தினமணி கதிர்

திரையுலகில் 6 நடராஜன்கள்!

6th Jun 2021 06:00 AM | - பொன்.செல்லமுத்து

ADVERTISEMENT

 

கள்ளபார்ட் நடராஜன்

கள்ளபார்ட் ராமலிங்கம் பிள்ளை என்ற நடிகரின் மைந்தர்தான் இந்த டி.ஆர்.நடராஜன் என்ற கள்ளபார்ட் நடராஜன். "வண்ணக் கிளி' படத்தில் "கழுகு' என்ற வேடத்திலும், "பெரிய கோயில்' படத்தில் இரட்டை வேடங்களிலும் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். நடித்த "ஒளி விளக்கு' படத்திலும் இவர் நடித்துள்ளார். பராசக்தி', "டவுன் பஸ்', "முதல் தேதி', "தெய்வப் பிறவி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

எஸ்.ஏ.நடராஜன்

ADVERTISEMENT

தாராபுரத்தில் பிறந்த இவர், நாடக நடிகர். பின்பு ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிரந்தர நடிகராக இருந்தார். "எமக்குத் தொழில் கற்பனை உலகில் நாட்டுக்கு உழைத்தல்' என்ற வாசகத்தை அடையாளப் படுத்தி "பார்வர்டு ஆர்ட் ஃபிலிம்ஸ்' சார்பில் படங்களைத் தயாரித்தார் இவர். எம்.என்.நம்பியாரும் எஸ்.ஏ.நடராஜனும் இரு நாயகர்களாக நடித்த "நல்ல தங்கை' (1955) என்ற படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்தும் உள்ளார் இவர். "மந்திரி குமாரி' படத்தில் இடம் பெற்ற "வாராய் நீ வாராய்' என்ற பாடல் காட்சியில் நடித்து, அப்படத்தின் பிரதான வில்லனாக நடித்த இந்த வில்லன் நடிகரை யாராலும் மறக்க முடியாது.

"என் தங்கை' டி.எஸ்.நடராஜன்

வசனகர்த்தா, பாடலாசிரியர், சினிமா வில்லன் நடிகர், நாடக நடிகர், என பல முகங்களைக் கொண்டவர் இவர். எம்.ஜி.ஆர்.நடித்த "என் தங்கை' (1952) படத்தின் மூலக் கதையை இவர் தனித்தும், வசனத்தை கே.எம்.கோவிந்தராஜன் என்பவருடன் சேர்ந்தும் எழுதியுள்ளார். இப்படம் திரையிட்ட நாள் முதலாக இவர் "என் தங்கை' நடராஜன் என்று அழைக்கப்பட்டார். "சுமங்கலி' (1959) படத்தின் வசனத்தை எழுதி, இப்படத்தின் 12 பாடல்களையும் இவரே எழுதியுள்ளார்.

புத்தூர் என்.எஸ்.நடராஜன்

குண்டுமணியைப் போல கருப்பாக குண்டாக இருப்பார். எம்.ஜி.ஆர். படங்கள் சிலவற்றில் சண்டைக் காட்சிகளிலும், பிரதான வில்லன்களுக்கு அடியாளாகவும் நடித்துள்ளார். "ரகசிய போலீஸ் 115' படத்தின் பிரதான வில்லன் இந்த நடராஜன்தான். எம்.என்.நம்பியாரே இப்படத்தில் இவருக்கு கையாளாக நடித்துள்ளார். மேலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

கே.நடராஜன் ஐயர்

இவர் ஒரு துணை நடிகர். டாக்டர், நீதிபதி, வக்கீல், போலீஸ், தந்தை, போன்ற வேடங்களில் நடித்தவர். "கர்ணன்' படத்தில் கர்ணனின் வளர்ப்புத் தந்தை (தேரோட்டி) வேடத்தில் நடித்திருப்பார். "மோகன சுந்தரம்' படத்தில் துப்பறியும் பாத்திரம். "ஆண்டவன் கட்டளை' படத்தில் நீதிபதி. "ஒளவையார்' படத்தில் காரி மன்னன். "ஆரவல்லி' படத்தில் தர்மர். "எங்கள் தங்கம்'படத்தில் டாக்டர். "வீரபாண்டிய கட்டபொம்மன்', "கப்பலோட்டியதமிழன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

டி.கே.எஸ்.நடராஜன்

நடிகரும் தெம்மாங்குப் பாடகருமான டி.கே.எஸ்.நடராஜன் "என்னடி முனியம்மா' (வாங்க மாப்பிள்ளை வாங்க) "வெக்கிறேன் வெக்கிறேன்னு' (காவலன்) பாடல்களின் மூலம் புகழ் பெற்றவர். கிராமியப் பாடல்களை நகலெடுத்து இரு படங்களில் இரு பாடல்களை எழுதியுள்ளார். இராம.நாராயணன் இயக்கத்தில் கார்த்திக் நாயகனாகவும், ராதாரவி - அம்பிகா ஜோடியாகவும் நடித்த "பேய் வீடு' (1984) படத்தில் "அத்தை பெத்த மல்லிகைப்பூ' என்ற பாடலை எழுதி பாடியும் உள்ளார் இவர்.

Tags : திரையுலகில் 6 நடராஜன்கள்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT