தினமணி கதிர்

உயிருக்கு

18th Jul 2021 06:00 AM | நா.கோகிலன்

ADVERTISEMENT

 

பொட்டல் காட்டில் பேருந்திற்கு காத்திருக்கும் பயணி நிமிடத்திற்கொரு முறை பேருந்து வரும் திசையை எட்டி எட்டிப் பார்க்கிற மாதிரி, அண்ணாந்து அண்ணாந்து வானத்தைப் பார்த்தார் நகராட்சி ஆணையாளர் சீனிவாசன். வானம் தேய்த்துத் தேய்த்து கழுவிவிட்ட மாதிரி சுத்தமாகவே இருந்தது. கோபமோ, ஆசையோ, வஞ்சமோ,
தீய எண்ணமோ எதுவுமில்லாத குழந்தையின் மனதைப் போல் அழுக்கற்று இருந்தது. நீலம் கலந்த வானம்.
விடியற்பொழுதை மிதித்து மிதித்து, கால் போன போக்கில் நடந்தார். நிம்மதியாகத் தூங்கி சில நாட்களாகி விட்டன. உயிருக்குப் போராடும் மனைவி, தண்ணீருக்குப் போராடும் மக்கள்.
மந்திரியின் உதவியாளர் போனில் சொல்லி விட்டார்.
""சார் நிறையப் படிச்சவர், நேர்மையானவர்னு உங்களைப் பத்தி சொன்னாங்க... திறமையா பல பிரச்னைகளை டீல் பண்ணதாகவும் கேள்விப் பட்டேன். பிரச்னையைப் பெரிசாகாமப் பார்த்துக்குங்க... நான் வருவேன். வந்தா போராட்டம் இன்னும் பெருசாகும், போராட்டத்தை தூண்டி விடறது, போராட்டம் பண்றது, எல்லாமே எதிர்க் கட்சி ஆளுங்க, வேணும்னே அதிகமா கூச்சல் போடுவாங்க... கல்லுல, செருப்புல அடிக்கக் கூட தயங்க மாட்டாங்க. தண்ணீர்ப் பிரச்னை தீரணும்ங்கிறது அவங்களுக்கு முக்கியமில்லை. வர்ற எலக்சன்ல நான் ஜெயிக்கக் கூடாது... என்னை அசிங்கப் படுத்தணும். அதற்கான அரசியலை இங்கே முன் வைக்கிறாங்க'' அவர் பேசிக்கொண்டே இருந்தார். சீனிவாசன் துண்டித்துக் கொண்டார்.
நேற்று கல்லூரி எதிரே நெடுஞ்சாலையில் போராட்டம். பெண்களையும், சிறுவர்களையும் காலிக் குடங்களோடு உட்கார வைத்து விட்டார்கள். பத்து நிமிடத்தில் யுத்தக் களத்தில் நின்றார். அதற்குள் நூற்றுக் கணக்கில் இரண்டு புறமும் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பள்ளிவேன்கள், பேருந்துகள், கார்கள், லாரிகள், ஆட்டோக்கள் இரு சக்கர வாகனங்கள்.
சமாதானம் சொல்லி முடிப்பதற்குள், மைல் கணக்கில் வாகனங்கள் நின்று விட்டன. சமாதானத்தை ஏற்க வேண்டுமே... இரண்டு கைகளையும் கூப்பி சீனிவாசன், ""உடனடியா நடவடிக்கை எடுக்கிறோம்'' என்ற போது, ""நெத்தியில திருநீறு பூசி பவ்யமா சொன்னா நாங்க கேட்டுக்கணுமா?'' என்ற எதிர்க் கேள்வி தாக்கியது.
"கடவுள் கைவிட மாட்டார்' என்று சொன்னதே தப்பாகி விட்டது.
""கடவுள் மேல குற்றம் சுமத்திட்டு, நீ ஒதுங்காத, எங்களுக்கு தண்ணி தா'' கடுங்குரல், மிரட்டியது.
""இப்பவே தண்ணீர் வேணும்''
எந்த விளக்கமும் அவர்களிடம் சொல்ல முடியவில்லை..
""கண்டிப்பா இந்த நிமிசத்துல இருந்து நடவடிக்கை எடுக்கிறோம்'' மறுபடியும் கைகளை உயர்த்தி கும்பிட்டார்.
இன்ஸ்பெக்டர் லட்டி எடுத்து துரத்துவதற்காக காவலர்களோடு காத்திருந்தார். ""வேணாம் சார், மென்மையா சமாதானம் சொல்லித்தான் அனுப்பணும்''
""இப்பவே வேணும்னு சொல்றாங்களே... பிஸ்கட்டா, மிட்டாயா உடனே வாங்கித் தர்றதுக்கு''
""இல்லை சார், அவங்களுக்கு இப்பவே கிடைக்காதுன்னு தெரியும். ஆனால் தண்ணீர் வேணும்; நாம ஏதாவது ஏற்பாடு பண்ணுவோம்னு நம்பறாங்க... அதனாலதான் போராடறாங்க... அவங்க நம்பிக்கையை ஏமாற்றக் கூடாது. நல்லவிதமா சொல்லி அனுப்பலாம்''
கால்களில் விழுந்து கும்பிடவில்லை. மற்றபடி நிறைய கெஞ்சினார்.
போராட்டம் ஓர் இடத்தில் மட்டும் இல்லை. நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம். அரசு மருத்துவமனை எதிரில் போராட்டம், ரயில்வே ஸ்டேசன் முன்பு போராட்டம். சமாதானம் சொல்லி மீள்வதற்குள் பொழுது போய் விட்டது.
நேற்று மாலை அதிகாரிகள், பணியாட்கள் அனைவரையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
""ஆலோசனைக் கூட்டம் போட்டா தண்ணி வந்துடுமா? இவருக்கு வேலை வெட்டி இல்லை'' முதுகிற்குப் பின்னால் முனங்கிக் கொண்டார்கள்.
""சார்! நிலத்தடி நீர் மட்டம் சுத்தமா இல்லை. ஒரு வார்டுக்கு பத்து போர்வெல். மொத்தம் இருபது வார்டு. இருநூறுக்கு மேல போர்வெல். நாலே போர்வெல்லதான் தண்ணீர் வருது. மற்ற எதுலயும் வரலை'' நீர்வளத்துறை பொறியாளர் சொன்னார்.
""புதியதாக ஓர் இடம் பார்த்து தேடி, நல்ல நீரோட்டம் இருக்கிற மாதிரி பாய்ண்ட் பார்த்து பெரிய போர்வெல் போடலாமே...''
""எங்கே சார் இருக்கு? ஒவ்வொரு வருசமும் தேடித் தேடி போட்டாச்சு''
""ஜனங்க தண்ணீர் இல்லாம கஷ்டப்படறாங்க சார்''
""கோபிச்சுக்காதீங்க... ஜனங்க இதைவிட கஷ்டப்படணும். தண்ணீர் இருக்கும் போது சிக்கனம் பண்ணத் தெரியாது. தாராளமா செலவுப் பண்ணுவாங்க... மழைநீர் சேமிப்புத் தொட்டி கட்ட மாட்டாங்க, மரம் நட மாட்டாங்க''
""சார்! அட்வைஸ், அறிவுரை, பழிவாங்கல் இதுக்கெல்லாம் இப்போ நேரமில்லை, தாகத்துக்கு தண்ணீர் கேட்கிறாங்க... தண்ணீர் வேணும்னு போராடும் அத்தனை பேரும் வசதி படைச்சவங்க இல்லை. எந்த வசதியும் இல்லாத ஏழைகள். இன்னைக்கு நிலைமைக்கு ஏழைகள்
தண்ணீர் விரையம் பண்ண வாய்ப்பே இல்லை. அவங்க வீட்ல போர்வெல் இல்லை. சின்டெக்ஸ் டேங்க் இல்லை. பாத்ரூம்ல பைப், கிச்சன்ல பைப், ரெஸ்ட் ரூம்ல பைப் எதுவும் ஏழைகள் வீட்டில் இல்லை. ஷவர் இல்லை. குளியல் தொட்டி இல்லை. அப்புறம் எப்படி ஏழைகள் தண்ணீரை விரயம் பண்ண முடியும்.? நான்கோ, ஐந்தோ, பிளாஸ்டிக் குடங்களில் பிடித்துதான் உபயோகப்படுத்தறாங்க... அவங்கதான் நம்மகிட்ட தண்ணீர் கேட்கிறாங்க. பணக்காரங்க வீட்ல போர்வெல் இருக்கு. போர்வெல்ல வரலைன்னா லாரி தண்ணீர் விலைக்கு வாங்க முடியுது. நாம தண்ணீர் ஏற்பாடு பண்றோம். ஏழைகளால நான்கு குடங்கள்தான் பிடிக்க முடியுது. பணக்காரன் நாலாயிரம் லிட்டர் பிடிச்சி தேக்கி வைச்சிக்கிறாங்க.. உண்மையாகவே குடிக்கத் தண்ணீர் இல்லாம கஷ்டப்படறது ஏழைகள்தான். உண்மைகளை அதிகாரிகளிடம்
சொல்லக் கூடாது. புரியாது. அவர்களுக்கு எளியவர்களின் கஷ்டம் அனாவசியம்''
மகள் காயத்ரியிடமிருந்து போன், ""ஹலோ! சொல்லுடா பாப்பா''
""ஏம்பா... சாப்பிட வரவே இல்லை''
""அம்மா சாப்பிட்டாளா?''
""ரெண்டு வாய்தான் ஊட்டி விட்டேன். சைகையில் உன்னையே கேட்கிறாங்க. கவலையா இருக்குப்பா... பயமாவும் இருக்கு... சீக்கிரம் வாங்க...ஏம்பா
சாப்பிட்டீங்களா?''
""இல்லைம்மா, பசிக்கலை''
""குடிநீர் பிரச்னை பெரிசாகி போச்சாப்பா... நியூஸ்ல அதைத்தான் போடறாங்க... திரும்பத் திரும்ப குடிக்க தண்ணீர் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லைன்னுதான் பேசறாங்க''
""ஆமாம்மா... நிஜம்''
""தண்ணீர் எங்கப்பா இருக்கு? எப்படி தருவீங்க''
""மேகத்துல இருக்கும்மா''
""அது தெரியாதாப்பா, மேகம் நம்ம கையிலயா இருக்கு, வானத்துலதானே இருக்கு, கிணத்துல எடுக்கிற மாதிரி, வானத்துல எடுக்க முடியுமா?''
""கடவுள் கையில இருக்குமா... வானம், மேகம்,
தண்ணீர் எல்லாமே கடவுளே வைச்சிருக்கார். அவரால மட்டுமே தர முடியும்''
அவர் விரக்தியில் சொல்கிறாரா? கலவரத்தில் சொல்கிறாரா? காயத்ரிக்கும் புரியவில்லை.
""அப்பா''
""ஆமாம்மா... என் சின்ன வயசுல, நிலத்துல பயிர் நட்டுட்டு எங்க பாட்டி கடவுள் கிட்டதான்
வேண்டுவாங்க "சாமி! உன்னை நம்பிதான் பயிர் பண்ணிட்டேன், நீதான் இந்தப் பயிர்களை காப்பாத்தணும், பயிர் காஞ்சிப் போறத பார்த்தா என் அங்கத்துக்கே தாங்கலயே... உன் மனசு எப்படி தாங்குது... மழையா வா சாமி, வந்துடு சாமி'ன்னு கெஞ்சுவாங்க. மழை பெய்யும். வெள்ளாம வெளையும். பாட்டி மட்டுமில்லை, ஊர் ஜனம் மொத்தமே, கடவுள் கிட்டதான் கேட்பாங்க... வானத்தைப் பார்த்து கேப்பாங்க, மழையும் பெய்யும்... இந்த உலகம் எப்போ உண்டாச்சோ, அப்போ இருந்து வானம்தானே மழை தருது, இப்போ வானத்தை கேட்கிறதை விட்டுட்டோம், கடவுள் கிட்ட கேட்கிறதையும் விட்டுட்டோம். பூமியைத் தோண்ட ஆரம்பிச்சிட்டோம். பூமி தாய்மடி மாதிரிம்மா, துளை போட்டு, துளை போட்டு உறிஞ்சுறது ரத்தத்தை உறிஞ்சுற மாதிரி, உறிஞ்சி உறிஞ்சி எடுக்கிறோம், கடவுள் கிட்ட கேட்க மறந்துட்டோம்''
""உங்க கிட்ட கேட்காறங்களேப்பா''
""நகரத்துக்கு பொறுப்பு நான்தானே, நான் ஏதாவது செய்வேன்னு கேட்கிறாங்க. என்ன செய்றது புரியலைம்மா... அம்மாவைக் கிட்ட இருந்து பார்த்துக்கோ, அக்காவும், மாமாவும், வந்துடுவாங்க... சீக்கிரம் வர்றதுக்கு ட்ரை பண்றேன்''
""ஏதாச்சும் சாப்பிடுங்கப்பா... அம்மாதான் படுத்துட்டாங்க... நீங்களாச்சும்'' -அவளால் பேச முடியவில்லை. அழுது கொண்டே போனைத் துண்டித்தாள்.
சீனிவாசனின் மனம் அடிபட்டு ரணமாகி விட்ட மாதிரி இருந்தது. வலியா, வேதனையா?
எல்லா டாக்டர்களும் சொல்லும் கடைசி வாக்கியத்தை, இந்த டாக்டரும் சொல்லி விட்டார்.
""எங்க கையில் ஒன்னுமில்லை, இனி கடவுள்தான். நீங்க வீட்டில் வைச்சிருக்கிறதும் ஒண்ணுதான், ஆஸ்பிட்டல்ல வைச்சிருக்கிறதும் ஒண்ணுதான், போதும் இத்தனை வருஷம், அளவு தண்ணி குடிச்சது, உப்பு இல்லாம, சரக்கரை இல்லாம, காரம் இல்லாம சாப்பிட்டது, அவங்க கேட்கிறதைக் கொடுங்க'' என்று கூறி விட்டார்.
மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கு சம்பூரணி சம்மதிக்கவில்லை, ""என் உடம்பை, எவ்ளோ வேணும்னாலும் அறுத்தெடுங்க, தையல் போடுங்க, ஊசி போடுங்க மாத்திரை கொடுங்க... தடுக்கல, கடவுள் எந்த நிமிஷம் வரைக்கும் உயிர் தர்றாரோ அந்த நிமிஷம் வரைக்கும் பிழைச்சுக்கிறேன். எனக்காக இன்னொருத்தர் உடம்பை அறுக்கவோ, கிழிக்கவோ வேணாம். யாரோ ஒருத்தரோட கிட்னியை எடுத்து வைச்சிட்டா, நிரந்தரமா உயிர் வாழந்திடுவேனா? ஏதோ ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ காலத்தைக் கூட்டலாம், அவ்ளோதான். அந்த ரெண்டு மூணு வருஷமும் உயிரோட வாழறதைத் தவிர வேறென்ன சாதிக்கப் போறேன்... பயந்து பயந்து வாழணும் வேற... என்னோட கிட்னியை என் உடம்பு பாதுகாக்கல, வேற ஒருத்தரோட கிட்னியை எப்படி பாதுகாக்கும்?''
உடம்பு பலவீனமாகி, நீர் பாய்ச்சாத பூச்செடியைப் போல் வாடி வதங்கி இருந்தாலும் பேச்சு மட்டும் அத்தனை எடுப்பாக இருக்கும். சீனிவாசன் யோசிப்பார்: குயிலின் குரல் இனிமை என்கிறோம், அது எதன் பொருட்டு கூவுகிறது? அதன் மொழி யாருக்குப் புரியும்? பசியில் கூவுகிறதா, காதலில் கூவுகிறதா, ஏதேனும் உயிர் வலியில் துடித்தபடி கூவுகிறதா? பிரிவுத் துயரில் கூவுகிறதா? எதன் பொருட்டு கூவுகிறது? குயிலின் வேதனைக் குரலும் நமக்கு இனிமையாகத் தோன்றும்.
""சம்பூரணி! நீயா ஏதாவது யோசிச்சி குழப்பிக்காத... டாக்டர் இருபத்தைஞ்சி வருஷம் கியாராண்டி சொல்லி இருக்கார்''
""இருபத்தைஞ்சி வருஷம் கேரண்ட்டியா?'' வராத சிரிப்பை வரவழைத்துச் சிரித்தாள். ""எதுக்கு கேரண்டி கொடுக்கிறார். என்னோட உடம்புக்கா, கிட்னிக்கா? அறுபது வாட்ஸ் பல்ப்பா வாங்கி மாட்டப் போறீங்க? ப்யூஸ் போனா கடைக்காரன் கிட்ட ரிட்டர்ன் தர்றதுக்கும், பதிலுக்கு வேற வாங்கி மாட்டறதுக்கும்? உயிருக்கு கடவுளே கேரண்ட்டி தர முடியாது''
""சும்மா பேசாத சம்பூரணி... இருபத்தைஞ்சி வருஷம் சொல்றாங்க... பதினைஞ்சி வருஷம் வரட்டுமே''
""அம்பது வருஷம், நூறு வருஷம் கேரண்டினாலும் எனக்கு வேண்டாம். ஒரு மனுஷன் வறுமைக்காக கிட்னியை விற்கிறது, உலகத்திலேயே பெரிய கொடுமைங்க... எப்பேர்பட்ட சாபக்கேடு அது. மருத்துவ வளர்ச்சி இல்லை. வறுமையின் வளர்ச்சி. பணம்ங்கிற பூதத்தோட வளர்ச்சி. ரெண்டு லட்ச ரூபாய்க்கு கிட்னியை விற்கிறவனோட வாழ்க்கையை நினைச்சா துக்கமா வருது. என்ன வாழ்க்கைடா சாமி, பாதி உயிரை வித்துட்டாவது பிரச்னையைத் தீர்க்கலாம்னு நெனைக்கிறானே... அப்படி அவனுக்கென்ன பணப்பிரச்னை, வட்டிக்காரன் செருப்பால அடிப்பானா? பொண்ணுக்கு கல்யாணம் பண்ணணுமா? வியாபாரத்துல நொடிஞ்சிட்டானா? கிட்னியை வித்தாவது பணத்தை புரட்டணும்ங்கிற நிலைமையில இருக்கான்... பாவம். அவனுக்கு ஏதாவது உதவி பண்ணுங்க, கிட்னியைப் பிடுங்காம ஏதாவது பண உதவி பண்ணுங்க, அந்த சந்தோஷத்துல ஒரு அஞ்சு நாள் சேர்ந்து உயிரோட இருப்பேன்''
""நாம வேணாம்னு சொல்லிட்டா, அவன் கிட்னியை வேற யாருக்கும் விற்க மாட்டானா? எவ்ளோ பண உதவி பண்ணாலும்... கிட்னி விற்கிற எண்ணத்தை விட மாட்டாங்க''
""தீராத பிரச்னைல இருக்காங்கன்னு அர்த்தம்... எனக்கு வேணாம். என் சொல்லை மீறி ஏதாவது பண்ணீங்க... உயிரோட இருக்க மாட்டேன். எனக்காக ஆஸ்பிட்டலுக்கு செலவு பண்ற பணத்தை என் பேரச்சொல்லி இல்லாதவங்களுக்கு ஏதாவது செய்யுங்க'' சம்பூரணி பிடிவாதத்தை விடவில்லை.
இரண்டு பெண் பிள்ளைகளும், மருமகன்களும், டாக்டர்களும் உறவினர்களும் எவ்வளவோ கெஞ்சி விட்டார்கள். மனம் மாறவில்லை. வேறு கிட்னி பொருத்தாமலேயே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.
டயாலிஸிஸ் எத்தனை முறை பண்ண முடியும்? இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்றிருந்தது, வாரத்திற்கு ஒரு முறை என்றானது, இரண்டு தினங்களுக்கு ஒரு முறை வந்தபோது உடல் காக்கா கூடு மாதிரி ஆகி விட்டது. எலும்பு குச்சிகள் தெரிய ஆரம்பித்தது. நிறமும் கருகி விட்டது. செம்பருத்தியை தீயில் சுட்ட மாதிரி ஆகி விட்டாள். சுத்தமாக வலுவிழந்து படுக்கையோடு படுக்கையானாள். இன்றா, நாளையா? பெளர்ணமிக்கா? அமாவாசைக்கா? கிருத்திகைக்கா? திருவாதிரைக்கா? உயிர் பிரியும் தினத்தை வரவேற்க கண்ணீர்த் துளிகளைத் தேக்க ஆரம்பித்தார்கள்.
ஜனங்களுக்கு எம்.எல்.ஏவின் முகம், எம்.பியின் முகம், கவுன்சிலர் முகம், சேர்மன் முகம் ஞாபகத்தில் இருக்கிற மாதிரி அதிகாரிகளின் முகங்கள் ஞாபகத்தில் இருப்பதில்லை. யாரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை, யாரோ ஒரு சிலருக்குத்தான், சீனிவாசனைத் தெரியும். டீக்கடைக்கு, காய்கறி மார்க்கெட்டிற்கு ஓட்டலுக்கு, பேக்கரிக்கு அவரேதான் போவார். எந்தக் கடையிலாவது தரமற்ற பொருள் விற்பனைக்கு இருந்தால், ஊழியர்களை அனுப்பி நடவடிக்கை எடுக்க வைப்பார். ஊழியர்கள் கையூட்டு வாங்கும் சேதியும் அறிவார். அவர்களையும் கண்டிப்பார்.
இன்றும் அவர் தனியாக, கால் போன போக்கில் வீதிவீதியாகச் சுற்றினார். காய்ந்து போன ஏரியைப் பார்த்தார். வற்றிப் போன சிற்றோடையைப் பார்த்தார், புதைக்கப்பட்ட கிணறுகளைப் பார்த்து கண்கலங்கினார். பிளாஸ்டிக் குடங்களைத் தூக்கிக் கொண்டு திரியும் பெண்கள், சிறுவர்கள் நகரமெங்கும்
தென்பட்டார்கள். தண்ணீர் அலைய வைக்கிறது. காட்டு விலங்குகள் தண்ணீருக்காகத்தான், காட்டைவிட்டு ஊருக்குள் வருகிறது. மனிதர்களும் இங்கே தண்ணீரைத் தேடி அலைவதைக் கண்டார்.
"கடவுளே... கடவுளே...' மனம் கடவுளையே வேண்டியது. "கடவுள் எப்போதாவது தண்ணீர் இல்லையென்று அலைந்திருப்பாரா? சிவபெருமான் தண்ணீர் தேடி அலைந்துதான், கங்கையை தலை மேல் தூக்கிக் கொண்டு வந்தாரா? கங்கா சிவபெருமானின் தண்ணீர் குடம்தானா?' என்றெல்லாம் எண்ண
வெள்ளம் ஓடியது.
வெயிலின் வெப்பம் காய்ச்சல் மாதிரி ஏறிற்று. மணி பத்தாகி விட்டிருந்தது.
ஏழைகளுக்கு தண்ணீர் தந்தே ஆக வேண்டும். அவர்கள் வங்கியில் லோன் கேட்பதில்லை. கல்லூரியில் இடம் கேட்பதில்லை. குடிக்க தண்ணீர் மட்டுமே கேட்கிறார்கள்.
நீர்வளத்துறை அதிகாரியின் அலுவலகம் சென்றார்.
""சார்! நல்லா தண்ணீர் இருக்கிற பாயிண்ட் பார்த்து இரண்டாயிரம் அடி போர்வெல் போட்டுடலாம். ஜனங்களுக்கு தாராளமா சப்ளை செய்யலாம், வேற வழி தெரியலை'' என்றார்.
அதிகாரி மறுத்தார்.
""அதுக்கு அனுமதி இல்லை சார்'' என்ற அவர், ""சார் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்'' என்றழைத்தார்.
அவரோடு பேச தனியாகப் போனார்.
""சார்! நீங்க போடற திட்டங்களால நமக்கு என்ன லாபம்? போர்வெல் போட்டால், காண்டிராக்டர் பத்தாயிரம் கூட கமிஷன் தரமாட்டான். அரசியல்வாதியோட மச்சான் மினரல் வாட்டர் கம்பெனி நடத்தறார். இந்த சீசன்லதான் அவர் சம்பாதிக்க முடியும். நாம ரெண்டாயிரம் அடி போர்வெல் போட்டா, அவர் போர்வெல்ல தண்ணீர் குறையும். அதனால நாம நகராட்சி மூலமாக போர்வெல் போடுவதைத் தடுப்பார். ரெண்டாயிரம் அடி போர்வெல் போட அனுமதி இல்லைன்னு கோர்ட்ல தடை வாங்குவார்''
""அவங்க மட்டும் எப்படி சார் ரெண்டாயிரம் அடி போர்வெல்ல போட்டு தண்ணீர் வியாபாரம் பண்றாங்க?''
""பொய் கணக்கு காட்றாங்க சார். ஐநூறு அடி போட்டதா சொல்றாங்க?''
""ஏழை மக்களுக்காக நாம பொய் சொல்ல முடியாதா?''
""முடியாது. நம்ம விருப்பத்திற்கு நாம எதுவுமே செய்ய முடியாது. பணமோ, அதிகாரமோ நம்ம கையில் இல்லை. ஐநூறு அடிக்கு ஒதுக்கிட்டு, ரெண்டாயிரம் அடி போர்வெல் போடணும்னா மீதி பணத்துக்கு என்ன பண்ணுவீங்க... அப்படியே நீங்க கையிலிருந்து போட்டாலும் யாரும் போட விட மாட்டாங்க... போர்வெல் கம்பெனிக்காரனும் போட மாட்டாங்க. அவன் எம்.எல்.ஏ மச்சானுக்கு வேண்டியவனா இருப்பான். தகவல் சொல்லிடுவான். எதிர்த்துப் பேசினா உங்களுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும்''
சொல்லச் சொல்ல சீனிவாசனுக்கு மண்டை
வெடித்தது.
ஏழைகளின் தாகத்திற்கு வழியே இல்லையா?
""சார்! காண்ட்ராக்டர் ஜெயசீலன் தோட்டத்துல தண்ணீர் அம்சமா இருக்கு. ஏரி நிலத்துல பட்டா வாங்கி வைச்சிருக்கார். இருபது லாரி வைச்சி சப்ளை பண்றார். இவரும் அரசியல்வாதியோட தம்பி. நம்ம ரேட் ஒரு லாரி தண்ணீர் ஆயிரம் ரூபா. ரெண்டாயிரம் பில் போட்டு தருவார். ஐம்பது லோடு ஓட்டிட்டு நூறு லோடுக்கு பில் தருவார். இந்த சீசன்ல சம்பாதிச்சாதான், அவங்களுக்கும் லாபம். நமக்கும் லாபம். ஜனங்களோட தண்ணீர் பிரச்னையும் தீரும்''
""ஏரி நிலத்துல அவங்களுக்கு யார் பட்டா போட்டு தந்தது?''
""அது இந்தக் காலத்து பட்டா இல்லை சார், ஜமீன் பட்டா''
""ஏரி நிலத்துல அவங்க போர்வெல் போட்டு தண்ணீரை விற்று பணம் பண்ணும் போது, நகராட்சி ஏன் ஏரியில் போர்வெல் போட்டு ஜனங்களுக்கு தண்ணீர் தரக் கூடாது?''
""நாம போர்வெல் போட்டா, கோர்ட்ல போய் தடை வாங்குவாங்க, விவசாயம் பாதிக்கிறதா சொல்வாங்க... சார் ஒண்ணைப் புரிஞ்சுக்குங்க... இந்த உலகம் அரசியல்வாதிகளுக்கு சொந்தமா இருக்கு, ஜனங்களுக்கு சொந்தமா இல்லை''
""இல்லை சார், இந்த உலகம் யாருக்குமே சொந்தம் இல்லை. இது கடவுளின் படைப்பு. எல்லா ஜீவராசிகளுக்கும் சொந்தம், பட்டா, பத்திரம், எல்லாமே தற்காலிகம், நிரந்தரம் கிடையாது''
சீனிவாசனுக்கு கோபம் வந்தது. காட்டிக் கொள்வில்லை. அமைதி காத்தார். அங்கிருந்து வெளியே வந்தார். அவருக்கான ஜீப்பை கொண்டு வந்தார் டிரைவர்.
வானத்தை பார்த்துக் கொண்டே நடந்தார்.
"என் இறையே பரமாத்மாவே... வானும் மண்ணுமாய், காற்றும், நெருப்புமாய் நீரும், நதியுமாய் இருக்கிற பரம்பொருளே மழை தா, இந்த ஏழைகளைக் காப்பாற்ற உன்னை விட்டால் யாருமில்லை' மனதிற்குள் வேண்டிக் கொண்டே நடந்தார்.
எதிரே சைக்களில் ஆறு பிளாஸ்டிக் குடங்களோடு ஒருவர், ""சார்! தண்ணி எப்போ வரும்?'' என்று கேட்டார். யாரைப் பார்த்தாலும் பயமாக இருந்தது.
""நீங்க கடவுளை நம்புவீங்களா?''
""நம்புறோம்... அதுக்கென்ன?''
""கொஞ்சம் கடவுளை வேண்டுங்களேன், மழை வேணும்னு வேண்டுங்களேன், தண்ணீர் வியாபாரம் பண்றவங்க எல்லாருமே மழை வேணாம்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறாங்க... தண்ணி இல்லாம கஷ்டபடற நாம மழை வேணும்னு ஏன் வேண்டிக்க கூடாது?''
""சார்! காமெடி பண்ணாதீங்க. ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க'' முறைப்புடன்.
ஜனங்களை நினைக்க வருத்தமாக இருந்தது. "பண்டிகை செய்கிறார்கள், திருவிழா செய்கிறார்கள், கோயிலுக்கு போகிறார்கள், வேலை வேணும், திருமணம்
ஆகணும், வீடு கட்டணும், கடன் தீரணும் எல்லாத்துக்கும்
கடவுளை வேண்டிக்கிறாங்க பரிகாரம் செய்றாங்க, ஒவ்வொரு தோசத்துக்கும் ஒவ்வொரு கோயிலுக்கு போறாங்க, ஆனா மழை வேணும்னு, கடவுளை வேண்டிக்க சொன்னா நம்ப மாட்டேன்றாங்க..'
சீனிவாசன் நம்பிக்கை இழக்கவில்லை.
கடவுளை வேண்டினால் கண்டிப்பாக மழை வரும் என்று நம்பினார். அவர் மனசு ஒரு வழி காட்டியது.
மசூதிக்குச் சென்றார்... அங்கிருந்த இசுலாமியப் பெரியவர்களைச் சந்தித்தார்.
""அய்யா! தண்ணீர் இல்லாத பிரச்னை பெரிசாயிட்டே இருக்கு... நீங்க உதவி செய்யணும்''
""என்ன செய்யலாம்?''
""கடவுள்தான் மழை தரணும். இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லைன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க... ஊருக்கு பொதுவா எல்லா மதத்தினரும், எல்லா ஜாதி ஜனங்களும் ஒற்றுமையா கூடி மழை வேண்டி பிரார்த்தனை செய்யலாம்னு விருப்பப்படறேன், உங்களுக்கு நம்பிக்கை இருந்ததுன்னா நாளைக்கே... ஆத்தோர மைதானத்துல பிரார்த்தனை நடத்தலாம்'' என்று கோரிக்கை வைத்தார்.
நீண்ட நேரம் எல்லோரும் கலந்து, யோசித்து சம்மதம் சொன்னார்கள்.
அதே வார்த்தைகளோடு சர்ச் நோக்கிப் போனார்.
""ஃபாதர் கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்னு இயேசு சொல்றார், இந்த பாவப்பட்ட ஜனங்
களுக்கு மழை தாருங்க இயேசுவேன்னு பிரார்த்தனை
பண்ணலாமே...'' என்றார்.
பாதிரியார் சம்மதம் சொன்னார்.
ஊர் பெரியவர்களிடம் போனார். ஊர் தர்மகர்த்தாவைச் சந்தித்தார்.
""அய்யா! நாம் பிரார்த்தனை பண்றது புதுசு இல்லை. எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாம இருந்தப்போ நாடு பூராவும் பிரார்த்தனை செஞ்சோம். அதுக்கு பின்னாடி ரெண்டு வருஷம் உயிர் வாழ்ந்தார், மாரியம்மனுக்கு திருவிழா செய்றதே மழை வேணும்னுதான்... கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணன்னு கீதை சொல்லுது... நீங்க எல்லோருமே வந்தா உங்களோட ஜனங்களும் வருவாங்க...''
மறுக்காமல் சம்மதித்தார்கள்.
எம்.எல்.ஏ விடம் ஓடினார்.
""என்னய்யா... ஜனங்களை டைவர்ட் பண்றியா? என்னவோ பண்ணு. போராட்டம் பண்ணாம இருந்தா சரி, அப்படியாவது மழை வருதான்னு பார்ப்போம்'' சம்மதம் தெரிவித்தார்.
சீனிவாசன் நிம்மதியடைந்தார்.
மழை வேண்டி ஆற்றோரம் சர்வ மத பிரார்த்தனை பிரசுரம், சுவரொட்டி, ஒலிபெருக்கி பிரசாரம் எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு. மனம் சாந்த
மடைந்து, ஆசுவாசமாக மூச்சு விட முடிந்தது.
வீட்டிற்குப் போனார்.
கேட் திறக்கும் சத்தம் கேட்டு பெரிய மகள் சியாமளாவும், பேரப்பிள்ளைகளும் வெளியே வந்தார்கள். சியாமளா அழுதாள். கண்ணீரை அடக்க முடியவில்லை.
""அம்மாவைக் காப்பாத்தவே முடியாதாப்பா'' விம்மினாள்.
பதில் சொல்லத் தெரியவில்லை.
""கடவுள் காப்பாத்துவார்னு சொல்ல தைரியம் இல்லம்மா... கொடுத்ததும் அவனே... எடுத்துட்டு போறதும் அவனே... தடுக்கவா முடியும்? நல்லபடியா எடுத்துக்கோன்னுதான் சொல்லணும்''
அவரும் அழுதார்.
தம்பி, தம்பி மனைவி, சம்பந்தி இன்னும் உறவினார்கள் வந்து விட்டிருந்தார்கள்.
தம்பி எழுந்து நின்றார்.
""அண்ணா! எல்லாருமே தண்ணி விட்டுட்டோம்...உயிர் போகல... நீ கொஞ்சம் குடிப்பாட்டேன்''
நெஞ்சம் அடைப்பது போலானது.
""முடியாது, நான் தண்ணீர் குடிப்பாட்டினா பிழைச்சிப்பான்னு சொல்லுங்க... செய்றேன். நான் குடிப்பாட்டினா போயிடுவான்னா வேணாம். என்னால அவ உயிர் போவ வேணாம், இருக்கட்டும்'' சுவரில் சாய்ந்து விம்மினார்.
மறுநாள் மாலை.
ஆற்றங்கரையில் கூடியிருந்த கூட்டம், வெள்ளம் போல் காட்சியளித்தது.
இவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லா மதத்தினரும் வந்திருந்தனர்.
மேடையேறி சீனிவாசன் மைக்கை எடுத்தார். அனைவருக்கும், வணக்கத்தையும் நன்றியையும் கண்ணீரோடு சொன்னார்.
""தண்ணீர்ங்கிறது வெறும் தண்ணீர் கிடையாது. நம்ம உயிர். தண்ணீர் இல்லைன்னா உயிரே இல்லை. மழை வேண்டி பிரார்த்தனை செய்ய நாம இங்கே கூடி இருக்கோம். மழையை யார் தர முடியும்? கடவுள்தானே தர முடியும்? தண்ணீரை யார் தந்தாலும் அவர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள். உங்களில் கடவுளும் இருக்கிறீர்கள். உங்களிடம் நான் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். சில வீடுகளில் தண்ணீர் வசதி இருக்கிறது. பல ஏழை எளியவர்கள் வீட்டில் தண்ணீர் வசதி இல்லை. ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும், ஒவ்வொரு சொட்டு உயிர். ரோட்டில் ஆக்ஸிடென்ட்டாகி யாராவது விழுந்திருந்தால் அவர்களுக்கு உயிர்த்தண்ணீர் கொடுக்க ஓட மாட்டீர்களா? அப்படித்தான் தண்ணீர் இல்லாமல் உயிருக்குப் போராடுகிறார்கள். தண்ணீர் வளத்தோடு இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு உயிர் தாருங்கள். உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன். நீங்கதான் இப்போ கடவுள். வணங்கி கேட்கிறேன்''
அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை
அழுதார். அழுதார். அழுவதற்கு மட்டுமே முடிந்தது.
""இதுதான் என் வேண்டுதல்... என் பிரார்த்தனை வாழும் தெய்வங்கள் உங்களால் முடியும்'' உணர்ச்சி பொங்க கேட்டார்.
அங்கேயே மேடையிலேயே பலன் கிடைத்தது.
எம்.எல்.ஏ மைத்துனர் தினமும் பத்து லாரி தண்ணீர் இலவசமாக வழங்குவதாக மேடையில் கூறினார். மேலும் சில வசதி படைத்தவர்கள் மேடைக்கு வந்து தண்ணீர் தருவதாகத் தெரிவித்தார்கள்.
மழை வேண்டி கூட்டு பிரார்த்தனையும் வெகு சிறப்பாக
நடந்தது.
அடுத்த நாள் வாக்குறுதிகள் நிறைவேறிக் கொண்டிருந்தன. ஜனங்களுக்கு தண்ணீர் கிடைத்தது.
சீனிவாசன் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு தினங்களாக வெயில்தான் வாட்டி எடுத்தது. மூன்றாம் நாளும் மிதமிஞ்சிய வெயில். இரவு பதினொரு மணி தூக்கம் வராமல் வெளியே வந்து வானம் பார்த்தார். மழைக்கான அறிகுறி தெரிவதாக நினைத்த கணமே வானம் கொட்டியது. மனதில் ஆனந்தம் துள்ளியது.
"கடவுளே'
""அம்மா!'' காயத்ரி கத்தினாள்.

Tags : kadhir For life
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT