தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 45

18th Jul 2021 06:00 AM | கி. வைத்தியநாதன்

ADVERTISEMENT

 

நரசிம்ம ராவ் தலைமையிலான புதிய அரசு அறிமுகப்படுத்திய பல பொருளாதாரக் கொள்கைகள் ஒருபுறம் கடும் விமர்சனத்தையும், இன்னொருபுறம் வரவேற்பையும் பெற்றிருந்தன. பிரதமர் நரசிம்ம ராவின் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளுக்கு உறுதுணையாக இருந்தவர் நிதியமைச்சராக அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் மன்மோகன் சிங் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.

அதே நேரத்தில், டாக்டர் மன்மோகன் சிங்கின் பின்னணி குறித்துப் பலருக்கும் இன்றுவரை முழுமையாகத் தெரியாது என்பதுதான் உண்மை. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் மன்மோகன் சிங், சிறிது காலம் ஐ.நா. சபையின் அமைப்புகளில் பணியாற்றிவிட்டு, இந்தியாவுக்கு வந்துவிட்டார். பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும், தில்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் மன்மோகன் சிங், 1972 முதல் 1976 வரை இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்த போது, ரிசர்வ் வங்கியின் ஆளுநராக டாக்டர் மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டது குறித்து முன்பே குறிப்பிட்டிருந்தேன். ராஜீவ் காந்தி பிரதமரானதைத் தொடர்ந்து, அவரைத் திட்டக் கமிஷன் துணைத் தலைவராக நியமித்தார். 1987-இல் தான்சானியாவின் முன்னாள் அதிபர் ஜுலியஸ் நையரேரே தலைமையில் அமைந்த 53 வளர்ச்சி அடையும் நாடுகளின் அமைப்பான செளத் செளத் கமிஷனின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றினார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, அவரது பொருளாதார ஆலோசகராக இருந்தவரும் டாக்டர் மன்மோகன் சிங்தான்.

ADVERTISEMENT

டாக்டர் மன்மோகன் சிங் அரசியல்வாதியாக இருக்கவில்லையே தவிர, அரசியல் தெரியாதவரோ, அரசின் செயல்பாடுகள் குறித்துத் தெரியாதவரோஅல்ல என்பதைப் பதிவு செய்வதற்காகத்தான் இதையெல்லாம் தெரிவிக்க விழைந்தேன். திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக பிரணாப் முகர்ஜியும், நிதியமைச்சராக டாக்டர் மன்மோகன் சிங்கும் பிரதமர் நரசிம்ம ராவின் இரண்டு கரங்களாகச் செயல்பட்டனர். அவர்கள் மூன்று பேருக்கிடையிலும் நல்ல புரிதல் இருந்தது என்பதையும், பரஸ்பரம் மரியாதை இருந்ததையும் பல நிகழ்வுகளில் நான் காண முடிந்திருக்கிறது.

தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு அமைந்த சில வாரங்களில், சற்றும் எதிர்பாராத விதத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து ஓர் அறிக்கை வெளிவந்தது. "அதிமுகவின் வெற்றிக்கு ராஜீவின் மரணம் காரணமல்ல...' என்பதுதான் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கை. அந்த அறிக்கையின் தாக்கம் தலைநகர் தில்லியில் அதிர்ச்சி அலைகளை எழுப்பின. காங்கிரஸ் காரர்கள் அனைவரும் கொந்தளித்துவிட்டனர்.

அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்திலுள்ள "கேண்டீனில் சாப்பிடப் போன என்னை, யாரோ பெயர் சொல்லி அழைத்தார்கள். "தவான்ஜி உங்களை அழைக்கிறார்' என்று அவர் ஹிந்தியில் சொல்லி, ஓர் அறையைக் காட்டினார். அங்கே ஆர்.கே. தவான் சிகரெட்டைப் புகைத்தபடி அமர்ந்திருந்தார். அவரது கையில், ஒரு ஹிந்தி மாலை நாளிதழ். அதில் கொட்டை எழுத்தில் புகைப்படத்துடன் முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை வெளியாகி இருந்தது. ""என்ன இதெல்லாம்? ஏன் ஜெயலலிதாஜி இப்படியோர் அறிக்கை கொடுத்திருக்கிறார்?

உனக்கு இதுபற்றி ஏதாவது தெரியுமா?''

""சில காங்கிரஸ்காரர்கள், ராஜீவின் ரத்தத்தால் பெறப்பட்ட வெற்றி என்று சொல்கிறார்கள் என்பது உண்மை. அதற்கு இப்படி கோபமாக ஓர் அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா ஏன் கொடுத்தார் என்பது தெரியவில்லை. நான் விசாரித்துச் சொல்கிறேன்.''

""விசாரிக்க என்ன இருக்கிறது? அவர் காங்கிரஸையும் மத்திய அரசையும் குறைத்து மதிப்பிடுகிறார். இந்திராஜியின் செல்வாக்கால் 1971-இல் அசுர பலத்துடன் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த கருணாநிதியும் இப்படித்தான் நடந்து கொண்டார். 1971-இல் கருணாநிதி என்றால் இப்போது 1991-இல் ஜெயலலிதா, வேறென்ன?''

ஆர்.கே. தவான் 1971-க்கும் 1991-க்கும் தொடர்பை ஏற்படுத்திப் பேசியது எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அப்படி ஒரு சிந்தனையே அதற்கு முன்னால் எனக்குத் தோன்றவில்லை. அவர் மேலும் தொடர்ந்தார்.

""ஜெயலலிதாஜி பிரதமர் நரசிம்ம ராவைக் குறைத்து மதிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மெளனமாக இருந்தே கவிழ்த்து விடுவார். நடராஜனிடம் சொல்லி, ஜெயலலிதாஜியை இதுபோல எல்லாம் அறிக்கைவிடக் கூடாது என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள்.''

தவான்ஜியின் ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே பலித்தது. பிரதமர் நரசிம்ம ராவின் ஆதரவுடன் சுப்பிரமணியம் சுவாமி தொடுத்த வழக்குகள்தான், கால் நூற்றாண்டுக்குப் பிறகு ஜெயலலிதாவை பரப்பன அக்ரஹார சிறைச்சாலை வரை இழுந்துச் சென்று, அவரது அரசியல் அத்தியாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

தவான்ஜியிடம் விடைபெற்றுக் கொண்டு 21, ஜன்பத் சாலைக்கு நான் விரைந்தேன். வாழப்பாடி ராமமூர்த்தியின் வீடு அது. அங்கே அவர் கொந்தளித்துக் கொண்டிருந்தார். அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்ததால் அவரது நிலைமையை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது.

கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில், முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு அவர் மறுப்பு அறிக்கை கொடுக்காவிட்டால், கட்சித் தொண்டர்கள் அவரைச் சும்மா விடமாட்டார்கள். மறுப்பு அறிக்கை கொடுத்தாலோ, ஜெயலலிதாவின் கோபம் அதிகரிப்பதுடன், உறவு துண்டிக்கப்படும்.

""என்ன செய்யப் போகிறீர்கள்?''

""ராஜீவின் ரத்தம் வெற்றிக்குக் காரணமில்லை என்று அந்த அம்மா சொன்னால், நாங்கள் எப்படி மெளனமாக இருக்க முடியும்?''

""உங்கள் நண்பர் நடராஜனைத் தொடர்பு கொண்டீர்களா?''

""அவர் என்ன சொல்வார்? பேசாமல் இருங்கள் என்பார். எப்படிப் பேசாமல் இருக்க முடியும்?''

""பொறுமையாக இருப்பதைத் தவிர வழியில்லை. உடனடியாக எதிர்வினையாற்றுவது சரியாக இருக்காது. எதற்கும் பிரதமரிடம் கேட்டுவிட்டு நீங்கள் முடிவெடுங்கள்.''

""இதற்கெல்லாம் எதற்காகப் பிரதமரிடம் கேட்க வேண்டும்? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் என்கிற முறையில் நான் மறுப்பு அறிக்கை விடப் போகிறேன்.''

""யோசித்துச் செய்யுங்கள். கட்சித் தலைமையே கூட அதை விரும்பாது. அமைந்திருப்பது ஒரு சிறுபான்மை அரசு. அதிமுகவின் ஆதரவு தேவைப்படுகிறது. அதைத் தெரிந்து வைத்திருப்பதால்தான் ஜெயலலிதா துணிந்து இப்படி அறிக்கை கொடுத்திருக்கிறார். உங்கள் பிரதமரைப்போல நீங்களும் மெளனம் காத்துப் பிறகு முடிவெடுங்கள்...''

பொறுமைக்கும் வாழப்பாடியாருக்கும் எப்போதுமே காததூரம். அவரிடம் விடைபெற்று நான் சென்ற சில நிமிடங்களில், ஜெயலலிதாவின் அறிக்கைக்கு மறுப்பும், கண்டனமும் தெரிவித்துத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவர் அறிக்கை வெளியிட்டார். அதிமுக - காங்கிரஸ் உறவில் இருந்த எம்ஜிஆர் காலத்து நெருக்கம், அதைத் தொடர்ந்து வலுவிழக்கத் தொடங்கியது. இப்போது அது, இரண்டு கட்சிகளையும் எதிரணியில் நிறுத்தி வைத்திருக்கிறது.

திட்டக் கமிஷன் துணைத் தலைவராகப் பிரணாப் முகர்ஜி இருந்தபோது, வெஸ்டர்ன் கோர்ட்டில் தனக்கென்று ஓர் அறையை வைத்துக் கொண்டிருந்தார். தனிமையில் படிக்கவும், முக்கியமான நண்பர்களையும், கட்சிக்காரர்களையும் சந்திக்கவும் அந்த அறையை பயன்படுத்தி வந்தார். வெஸ்டர்ன் கோர்ட்டுக்கு அவர் அவ்வப்போது ஓய்வெடுக்க வருவது, அவரை சந்திக்க எனக்கு வசதியாக இருந்தது.

"வெஸ்டர்ன் கோர்ட்' குறித்து நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். பிரிட்டிஷாரின் காலத்திலும், 1947 இடைக்கால அரசு காலத்திலும் முக்கியமான தலைவர்கள் தங்கும் விடுதியாக இருந்தது வெஸ்டர்ன் கோர்ட். மோதிலால் நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் அங்கேதான் தங்குவது வழக்கம். தில்லியின் மையப் பகுதியான ஜன்பத்தில் அமைந்திருந்ததால், அது முக்கியத்துவம் பெற்றது என்றும் கூறலாம்.

வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டிலிருந்து பொடி நடையாக அதே சாலையில் இருக்கும் வெஸ்டர்ன் கோர்ட் நோக்கி நடக்கத் தொடங்கினேன். பிரணாப் முகர்ஜி மட்டுமல்லாமல், ஜி.கே. மூப்பனாரின் அறையும் அங்கேதான் இருந்தது என்பதால், இரண்டு பேரில் யாராவது ஒருவரை சந்தித்து விடலாம் என்று நான் போனேன்.

வெஸ்டர்ன் கோர்ட்டில் நுழைந்ததும் இடது கை பக்கம் பிரணாப் முகர்ஜியின் அறை என்றால், அந்த "ப' வடிவக் கட்டடத்தின் வலது பக்கப் பகுதியில் இருந்தது மூப்பனாரின் அறை. பிரணாப்தாவின் அறைக்கதவு சற்று திறந்திருந்தது. அதனால் நேராக அங்கே போனேன்.

வரவேற்பறையில் யாரும் இருக்கவில்லை. உள்ளே இருக்கும் அறையில் பிரணாப்தாவுடன் யாரோ பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. கதவுக்கு வெளியில் வெராந்தாவில் காத்திருந்தேன். சுமார் 15 நிமிடத்துக்குப் பிறகு அறையிலிருந்து வெளியே வந்தார் பிரணாப் முகர்ஜி. கூடவே, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வி.என். காட்கில்.

வெளியே நான் நிற்பதை அவர்கள் இருவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களது முகபாவத்திலிருந்து தெரிந்தது. என்னை ஆச்சரியமாகப் பார்த்தார் காட்கில்.

""நீ எப்போது வந்தாய்?'' - கேட்டது பிரணாப்தா.

""சுமார் 15 நிமிடம் இருக்கும். உள்ளே யாரோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் வெளியில் வெராந்தாவிலேயே நின்றுவிட்டேன்.''

""சரி, உள்ளே வா...''

பிரணாப்தாவும், வி.என். காட்கிலும் மீண்டும் அறைக்குச் சென்றனர். நானும் தொடர்ந்தேன். அவர்கள் வரவேற்பறை சோபாவில் அமர்ந்தனர். வாயிற்கதவை சாத்திவிட்டு வந்து அமரும்படி சொன்னார் பிரணாப் முகர்ஜி.

""உங்களைப் பற்றி பத்து நிமிடம் முன்னால் தான் பிரணாப்தா சொல்லிக் கொண்டிருந்தார். நீங்கள் வாசலில் நிற்கிறீர்கள். உங்களுக்குள் ஏதாவது டெலிபதி வேலை செய்கிறதா?'' - கேட்டார் காட்கில். நான் எதுவும் பேசாமல் புன்னகைத்தேன். பிரணாப்தா பேசத் தொடங்கினார்.

""தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? ஜெயலலிதாஜி ஏன் இப்படி ஓர் அறிக்கை கொடுத்தார்? அதற்கு என்ன பின்னணி? அதுபற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?''

""எனக்கு எந்தப் பின்னணியும் இருக்கும் என்று தோன்றவில்லை. "ராஜீவ் காந்தியின் ரத்தத்தால் பெற்ற வெற்றி' என்று காங்கிரஸ்காரர்கள் திரும்பத் திரும்பச் சொன்னதால், தனக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்று சொல்கிறார்களோ என்கிற முதல்வர் ஜெயலலிதாவின் எரிச்சல்தான் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.''

""இது உனது யூகம். எனக்கு என்னவோ இதற்குப் பின்னால் ஏதோ அரசியல் காரணம் இருக்கும் போலத் தெரிகிறது. ஜெயலலிதாஜி ஆட்சியில் பங்கு கேட்க நினைக்கிறார் போலிருக்கிறது. காங்கிரஸை மிரட்ட நினைப்பதாகத் தோன்றுகிறது...''

""இதை சட்டை செய்யாமல் விடுவதுதான் சரி என்று நான் நினைக்கிறேன். வாழப்பாடி ராமமூர்த்தி வீட்டிலிருந்துதான் வருகிறேன். அவர் காரசாரமாகக் கண்டன அறிக்கை வெளியிடுவார் போலிருக்கிறது. உங்கள் கவனத்துக்கு இந்தப் பிரச்னையைக் கொண்டு வருவதற்காகத்தான் இங்கே வந்தேன்.''

அதுவரை மெளனமாக இருந்த வி.என். காட்கில், பேசத் தொடங்கினார்:

""நமக்கு நாடாளுமன்றத்தில் அதிமுகவின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில் பகைத்துக் கொள்ள முடியாது. அதே நேரத்தில், பேசாமல் இருக்கவும் முடியாது. வாருங்கள், பிரதமர் என்ன சொல்கிறார் என்று கேட்டு அதற்குப் பிறகு முடிவெடுப்போம்.''

அவர்கள் இருவரும் கிளம்பினார்கள். சாலையைக் கடந்து எதிர்த்தாற்போல
இருக்கும் "வெஸ்டர்ன் கோர்ட்' கட்டடத்திலுள்ள தபால் நிலையத்திலிருந்து, சென்னையில் இருக்கும் ம. நடராஜனை தொலைபேசியில் அழைத்தேன். அவர் மாலை விமானத்தில் தில்லி கிளம்பிவிட்டதாகச் சொன்னார்கள்.

நடராஜன் அவராக வருகிறாரா, இல்லை முதல்வர் ஜெயலலிதா சொல்லி வருகிறாரா என்பது தெரியாத குழப்பம் என்னில் நிலவியது.

அவர் வருகைக்காகக் காத்திருந்தேன்.

(தொடரும்)

Tags : pranab mukherjee பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் K Vaidiyanathan கி.வைத்தியநாதன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT