தினமணி கதிர்

அமாவாசை எனும் முழுநிலவு!

6th Jun 2021 06:00 AM | டாக்டர். ஜோதி ராமலிங்கம்

ADVERTISEMENT

 

ரயிலின் வேகம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்து, ரயில் நிற்கப் போகிறது. எந்த ஸ்டேஷன் வந்து கொண்டிருக்கிறோம்?
இப்போது ரயில் முழுவதுமாக நின்றுவிட்டது.
ஏதோ சத்தம் கேட்கிறது. "கிருஷ்ணாபுரம். கிருஷ்ணாபுரம்'.
நான் உடனே நிமிர்ந்து அமர்ந்தேன். ஓர் ஆவலில் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த கிருஷ்ணாபுரமா இது? அடையாளமே தெரியவில்லையே, எவ்வளவு மாற்றம்?
சிறிது நேரத்தில் ரயில் திருநெல்வேலியை நோக்கிப் பயணித்தது. என் மனம் பின்னோக்கி நகர்ந்தது...
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கலாம். அந்த நாள் இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.
அந்தப் பயணம் அன்றுசென்னையிலிருந்து ஆரம்பித்தது. விடியல் சுமார் நான்கு, நான்கரை மணி நேரம் இருக்கலாம். ஒரு பெட்டியையும், ஒரு தோல் பையையும் வைத்துக் கொண்டு கிருஷ்ணாபுரம் ரயில் நிலையத்தில் இறங்கினேன். சுற்றுமுற்றும் பார்த்தேன். ஒரு பத்து பதினைந்து பயணிகள் இறங்கி இருக்கலாம். நான் சிறிது பதட்டத்
துடனே, ரயிலை விட்டு இறங்கினேன்.
இதோ ஒருவர் என்னை நோக்கி வருகிறாரே, எனக்காகத்தான் வருகிறாரா? ஒரு வெள்ளை வேட்டி, ஒரு சாயம் போன பச்சை நிற அரைக்கைச் சட்டை, தோளில் ஒரு சிவப்புத் துண்டு. சிறிது மெலிந்த கரிய நிறம். என்னை நெருங்கி வந்து, ""ஐயா வணக்கம்''.
நானும் வணக்கம் செலுத்திவிட்டு நின்றேன்.
""ஐயா நீங்கதான் டாக்டர் ஐயாவா?''
எனக்கு ஒரே ஆச்சரியம்
""எப்படி என்னைக் கண்டுபிடித்தீர்கள்?''
""ஐயா, இந்த ஊர்ல பேண்ட் சட்டை போட்டுக் கொண்டு வர்றதுக்கு வேற யாருங்க ஐயா, இந்த நேரத்துல?''
""பரவாயில்லையே, ரொம்ப புத்திசாலியா இருக்
கிறீர்களே?''
அவர் வெட்கத்துடன் இரண்டு கைகளையும் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு புன்னகைத்தார்.
அவரைப் பார்த்து நான் கேட்டேன், ""நான் எழுதிய தபால் கிடைத்ததா?''
""ஆமாங்கய்யா, கிளார்க் ஐயா தான் என்கிட்ட சொல்லி, ஐயா வரும்போது பத்திரமா அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னாரு. டாக்டர் ஐயா வரப்போறார்ன்னு தெரிஞ்சு, எங்கஎல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம் ஐயா''.
""சரி உங்க பேரு என்ன, நீங்கள் என்னவா இருக்கீங்க?''
""நான் அங்க துப்புரவு தொழிலாளியாக இருக்கிறேங்க. அமாவாசைங்க''
""நான் உன் பேரு கேட்டா, நீ ஏன் அமாவாசை எல்லாம் சொல்ற?''
அவர் வெட்கப்பட்டுக்கொண்டே ""என் பேரு தான் அமாவாசை சார்''
நான் லேசாக மனசுக்குள்ள சிரித்துக்கொண்டேன்.
வெளியில் ஒத்தை மாட்டு வண்டி. வண்டிக்காரர் என்னைப் பார்த்தவுடன் பவ்யமாக நின்றார்.
பெட்டியை உள்ளே வைத்துவிட்டு, என்னை ஏறிக் கொள்ளச் சொன்னார்கள். வண்டி நகர்ந்தது.
""இருப்பா... இரு... அமாவாசை இன்னும் வண்டியில் ஏறவில்லை''.
அமாவாசை சிரித்துக்கொண்டே ""ஐயா நீங்க போங்க... நான் பின்னாடியே வர்றேன்''
அவரும் பின்னாடி மெல்ல ஓடிவந்தார்.
அரை மணி நேரம் கடந்துஇருக்கும். ஒரு சிறிய கட்டடத்தின்முன் வண்டி நின்றது. ஒரு சிறிய போர்டு தொங்கியது. கிருஷ்ணாபுரம் ஆரம்ப சுகாதார
நிலையம். நான் ஏதோ பெரிய கட்டடம், பெரிய ஆஸ்பத்திரி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதைப் பார்த்ததும் எனக்கு ஒரு மெல்லிய ஷாக். அமாவாசையிடம் கேட்டேன்.
""சரிப்பா, ஆஸ்பத்திரியைப் பார்த்துட்டோம். எங்கே தங்க போகிறோம்? ரூம் எங்க இருக்குது?''
""ஐயா இங்கதான் இப்போ தங்க வேண்டும். ஐயா ரூம் இருக்குது, உள்ளார ஒரு கட்டில் இருக்குது''.
""குளிக்கிறது, பாத்ரூம்லாம் எங்கப்பா இருக்கிறது?''
""ஐயா குளிக்கப் பின்னாடி ஓடை போகுதையா. நீங்க ஓய்வு எடுங்க அய்யா, நான் வெளியில் இருக்கிறேன். பிறவு பின்னாடி நடந்து போனா, அங்க நம்ப காலை கடன் முடிச்சு, தாமிரவருணி கால்வாய் போகுது, அங்கே நல்லா குளிச்சிட்டு வரலாம் சார்''.
எனக்கு என் நிலைமையப் பார்த்து தலைசுற்றியது. வேற வழியும் தெரியல.
கொஞ்ச நேரத்தில் லுங்கி கட்டிகிட்டு, டவலை எடுத்துக் கொண்டு அமாவாசை கூட கிளம்பிட்டேன்.
எனக்கு எல்லாம் அமாவாசைதான். வேளைக்கு வேளை காப்பி, டிபன், சாப்பாடு எல்லாம் வாங்கிட்டு வந்து அவர்தான் கொடுப்பாரு.
அவரது துணையுடன் ரெண்டு நாள்ல ஒரு தனி வீடு, ஓட்டு வீடு வாடகைக்கு பிடித்து விட்டேன். நல்ல வேளையா பின்னாடி பாத்ரூம்(?), லெட்ரின், ஒரு கிணறு, ஒரு கை பைப்பு. ரெண்டு ரூம், ஒரு பெரிய கூடம், சமையல் அறை. இதுவே அரண்மனை அந்த ஊருக்கு.
ஊருக்கு போய் மனைவி, எங்கள் ஒரு வயதுப் பையனையும் கூட்டிட்டு வந்துட்டேன்.
மாடியிலும் மெத்தையிலும் வாழ்ந்த வாழ்க்கைக்கு இது சிறிது ஏமாற்றம் தான். ஆனால் இப்படியும் வாழ வேண்டும் என்று இறைவன் எழுதி இருக்கிறான். வாழ்ந்துதான் பார்ப்போம்.
மருத்துவமனையில் காலை எட்டு மணிக்கு போய் அமர்ந்தால், 12 மணி வரை ஓய்வே இருக்காது.
சிறிய சிறியஅறுவை சிகிச்சைகள், பிரசவங்கள், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள், காலரா, தீக்காயங்கள், தற்கொலை முயற்சிகள் அனைத்தையும் தைரியமாக என்னால் செய்ய முடிந்தது. இதனால் ஏற்படும் மகிழ்ச்சியை உணரத்தான் முடியும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. சிறிது பணம் சம்பாதித்தேன், கிராம மக்களின்
அன்பைச் சம்பாதித்தேன்.
எங்கு சென்றாலும் எனக்கும் மனைவிக்கும்
அனைவரும் அவ்வளவு மதிப்பு கொடுப்பார்கள்.
திரைப்படம் கீற்று கொட்டகையில்தான். அங்கு
சென்றாலும் மரியாதையை காண முடியும்.
காலச்சக்கரம் ஓடிக்கொண்டிருந்தது. என்னுடைய மகன் அங்கிருந்த ஒரு சிறிய பள்ளியில் தினமும் மாட்டு வண்டியில் சென்று வருவான்.
ஒரு நாள் நம்முடைய அமாவாசை முகம்
வாடியிருந்தது.
""என்னப்பா ஏன் இப்படி இருக்கிறாய், என்ன ஆச்சு?''
""ஒன்றும் இல்லை ஐயா''
அவர் கண்களில் கண்ணீர் வருவதைப் பார்த்தேன்.
அருகில் அழைத்து தனிமையில் பேசினேன்.
""ஒன்னும் இல்லைய்யா, வீட்டில கொஞ்சம் தகராறு''.
""ஏன் என்ன விஷயம்?''
""அவ எப்பப் பாரு குழந்தை இல்லை என்பதற்கு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறாள். நான் என்ன ஐயா செய்யமுடியும்? ஏதேதோ மருந்து கூட சாப்பிட்டுப் பார்த்தோம். கடவுள் எப்ப கண் திறப்பாரோ தெரியல''.
""ஏன் எனக்கு இதுவரை இதைப் பற்றி கூறவில்லை? சரி இங்க வேண்டாம், வீட்டிற்கு நீயும் உன்னோட பொண்டாட்டியும் வாங்க. ஏதாவது வைத்தியம் செய்து உதவி செய்ய முடியுமான்னு பார்க்கணும்''.
இரண்டு நாள் கழித்து, மாலையில் அவருடைய மனைவியுடன் வீட்டிற்கு வந்தார். என்னுடைய மனைவியுடன் அவரது மனைவி ஆசையாகப் பேசிக் கொண்டிருந்தார். என்னுடைய மகனையும் தடவிக் கொடுத்து கொஞ்சிக் கொண்டிருந்தார்.
நான் அவர்கள் எடுத்த சிகிச்சைகளை எல்லாம் தெரிந்து
கொண்டு, மருத்துவமனையிலேயே இருந்த மற்றும்
என்னிடமிருந்த சில மாத்திரைகளுடன், ஹார்மோன் மாத்திரைகளைக் கொடுத்து, சில ஆலோசனைகளையும் கொடுத்தேன்.
நாட்கள் ஓடியது. ஒருநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் அமாவாசையும் அவர் மனைவியும் என் வீட்டில் வந்து நின்றார்கள்.
""என்ன அமாவாசை, காலங்கார்த்தால?''
சிறிதும் எதிர்பார்க்கவில்லை, திடீரென்று அவர் மனைவி என் காலில் விழுந்தார். நான் பதறிக் கொண்டு விலகினேன்.
சிறிது நேர மெளனத்திற்கு பிறகு அமாவாசை, ""ஐயா என் பொண்டாட்டி முழுகாம இருக்காங்க ஐயா''.
கையில் ஒரு சிறிய ஜாங்கிரி பொட்டலம்.
அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில், எள்ளளவும்
குறையாமல் எனக்கும் ஏற்பட்டு மகிழ்ந்தேன்.
கிருஷ்ணாபுரத்தில் சரியான வேலை, ஓய்வில்லை.இருந்தாலும் அது மனதிற்குப் பிடித்திருந்ததுதான். உண்மையிலே அங்கு பணிசெய்தபோது, நான் ஒரு தனி மருத்துவ அதிகாரியாக இருந்தேன். நான் சென்றபோது ஏற்கெனவே இருந்த மற்றொரு பெண்மருத்துவர் மாற்றலாகிச் சென்று விட்டார்.
அந்த மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் இருவர் மிட்வைப்பரி என்று சொல்லும் செவிலியர் பணியில் இருந்தார்கள். இந்த ஊரைச் சுற்றி நிறைய கிராமங்கள் இருப்பதால், பிரசவத்திற்காக இங்கு கர்ப்பிணிப் பெண்கள் வருவது சகஜம். சாதாரண பிரசவங்களை செவிலியர்களேபார்த்து விடுவார்கள். கொஞ்சம் சிரமமான பிரசவங்களை அருகில் உள்ள நகரங்களின் அரசு மருத்துவமனை
களுக்கு அனுப்பிவிடுவார்கள்.
ஒருசமயம் அப்படித்தான் பணிகள் முடித்து நான் மதியம் வந்து சாப்பிட கைவைக்கும் போது , அந்த செவிலியர் ஓடிவந்து, ஒரு பிரசவம் மிகவும் கடினமாக இருக்கிறது என்று என்னை உடனே வரச்சொன்னார். நோயாளியை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் நிலையில் இல்லை, அழைத்துச் செல்ல வண்டியும் இல்லை.
நான் சென்று பார்த்தபோது நோயாளி மிகவும் சிரமப்பட்டது தெரிந்தது. அவருக்கு போர்செப்ஸ் (ஆயுதம்) மூலமாகத்தான் குழந்தையை எடுக்க முடியும் என்று உறுதியாகத் தெரிந்தது. நல்லவேளையாக அந்த மருத்துவ
மனையில் அதற்குத் தேவையான கருவிகளும்இருந்தன. என் மனத்தில் தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தது. அங்கு நான் ஒரு போர்செப்ஸ் டெலிவரி செய்து, வெற்றி
கரமாக முடித்தேன். குழந்தையும் தாயும் நலமாக இருந்தது நினைத்து இன்றும் பெருமையாக இருக்கிறது.
சுமார் ஒரு மாதம் கழித்து ஒரு தாய் கைக்குழந்தையுடன்- அப்பெண்ணின் தாய் தந்தையுடன் என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி. ஒரு தட்டில் பூ, பழங்கள் மற்றும் இனிப்பு எடுத்துவந்து என் முன்பு வைத்து, அந்த குழந்தையின் தாய் என் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றதை நினைத்து மகிழ்ந்ததை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
சில மாதங்கள் கழித்து, மருத்துவமனை செவிலியர் ஒரு நாள் விடியற்காலை நேரத்தில், சிறிது பதட்டத்துடன் வந்து நின்றார்.
""என்னம்மா என்ன பிராப்ளம்?''
""சார், நம்ம அம்மாசியோட மனைவி பிரசவ வலியில் மிகவும்துடித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் கொஞ்சம் உடன் இருந்தால் நன்றாக இருக்கும் சார். எனக்கு
கொஞ்சம் பதட்டமாக உள்ளது சார்''.
நான் உடனே கிளம்பிச் சென்றேன். அங்கு அமாவாசை மிகவும் பதட்டத்துடன், கண்கள்கலங்கியவாறு நின்றிருந்தார். என்னைப் பார்த்ததும் அவருக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை, தேம்பி அழுதார். அவர் மன நிலையை நான் புரிந்து கொண்டேன். அவர் இரு கை
களையும் பிடித்து ""கவலைப்படாதே, நான் முழுவதும் உடன் இருக்கிறேன், எல்லாம் நல்லபடி நடக்கும்'' என்று கூறி அவரை சமாதானப்படுத்தினேன்.
அன்று அங்கு வார்டில், வேறு ஒரு தாய் குழந்தையுடன் அடுத்த அறையில் படுத்து இருந்தார். நான் அவரைப் பார்த்தபோது, செவிலியர் ஒரு ரெண்டு மணி நேரம் முன்புதான் அவர் பிரசவித்தார் என்று கூறினார். ஆண் குழந்தை சார். அந்தப் பெண் மிகவும் இளையவராக இருந்தார். அவருக்குத் துணையாக ஒரு வயதான மனிதர், அந்தப் பெண்ணின் அப்பா என்று அறிந்தேன்-உடனிருந்தார்.
நான் செய்திகளைக் கேட்டுக்கொண்டே, அமாவாசையின் மனைவியைப் பரிசோதனை செய்தேன். மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். நிரம்ப வலியால்
துடித்தார்.
நல்ல வேளையாக செவிலியரை அருகில் வைத்துக் கொண்டு மிகவும் போராடி, இறையருளுடன் நார்மல் டெலிவரி செய்துவிட்டோம். அழகான ஆண் குழந்தை. நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். கர்ப்பிணிப்பெண் வயது முதிர்ந்து முதல் பிரசவம் ஆனால், அது சிரமமான பிரசவமாகத்தானே இருக்கும் ?
வலியின் வேதனை நோயாளியை மிகவும் களைப்
படையச் செய்து மயக்கமாகி விட்டார். நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட்டார்.
நோயாளிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளித்து குளுக்கோஸ் ஏற்றி, அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன். செவிலியர் குழந்தையை எடுத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
குழந்தையைப் பார்த்த அமாவாசை முகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி. பேசமுடியாமல் ஆனந்தக் கண்ணீரில் மிதந்தார். நோயாளியின் மயக்கத்தைப் பார்த்து சிறிது கலங்கினார். நான் அவரைத் தேற்றி,""மனைவி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். தைரியமாக இரு'' என்று கூறினேன்.
வெளியே செவிலியர் பரபரப்பாக காணப்பட்டார். ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து செவிலியர் மிக படபடப்புடன் கூறினார்.
""சார் அந்த மற்றொரு பேஷன்ட், அந்த பெரியவர், உடைமைகள், அவளுடன் எல்லாம் காணவில்லை சார். குழந்தை மட்டும் தனியாக அழுது கொண்டிருக்கிறது. வெளியில் அவர்கள் வந்த வண்டியும் காணவில்லை''
என்றார் செவிலியர்.
அமாவாசை மனைவியும் மிக்க வலியால் துடிக்க ஆரம்பித்துவிட்டதால், அந்த பெண்ணின் கேஸ் ஷீட்
எழுத நேரமில்லை, முகவரியும் பதிவு செய்யமுடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் செவிலியர் கலங்கினார்.
""போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாமா சார்?''
என்றார்.
எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
""அந்தப் பாவி பொண்ணு இப்படி ஏமாத்திட்டு போயிட்டு, என்ன தவிக்க விட்டாளே சார். எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் சார். அந்தப் பொண்ணு கழுத்துல தாலி எதுவும் இல்லை சார். பெயர் சொன்னா. பதட்டத்தில் பெயர் கூட எனக்கு மறந்து போயிருச்சு''.
செவிலியர் அழவே ஆரம்பித்து விட்டார்.
அப்போது, அமாவாசை தயக்கத்தோடு. ""சார்''
என்றார்.
""பயப்படாத அமாவாசை, உன் குழந்தையும் மனைவியும் நல்லாத்தான் இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சு விடுவாங்க'' என்றேன்.
""அது இல்ல சார் நான்... நான்...'' என்று தயங்கினார்.
""என்ன தயங்காம சொல்லு?''
""ஒன்னும் தப்பு இல்ல என்றால் அந்த குழந்தையை நானே வளர்க்கிறேன் சார். இங்கு நடந்தது வேற யாருக்கும் தெரியாது. அவங்க ஓடி போயிட்டாங்க. திரும்பி வருவாங்களான்னு தெரியல. பாவம் சார், இந்த பச்சப்புள்ள அழறது என்னால தாங்க முடியல. அது என் புள்ளையாகவே இருக்கட்டும் சார்''.
இதைக் கேட்டதும் எனக்கும் , செவிலியருக்கும் என்ன சொல்றதுன்னு புரியல. எங்களுக்கும் இந்த பிரச்னையிலிருந்து மீள்வதற்கு நல்ல வழியாகத்தான் தெரிந்தது.
""இந்த உண்மை நம் மூவரைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். என் மனைவிக்கு கூட தெரிய வேண்டாம். எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது என்று அவளுக்கும், அனைவருக்கும் சொல்லலாம். நீங்களும், நர்ஸ் அம்மாவும் எப்பவுமே இதை வெளியில் சொல்லாமல் இருக்கணும்னு வேண்டிக்கிறேன் ஐயா''.
அப்படியே, அமாவாசையை கட்டித்தழுவிக் கொண்டேன்.
அவரும் அழுதார். செவிலியரும் அழுதார். நானும்.
அமாவாசை எவ்வளவு உயர்ந்து விட்டார். ஓர் அநாதை குழந்தையை, தன் குழந்தையாக ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, அதை தன் மனைவிக்குக் கூட தெரிவிக்காமல் வளர்ப்பது என்றால், என்ன என்று கூறுவது ? சிறிது நேரத்தில்அவர் மனைவி கண் விழித்தார். தன் இரு பக்கமும் ஒவ்வொரு குழந்தைகளைப் பார்த்து பூரித்தார். எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். எங்களைப் பார்த்து கையெடுத்து
கும்பிட்டு கண்ணீர் வடித்தார்
அமாவாசை விரும்பியபடியே அவருக்காக காக்க வேண்டிய ரகசியம் காக்கப்பட்டது.
அவர் மனைவி குழந்தை பெற்ற சில மணி நேரங்களில் செவிலியருக்கு ஒரு தந்தி கிடைத்தது. செவிலியரின் அம்மா மிகவும் உடல் நலம் குன்றி இருப்பதாகவும், செவிலியர் உடனே வரவேண்டுமென்று அதில் கூறப்பட்டிருந்தது.
அதைப் பார்த்தவுடன் செவிலியர் மிகவும் வேதனையால் துடித்தார். உடனே கிளம்ப ஆயத்த
மானார்.
என்னிடம் தயங்கியபடியே, ""மற்றொரு செவிலியர் வரும் வரை காத்திருக்க வேண்டுமா'' என்று கேட்டார் .
அவர் நிலை அறிந்துகொண்டு, ""பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன். உடனே கிளம்பு'' என்று கூறியது அவருக்கு பேருதவியாக
அமைந்தது.
உடனே கிளம்பிச் சென்றார். அங்கிருந்து அவரால் உடனே பணிக்குத் திரும்ப முடியவில்லை. ஒரு மாதத்தில் அவர் சொந்த ஊருக்கு அருகிலேயே மாற்றலாகிச் சென்றுவிட்டார். அவரைத் திரும்ப பார்க்கக் கூட முடியவில்லை.
அமாவாசையின் ரகசியம் இப்போது எங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த செய்தி.
அமாவாசை தன் இரு குழந்தைகளையும் மிகவும் சமமாக எந்தவித பேதமும் இல்லாமல் வளர்த்ததை நான் கண்கூடாகப் பார்த்து மகிழ்ந்தேன்.
நானும் என் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க தொடங்கினேன். மேல்படிப்பு படிக்க பலமுறை முயற்சித்தேன்.
நான் விரும்பியவாறு எனக்கு தலைசிறந்த கல்லூரியில் மேல் படிப்பு கிடைத்தது. கிருஷ்ணா புரத்திலிருந்து, பணியிலிருந்து விடுபட்டு சென்னைக்கு
பயணம் ஆகும் நாள் வந்தது.
அங்கிருந்து கிளம்பும் முன் என் சில நோயாளிகள் நேரில் வந்து கண்ணீருடன் விடை கொடுத்தது இன்று நினைத்தாலும் நெஞ்சம் நிறைகிறது.
எனக்கும் மேல்படிப்பு கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், இதைப்போன்ற ஒரு நல்ல மக்களை இனிமேல் சந்திப்போமா என்ற வேதனை உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது.
அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு சென்னைக்கு பயணமானேன்.
சென்னையில் நான் விரும்பிய கல்லூரியிலேயே விரும்பிய பாடமே கிடைத்து மகிழ்ந்தேன்.
எப்போதாவது சில சமயம் கிருஷ்ணாபுரத்தையும் அமாவாசையையும் நினைத்துப் பார்ப்பதுண்டு.
பிறகு படிப்பும் முடிந்தது, பல இடங்களில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது.
காலம் ஓடியது .
இடையில் என்னுடைய குடும்பம் பெருகியது. மற்றொரு மகன் பிறந்தான்; வளர்ந்தான்.
மகிழ்ச்சியும் துக்கமும் கலந்தது தானே வாழ்க்கை? நான் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா ?
இழக்கக் கூடாத உறவுகளை காலம் என்னிடமிருந்து பறித்தது. நானும் பணியில் வெவ்வேறு நிலைகளை அடைந்து, பேராசிரியர் என்ற நிலையையும் அடைந்தேன். நான் படித்த, பெருமைமிக்க கல்லூரியிலேயே நான் பேராசிரியராகப் பதவி பெற்றேன்.
ஒரு நாள் நான் மருத்துவமனையில் என்னுடைய மாணவர்கள் மற்றும் உதவிப்பேராசிரியர்களுடன் வார்டில்
நோயாளிகளைப் பரிசோதித்து வந்தேன்.
அப்போது 64 வயது மதிக்கத்தக்க பெரியவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரிடம் சென்றபோது அவரால் பேச முடியவில்லை. சத்தம் வெளியே வரவில்லை. அதுமட்டுமின்றி அவர் மூச்சு விடவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது பார்த்து சிறிது பதற்றமானேன்.
""இவர் எப்போது சேர்ந்தார், என்னநோய் ? என்ன சிகிச்சை கொடுக்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.
அவருக்கு மூச்சுவிட உடனே டிரக்கியாஸ்டமி செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம் என்று உதவி மருத்துவர்கள் கூறினார்கள். பாவம் அவருக்கு தொண்டையில் புற்றுநோய் இருப்பது அறிந்து வருந்தினேன். உடனே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று
பணித்தேன்.
அந்த சமயம் நோயாளி என்னைப் பார்த்து கும்பிட்டு என்னிடம் பேச முயன்றார். அவரால் முடியவில்லை. ஆனால் மிகச் சிரமப்பட்டு என்னிடம் எப்படியாவது பேச வேண்டும் என்பதுபோல் தோன்றியது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் அவரிடம் ""கவலைப்படாதீர்கள், சரியான சிகிச்சை அளித்தால் சரியாகிவிடும்'' என்று அவரிடம் சமாதானம் செய்தேன்.
இருந்தாலும் அவர் என்னிடம் ஏதோ பேச மிகவும் பிரயாசைப் பட்டார். அத்துடன் நிற்காமல், தன் மார்பில் கைவைத்து, என்னைக் காட்டினார். மேலும் கைகளால் சிறியது போன்றும், இரண்டு என்றும் சில சைகைகளைக் காட்டினார்.
அருகில் அவருடைய மகன் இருந்தார். அவருக்கும் அவர் என்ன கூற நினைக்கிறார் என்று புரியவில்லை. அவரும் அவரை சமாதானப்படுத்தினார். இருந்தாலும் நோயாளி என்னையே பார்த்துக் கொண்டு இருந்து அவர் கண்களிலும் கண்ணீர் சுரந்தது, என்னை மிகவும் பாதித்தது.
""சரி நீங்கள் என்ன சொல்லவேண்டுமோ அதை எழுதிக் காண்பியுங்கள்'' என்றேன். பாவம் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாதாம்.
அவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் என்றும் பென்ஷன் பெறுகிறார் என்றும் அவர் மகன் கூறியதைக் கேட்டு அறிந்தேன்.
அவரிடமிருந்து நகர மனமில்லாமல் நகர்ந்துகொண்டே, அவருக்குத் தேவையான சிகிச்சைகளை அளிக்கும்படி வேண்டிக் கொண்டேன்.
அடுத்த நாள் மருத்துவமனைக்கு சென்றவுடன், என் உதவி மருத்துவர்களிடம் நான் கேட்ட முதல் கேள்வியே, ""அந்த நோயாளி எப்படி இருக்கிறார்?'' என்றுதான்.
""சார் , பாவம் சார். ஆபரேஷன் எல்லாம் பண்ணிட்டோம். ஆனா நைட்டு ரொம்ப சீரியஸ் ஆயிட்டாரு. ரொம்ப அட்வான்ஸ் கேன்சர் லேரிங்ஸ் சார். நைட் 11 மணிக்கு இறந்துட்டார் சார். ரொம்ப லேட்டா ஆயிட்டதால உங்களுக்கு சொல்லலை சார். டிஸ்டர்ப் பண்ணவேண்டாம் என்று இருந்துட்டோம் சார்''.
""ஏன் சார், அந்த கேஸ் பத்திஅவ்வளவு அக்கறையா விசாரிக்கிறீங்க , தெரிஞ்சவங்களா?''
""இல்ல... இல்ல... அந்த பேஷண்ட் கண்கலங்கி பார்த்தது எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது. அவர் என்கிட்ட ஏதோ சொல்லனும்னு வந்தது எனக்கு ரொம்ப சங்கடமா இருந்தது. என்ன சொல்ல நினைச்சாருன்னு தெரியலையே?''
அந்த சமயம் ஒரு பி.ஜி. மாணவர், கேஷ் ஷீட்டை என் கையொப்பத்திற்காக எடுத்து வந்தார்.
""சார் அந்த பேஷன்டோட கேஸ் ஷீட்''.
நான் அதை வாங்கிப் படித்து, சாதாரணமாகப் பார்ப்பது போல, அந்த நோயாளியின் பெயரைப் படித்தேன்.
திரு. அமாவாசை, ஆண், வயது 64 என்றிருந்தது. அதிர்ச்சியானேன், மற்ற தகவல்களைப் படித்தபோது, நான் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.
ஊர் கிருஷ்ணாபுரம், நெல்லை மாவட்டம். அதைப் பார்த்ததும், எனக்கு தலை சுற்றி மயக்கமே வருவது போல் உணர்ந்தேன்.
"அமாவாசை... அமாவாசை...' என்று என்னையும்அறியாமல் கூறி என் கண்கள் கலங்கியதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
அமாவாசை கையால் குழந்தை என்றும், இரட்டை என்பதையும் உணர்த்தி, நான் உங்களிடம் பணிபுரிந்தேன் என்பதையும் எனக்கு புரிய வைக்க எவ்வளவு முயற்சித்தாய்? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே, என்று நான் அடைந்த துயரம் யாரறிவார்?
""யார் சார்?யார் சார் அவர்?''
சிறிது நேர அமைதிக்குப் பின், கலங்கிய குரலுடன், என்னிடம் பணிபுரிந்த ஒரு நேர்மையான துப்புரவுத் தொழிலாளி. மனிதாபிமானம் என்பதன் பொருளை முதல் முதலாக அவரிடம்தான் பார்த்தேன்.
அவர் கூட இருந்தவர் எங்காவது இருக்கிறாரா ?
ஒரு மாணவர் கூறினார், ""சார் அவரை நான் பார்த்தேன். அழைத்து வருகிறேன்'' என்று ஓடினான்.
சிறிது நேரம் கழித்து அவனை அழைத்து வந்தார்கள்.
""நீயாவது சொல்லியிருக்கக் கூடாதா தம்பி, நீ எங்கிருந்து வருகிறாய் என்று. அவர் என்னிடம் கூற வந்ததை தெரிந்தாவது மகிழ்ந்திருப்பேனே... அமாவாசையை எழுதப் படிக்கக் கற்றுக் கொள் என்று பலமுறை நான் அப்போது கூறியிருப்பேன். அவரோ எனக்கு எதுக்கு சார் இனிமேலே படிப்பு? என் பிள்ளைகளை படிக்க வைத்து விடுவேன் சார் என்று சொல்வார். நீ என்னப்பா செய்ற?''
""நான் சாப்ட்வேர் என்ஜினீயராகப் பணிபுரிகிறேன் சார்''.
""இன்னொருத்தன்தம்பியா அண்ணனா?''
""அண்ணன் தான் சார். அவர் சிங்கப்பூரில் போய் செட்டிலாகி விட்டார். இப்போது கூட பல முறை கூப்பிட்டும் வரவில்லை. இப்ப கூப்பிட்டா வருவாரா என்று தெரியல.''
""அவர் உன் அண்ணனா? எவ்வளவு வயது வித்தியாசம்?'' தெரிந்து கொண்டே இந்த கேள்வியை கேட்டேன்.
""நாங்க இரட்டை பிறப்பு சார். அவர் அண்ணன், நான் தம்பி''.
""ஒன்றாகவா பிறந்தீர்கள்?''
""ஆமாம் சார்... பத்து நிமிஷம் இடைவெளி சார்''.
நான் சொல்லவேண்டிய "இரட்டைப் பிறப்பு'
ரகசியத்தை அமாவாசையின் பெருமையைக் கருதி என் மனதிற்குள்ளேயே வைத்து புழுங்கினேன்.
""எங்க அப்பா எங்க ரெண்டு பேரையும் எந்த குறையும் இல்லாம எல்லா வசதியும் செய்து எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்திருந்தார் சார். நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அவர் மறுத்துவிட்டார். அவரைப்போல ஒரு அப்பா கிடைக்கவே மாட்டார் சார்'' என்று அவர் அழுதுகொண்டே கதறியது என்னை ஊமையாக்கி
விட்டது.
தான் பெற்ற பிள்ளை எங்கேயோ? யாரோ பெற்றெடுத்த பிள்ளையை தன் மனைவிக்கும் ஊருக்கும் தெரியாமல் கடைசிவரை போற்றிப் பாதுகாத்து சொந்தப் பிள்ளையாக வளர்த்த அமாவாசை.இவரா அமாவாசை ? இல்லை... இல்லை...
முழு நிலவு அல்லவா ?
40 ஆண்டு நினைவுகளுடன் திருநெல்வேலியில்இறங்கினேன்.

Tags : அமாவாசை எனும் முழுநிலவு!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT