தினமணி கதிர்

திரைக்கதிர்

11th Jul 2021 06:00 AM | - ஜி.அசோக்

ADVERTISEMENT


உலக அழகியாக 2000- ஆம் ஆண்டு தேர்வான பிரியங்கா சோப்ரா தமிழில் தான் முதன்முறையாகநடிகையாக அறிமுகமானார். "தமிழன்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். பின்னர் பாலிவுட்டில் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா 2015 -இல் ஹாலிவுட்டில் தயாரான டிவி தொடர் "குவான்டிகோவில்' -இல் நடிக்க ஆரம்பித்ததும் அவரது வாழ்க்கை மாறியது. 2018 வரை அத்தொடரில் நடித்தார்.

அமெரிக்க இளம் பாப் பாடகர் நிக் ஜோன்சை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்ஓர் அமெரிக்க பிரஜையாகவே மாறினார். அங்கு பல கோடிகள் மதிப்பில் பிரமாண்ட வீடு ஒன்றையும் வாங்கினார்.தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, கடைசியாக "தி ஒய்ட் டைகர்' படத்தில் நடித்தார். இந்தப் படத்தயாரிப்பிலும் அவர் பங்கு கொண்டார். தற்போது நியூயார்க் நகரில் சோனா என்றரெஸ்டாரண்டை பிரியங்கா சோப்ரா திறந்துள்ளார். இது அவரது சொந்த ரெஸ்டாரண்ட். தொடர்ந்து நடிப்பு, தயாரிப்பு என இயங்கிக் கொண்டே ஹோட்டல் தொழிலையும் விஸ்தரிக்க இருக்கிறார். இந்த உணவகம் மார்ச் 26 - ஆம் தேதி தொடங்கப்பட்டது.இங்கு இந்தியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகள் கிடைக்கின்றன.

 

------------------------------------------------------------------------------

ADVERTISEMENT

 

வித்தியாசமான கதைகளைத் தேடித் தேடி நடித்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. பன்முகத் திறமை கொண்ட இவர், முழுக்க முழுக்க நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது "மெட்ரோ' படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் "கோடியில் ஒருவன்' படத்தில் நடித்து இருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது. "விடியும் முன்' என்ற படத்தை இயக்கிய பாலாஜி இயக்கத்தில் அடுத்தப் படத்தில் விஜய் ஆண்டனி இணையவுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரித்திகா சிங், மாதவனுடன் "இறுதிச்சுற்று', அசோக் செல்வனுடன் "ஓ மை கடவுளே' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 

------------------------------------------------------------------------------


விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு படங்களும் கடந்த சிலஆண்டுகளாக அதிக அளவில் உருவாகி வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் எம் எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர், மேரிகோம், மீகா சிங், சாய்னா நவால், கர்ணம் மல்லேஸ்வரி உள்பட பல விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் உருவாகி வெற்றி பெற்றுள்ளன.

குறிப்பாக "கூல் கேப்டன்' என்று அழைக்கப்படும் தோனியின் வாழ்க்கை வரலாறு, ஷ்ரத்தா கபூர் நடித்த பேட்மின்டன் வீராங்கனை சாய்னா ஆகியோரின் படங்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் உங்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகஉருவாக்கினால், அதில் எந்த ஹீரோ நடிக்கவேண்டும் என விரும்புவீர்கள் என தொகுப்பாளர் கேட்டார். அதற்குப் பதிலளித்த சுரேஷ் ரெய்னா, ""என் ஃபேவரைட் ஹீரோ எப்போதும் சூர்யாதான்'' என்று தெரிவித்துள்ளார்.


------------------------------------------------------------------------------


தெகிடி', "அவன் இவன்' போன்ற படங்களில் நடித்தவர் ஜனனி. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார். கரோனா தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்து வருவதால் 100 நபர்களுடன் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ஜனனி நடிகர் பரத்துடன் நடித்து வரும் "யாக்கைத் திரி' படத்திற்கான டப்பிங்கைத் தொடங்கியுள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பியது குறித்து ஜனனி பேசும் போது, ""உண்மையில், இரண்டாவது அலை நம்மை கடுமையாகத் தாக்கிய பிறகு நான் வெளியே வருவது இதுவே முதல் முறை. ஏப்ரல் மாதத்தில் இரண்டு படங்களுக்கு கிட்டத்தட்ட டப்பிங் செய்து முடித்திருந்தேன். பின்னர் கரோனா அதிகரித்ததால் வேலையை நிறுத்த வேண்டியிருந்தது. இப்போது நான் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துள்ளேன். அதனால் குறைந்தபட்சம் ஸ்டுடியோவுக்குப் போக மட்டும் சிறிது நம்பிக்கை ஏற்பட்டது.

நாங்கள் அனைவரும் முகமூடி அணிந்து முறையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் டப்பிங் செய்தோம்.

நான் உற்சாகமாக இருக்கிறேன். ஆனால் மீண்டும் வேலைக்கு வர பயமாக உள்ளது. எனக்குத் தெரிந்த பலர் கரோனாவால் இறந்துள்ளனர். ஆனால் வாழ்க்கை தொடரத் தான் வேண்டும். நாம் எப்போதும் வீட்டுக்குள் இருந்தபடியே வாழ முடியாது. தடுப்பூசியின் முதல் தவணையை எடுத்துக் கொண்டுள்ளது எனக்கு கொஞ்சம் நம்பிக்கையைத் தந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.


------------------------------------------------------------------------------


நயன்தாரா முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்துக் கொண்டே, நாயகி மையப் படங்களிலும் நடிக்கிறார். தீபாவளிக்கு ரஜினியுடன் அவர் நடித்த "அண்ணாத்த' வெளியாகிறது. அதற்கு முன் அவர் கண் தெரியாதவராக நடித்துள்ள "நெற்றிக்கண்' வெளியாக உள்ளது. இது நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்கிறார்கள். இதுவொரு நாயகி மையப் படமாகும்.தென்கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் இது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் "காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திலும் நடித்து வருகிறார். அத்துடன் ஒன்பது வருடங்களுக்கு முன் கோபிசந்துடன் அவர் நடித்து வெளிவராமல் இருக்கும் தெலுங்கு திரைப்படமும் இந்தவருடம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தமிழில் மேலுமொரு படத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. "போட்டா போட்டி' படத்தின் மூலம் இயக்குநரானவர் யுவராஜ் தயாளன். வடிவேலு நடித்த "தெனாலிராமன்', "எலி' படங்களையும் இவர்தான் இயக்கினார். இவரது இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரலாம். இது முழுக்க முழுக்க காமெடி கதை என்கிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT