தினமணி கதிர்

தினமணி - சிவசங்கரி: சிறுகதைப் போட்டி முடிவுகள்

DIN

சமூக யதார்த்தத்தைப் பேசும் ஆக்கபூர்வமான சிறுகதைகள்!

இம்முறை எங்களுக்கு வாசிக்கக் கிடைத்த சிறுகதைகள் நம்பிக்கையளிப்பதாக இருந்தன. வடிவம், செய்நேர்த்தி, மொழிநடை ஆகியவை இன்னும் மேம்பட்டதாக இருந்திருக்கலாம் எனத் தோன்றிய போதும், அவை பேசிய விஷயங்கள் சமூக நோக்கோடு அமைந்திருந்தன.பெரும்பாலானவை சக மனிதர்கள் மீது நம்பிக்கை கொண்டனவாகவும் ஆக்கபூர்வமான முடிவுகளைக் கொண்டனவாகவும் இருந்தன.
முதல் மூன்று பரிசுகளைப் பெறும் சிறுகதைகளில் மனித உளவியல் உரிய விதத்தில் மிகையின்றி கையாளப்பட்டிருந்தது. "உயிர்' சிறுகதை எல்லா உயிர்களும் மதிப்பிற்குரியன; பரிவுடன் காக்கப்பட வேண்டியவை என்ற உயரிய கருத்தினை அழுத்தமாக, ஆனால் உரத்தோ, பிரசார தொனியின்றி பேசியது பாராட்டுக்குரியது.
இன்று நடுத்தர வர்க்கத்திற்குக் கைக்கெட்டக்கூடிய கனவாகவும், அதே நேரத்தில் கழுத்தில் ஏறி அமர்ந்த சுமையாகவும் வீடு என்பதாகிவிட்டது என்பதைச் சொல்கிறது "3 பி.ஹெச்.கே. இன்று பல வீடு நடுத்தர வர்க்க இளைஞர்கள் சம்பளத்திற்காக மட்டுமல்ல, மாதத் தவணைக்காகவும் (இஎம்ஐ) பணியாற்றுகிறார்கள்.
இளைஞர்கள் நிலை இப்படி என்றால், பணி ஓய்வு பெற்றவர்கள் நிலை அதனின்று பெரிதும் வேறுபட்டதல்ல. அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் பணி சார்ந்த அழுத்தங்களிலிருந்து விடுதலை பெறவில்லை. அவர்களுக்கு மீட்சி அளிக்கக் கூடியவர்கள் அவர்களது நல்ல நண்பர்களே. இந்த யதார்த்தத்தைப்பேசுகிறது "நண்பர்கள்'.
பரிசு பெறும் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு சம கால நெருக்கடியைக் கருக் கொண்டிருக்கின்றன. அவை ஆக்கபூர்வமானசிந்தனையை முடிவாகக் கொண்டிருக்கின்றன.
படைப்பூக்க மனமும், ஆக்கபூர்வமான சிந்தனைகளும்நம்மிடையே பல்கிப் பெருகி பரவட்டும். எழுத்தாளர்கள் நம் சமகாலத்தில் சமூகத்திற்கு அளிக்கக் கூடிய சிறந்த பரிசு வேறொன்றில்லை.

பரிசு பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்!

பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

-சிவசங்கரி மாலன்


கரோனாவால் தாமதம்


தினமணி - சிவசங்கரி சிறுகதைப் போட்டி (2019) -க்கு முந்தைய ஆண்டுகளைப் போன்றே கடந்த ஆண்டிலும் எழுத்தாளர்களின் பங்களிப்புகள் கணிசமாக இருந்தன.

அந்த வகையில் போட்டிக்கு வந்த சிறுகதைகளின் எண்ணிக்கை 962. இந்த சிறுகதைகள் ஆரம்பகட்டப் பரிசீலனைக்காக சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் எழுத்தாளர்கள் - சிறுகதை ஆர்வம் கொண்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் கதைகளைப் படித்துத் திருப்பி அனுப்பும் வேளையில் கரோனா (முதல் அலை) பொது முடக்கம் வந்து விட்டது.

இரண்டாம் கட்ட பரிசீலனையையும் ஏற்கெனவே சிறுகதைகளைப் படித்தவர்களே செய்தனர். மூன்றாம் கட்ட பரிசீலனைக்காக சிறுகதைகள், தினமணி சென்னை அலுவலகத்தில் உள்ளவர்களால் படிக்கப்பட்டன. அவற்றில் 132 சிறுகதைகளை அவர்கள் தேர்வு செய்தனர். அவற்றிலும் சிறந்த 32 சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டு நடுவர்களுக்கு அளிக்கப்பட்டது.
அடுத்தடுத்து வந்த பொது முடக்கம் எல்லாவற்றையும் முடக்கியது போன்றே பரிசுக் கதைகள் விவரம் அறிவிக்கப்படுவதிலும் சுணக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-ஆசிரியர்


சிவசங்கரி சிறுகதைப் போட்டி முடிவுகள்


1.6. 2021 அன்று நடைபெற்ற நடுவர்கள் கூட்டத்தில்திருமதி சிவசங்கரி, மாலன் ஆகியோர் இணைந்துஒரு மனதாகத் தேர்வு செய்துள்ள கதைகள் பின்வருமாறு:

முதல் பரிசு - ரூ.25,000

உயிர் சரயு (கற்பகம்)

இரண்டாம் பரிசு ரூ. 15,000

3 பி.ஹெச்.கே வீடு அரவிந்த் சச்சிதானந்தம்

மூன்றாம் பரிசு ரூ. 10,000

நண்பர்கள் நா.கிருஷ்ணமூர்த்தி

ஆறுதல் பரிசு - தலா ரூ. 5000


1. அப்பாவின் பார்க்கர் பேனா - லதா சங்கரலிங்கம்
2. உயிருக்கு - நா.கோகிலன்
3. ஏர் கொண்ட பார்வை - எஸ்.ராமன்
4. மனக்கிணறு - இராஜமாணிக்கம்
5. கெங்கம்மாக்களின் உலகம் - ஐ.கிருத்திகா
6. ஆண்மனம் - சுடர்ஒளி முத்துப் பெருமாள்
7. நல்விடியல் - சகா
8. நன்மைக்கே - சாயம் வெ.ராஜாராமன்
9. பூக்கொல்லை - தஞ்சை வாரகி
10. மூணாவது உயிர் - ஐஷ்வர்யன்


பரிசு பெற்றவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் சுயவிவரக் குறிப்புகளை உடனே அனுப்பி வைக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT