தினமணி கதிர்

கலாம் காட்டிய வழி!

எஸ்.சந்திரமெளலி

ஸ்ரீஜன் பால் சிங். உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னெளவைச் சேர்ந்த ஐ.ஐ.டி.யில் படித்த என்ஜினியர். அடுத்து, அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ. முடித்தார். அங்கேதான்  முதல் முறையாக அன்றைய  ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமைச் சந்தித்தார்.  அதன் பின் அப்துல் கலாமுடன் இணைந்து மூன்று புத்தகங்கள் எழுதினார்.   அவரது  மறைவுக்குப் பின்  உ.பி., குஜராத், மத்திய  பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் பல்வேறு கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அப்துல் கலாமின் நினைவு தினத்தை ஒட்டி (27 ஜூலை) ஸ்ரீஜன் பால் சிங்குடன் ஒரு சிறப்பு பேட்டி:


அப்துல் கலாமுடனான உங்கள் முதல் சந்திப்பு எப்போது நடந்தது?

கலாம்,  2008- இல், நான் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்த ஐ.ஐ.எம். அகமதாபாத்திற்கு வந்திருந்தார். அங்கே நான் உருவாக்கி இருந்த ஒரு புராஜெக்ட் பற்றி அவரிடம் விளக்கினேன். ""வர்த்தக ரீதியாகவும் உங்கள் புராஜெக்ட் மிகவும் வெற்றிகரமாக இருக்கும்'' என்று பாராட்டினார். ""நாம் தொடர்பில் இருப்போம்'' என்றும் கூறினார். ஆதன் பின், நான் ஐ.ஐ.எம்- இல் எம்.பி.ஏ. வை முடித்து, தங்கப் பதக்கம் பெற்றேன். அதன் பின் டெல்லிக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். நான் பெற்ற தங்கமெடலைக் காட்டி மகிழ்ந்தேன். ""நீங்கள் புத்திசாலி. நன்றாகப் படித்தீர்கள். ஆகவே, முதல் மாணவராகத் தேர்வு பெற்றீர்கள். அதைப் பாராட்டும் வகையில் உங்களுக்கு தங்கப் பதக்கமும் கொடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள். அதெல்லாம் இருக்கட்டும். அடுத்து, உங்கள் அறிவை, இந்த நாடும், மக்களும் பயன் பெறும் வகையில் உபயோகப்படுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?''  என்று கேட்டார். உடனடியாக என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அடுத்து அவர் ""ஒரு  புராஜெக்ட் தருகிறேன். அதில் பணியாற்றுங்கள்'' என்றார்.  அதுதான் என் வாழ்க்கையில் நிகழ்ந்த திருப்புமுனைத் தருணம். 

டாக்டர் கலாம் பற்றி? 

அவர் ஒரு பிறவி ஆசிரியர். அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. "உன்னை விட இந்த சமூகமும், நாடும் பெரியது' என்பது அவர் கற்றுக் கொடுத்த பாடங்களில் மிக முக்கியமானது. அவர் உடம்பு முழுக்க பாசிடிவ் எனர்ஜி பொங்கும் மனிதர். அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாலோ, அவரது பேச்சைக் கேட்டாலோ போதும், அந்த பாசிடிவ் எனர்ஜி நமக்குள்ளும் புகுந்துவிடும். "கனவு காணுங்கள்' என்ற அவரது தத்துவம், மனிதன் சாதிப்பதற்கான அஸ்திவாரம். கனவை நனவாக்கவேண்டும் என்ற மன உறுதி இருந்தால், எதையும் சாதிக்கலாம் என்பதை தன் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியவர் அவர்.  

2012 -இல் "கலாம் ஃபவுண்டேஷன்'  என்று ஒன்றைத் துவக்கி, அவரைத்  தலைவராகவும், நான் தலைமை நிர்வாகியாகவும் இருந்து சமூகப் பணியில் ஈடுபட்டோம். அவர் இருந்தவரை, அவரது கட்டளைகளை நிறைவேற்றுவதுதான் என் பணியாக இருந்தது. அவர் மறைந்தபோது, "ஃபவுண்டேஷன் பணிகளை நிறுத்திவிட்டு, கார்பரேட் கம்பெனியில் பணிக்கு சேரப்போகிறாயா? இல்லை கலாமின் கனவுகளை நிறைவேற்றப் பாடுபடப்போகிறாயா?' என என் மனசாட்சி என்னைக் கேட்டது. அதற்கு என் பதில், அவரது கனவுகளை நிரைவேற்றுவதுதான் இனி என் வாழ்க்கை என்பதாக இருந்தது. அதன்படி, பல்வேறு மாநிலங்களிலும், பல்வேறு கல்வி, சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். என் காலத்துக்குப் பிறகு, இன்னும் சில இளைஞர்களால் இந்தப் பணி தொடரப்படவேண்டும் என்பதே என் விருப்பம். 

உங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாகச் சொல்ல முடியுமா? 

நாடெங்குமிருந்து ஏராளமானவர்கள் எங்களுடன் கைகோர்த்துப் பணியாற்றி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் படிப்புக்கு வழி செய்திருக்கிறோம். ஏராளமான இலவச நூல் நிலையங்களை உருவாக்கி இருக்கிறோம். பள்ளிக்கூடங்களில் நூல் நிலையங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். வீட்டு நூல் நிலையங்களை ஊக்குவிக்கிறோம். இதுவரை 450 கலாம் நூல் நிலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

லஞ்ச ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவது கலாமின் கனவாக இருந்தது. நீங்களும் அது குறித்து செயல்பட்டு வருகிறீர்கள். அதற்காக விருதுகள் கூட கொடுக்கிறீர்கள் போல இருக்கிறதே?

டாக்டர் கலாம், அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றி இருக்கிறார். ஒவ்வொரு துறையிலும், அரசு இயந்திரத்துக்கே உரிய குறைபாடுகள் இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் மீறி சாதனைகள் புரிந்திருக்கிறார். அதே சமயம், அரசாங்கத்தில் வெளிப்படையான தன்மை மிக அவசியம். அதுவே லஞ்ச ஊழலற்ற சமுதாயம் அமைய வழிவகுக்கும் என்று வலியுறுத்தியவர் அவர். 

எனவே, அவர் கனவை நனவாக்கும் வகையில் அரசு நிர்வாகத்தில் புதிய முயற்சிகளை செயல்படுத்துபவர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் அளிக்கிறோம். ஓர் இடத்தில் செய்யப்படும் நல்ல விஷயங்களை நாட்டின் மற்ற பகுதிகளில் நிகழ்ச்சிகளில் பேசும்போது, டாக்டர் கலாம் பாராட்டிச்  சொல்வார். அதைத்தான் நாங்கள் இன்று  பின்பற்றுகிறோம். 

நாட்டின் எங்கோ இருக்கும்  ஒரு சிறிய மாவட்டத்தில் புதிய முயற்சிகள் செயல்படுத்தப்படும்போது, அவர்களுக்கு விருது அளித்து ஊக்குவிப்பதன் மூலமாக, அந்த நல்ல விஷயத்தை மற்றவர்களும் தெரிந்துகொண்டு, தங்கள் பகுதிகளிலும் செயல்படுத்த முன்வருவார்கள் இல்லையா?  உ.பி. யில் ஒரு மாவட்ட ஆட்சியர், பெண்களுக்கு மோட்டார் பொருத்திய சைக்கிள் ரிக்ஷாக்களை  வழங்கினார். இதன் மூலமாக பெண்களுக்கு வேலைவாய்ப்பும், பெண் பயணிகளுக்கு பாதுகாப்பும் கிடைத்தது. 

இன்னொரு மாவட்டத்தில் தண்ணீர் சேமிப்பில் புதிய யுக்திகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒரு மாவட்ட ஆட்சியர், எம்.பி.ஏ. மாணவர்களை, ஒவ்வோர் அரசாங்கத்துறைக்கும் ஒருவராக அனுப்பி வைத்து,  மக்கள், அரசாங்கத் திட்டங்களின் பயன்களை எளிதாகப் பெற நெறிமுறைகளை எப்படி எளிமைப்படுத்தலாம் என ஆராய்ந்து ஆலோசனைகள் அளிக்கும்படி செய்தார். 

இப்படி ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். விருது பெற்றவர்களின் புதிய அணுகுமுறைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட இருக்கிறோம். அதன் மூலமாக மேலும் பலர் பயன்பெற முடியுமல்லவா?

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?   

பொதுவாகவே அரசு பள்ளிகளில் கற்பிப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் குறைவாக உள்ளன. இந்த கோவிட் தொற்று நிலைமையை இன்னும் மோசமாகப் பாதித்துள்ளது. எனவே, மீண்டும் பள்ளிகள் திறக்கும்போது, இந்தக் குறைபாட்டினைச் சரி செய்யும் வகையில் பாசிட்டிவான தாக்கம் ஏற்படுத்தும் வண்ணம் ஏதாவது செய்ய வேண்டும். அந்த வகையில் தொழில்நுட்பத்துடன் கூடிய கற்பிக்கும் உபகரணங்களை வடிவமைப்பதில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். அதன் மூலமாக பின் தங்கிய பகுதிகளில், அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள்.  

இன்னொரு முக்கியமான பணி, இணையத்தில் கலாம் ஸ்கூல் என்று ஒன்றை உருவாக்கப்போகிறோம். இன்று கலாம் நம்மோடு இல்லை; ஆனால், அவர் சொன்ன பல நற்கருத்துகள், ஆலோசனைகள் நம்மிடம் உள்ளன. மெய்நிகராக கலாமை டிஜிட்டல் முப்பரிமாணத்தில் உருவாக்கி, அவரது கருத்துகளை, ஆலோசனைகளை ஓர் ஆசிரியராக அவரே சொல்லிக் கொடுப்பது போல செய்யப் போகிறோம்.  

அடுத்ததாக, இந்த கோவிட் தொற்றுக்குப் பலியாகிவிட்ட பெற்றோர்களின் குழந்தைகள் படிப்பை முடிக்கவும், கூடவே திறன் மேம்பாட்டு தொழிற் பயிற்சி பெறவும் ஒரு திட்டம் உள்ளது. அதன் மூலமாக, அவர்கள் வாழ்க்கையில் சொந்தக் காலில் நிற்கவும், விரும்பினால் மேற்கொண்டு படிக்கவும் வழி செய்யப்படும். மேலும், இந்த தொற்றுக் காலத்தில், நாடெங்கும் நாலரை லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கினோம். 60 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகித்தோம்.

நாடெங்கும் நீங்கள் மேற்கொள்ளும் பல்வேறு வகையான பணிகளுக்காக ஏராளமான நிதி தேவைப்படுமே? அதற்கு என்ன செய்கிறீர்கள்? 

நன்கொடை திரட்டி, பவுண்டேஷனின் நிதி ஆதாரத்தைப் பெருக்குவதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. பல்வேறு தரப்பினரும், நிறுவனங்களும் எங்களுக்கு உதவ முன்வருகிறார்கள். அவர்களிடமிருந்து நன்கொடை வாங்கிக் கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் பொறுப்பில் ஒரு பணியை மேற்கொள்ளச் செய்கிறோம் எங்களின் திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பினை அவர்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்ளச் செய்கிறோம்.

டாக்டர் கலாமுடன் இணைந்து புத்தகம் எழுதிய அனுபவத்தை நினைவு கூறுங்களேன்? 

ஒரு முறை, அவர், "நீ ஒரு டைரி வைத்துக்கொள். அதில் அன்றாடம் நடக்கும் முக்கிய விஷயங்களை குறித்து வை' என்று சொன்னார். அன்றைய தினமே நான் அன்றாட விஷயங்களை டைரியில் குறித்து வைத்துக் கொள்வேன்; அல்லது கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பேன். அந்த விஷயங்களின் தொகுப்புதான் நாங்கள் இணைந்து எழுதிய "என்னால் என்ன கொடுக்க முடியும்?' என்ற புத்தகம்.

டாக்டர் கலாமுடனான மறக்க முடியாத அனுபவம் ஏதாவது சொல்லுங்களேன்? 

2009 -இல், அவரைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் வந்திருப்பதை அவரிடம் சொன்னவுடன், என்னையும் தன்னுடன் சாப்பிடச் சொன்னார். 

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் வடக்கே என்பதால், நான் முருங்கைக்காய் சாப்பிட்டதே இல்லை. எனவே, சாப்பாட்டில் இருந்த முருங்கைக்காயின் உட்புறத்தில் இருக்கும் விழுதை சாப்பிடவேண்டும் என்று தெரியாமல், அப்படியே கடித்து சாப்பிட்டு கஷ்டப்பட்டுவிட்டேன். அதன் பின் அவர், "இவருக்கு  முருங்கைக்காய் எப்படி சாப்பிடவேண்டும் என்று கூடத் தெரியாது' என்று தமாஷ் செய்வார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT