தினமணி கதிர்

விவசாயி  ஆன பொறியாளர்!

6th Jun 2021 06:00 AM | - ந.ஜீவா

ADVERTISEMENT

 

கேரள - தமிழ்நாடு எல்லைப்புறத்தில் உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். அங்கே ஆறு ஏக்கர் நிலத்தில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார் ஒருவர். அவர் எஸ்.சிவகணேஷ். இயந்திரவியல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர். அவர் தனது படிப்புக்குத் தொடர்பில்லாத வேளாண்மையில் வெற்றிகரமாக ஈடுபட்டு, கேரள மாநில அரசின் 2020 - ஆம் ஆண்டுக்கான "கேர கேசரி விருது' பெற்றிருக்கிறார்.

கடந்த 2006 - ஆம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்ற அவர், ராஜஸ்தானில் உள்ள அணுமின்நிலையத்தில் ஒப்பந்ததாரராக வேலை செய்திருக்கிறார். ஆனால் அவரின் இயல்பின் காரணமாக, 2 ஆண்டுகள் கூட அங்கு அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார் சிவகணேஷ்.

ஊரில் அவருடைய தந்தை 27 ஏக்கர் பண்ணை நிலம் வைத்திருந்தார். அதில் 6 ஏக்கர் நிலத்தை வாங்கி, தென்னை மரங்களை வளர்த்தார் சிவகணேஷ். 2008 - வரை தென்னை வளர்ப்பில் காலம் ஓடியது. வழக்கமாக தென்னை பயிரிடுபவர்கள், தேங்காய்களை இங்குள்ள வணிகர்களிடம்தான் விற்பார்கள். ஆனால் சிவகணேஷ் தேங்காய்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார். ஆனால் அங்குள்ள சில மொத்த வணிகர்கள், வியாபாரிகள் தேங்காயை வாங்கிக் கொண்டு உரிய நேரத்தில் பணத்தை அனுப்பாமல் ஏமாற்றியிருக்கிறார்கள். இதனால் நஷ்டம் அடைந்ததால், தலையில் கையை வைத்துக் கொண்டு உட்காரவில்லை சிவகணேஷ். அடுத்து என்ன செய்வது என்று யோசித்திருக்கிறார்.

ADVERTISEMENT

அந்த நேரத்தில் அவருடைய கிராமத்திலும், சுற்றுப்புறக் கிராமங்களிலும் உள்ள இளைஞர்கள் படித்துவிட்டு, ஐடி நிறுவனங்களில் வேலை செய்ய நகரங்களை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவரோ, ஏற்கெனவே பார்த்த வேலையை விட்டுவிட்டு, கிராமத்துக்குத் திரும்பியது இவரை எல்லாரும் இகழ்ச்சியாக பார்க்க வைத்துவிட்டது. அவர்கள் மத்தியில் "பிழைக்கத் தெரியாத மனிதராக' காட்சி அளித்திருக்கிறார்.

இதனால் ஊரில் நடக்கும் எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும் சிவகணேஷ் கலந்து கொள்வதில்லை. உறவினர் இல்லங்களில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. பிறர் இழிவாகப் பேசுவதையும், பார்ப்பதையும் தவிர்க்கவே அவர் இவ்வாறு செய்திருக்கிறார். இப்போது தென்னை வளர்ப்பில்
நஷ்டம் வேறு.

சிவகணேஷ் மாற்றி யோசித்தார். இயற்கை வேளாண்மை முறைக்குத் தாவினார். கேரளாவில் கள்ளுக்கடைகள் இருப்பதால், தனது தோப்பில் இருந்த 1600 தென்னை மரங்களில் 400 தென்னை மரங்களை கள்ளிறக்குவதற்குக் கொடுத்துவிட்டார்.

மீதமுள்ள தென்னை மரங்களுக்கிடையே ஜாதிக்காய், பாக்கு, மாமரம், மிளகு, மஞ்சள் என எல்லாவற்றையும் இயற்கை வேளாண்மை முறையில் பயிர் செய்திருக்கிறார் சிவகணேஷ். தண்ணீர் வீணாவதைக் குறைக்க சொட்டு நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்தப் பகுதியில் விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைப்பது சிரமம் என்பதால், சொட்டு நீர்ப் பாசனத்தை பயன்படுத்தியிருக்கிறார். உரங்களைத் தனியாகப் போடாமல், தண்ணீருடன் உரங்களைக் கலந்து பாய்ச்சியிருக்கிறார். இதனால் வேலையாட்களின் தேவையும் குறைந்திருக்கிறது. விளைவு? நிறைய லாபம்.

மழை நீர் வீணாகாமல் தடுக்க இரண்டு பெரிய குளங்களை வெட்டியிருக்கிறார். அதில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான மீன்கள் உள்ளன. ஆடு, மாடுகளையும் வளர்க்கிறார். அவற்றுக்கான தீவனப் பயிர்களையும் வளர்க்கிறார்.

கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் செடிகள் வளர்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதைத் தெரிந்து கொண்ட சிவகணேஷ், செடிகளை வளர்த்து விற்பனை செய்கிறார். இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஜாதிக்காய், மாமரக் கன்றுகளை விற்பனை செய்திருக்கிறார்.

""இந்த விற்பனையின் மூலமாக மட்டுமே, ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை எனக்கு வருமானம் வருகிறது. ராஜஸ்தானில் நான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு விவசாயம் செய்ய கிராமத்துக்கு வந்தபோது என்னை இகழ்ச்சியாகப் பார்த்தவர்கள், இப்போது என்னிடம் நெருங்கிப் பழகுகிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் என் தந்தைதான் எனக்கு ஊக்கம் அளித்தார். இப்போது ஆண்டுக்கு ரூ.13 லட்சம் வரை வருமானம் வருகிறது. நான் வேலையை விடாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் கூட இந்த அளவுக்கு வருமானம் வந்திருக்கும் என்று சொல்ல முடியாது. நம்முடைய இலக்கை நோக்கி நாம் பயணிக்கும்போது தோல்விகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அதிலிருந்து நாம் மீள புதிய சிந்தனையுடன் மாறுபட்ட வழிமுறைகளுடன் பயணம் செய்ய வேண்டும்'' என்கிறார் சிவகணேஷ்.

Tags : விவசாயி  ஆன பொறியாளர்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT