தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தங்கப்பால்!

6th Jun 2021 06:00 AM | பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்

ADVERTISEMENT


"தங்கப்பால்' சாப்பிட்டால் தொண்டைச் சளி, தும்மல், இருமல், பலவீனம் போன்றவை குறைந்து உடல் தெம்பை உணரலாம் என்று என் நண்பர் கூறுகிறார். ஆனால் அது பற்றிய விவரம் எதையும் முழுவதுமாக அவரால் கூற முடியவில்லை. இதைப் பற்றி விளக்கமாகக் கூறவும்.

ராமகிருஷ்ணன், மாயவரம்.

பெயரைக் கேட்டவுடன் ஏதோ தங்கத்தைப் பாலில் உரசிக் குடிப்பதைத்தான் "தங்கப்பால்' என்று பலரும் நினைக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை மக்களும் குடிக்கக் கூடிய எளிய பானம்தான் தங்கப்பால். இருநூறு மில்லி லிட்டர் சூடான பாலில் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து சிறிது சர்க்கரை சேர்த்து கலந்தால், பார்ப்பதற்கு தங்க நிறத்துடன் இருப்பதால் இப்பெயர் வந்தது. இதிலும் மேலும் மருத்துவ குணத்தைக் கூட்ட, சிறிது மிளகுத்தூளும் சேர்த்துக் கொள்வது நலம்.

பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்கும் பலரும் இன்று இருக்கத்தான் செய்கிறார்கள். சுவையில் இனிப்பும், சக்தியில் நெய்ப்பும், நல்ல புஷ்டியையும் இந்தப் பால் ஏற்படுத்தித் தரும். பிறந்த குழந்தையிலிருந்து மறையவிருக்கும் ஜீவன் வரை ஆண்-பெண் என்ற பேதமின்றி யாவருக்கும் உணவாக ஆகும் உத்தமப் பொருள்.

ADVERTISEMENT

அதிக நாள்கள் நீடித்து இருக்கும் காய்ச்சல், மனநோய், உடல் காய்ந்து இளைக்கச் செய்யும் நிலைகள், குடல் பலவீனத்தால் ஏற்படும் பெருமலப் போக்கு, ரத்தக்குறைவு, குடல் எரிவுள்ளநிலைகள், நீர் வேட்கை, இதயநோய், வயிற்றுவலி, மலக்கட்டு, சிறுநீரக அழற்சி, மூலம் ரத்தமாகக் கக்குவது, ரத்த பேதி, ரத்தமாகச் சிறுநீர் வெளியாவது, கருச்சிதைவு, அதிக உடற்பயிற்சியால் வாட்டம், பட்டினிக் களைப்பு இவற்றிற்கு பால் நல்லது. இதில்தான் மஞ்சள் தூளை நாம் கலக்குகிறோம்.

உணவாக ஏற்கப்படும் மஞ்சள் தொண்டையிலும் இரைப்பையிலும் ஏற்படும் கப அடைப்பை அகற்றி வலியைக் குறைக்கிறது. கபம் சிறிது சிறிதாக வலியின்றிப் பிரிந்து வெளியாகிறது. நாக்கின் தடிப்பைக் குறைத்துச் சுவை கோளங்களுக்குச் சுறுசுறுப்பளித்து நல்ல சுவையுணர்ச்சியைத் தருகிறது. வாய், நாக்கு, தொண்டை, எகிறு, அண்ணம் முதலிய இடங்களில் ஏற்படும் வேக்காளத்தையும், புண்ணையும் ஆற்றுகிறது. இரைப்பை, குடல் முதலியவற்றுக்குச் சுறுசுறுப்பு ஊட்டி பசி, சீரண சக்தியை உண்டாக்குகிறது. குடலில் புழு, கிருமி தங்கவிடாமல் வெளியேற்றி விடுகிறது. காய்ச்சல் சூட்டைக் குறைக்க வல்லது.

மஞ்சள் தூளைப் பாலில் போட்டுச் சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்றில் எரிச்சல் நீங்கும்.

மிளகு சுவையில் காரம் மிகுதி. கசப்பும் உண்டு. அதன் ஊடுருவும்தன்மை, சூடான குணம் காரணமாக, பசியை நன்கு தூண்டி உணவைச் சீரணிக்கக் செய்யும். உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும்.

சுவை உணர்வை அதிகமாக்கும். கல்லீரல், குடல், சுறுசுறுப்புடன் இயங்கும். தொண்டையில் அடைக்கும் கபம் இளகி சுவாச கஷ்டம் நீங்கும்.

சிறுநீர் தடங்கல் இல்லாமல் பெருகும். உடலின் மப்பான தன்மையாலும், சுறுசுறுப்பின்மையாலும் ஏற்படும் கனம், அசதி குறைந்து லேசாக இருக்கும். காய்ச்சலுக்கு மிக நல்லது.

அதனால் பால்- மஞ்சள் தூள் - மிளகு ஆகியவற்றின் சேர்க்கையை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுபவர்களுக்கு தலை, மூக்கு, வாய் சார்ந்த சளி உபாதைகளையும், வயிறு, குடல், கல்லீரல் சார்ந்த பல அஜீரண உபாதை களையும் நன்கு போக்கிக் கொள்ள முடியும். அதனால் உடல் பலவீனமும் குறைந்து, உடல் தெம்பானது விரைவில் ஏற்படவும் இந்தத்தங்கப்பால் உதவுகிறது.

(தொடரும்)

Tags : ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தங்கப்பால்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT