தினமணி கதிர்

பேல்பூரி

DIN


கண்டது

(திருவாரூர் மாவட்டம்வேளுக்குடியில் ஒரு திருமண வாழ்த்துப் பேனரில்)

விவசாயி வீட்டுப் பசங்க

சி.முருகேசன்,
மாப்பிள்ளைக்குப்பம்.

(திருச்செங்கோடு சந்தைப்பேட்டை அருகில் உணவு விடுதி ஒன்றின் பெயர்)

வாட்ச்மேன் புரோட்டா கடை

வெ கார்த்திக், புத்தூர்.

(திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கின் பெயர்)

எதிர்நீச்சல் பிசியோதெரபி கிளினிக்


ஜே.கமலம்,
திருநெல்வேலி-7

(தஞ்சையில் ஒரு ஜெராக்ஸ் கடையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் வாசகம்)

நீங்கள் அசலோடு வாருங்கள்
நாங்கள் நகலோடு அனுப்புகிறோம்.

ராம் ஆதி நாராயணன்,
தஞ்சாவூர் - 1


கேட்டது

( சிதம்பரம் ஆசிரியர் நகரில் இரு பெண்கள்)

""இந்த உலகத்திலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது ,தேங்காய் சட்னிதான்''
""சாப்பிடுறதுக்கா?''
""இல்ல. சமைக்கிறதுக்கு''


ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்-1.

(நாகர்கோவிலில் வங்கி ஒன்றில், வரிசையில் நின்று கொண்டிருப்பவர்களில் இருவர்)

""என்ன சார்... இப்படி இருமுறீங்க?''
""என்னை, நானே காப்பாற்றிக் கொள்ள, வேற வழி தெரியல''
""என்ன சார் சொல்றீங்க?''
""பின்ன என்ன... இடைவெளி விட்டு நிற்க சொன்னால், யாரும் கேட்க மாட்டேங்குறீங்க... ரெண்டு தும்மல் போட்டதும், எப்படி இடை வெளி ஆச்சு பார்த்தீங்களா?''

மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான் விளை.

யோசிக்கிறாங்கப்பா!


தேவையான இடத்தில்
முற்றுப்புள்ளி வைக்காவிட்டால்...
வார்த்தையும், வாழ்க்கையும்
அர்த்தமில்லாமல் போய்விடும்.

கே.முத்தூஸ்,
தொண்டி.

மைக்ரோ கதை


ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள்.

"அன்புள்ள கணவருக்கு... நீங்கள் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை' கைதி பதில் எழுதினான்:

"குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்புறமிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன். நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்'

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம். "அன்புள்ள கணவருக்கு... யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப்புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர். இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே?'
கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்:

"அவர்கள் காவல் துறையினர். நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள். ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு!'

எம் அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

எஸ்.எம்.எஸ்.


"உங்களுக்கு உதவி செய்யாம
யாருக்கு செய்யப் போறேன்' என்பது,
"முடியாது' என்பதைச்
சிரித்துக் கொண்டே சொல்வது!

ப. பச்சமுத்து,
கிருஷ்ணகிரி-1

அப்படீங்களா!

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்க முடியாத அளவுக்கு அதிகமான பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருந்துகள், மருத்துவமனைகள் என்று எல்லாவற்றிற்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

தெலங்கானா மாநிலத்தில் இந்தப் பிரச்னையைத் தீர்க்க, டிரோன்களின் மூலமாக மருந்துகள், மருத்துவ உபகரணங்களை அளிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. உலகப் பொருளாதார அமைப்பும் இத்திட்டத்தில் தெலங்கானா அரசுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு டிரோன்கள் மூலமாக மருந்துகள், மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைக்க, ஏற்கெனவே உள்ள டிரோன் அடிப்படையிலான சரக்கு போக்குவரத்து அமைப்பைப் பயன்படுத்தி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கு டன்சோ டிஜிட்டல் என்ற இணைய வர்த்தக அமைப்பின் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தெலங்கானாவின் பல மாவட்டங்களுக்கு இந்த டிரோன்களின் மூலமாக மருந்துகள் விநியோகிக்கப்பட உள்ளன.

டிரோன்களின் போக்குவரத்து குறித்து ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்துள்ள ஒழுங்குவிதிமுறைகளின்படி, இந்த டிரோன்கள் இயங்கும் என்று தெலங்கானா மாநில அரசு கூறியுள்ளது.

என்.ஜே.,
சென்னை-58

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT