கேன். பதட்டப்படாம வா. எமர்ஜென்ஸி டீம் ரெடி பண்ணி வைக்கிறேன்''
கார் மருத்துவமனைக்குள் நுழைந்தது. தயாராக இருந்த ஸ்ட்ரெச்சரில் அந்தப் பெண்ணை ஏற்றிக் கொண்டு போனார்கள்.

டாக்டர் ஆனந்த், ""சந்தியா ப்ளீஸ், இனி நாங்க பார்த்துக்குவோம். இப்படி உட்காரு. சிஸ்டர், ப்ளீஸ் அட்டென்டு டு ஹர்'' என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.
வரவேற்பில் இருந்த பெண், ""உட்காருங்க மேடம். இவங்களும் உங்க கூட வந்தவங்க தானே ?
உட்காருங்க சார்'' என்றாள்.
சந்தியாவும் மற்ற இருவரும் நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.
ஒரு நர்ஸ் அருகில் வந்து ""மேடம், ஆக்ஸிடன்ட் கேûஸக் கூட்டிட்டு வந்தது நீங்கதானே ? பேஷண்ட் பேர் என்ன ?'' என்றாள்.
""தெரியலையேயம்மா''
அதற்குள் வரவேற்பில் இருந்த பெண், ""சிஸ்டர் அவங்க பேஷன்ட்டுக்கு ரிலேஷன் கிடையாது. ஃபார்ம்ல் கையெழுத்து மட்டும் வாங்கிருங்க'' என்றார்.
""அந்தப் பொண்ணு யாருன்னு தெரியலையே !
அவங்க வீட்டுக்கு எப்படி தெரிவிக்கிறது ?''
சந்தியா கூட வந்தவர்களைப் பார்த்து கேட்டாள்.
""அம்மா, அந்தப் பொண்ணோட கைப்பைல இந்த செல்ஃபோன் இருந்துச்சு. அவங்க வீட்டு போன் நம்பர் ஏதாச்சும் இருக்கா பாருங்க'', என்றார் ஆட்டோக்காரர்.
நல்ல வேளை. முதல் நம்பரே "அம்மா' என்று இருந்தது. அந்த நம்பரை அழுத்தினாள்.
எதிர் முனையில் ஆண் குரல்.
""என்னம்மா, போன வேலை முடிஞ்சிருச்சா, இல்லை லேட்டாகுமா ?''
""சார்... மன்னிக்கணும். நான் உங்க பொண்ணு இல்லை. வந்து... பதட்டப்படாம கேளுங்க. உங்க பொண்ணுக்கு ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சு''
""ஐயையோ... எங்கேம்மா ?''
""பயப்படாதீங்க. இங்க ஆர்.ஜி. ஹாஸ்பிட்டல சேர்த்துட்டோம்''
""எங்கேம்மா ?''
""ஹோப் காலேஜ் தாண்டி ப்ளே பார்க் மாலுக்குப் பக்கத்தில... ஆர்.ஜி. ஹாஸ்பிட்டல். மெயின் ரோட்டிலேயே இருக்கும் பாருங்க''
""ஆமாம்... ஆமாம்... தெரியும்மா''
""பதறாம வாங்க சார்''
சந்தியா கடிகாரத்தைப் பார்த்தாள். மணி எட்டு. எட்டரைக்குக் கல்லூரியில் இருக்க வேண்டும்.
உடன் வந்த இருவரையும் பார்த்தாள்.
""எனக்கு எக்ஸாம் ட்யூட்டி இருக்குங்க. கட்டாயம் போகனும். டாக்டர் ஆனந்த் எல்லாம் பார்த்துக்குவார். அந்தப் பொண்ணோட அப்பாதான் பேசினார். அவர் வர்ற வரைக்கும் நீங்க இருக்க முடியுமா?''
""இருக்கோம்மா, நீங்க கவலைப்படாம போங்க''
சந்தியா வரவேற்பில் இருந்த பெண்ணிடம், ""ஒரு பேப்பர் குடுங்க சிஸ்டர். டாக்டர் ஆனந்துக்கு ஒரு மெúஸஜ் விட்டுட்டுப் போறேன். நான் அவசரமாய் போகணும்''
"எக்ஸாம் ட்யூட்டி. ப்ளீஸ் டேக் கேர் ஆஃப் த கேர்ள். வில் டாக் லேட்டர்' என்று எழுதி அவளிடம் கொடுத்தாள்.
""தைரியமாப் போங்க மேடம். இன்னைக்கு டாக்டர்ஸ் மீட்டிங். அதனால எல்லா டாக்டர்ஸூம் இருக்காங்க. காப்பாத்திருவாங்க''
கல்லூரிக்குள் நுழைந்து காரை நிறுத்தி விட்டு ஓட்டமாகப் பாத்ரூமுக்குள் போனாள். சேலையில் இருந்த ரத்தக்கறையை முடிந்த வரை கழுவினாள். அலுவலக அறைக்குள் நுழைந்தாள்.
"மடக் மடக்' கென்று ஒரு தம்ளர் தண்ணீர் பிடித்துக் குடித்தாள். கையெழுத்து போட்டுவிட்டு, கைப்பையை ஒப்படைத்து விட்டு வினாத்தாள்களையும் விடைத்தாள்களையும் செக் செய்து வாங்கிக் கொண்டு வகுப்பறைக்கு விரைந்தாள்.
பரீட்சை நேரமெல்லாம் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆனதோ என்று சந்தியா தவித்தாள். இடித்து விட்டுச் சென்ற பைக் இளைஞர்
களைப் பிடித்திருப்பார்களா ? அப்படி என்ன அவசரம் அவர்களுக்கு?
"ஐயோ! இப்படித்தான் நாமும் அவசரமாகக் காரை ஓட்டிச் சென்று அந்த மைனாவைக் கொன்றோம்?'
"மைனாவும் பெண்ணும் ஒன்றாகுமா ?'
"அதனாலென்ன ? இரண்டும் உயிர்தானே ?'
சந்தியாவின் மனதில் போராட்டம்!
விடைத்தாள்களைச் சரிபார்த்துச் சீல் வைத்து ஒப்படைத்து விட்டுக் கிளம்ப மணி இரண்டரை ஆகி விட்டது.
கைபேசியை எடுத்தாள். ஆனந்துக்குப் போன் செய்தாள். பதில் இல்லை. "போகிற வழிதானே, நேராக ஹாஸ்பிட்டலுக்குச் சென்று பார்த்து விட்டே
போகலாம்' வரவேற்பில் அதே பெண்தான் இருந்தாள். சந்தியாவைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.
""அந்தப் பொண்ணைக் காப்பாத்தியாச்சு மேடம். ஐ சி யூ வில் இருக்கு. நேராப் போய் செகண்ட் லெஃப்ட். சந்தியா நகர , ""மேடம் ஒரு நிமிஷம். டாக்டர் ஆனந்த் மீட்டிங் முடிந்து வீட்டுக்குப் போய்ட்டார். உங்ககிட்ட இதைக் கொடுக்கச் சொன்னார்'' என்றாள்.
"சந்தியா, சரியான சமயத்தில் அந்தப் பொண்ணைக் கொண்டு வந்து சேர்த்தாய். கோல்டன் அவர் தாண்டியிருந்தால் எங்களால் அவளைக் காப்பாத்திருயிருக்க முடியாது. யூ டிட் எ குட் ஜாப்' என்று எழுதியிருந்தான்.
சந்தியா ஐ சி யூவை நோக்கி விரைவாக நடந்தாள். வெளியில் நாற்காலிகளில் நாலைந்து பேர் அழுத கண்களோடும் கவலை தோய்ந்த முகங்களோடும் உட்கார்ந்திருந்தார்கள்.
வெளியில் வந்த நர்ஸ் , சந்தியாவைப் பார்த்ததும், அங்கிருந்தவர்களிடம் ""இதோ இவங்கதான் உங்க பொண்ணைக் கொண்டு வந்து சேர்த்தாங்க''
என்றாள்.
அதிலொருவர் ஓடி வந்து, ""அம்மா , எங்க பொண்ணைக் காப்பாத்திட்டீங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை'' என்றார்.
""நாம கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். நீங்கதான் அவளோட அப்பாவா ?''
""ஆமாம்மா, இதோ... இது அவ அம்மா''
""இப்ப எப்படி இருக்கா?''
""உயிருக்குப் பயமில்லைன்னு சொல்லிட்டாங்க. நெறைய ரத்தம் போயிருக்காம். நீங்க மட்டும் உடனே கொண்டு வந்து சேர்க்கலைன்னா எங்க பொண்ணு பொழைச்சிருக்க முடியாதும்மா''
""அவளைப் பார்க்கலாமா ?''
""இல்லைம்மா. இன்னும் ரெண்டு மணி நேரம் போகணுமாம்''
""என் கூட ரெண்டு பேர் வந்திருந்தாங்க. அவங்க''
""நாங்க வந்தப்புறம் எங்க பொண்ணோட பொருள்களையெல்லாம் எங்ககிட்ட ஒப்படைச்சிட்டுத் தாம்மா அவங்க போனாங்க. அவங்க போன் நம்பரைக் குடுத்திட்டுப் போயிருக்காங்கம்மா''
இவ்வளவு நேரம் பேசாமலிருந்த அம்மா, அழுகையும் ஆத்திரமுமாக, ""நாசமாய் போன நாயிங்க ! இடிச்சுத் தள்ளினதுமில்லாம அப்படியே விட்டுட்டுப் போயிருக்கானுங்களே ! நல்லா இருப்பானுங்களா ?'' என்றாள்.
சந்தியாவுக்குச் "சொரேர்' என்றது. அந்த மைனாக்களின் உறவுகளும் இப்படித்தான் தன்னை ஏசியிருக்குமோ ?
""சும்மா இரு மரகதம். நம்ம பொண்ணு உயிர் பிழைச்சாளே அது போதும்'' என்றார் அப்பா.
மரகதம் சந்தியாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு ""அம்மா ! நீங்க எம் பொண்ணுக்கு உயிர் குடுத்த தெய்வம் ! நீங்க நல்லாயிருக்கணும்'' என்றாள்.
சந்தியாவின் நெஞ்சம் நெகிழ்ந்தது.
""சரிங்க, அப்ப நான் கிளம்பறேன். உங்க ஃபோன் நம்பர் குடுங்க''
""இது மரகதத்தோட நம்பர். இதுக்கு ஒரு மிஸ்டு கால் குடுங்கம்மா''
""வரட்டுமா ?'' என்று நடந்த சந்தியா மீண்டும் திரும்பி, ""பாருங்க, உங்க பொண்ணு பேரையே நான் கேட்டுக்கலை'' என்றாள்.

""மைனாவதி'' என்றார் அப்பா!

தினமணி - சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.25,000 பெறும் சிறுகதை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT