தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 40

பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் யாரை நிதியமைச்சராகத் தேர்வு செய்யப் போகிறார் என்பது குறித்து வெளிப்படையாக யாரும் பேசாவிட்டாலும், நிதியமைச்சராக வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருந்தது என்பது எனக்குப் பிறகுதான் தெரியும்.

ஒன்றுபட்ட பம்பாய் ராஜதானியின் கடைசி முதல்வராகவும், மகாராஷ்டிர மாநிலம் 1960-இல் உருவானபோது அதன் முதலாவது முதல்வராகவும் இருந்தவர் யஷ்வந்த்ராவ் பல்வந்த்ராவ் சவான் என்கிற ஒய்.பி. சவான். சீன ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அன்றைய பாதுகாப்பு அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனன் பதவி விலக நேர்ந்தது. அவரது இடத்தை நிரப்பப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்போது மகாராஷ்டிர முதல்வராக இருந்த ஒய்.பி. சவான். நேருவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி பிரதமரான போதும் மத்திய பாதுகாப்பு அமைச்சராகத் தொடர்ந்தார் அவர். 

சீன ஆக்கிரமிப்பால் மனம் தளர்ந்து போயிருந்த இந்திய ராணுவத்துக்குப் புத்துயிர் வழங்கியது மட்டுமல்லாமல், எந்தவிதப் படையெடுப்பு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் நிலையில் நமது ராணுவத்தைக் கட்டமைத்ததில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது நடந்த பாகிஸ்தான் போரில், சீன ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கும் வகையில் இந்தியா வெற்றி அடைந்ததற்கு, பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஒய்.பி. சவானின் பங்களிப்பு முக்கியமானது. அந்தப் போர் வெற்றியின் காரணமாக, மராட்டியர்கள் அவரை இன்னொரு சத்ரபதி சிவாஜியாகக் கொண்டாடுகிறார்கள். 

1969 காங்கிரஸ் பிளவின்போது, பிரதமர் இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்த ஒய்.பி. சவான், 1970 முதல் 1974 வரை இந்தியாவின் நிதியமைச்சராக இருந்தார். அதற்கு முன்னர், இந்திரா காந்தி அமைச்சரவையில் குல்சாரிலால் நந்தாவுக்குப் பிறகு 1966 முதல் 1970 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். சரண்சிங்கின் ஆறுமாத அமைச்சரவையில் அவர் இந்தியாவின் ஐந்தாவது துணைப் பிரதமராகவும் இருந்திருக்கிறார். 

ஒய்.பி. சவான் குறித்த இத்தனை விவரங்களையும் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. மகாராஷ்டிர மாநிலத்தைப் பொருத்தவரை அவர்கள் தங்களது மிகப் பெரிய தலைவராக இன்றுவரை மதிப்பது ஒய்.பி. சவானைத்தான். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த காங்கிரஸ் தலைவர்கள், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களாக இருந்த சரத்பவாரும், எஸ்.பி. சவான் என்கிற சங்கர்ராவ் சவானும். அவர்கள் இருவருக்குமே தங்களை ஒரு ஒய்.பி. சவானாகக் கட்டமைத்துக் கொள்ளும் ஆசை எப்போதுமே உண்டு. அதனால் ஒய்.பி. சவான் வகித்த நிதியமைச்சர் பதவியின் மீது அவர்களுக்கு உள்ளூர ஆசை இருந்ததில் வியப்பில்லை.

ராஜீவ் காந்தி அமைச்சரவையில் பாதுகாப்பு, உள்துறை, நிதி உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகப் பணியாற்றி இருந்தாலும், எஸ்.பி. சவானுக்கு இந்த முறை நிதியமைச்சராக வேண்டும் என்கிற முனைப்பு இருந்தது என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டேன். ஒய்.பி. சவான் வகித்த பாதுகாப்பு அமைச்சகத்தை சரத்பவாருக்கும், உள்துறைப் பொறுப்பை எஸ்.பி. சவானுக்கும் அளித்து அவர்கள் இருவரது "ஈகோ'வையும் சரிக்கட்டியதுதான் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் சாமர்த்தியம்.

நிதியமைச்சராக வேண்டும் என்கிற எண்ணம் அப்போது ப. சிதம்பரத்துக்கு இருந்ததா என்று எனக்குத் தெரியாது. முந்தைய ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இணையமைச்சராகப் பல முக்கியப் பொறுப்புகள் வகித்திருந்தாலும், அவர் கேபினட் அமைச்சராக இருக்கவில்லை. அவரது பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டதாக எனக்கு நினைவில்லை. அவருடன் எனக்கு நெருங்கிய தொடர்பும் இல்லை. அதனால், மூப்பனாருடன் நெருக்கமாக இருந்தவர்கள்தான் இதுகுறித்துக் கூற முடியும்.

குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனை சந்திக்கச் சென்ற, பிரதமராக அடுத்த நாள் பதவியேற்க இருந்த பி.வி. நரசிம்ம ராவ் நீண்ட நேரம் அவருடன் இருந்தார். இரண்டு பேருமே அந்த சந்திப்பு குறித்துக் கடைசிவரை மெளனம் காத்தனர் என்பதுதான் உண்மை. அதனால் இனி அது குறித்து நமக்கு எதுவும் தெரியவும் போவதில்லை.

பொழுது புலர்ந்தது. அமைச்சரவைப் பட்டியல் எப்போதும் வெளியாகும் என்கிற ஆவலில் நாங்கள் (நாங்கள் என்றால் பத்திரிகையாளர்கள்) அக்பர் ரோடு அலுவலகத்தில் காத்திருந்தோம். காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஆஸ்கர் பெர்னாண்டஸின் அறையில் வழக்கமாகக் காணப்படும் கூட்டம் அன்று இருக்கவில்லை. மெதுவாக எட்டிப் பார்த்தால், அவர் மட்டும் அமர்ந்திருந்தார். ஆச்சரியமாக இருந்தது.

முழுக்க முழுக்கக் கட்சிப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காங்கிரஸ்காரர் ஒருவர் இருந்தால் அது ஆஸ்கர் பெர்னாண்டஸாகத்தான் இருக்கும். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே கிடையாது. அதேபோல அவரது வாயிலிருந்து கட்சி குறித்து எதுவும் வெளிவந்ததாகவும் எனக்கு நினைவில்லை. ஆனால், 24 அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்துடன் தொடர்பிலுள்ள எல்லா பத்திரிகையாளர்களுக்கும் அவர் நண்பராக இருப்பார்.

தொடர்ந்து ஐந்து முறை கர்நாடக மாநிலம் உடுப்பி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்கர் பெர்னாண்டஸ், மிகக் குறுகிய காலம் ராஜீவ் காந்தி அமைச்சரவையிலும், சில வருடங்கள் மன்மோகன் சிங் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தாலும், அவரது நிரந்தர இடமாகக் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம்தான் இருந்திருக்கிறது. அவர் அதிதீவிர நேரு குடும்ப விஸ்வாசி என்பதும், அந்தக் குடும்பத்தின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதும் உலகறிந்த உண்மை.

உள்ளே எட்டிப் பார்த்த என்னை சிரித்த முகத்துடன் வரவேற்று அமரச் சொன்னார் அவர். அந்த சிரிப்பும், அவரது பேச்சும் எதிரியையும் வீழ்த்திவிடும் என்பது அவருடன் பழகியவர்களுக்குத் தெரியும்.

""ஒட்டுமொத்த நாடும் அமைச்சரவைப் பட்டியலில் யார்  யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்து பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்னவென்றால் தனியாக அமர்ந்திருக்கிறீர்கள்? உங்கள் பெயர் பட்டியலில் இருக்குமா, இருக்காதா?''

""யார் யார் அமைச்சர்கள் என்பது பிரதமருக்குத்தான் தெரியும். நான் அந்தப் பட்டியலில் இருக்க வாய்ப்பில்லை. அதுமட்டும் எனக்குத் தெரியும்.''

""அதெப்படி  நிச்சயமாகக் சொல்கிறீர்கள்?''

""நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சில முக்கியமான பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. நாம் யாருமே எதிர்பாராத பலருக்கு அமைச்சரவையில் வாய்ப்புக் கிடைக்கலாம். இதெல்லாம் எனது அனுமானங்கள்தான்.''

""எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?''

""புதிதாக ஒருவர் பிரதமராகும்போது அப்படித்தான் இருக்கும். ராஜீவ்ஜி அமைச்சரவையில் பல எதிர்பாராத திருப்பங்கள் இருக்கவில்லையா, அது போலத்தான். நான் அமைச்சரவை பட்டியலில் இருக்க வழியில்லை. அதைத்தான் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.''

அதற்குப் பிறகு தேர்தல் குறித்து, மாற்றம் குறித்து என்று என்னென்னவோ பேசினோம். சுமார் அரைமணி நேரம் அன்று அவருடன் இருந்தேன். வெளியே வந்தபோது, எனக்குப் பல விஷயங்கள் புரிந்தும் புரியாமலும் இருந்தன. ஆஸ்கர் பெர்னாண்டஸ் சாதாரணமாகச் சொன்னாரா, இல்லை பல தகவல்கள் தெரிந்திருந்ததால் அப்படிச் சொன்னாரா என்று 30 ஆண்டுகள் கடந்த பிறகும், இன்றுவரை என்னால் ஊகிக்க முடியவில்லை. ஆனால், அவர் சொன்னதுபோலவே நடந்தது.

ராஜீவ் காந்தி அமைச்சரவை அமைந்தபோது ஏற்பட்டது போன்ற எதிர்பாராத திருப்பங்கள், பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவை அமைத்த 1991 ஜூன் 21-ஆம் தேதியும் அரங்கேறின. அமைச்சரவைப் பட்டியலில், அந்தப் பட்டியலைத் தயாரித்துக் கொடுத்த பிரணாப் முகர்ஜியின் பெயர் இடம் பெறவில்லை.

அக்பர் ரோடு அலுவலகத்தில்  பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. செய்தித் தொடர்பாளர் என்கிற முறையில் திரளாகக் குழுமியிருந்த பத்திரிகையாளர்களைப் பிரணாப் முகர்ஜி சந்தித்தார். இன்னின்னார் அமைச்சர்கள் என்கிற பட்டியலை வெளியிட்டார். புதிய நிதியமைச்சராக டாக்டர் மன்மோகன் சிங் பதவி ஏற்க இருக்கிறார் என்கிற தகவலை முதலில் அறிவித்தவர் பிரணாப் முகர்ஜிதான்.

என்னால் எனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. ஆனாலும், வேறு வழியில்லை. கடுமையான போட்டிக்கு நடுவில் பி.வி. நரசிம்ம ராவைக் கட்சித் தலைவராக்குவதற்கும், பிரதமராக்குவதற்கும் பிரணாப்தா எடுத்த முயற்சிககள் அனைவருக்குமே தெரியும். அவர் நிதியமைச்சராக இல்லாவிட்டாலும் உள்துறை, தொழில்துறை, வெளியுறவுத் துறை என்று அமைச்சரவையில் சேர்க்கப் பட்டிருக்கலாம். அதுவும் இல்லை.

பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. ரத்தினச் சுருக்கமாக பிரணாப் முகர்ஜி பதிலளிக்கிறார். அவரது முகத்தில் எந்தவித சலனமோ, உணர்ச்சியோ இல்லாமல் இருந்தது என்னை மேலும் வேதனைப்படுத்தியது. தன் விரலால் தனது கண்களைக் குத்திக் கொள்ளச் சொல்வது போலிருந்தது அன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு. 

பிரணாப்தா வெளியே போகும் வழியின் அருகில் கண் கலங்கிய நிலையில் நான் நின்று கொண்டிருந்தேன். அதுவரை என்னை கவனித்தும் கவனிக்காததுபோல இருந்த பிரணாப் முகர்ஜி, அங்கிருந்து வெளியேறும்போது எனது தோளில் மெல்ல இரண்டு முறை தட்டிவிட்டு எதுவும் பேசாமல் நகர்ந்தார். 

அந்த தட்டலில் நான் சிலிர்த்தேன். என்னை அமைதியாக இருக்கச் சொல்கிறார், ஆறுதல் கூறுகிறார் என்று நான் புரிந்து கொண்டேன். கூடவே, அவரது அடிமனதில் வெடித்துக் கொண்டிருந்த பூகம்பங்களும் அந்த ஆதரவான தட்டலில் வெளிப்பட்டது.

நான் பிரணாப்தாவின் பின்னால் நடந்தேன். அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. அங்கே இருந்த ஆனந்த் சர்மா, ஆர்.கே. தவான், அம்பிகா சோனி, விலாஸ் முத்தம்வார் ஆகியோர் புடைசூழ நகர்ந்து தனது காரில் ஏறிக் கிளம்பிவிட்டார். அந்தக் கார் போவதையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து பதவி ஏற்பு நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு இருந்தது. அதில் கலந்து  கொள்வது என்றுதான் நான் தீர்மானித்திருந்தேன். அமைச்சரவைப் பட்டியலைப் பார்த்ததும் கலந்து கொள்ளும் விருப்பம் போய்விட்டது.

பிரணாப் முகர்ஜி ஒருவேளை, ஜவஹர் பவனுக்குச் சென்றிருப்பாரோ என்கிற சந்தேகம் எனக்கு எழுந்தது. ஆட்டோ பிடித்து அங்கே விரைந்தேன். உதவியாளரிடம் கேட்டபோது, அவர் அங்கே வரவில்லை என்று பதில் கிடைத்தது. நேராக வீட்டுக்குப்போய் விட்டார் என்றும், பதவி ஏற்பு நிகழ்விலும் கலந்து கொள்வதாக இல்லை என்றும் சொன்னார்.

முந்தைய நாள் டி.வி.ஆர் ஷெனாய்  சொன்னது நினைவுக்கு வந்தது - "நிதியமைச்சர் பொறுப்புக்குத் தனது பெயரை இணைத்து அவர் பட்டியல் கொடுத்திருக்க வேண்டும். பிரணாப் முகர்ஜி ராஜதந்திரி; சாமர்த்தியசாலி; திறமைசாலி. ஆனால், பி.வி. நரசிம்ம ராவ் சாணக்கியர்!'

காலையில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் சொன்னதும் நினைவுக்கு வந்தது - ""நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சில முக்கியமான பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்காது; நாம் யாருமே எதிர்பாராத சிலருக்கு அமைச்சரவையில் வாய்ப்புக் கிடைக்கலாம்!''

பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படாமல் பிரணாப் முகர்ஜி ஏன் தவிர்க்கப்பட்டார்? டாக்டர் மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்கும்படி பிரதமர் நரசிம்ம ராவுக்குப் பரிந்துரைத்தது யார்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் இன்றுவரை எனக்கு பதில் கிடைக்கவில்லை. பலமுறை இந்தக் கேள்விகளைப் பிரணாப்தாவிடம் கேட்க வேண்டும் என்று நினைப்பேன். அதற்கான துணிவு எனக்கு வராது.

இந்தக் கேள்விகளுக்கான பதில் நிச்சயமாக பி.வி. நரசிம்ம ராவுக்குத் தெரிந்திருக்கும். அவர் சொல்லவில்லை. சோனியா காந்திக்கும், ஆர். வெங்கட்ராமனுக்கும் ஒருவேளை தெரிந்திருக்கலாம். அவர்களும் சொல்லவில்லை. அதனால், விடையில்லாத கேள்விகளாக அவை தொடர்கின்றன...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழ சின்னம் மீதுதான் சந்தேகம்: ஓ. பன்னீர்செல்வம் மீது ஓபிஎஸ் புகார்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்!

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் : பிரதமர் மோடி

தஞ்சாவூர் அருகே கார் - மினி லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

SCROLL FOR NEXT