தினமணி கதிர்

ஏர் கொண்ட பார்வை

25th Jul 2021 06:00 AM | எஸ்.ராமன்

ADVERTISEMENT


டாக்டர் சாவித்ரி, எம்.டி என்ற பெயர் பொறிக்கப்பட்ட பித்தளைப் பலகை, வார்னிஷ் ஏற்றிய மரச்சட்டங்களுக்கு நடுவில், பிரத்யேக மின்விளக்கு ஒளியில், அந்த பங்களா வாயிலில் மின்னிக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கு முன் பெய்த மழையில் பிரசவிக்கப்பட்டு உள்ளே எட்டிப் பார்த்த மழைத்துளிகள், பெயர்ப் பலகையில் படர்ந்து, அதில் வாசம் செய்த எழுத்துகளுக்கு குளிரூட்டிக் கொண்டிருந்தன.
ஆனால், வீட்டினுள் இருந்த அந்த எழுத்துகளுக்குச் சொந்தக்காரரான சாவித்ரியின்உள்ளம் கொதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
வீட்டு ஹாலில், இரு கைகளையும் முதுகுப் பக்கமாக பின்னுக்குத் தள்ளி, முதுகின் கீழ்ப்பகுதியின் மீது அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக உட்கார வைத்து குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கும் அவள் முகத்தில் படர்ந்திருந்த டென்ஷன், உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்பட்டது.
டைனிங் டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த செல்போன், "குவா..குவா..' சத்தம் என்ற ரிங் டோனுடன் பல தடவை சிணுங்கியும், அதைக் கண்டு கொண்டு பதில் அளிக்கும் நிலையில் அவள் தற்போது இல்லை. அதற்கான காரணம் அவளுடைய மகள் கீர்த்திதான்.
"எத்தனை தடவைதான் இவளுக்கு சொல்றது...இதற்கும் மேல் தாமதித்தால் காலம் கடந்துவிடும். இன்றைக்கு எப்படியாவது அவளைச் சம்மதிக்க வச்சுடணும்' என்று எண்ணியவளின் கோபம் கொப்பளித்து, அதன் சாயல்கள், அவளுடைய மூக்கின் மீது படர்ந்தது. மகளின் வருகையை எதிர்பார்த்து, வாசலை அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வீட்டு வாசலில் ஸ்கூட்டர் நுழையும் சத்தம் கேட்டதும், அது கீர்த்தனாதான் என்பதை யூகித்தவளின் மனப்பதற்றம் அதிகமாகியது.
மாநிறத்தில், வயதுக்கு ஏற்ற உயரம். பாப் கட் தலை. மாற்றுச் சிந்தனைகளுடன், வயதுக்கு அதிகமான மன முதிர்ச்சி. மாணவர் அரங்கில் பட்டிமன்றப் பேச்சாளி. அம்மாவின் அரவணைப்பை விட, வீட்டில் வேலை செய்யும் பெண்மணிகளின் கவனிப்பில் வளர்ந்தவள். இதுதான் கீர்த்தனா.
""ஒரு மணி நேரமா உனக்காகக் காத்திருக்கிறேன்'' சாவித்ரியின் வார்த்தைகளில் கோபம் கலந்திருந்தது.
""ஏம்மா... ஆஸ்பத்திரியிலிருந்து சீக்கிரமாக வந்துட்டீங்களா...உடம்பு ஏதாவது சரியில்லையா? ஸ்கூலில் ப்ளஸ் டூ நுழைவுக்கு முன்பான ஸ்பெஷல் கிளாஸ். அதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு'' அந்த நேரத்தில் அம்மாவை வீட்டில் எதிர்பார்க்காத கீர்த்தனா பதறிப் போனாள்.
""நான் இப்ப நல்லாத்தான் இருக்கேன். ஆனால், எதிர்காலத்தில் நீ நல்லா இருக்கணும்கறதுக்கான அக்கறையோடு, நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் அறிவுரையை நீ கேட்கணும்''
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கால் வலிக்க உலாவிக் கொண்டிருந்த சாவித்ரி சோபாவில் உட்கார்ந்தாள்.
அம்மா எதைப் பற்றி பேசுகிறாள் என்பது மகளுக்குப் புரிந்தது. தன்னை போல்,
மகளும் மருத்துவம் படித்து டாக்டராக ஒளிர வேண்டும் என்பதுதான் சாவித்ரியின் தலையாய விருப்பம். அதைத்தான், நீண்டகாலமாக மகளிடம் சொல்லி வந்திருக்கிறாள். அந்த விருப்பம் பூர்த்தி ஆவதற்கான காலம் கனிந்து விட்டது என்பதால்தான் இந்த பதற்றம் அவளைப் பற்றிக் கொண்டது.
""டாக்டருக்கு சமூகத்தில் தனிப்பட்ட அந்தஸ்தும், மரியாதையும் இருக்கு. எம்.டி
அல்லது எம்.எஸ் முடிச்சு, ஏதாவது ஒரு உடல் அவயக் கோளாறில் ஸ்பெஷலைஸ் செய்தால் பணத்தை அள்ளிக் கொட்டலாம். ஒரு டாக்டருடைய மகள் டாக்டருக்கு படித்தால்தான் எனக்குப் பெருமைன்னு உனக்கு எத்தனை தடவை எடுத்து சொல்றது?''- ஏற்கெனவே பலமுறை சொல்லியதையே மகளிடம் திரும்ப சொன்னாள் சாவித்ரி.
""ஒரு டாக்டருடைய மகள் டாக்டருக்குத்தான் படிக்கவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லைன்னு நினைக்கிறேன். நான் டாக்டராகணும்கற உங்கள் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ள முடியாதா?''
""ப்ளஸ் டூ வந்தாச்சு. இப்பவாவது நான் சொல்வதை நீ கேள். சாவித்ரி என்ற டாக்டருடைய மகள் டாக்டருக்குத்தான் படிக்கணும் கறது என்னுடைய விருப்பம். இது என் கெளரவ பிரச்னையும் கூட. நீட் எக்ஸாமுக்கு உன்னைத் தயார் படுத்திக் கொள் என்பதை தவிர, தற்போது நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உன் படிப்பு விஷயத்தில் கடைசி முடிவு என்னுடையதாகத்தான் இருக்கணும்'' அம்மாவின் கண்டிப்பான வார்த்தைகள், அந்த சமயத்தில் கீர்த்தனாவின் தனிப்பட்ட எண்ண ஓட்டங்களைக் கட்டிப் போட்டன.

நினைவு தெரிந்த நாளிலிருந்து தன்னிடம் தொடர்ந்து இரண்டு நிமிடங்களுக்கு மேல் அம்மா பேசி அவள் இதுவரை பார்த்ததில்லை. வேலையில் அவ்வளவு பிசி. இன்று தனக்காக இவ்வளவு நேரம் ஒதுக்கி காத்திருந்து பேசுகிறாள் என்றால், அவள் தன் குறிக்கோளை நிறைவேற்று வதில் பிடிவாதமாக இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு கீர்த்தனாவுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. மறுத்துப் பேசி, அம்மாவின் டென்ஷனை அதிகரிக்க அவள் விரும்பவில்லை. அதற்கேற்றவாறு சம்பவங்கள் நடந்தன.

ப்ளஸ் டூவில் நல்ல மார்க்குடன், நீட் தேர்விலும், தர வரிசையில் முதல் ஐம்பதில் மகள் இடம் பிடித்ததில் சாவித்ரிக்கு மிகுந்த சந்தோஷம்.

மருத்துவ கவுன்சலிங் முடிந்து, அருகிலிருந்த அரசு கல்லூரியில் சீட் கிடைத்ததை சக மருத்துவர்களிடம் சொல்லி கொண்டாடினாள்.

ADVERTISEMENT

அந்த சந்தோஷ தருணத்தில், "ஒரு டாக்டருடைய மகள் டாக்டருக்குத்தான் படிக்கணும் என்ற கருத்துக்கு மாற்று கருத்தே இருக்க முடியாதா?' மகளின் இந்தக் கேள்வி, சாவித்ரியின் சந்தோஷப் பிரவாகத்துக்கு அணை போட்டது.
"வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடக்கூடாது' என்ற பயம் அவளைத் தொற்றிக் கொண்டது. உதவிக்கு டாக்டர் வசந்தனுக்குப் போன் செய்தாள்.
வசந்தன், சென்னையில் பிரபல அறுவைச் சிகிச்சை நிபுணர். சாவித்ரிக்கு சீனியர் என்பதால், மருத்துவம் உள்பட பல விஷயங்களில் அவருடைய அறிவுரைக்கு பிரத்யேக மதிப்பு கொடுப்பாள். அவருடைய அறிவுரை மகளுக்கு தற்போது அவசியம். மருத்துவப் படிப்பிற்கான எண்ணத் தடைகள் அதன் மூலம் அகலும் என்ற நம்பிக்கையுடன் அவருடனான உடனடிச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தாள்.
""எனக்கு அவசர வேலை இருக்கிறது. இன்று அவர் ஊரில் இருப்பதால் நீ மட்டும் போய், அவரைச் சந்தித்து விட்டு வா. அவர் சொல்வதை மட்டும் காது கொடுத்துக் கேள். விவாதங்கள் வேண்டாம். அந்த சந்திப்பு, உனக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும்'' என்றவள் வெளியில் கிளம்பினாள்.
அம்மா டாக்டர் என்றாலும், அவளுடன் மருத்துவமனைக்குச் சென்று பொழுதைப் போக்கும் பழக்கம், சிறு வயது முதல் கீர்த்தனாவிடம் இருந்ததில்லை.
அம்மாவின் சொல்லிற்கு கட்டுப்பட்டு வசந்னைச் சந்திக்க வசந்தன் மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.
கோயிலுக்குள் செல்வதைப் போல, அனைவரும் காலணிகளை நுழைவாயிலிலேயே பயபக்தியுடன் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தனர். உள்ளே நுழையும் ஒவ்வொருவர் முகத்திலும் ஒரு வித கலவரம் படிந்திருந்தது. அந்த கலவரம் உயிர் பயத்தினால் கூட இருக்கலாம்!
மருத்துவமனைகளுக்கே உரிய மருந்துகளின் ரசாயன நெடி, அவள் வயிற்றைக் குமட்டியது. படர்ந்து விரிந்த பளிங்குத் தரையை மெஷின் போட்டு அடிக்கடி துடைத்துக் கொண்டிருந்தார்கள்.
"டாக்டர் தியேட்டரில் இருக்கார். அரை மணியில் வந்துவிடுவார்' என்று நர்ஸ் தகவல் பகிர்ந்தாள்.
தியேட்டர் வாசலைப் பார்த்துக் கொண்டு காத்திருந்தாள் கீர்த்தனா. நடுவில், அங்கு வைக்கப்பட்டிருந்த பழைய ஆங்கில மாத இதழ்களை நோட்டம் விட்டாள். பலர் புரட்டிப் பார்த்து கிழிந்த புத்தகங்களின் பக்கங்கள் ஸ்டேபிள் பின் இடப்பட்டு, மேஜர் ஆபரேஷனுக்கு உள்ளாகிய பேஷண்ட் போல் காட்சி அளித்தன.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ஜூனியர் டாக்டர்கள் புடை சூழ தியேட்டரிலிருந்து, நடு நாயகமாக வெளியே வந்தவர்தான் வசந்தன் என்று அனுமானித்தாள்.
காத்திருந்த சில பேஷண்டுகளுக்கான ஆலோசனை முடிந்த பிறகு, கீர்த்தனா அவருடைய அறைக்கு அழைக்கப்பட்டாள்.
""டாக்டர் சாவித்ரி உன்னைப் பற்றி சுருக்கமா சொன்னாங்க'' என்று ஆரம்பித்தார்.
அவர் பேச்சு மென்மையாகவும், அழுத்தம் திருத்தமாகவும் இருந்தது. பேச ஆரம்பிப்பதற்கு முன்பு, மொபைலை சைலன்ட் மோடுக்கு மாற்றி, அந்த சந்திப்புக்கான முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினார்.
அனுபவ ரேகைகள் அவர் முகத்தில் பளிச்சிட்டன. முன்பக்கத் தலைமுடியில் லேசான நரை படர்ந்திருந்து, அது அவருடைய தோற்றத்திற்கு மெருகு ஊட்டிக் கொண்டிருந்தது. கண்களைப் பார்த்து நேருக்கு நேர் பேசினார்.
""நேரடியாக சப்ஜெக்ட்டுக்கு வருகிறேன். டாக்டர் தொழிலில் உயிர்களைக் காப்பாற்றுவதால், கடவுளாக மதிக்கப்படுகிறோம். பணத்துடன், அதற்குரிய மதிப்பும், மரியாதையும் அளவுக்கு அதிகமாகவே கிடைக்கிறது. அந்த தொழிலில் கிடைக்கும் மனதிருப்தி மற்ற தொழில்
களில் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அந்த வகையில் உன்னுடைய அம்மாவின் கருத்துதான் என்னுடையதும்'' என்று இடைவெளி விட்டு, கிளாஸிலிருந்த தண்ணீரை உறிஞ்சி, முகத்தை மெடிகேட்டட் டிஷ்யூவால் துடைத்துக் கொண்டார்.
""உதாரணத்திற்கு என்னையே எடுத்துக் கொள். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று ஆபரேஷன். ஒரு ஆபரேஷனுக்கு குறைந்தது ஒரு லட்சம். லேட்டஸ்ட் கார், பங்களா வசதிகளுக்கு குறைவில்லை. வருடத்திற்கு இரண்டு முறையாவது ஸ்பான்ஸர்ட் ஃபாரின் விஜயம். டாக்டருக்கு படிச்ச என் மகன், ஒரு டாக்டரைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவனுடைய ஆறு வயது மகனும் டாக்டருக்குத்தான் படிக்கப் போகிறான். வாழையடி வாழையா அப்படி வந்தால்தான் குடும்பத்திற்கு அழகு. டாக்டராகிய உன் அம்மா சொல்வதைக் கேட்டு நீயும் டாக்டராகி, வாழ்க்கையில் செட்டில் ஆவதுதான் உன்னைப் பொருத்தவரை விவேகமான செயலாக இருக்க முடியும். அதன் முதல் கட்டமாக நீட் பாஸ் செய்து, புத்திசாலி என்று நிரூபித்து விட்டாய்.
இப்பொழுது குழப்பத்திலிருந்து விடுபட்டு தெளிவாகி இருப்பாய் என்று நம்புகிறேன். என்னை ஒரு நல்ல நண்பனாக நினைத்து வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேள்'' என்று சொல்லி, சுழல் நாற்காலியில் பின்புறமாக சாய்ந்து உட்கார்ந்தார்.
""உங்களைச் சந்திப்பதற்கு நீங்கள் எனக்கு நேரம் ஒதுக்கியதை என்னுடைய பாக்கியமாகக் கருதுகிறேன். விலை மதிப்பில்லாத உங்கள் அனுபவத்திற்கு தலை வணங்குகிறேன்'' எழுந்து நின்று தலை வணங்கியவளை கூர்ந்து நோக்கினார் வசந்தன்.
"என்ன ஒரு பேச்சுத் திறன்..எவ்வளவு அடக்கம்!'கீர்த்தனாவை பற்றிய எண்ண எக்ஸ்ரே வசந்தனின் மனதில் பளிச்சிட்டு ஓடியது.
""பெரியவங்க அறிவுரையை சின்னவங்க கேட்கணும்கறதுதான் நியதி. ஆனால், அதற்கும் விதிவிலக்கு உண்டு''என்றவளை, கண்ணாடியை இரு கைகளாலும் கழற்றி, புருவங்களை உயர்த்தி பார்த்தார்.
""ஒரு டாக்டரின் வாரிசு டாக்டருக்குத்தான் படிக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைப் பட்டியலிடலாம். அதுதான் பெற்றோரின் விருப்பமாகவும் இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த தொழில் ஒன்றுதான் மனதிருப்தியைத் தரும் என்று அறுதியிட்டு தீர்மானித்து விட முடியாது. ஒருவரின் மனதிற்கு நேசமான தொழில் எதுவாக இருந்தாலும் அதில் மன திருப்தியை நிச்சயம் அடைய முடியும்''
கீர்த்தனாவின் ஆணித்தரமான பேச்சு வசந்தனைக் கவர்ந்தது.
அதற்கு அடையாளமாக, ""நான் சொல்லுகிற வரை யாரையும் உள்ளே அனுப்ப வேண்டாம்'' என்று உள்ளே நுழைந்த உதவியாளரை வெளியே அனுப்பினார்.
""இவ்வளவு நல்லா பேசுவேன்னு சாவித்ரி என்னிடம் ஒரு முறை கூட சொல்லியதில்லையே..நீ சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்'' ஆர்வத்துடன் கேட்டார் வசந்தன்.
""ரொம்ப நன்றி சார். தன் சார்பு நியாயத்தை சொல்ல பேச்சு ஒரு நல்ல ஆயுதம். அது வாதமாக இருக்கலாம். ஆனால், விவாதமாக மாறக் கூடாது. உங்களை மாதிரி அனுபவசாலிகளிடம் விவாதம் செய்வதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.
ஒவ்வாமைங்கறது மனித உடலுக்கு மட்டுமில்லை. மனதிற்கும் அது பொருந்தும். மனதிற்கு ஒவ்வாத எதைச் செய்தாலும், அதில் எள்ளவும் மன திருப்தியை எதிர்பார்க்க முடியாது. நான் டாக்டருக்குப் படிக்கணும்கறது என் அம்மாவின் விருப்பம் மட்டும்தான். அது என் விருப்பமல்ல. அம்மாவின் விருப்பத்திற்காக நீட் எழுதி பாஸ் செய்தேன். ஆனால், நீட்டில் தேர்வானவங்கதான் அதி புத்தி சாலி... மற்றவங்களெல்லாம், அப்படி இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால், புத்திசாலிகளுக்கும் ஒரு குறைந்த பட்ச எக்ஸ்போசர் தேவை. அம்மாதிரி எக்ஸ்போசர் அனைவருக்கும் கிடைக்க வழி செய்தால், பல புத்திசாலிகள் வெளி உலகுக்கு தெரிய ஆரம்பிப்பார்கள்!''
""அப்ப உன் மனதிற்கு நேசமானது என்னன்னு தெரிஞ்சுக்கலாமா..?''
ஏதோ சொற்பொழிவை கேட்கும் ஆர்வத்துடன் கேட்டார் வசந்தன்.
""பலநோய்களுக்கு மூல காரணம் நம் சாப்பாடுதான். ரசாயன உரங்கள், மரபணு மாற்றங்கள்னு உணவு உற்பத்தியிலேயே நம் கண்களுக்கு தெரியாத குறைபாடுகள். அதைச் சரி செய்தாலே, நோய்களை ஓரளவுக்குத் தடுக்கலாம்.''
""டாக்டர்தொழிலுக்கே வேட்டா?'' அமைதியாகச் சிரித்தார் வசந்தன்.
பதிலுக்குப் புன்னகைத்தாள் கீர்த்தனா.
""டாக்டரின் மகள் டாக்டருக்குத்தான் படிக்கணும்ங்கற கட்டாயம் இருந்தால், விவசாயியின் மகன், வாழையடி வாழையாக விவசாய தொழில்தான் செய்யணும். அது மாதிரி நடக்காததுதான் பெரிய குறை''
""விவசாயத்தைப் பற்றி பேசுகிறாய்... உனக்கும்
விவசாயத்துக்கும் என்னம்மா சம்பந்தம்?''
""இருக்கு சார். என் அம்மாவின் முன்னோர்கள் விவசாயிகள்தான். விவசாயக் குடும்பத்தில் பிறந்த என் அம்மாவை, விவசாய நிலங்களை விற்றுதான் டாக்டருக்குப் படிக்க வச்சாங்க. பரம்பரை சொத்தாக வந்த நிலங்களில் ஒரு பகுதியை ரியல் எஸ்ட்டேட் தொழிலுக்காக அப்பா பிளாட் போட்டார். துரதிர்ஷ்டவசமாக என் சிறு வயதிலேயே அவர் இறந்ததால், மீதி நிலங்கள்
எந்தவிதக் கவனிப்பும் இல்லாமல் அப்படியே இருக்கின்றன. அவற்றையும் விலைக்கு கேட்டு ரியல் எஸ்டேட்காரங்க வந்து போய்க்கிட்டு இருக்காங்க. அதைத் தடுத்து நிறுத்த நான் ஒரு விவசாயியா மாறிடலாம்னு இருக்கேன். எஞ்சி இருக்கிற நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து, வியாதிகளை தோற்றுவிக்காத உணவுப் பொருள்களை பயிர் இடுவதுதான் என் விருப்பம். அதற்காக, விவசாயப் படிப்பை தொடர்வதாக இருக்கிறேன். படிக்கும்போதே, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக, ஒரு மாடல் பண்ணையை உருவாக்கப் போகிறேன். வியாதியைக் குணப்படுத்தும் டாக்டர் தொழிலைப் போல், வியாதிகளை வழங்காத இயற்கை விவசாயத்தில் எனக்கு முழு திருப்தி கிடைக்கும். சிறு வயதில், பாட்டி தாத்தாவை பார்க்கப் போகும்போதே விவசாய ஆசை என் மனதிற்குள் வளர ஆரம்பிச்சுடுச்சு!''
""ஒரு பெண்ணால் டாக்டராக முடியும். ஆனால் விவசாயி ஆக முடியுமாங்கறது சந்தேகம்தான்'' வசந்தன் புருவத்தை மீண்டும் உயர்த்தினார்.
""ஆண்களுக்கே உரிய குத்துச் சண்டையில், பெண்ணான மேரி கோம் சாதிச்சாங்க. விண்வெளியில், கல்பனா சாவ்லா சாதிச்சாங்க. அடிப்படை ஆர்வமும், சாதிக்கணும்கற வெறியும்தான் வெற்றிக்கு முக்கியம். என் மனதிற்கு நெருக்கமான விவசாயத் தொழிலில் நான் சாதிச்சு காட்டுவேன் சார்!''
மடை திறந்த வெள்ளம் போல் தன் பக்க நியாயங்களை எடுத்துரைத்த கீர்த்தனாவை வியப்புடன் பார்த்த வசந்தன், சாவித்ரியை மொபைலில் அழைத்தார்.
""உன் மகள் வித்தியாசமானவள். சாதிக்கப் பிறந்தவள். அவளிடம் உன் கருத்தைத் திணிப்பது சரியல்ல.ஒரு டாக்டரின் வாரிசு டாக்டருக்குத்தான் படிக்க வேண்டும் என்ற நியதி தேவை இல்லை என்பதை எனக்கு நன்றாகவே புரிய வைத்தாள். கத்தி பிடிப்பதை விட, கலப்பை பிடிப்பதை அதிகம் நேசிக்கிறாள் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொண்டேன். அவளுடைய "ஏர் கொண்ட பார்வை'க்கு மரியாதை அளித்து, அவள் நேசிக்கும் விவசாயப் படிப்புக்கு ஒப்புக்கொள்வதுதான் அவளுடைய எதிர் காலத்துக்கு நல்லது''என்றவர் கீர்த்தனாவுக்கு தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

""உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்னு சொல்லுவாங்க. அந்த விதத்தில்,
மக்களுக்கு உணவு கொடுக்கும் விவசாயியும் ஒரு டாக்டர்தான் சார்!''என்ற பஞ்ச்சுடன் விடை பெற்றவளை கண்கொட்டாமல் அதிசயத்துடன் பார்த்தார் வசந்தன்.

 

 

தினமணி -  சிவசங்கரி  சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.5,000 பெறும்  சிறுகதை

Tags : kadhir Vision with Air
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT