தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை நோய்... விளைவுகள்... மருத்துவம்!

25th Jul 2021 06:00 AM | பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்

ADVERTISEMENT

 

என் வயது 58. கடந்த 25 ஆண்டுகளாக சர்க்கரை உபாதைக்கான ஆங்கில மருந்துகளைச் சாப்பிடுகிறேன். வெறும் வயிற்றில் 168 மி.கி., உணவிற்கு ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு, 179 மி.கி. அளவில் ரத்த சர்க்கரை அளவும், எச்பிஎஐசி 6 -9 என்ற அளவிலும் உள்ளது.  கடும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. கால்விரல் இடுக்கில் சேற்றுப் புண் ஏற்பட்டு சிறு குழியாகி வலிக்கிறது.  நரம்பு பலவீனத்தை கால்களில் உணர்கிறேன்.  என் சொந்த வேலைகளையே முடிக்க முடியாமல் உடல் சோர்வை உணர்கிறேன்.  சிறுநீர் நுரைத்த மாதிரி போகிறது. இவற்றையெல்லாம் குணப்படுத்த முடியுமா?

- சுப்பிரமணியன், சுவாமிமலை.

சர்க்கரையின் அளவை ரத்தத்தில் மேலும் கட்டுப்படுத்தக் கூடிய சில ஆயுர்வேத மருந்துகளையும்  நீங்கள் ஆங்கில மருந்துகளை நிறுத்தாமலேயே 
சாப்பிடலாம். 

ADVERTISEMENT

பொதுவாகவே சிலர் ஆங்கில மருந்துகளை நிறுத்திவிட்டு ஆயுர்வேத மருந்துகளை தொடங்க விரும்புகிறேன் எனக் கூறுகின்றனர். எந்த ஒரு மருந்தையும் தடாலடியாக நிறுத்திவிட்டு, வேறு ஒரு புதிய மருந்தைத் தொடங்குவது சரியாக இருக்காது. 

சாப்பிடும் மருந்துகளைச் சிறிது சிறிதாக நிறுத்துவதும், புதிதாகத் தொடங்கும் மருந்துகளையும் ஏற்கெனவே சாப்பிடும் மருந்துகளுக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் சாப்பிடுவதுமே உபாதையைக் கட்டுக்குள் வைத்து இருக்கும் சிறந்த உபாயமாகும். அந்த வகையில் கதககதிராதி கஷாயம் எனும் மருந்தை நீங்கள் 15 மி.லி. எடுத்து , 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, 5 கிராம் திரிபலா சூரணத்தை நிதானத்துடன் வாயில் போட்டுக் கொண்ட பிறகு, கஷாயத்தைக் குடிக்கலாம்.  இதனால் மலச்சிக்கல் நீங்குவதற்கும், சர்க்கரை உபாதையை மேலும் கட்டுப்படுத்துவதற்குமான வாய்ப்பை உடலுக்கு ஏற்படுத்தித் தருகிறீர்கள். இதைக் காலையில் வெறும் வயிற்றில்  ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம்.  

ஆங்கில மருந்துக்கும் இம் மருந்திற்கும் சுமார் ஒரு மணி நேரம் இடைவெளி இருந்தால் போதுமானதாகும்.

 விரல் இடுக்கில் ஏற்பட்டுள்ள புண் ஆறுவதற்கு, ஜாத்யாதி கிருதம் எனும் நெய் மருந்தை நீராவியில் உருக்கி, பஞ்சினால் முக்கி எடுத்து, குழிப்புண்ணின் மீது வைக்கலாம். வறண்ட புண்ணாக இருக்குமிடத்தில் இந்த நெய் மருந்தைப் போடலாம். கசிவுடன் கூடிய புண்களில், கசிவு குணமாகும் வரை திரிபலா சூரணத்துடன் கலந்த கருங்காலிக் கட்டையைச் சிராத்தூளாகச் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி புண்ணைக் கழுவி வரலாம். 

 நரம்பு பலவீனத்தைப் போக்க, க்ஷீரபலா 101 எனும் சொட்டு நெய் மருந்தை, 10 -15 துளிகள், 150 மி.லி. சூடான பாலுடன் கலந்து, 5 கிராம் அஸ்வந்தாசூரணத்தைக் கவனத்துடன் வாயில் போட்டுக் கொண்ட பிறகு, பாலைக் குடிக்கலாம். மாலையில் சுமார் 4 மணி வாக்கில் இதனைக் குடிப்பது நலம்.

சுறுசுறுப்பான நடைப்பயிற்சியை காலை அல்லது மாலை வெறும் வயிற்றில் சுமார் 30 -45 நிமிடங்கள் செய்வதை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், மூளையில் ஏற்படும் அயர்வானது  ரத்த ஓட்டத்தின் சீரான வரவால் குறைந்து உங்களுடைய சொந்த வேலைகளைப் பிறரின்  உதவியின்றிச் செய்ய முடியும். அதுபோன்ற உத்வேகத்தை நடைப்பயிற்சியே ஏற்படுத்தித் தரும். 

சரக்கொன்றைப்பட்டை, கடுக்காய்த்தோல், உலர்திராட்சை, நெருஞ்சில் விதை, திரிபலைச் சூரணம் ஆகியவற்றை சம எடையாக  வகைக்கு 5 கிராம் எடுத்து, அரை லிட்டர் சூடான தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலை வ டிகட்டி, உணவிற்கு அரை மணி முன்பு சாப்பிடுவதால், சிறுநீர் நுரைத்த மாதிரி  போகும் உபாதையும் குறையும். 

(தொடரும்)

Tags : kadhir Effects ... Medicine!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT