தினமணி கதிர்

சென்னையின் சகோதரி சான் அன்டோனியோ!

எஸ்.சந்திரமெளலி

நம்முடைய சென்னை மாநகரத்துக்கு அமெரிக்காவில் ஒரு சகோதரி இருக்கிறார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் அன்டோனியோ என்ற நகரம்தான் சென்னையின் சகோதரி.

இதென்ன புதுக்கதை? எனக் கேட்கிறீர்களா? இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனோவர், அமெரிக்காவின் நகரங்களுக்கும் உலகின் மற்ற நாட்டு நகரங்களுக்கும் இடையில் பொருளாதார, கலாசார, தொழில்நுட்ப பரிமாற்றங்கள் செய்துகொள்வதற்காக "சர்வதேச சகோதரி நகரங்கள்" திட்டத்தைத் தொடங்கினார்.

இந்தத் திட்டத்தின்படி, இன்று 140 நாடுகளில் உள்ள நகரங்கள் அமெரிக்க நகரங்களை "சகோதரிகளாக' ஏற்றுக் கொண்டிருக்கின்றன. அதன்படி, சகோதரிகளான நகரங்கள்தான் நமது சென்னையும், அமெரிக்காவின் சான் அன்டோனியோவும். இதன் அடையாளமாக கடந்த பத்தாண்டுகளாக சான் அன்டோனியோ நகரத்தில் கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், சான் அன்டோனியோ நகரத்தின் மேயர் ரான் நிரன்பெர்க், அந்த நகரத்தின் ரோட்டரி சங்கமும் அங்குள்ள அனுஜா எஸ்.ஏ. என்ற தொண்டு நிறுவனமும் சேர்ந்து சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத்துக்கு கோவிட் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக பத்தாயிரம் அமெரிக்க டாலர் நன்கொடை அளித்துள்ளனர். சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதரான ஜுடித் ரெவின் காணொலி மூலமான நிகழ்ச்சியில் பங்கேற்று நன்கொடையை வழங்கினார்.

சான் அன்டோனியோ நகரத்தின் மேயரான ரான் நிரன்பெர்க், ரோட்டரி சங்கத் தலைவர் ஸ்டீவ் டார்லிங் இருவரும், ""தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாவுக்கு குறிப்பாக சென்னைக்கு சான் அன்டோனியோ ஆதரவாக நிற்கிறது. அர்ப்பணிப்பு மட்டுமே நம்மை இந்த சோதனையான கட்டத்திலிருந்து மீட்கும். சான் அன்டோனியோ - சென்னை நகரங்களுக்கு இடையிலான உறவு ஆழமானது. கோவிட் 19- க்கு எதிரான போரில் நாம் இணைந்து செயல்படுவோம்'' என்று கூறியுள்ளனர்.
சென்னையின் சகோதரி நகரமான சான் அன்டோனியோ உதவிக்கரம் நீட்டி இருப்பது குறித்து சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் முருகவேல் செல்வன், ""2018 -இல் சென்னை மாநராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த எட்டு மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, அமெரிக்காவின் நாசாவுக்கு சுற்றுலா அனுப்பி வைத்தோம். அப்போது அந்த மாணவ, மாணவிகளை சான் அன்டோனி
யோவுக்கும் சென்று, ரோட்டரி சங்க உறுப்பினர்களின் விருந்தோம்பலை அனுபவித்தார்கள்'' என்று கூறினார்.
""சான் அன்டோனியோ நகரத்தில் வசிக்கும் இந்தியர்களால் நடத்தப்படும் அனுஜா எஸ்.ஏ. என்ற தொண்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது. தற்போது கூட, சான் அன்டோனியோ நகர ரோட்டரி சங்கம் எங்களுக்கு ஐந்தாயிரம் டாலர் நன்கொடை அளிக்க முன்வந்தபோது, அனுஜா அமைப்பு அதற்கு இணையாக இன்னொரு ஐந்தாயிரம் டாலர் நன்கொடை அளிக்க, மொத்தம் பத்தாயிரம் டாலர் எங்களுக்கு கிடைத்தது. அதைக் கொண்டு சென்னை நகரில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளுக்கு, கோவிட் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான உபகரணங்களை வழங்க இருக்கிறோம்'' என்று கூறுகிறார் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத்தின் மகேஷ் பட்டாபிராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT