தினமணி கதிர்

அப்பாவின் பார்க்கர் பேனா

11th Jul 2021 06:00 AM | லதா சங்கரலிங்கம்

ADVERTISEMENTஅப்பாவின் பேனா, கருப்புக் கலரில் வெள்ளை கோடு போட்டிருக்கும். அதன் நிப் தங்கத்தினால் ஆனது என்றும் இதுபோன்ற பேனா இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பிறகு இந்தியாவிற்கு வருவதில்லை என்றும் அப்பா சொல்வார். அந்தப் பேனாவை எல்லோரும் புழங்கும் இடத்தில் அப்பா வைக்கமாட்டார். கீழ்புறச் சுவரில் உள்ள மேல் ஆணியில் கடைப் பையில் போட்டு வைத்திருப்பார். கடைப்பை என்பது அப்பாவின் கூடவே எப்போதும் பயணம் செய்யும் பை. அதில் கடை சாவி, உறவினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் முகவரி எழுதிய சிறியபுத்தகம். வரவு செலவு கைச்சிட்டை எல்லாம் இருக்கும்.

எங்கள் வீட்டில் மேல்ஆணி அதன் கீழே இன்னோர் ஆணி என்று இரண்டு இருக்கும். மேல் ஆணியில் கடைப் பை. கீழ் ஆணியில் பாக்கெட் கடிகாரம் மாட்டி இருக்கும். கடிகாரத்தில் உள்ள எழுத்துகள் ஆங்கில ரோமன் லெட்டரில் இருக்கும். அம்மாவிற்கு அந்த கடிகாரத்தில் மணி பார்க்கத் தெரியாது. ""டேய் சின்னையா... மணி என்னடா... பாரு'' என்றால் கீழே நின்றபடி ஒவ்வொன்றாக எண்ணிச் சொல்வேன். சில நேரங்களில் இரவு 9 மணியை மூன்று மணி என்றும் மாலை 6 மணியை பன்னிரண்டு மணி என்றும் சொல்லி இருக்கிறேன்.

பேனா மாட்டிய பை என்னுடைய உயரத்தினை எட்ட முடியாத உயரத்தில் இருக்கும். அப்பாவைத் தவிர அம்மாவால் கூட எட்டி எடுக்க முடியாத உயரத்தில் அது மாட்டி இருக்கும். அப்போது நான் சர்மா பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

அப்பா அந்தப் பேனாவை வெளியில் எடுப்பதே ஏதோ வீட்டில் பூஜை நடப்பதைப்போன்று இருக்கும். அவர் ஓடம்போக்கி ஆற்றில் குளித்துவிட்டு வந்து வீட்டு வாசலில் நின்று துவைத்த வேட்டியை உதறும்போது மிருதங்கம் வாசிப்பது போல் அத்தனை லயமாக ஈரத்தை உதறுவார். அந்த சத்தம் கேட்டதும் அப்பா குளித்து விட்டு வந்துவிட்டார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

அப்பா எப்போதும் வேதாரண்யம் குருகுலம் நான்கு முழ வேட்டிதான் கட்டுவார். அதிலும் பரமாஸ் கரை போட்ட வேட்டிதான் கட்டுவார். பரமாஸ் கரை என்றால் வண்ணக் கரைகள் எதுவும் வேட்டியில் இருக்காது. அதற்குப் பதிலாக நூலிலேயே வெள்ளைக் கோடு ஒன்று இருக்கும். உற்றுப் பார்த்தால்தான் தெரியும் இல்லையென்றால் காடா துணியை வெளுத்துக் கட்டியது போல இருக்கும் வேட்டி.

துவைத்த வேட்டியை அப்பா வெயிலில் உலர வைக்கமாட்டார். பழுப்பேறிவிடுமாம். அவருக்கென்று வீட்டில் தனியே ஒரு மூங்கில் கம்பில் கொடி இருக்கும். துவைத்த துணிகளும் ஈரத் துணிகளும் அதில்தான் தொங்கிக் கொண்டிருக்கும். அப்பா துணிகளை உலர வைத்த பிறகு அந்த கம்பில் வேறு எங்களுடய ஆடைகள் எதுவும் போட முடியாது. கொல்லையில் பூவரசு மரத்தை இணைத்து கட்டியிருக்கும் கயிற்றில்தான் காயப் போடவேண்டும். அப்பாவின் தன் ஆடைகளை எப்போதும் வெள்ளையாக நீலம் போட்டு துவைத்து மடித்து வைத்துக் கொள்வார்.

அப்பா குளிக்காமல் ஒரு நாளும் கடைப் பையைத் தொடமாட்டார். குளித்துவிட்டு வந்தகையோடு அப்பா கடை பையை எடுத்து அதில் கணக்குகளைச் சரி பார்ப்பார். சிலசமயம் ஏதாவது அதில் எழுதிக் கொண்டிருப்பார். அப்போது கதவிற்கு வெளியில் நின்று அந்தப் பேனாவின் தங்க நிப் எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆவலாக இருக்கும்.

அப்பாவின் கையெழுத்து அச்சடித்ததைப் போன்று ஒரு எழுத்தோடு மற்றொன்று ஒட்டிக் கொண்டிருக்காமல் தெளிவாக தனித் தனியே இருக்கும். அப்பாவின் எழுத்து அழகாக இருப்பதற்கு அந்த பார்க்கர் பேனாதான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு தடவை அந்த பேனாவில் இங்க் தீர்ந்துவிட, ""சின்னையா அந்த இங்க்பாட்டிலை எடுத்துக்கிட்டு வாடா'' என்று அப்பா கூப்பிட அதனை எடுத்துக்கொண்டு செல்லும்போதுதான் முதன்முதலில் அந்தப் பேனாவை அருகில் பார்த்த ஞாபகம். அப்பா அதன் கழுத்தைத் திருகி இங்க் ஊற்றாமல் பேனாவின் அடிப்பகுதியைத் திருகவும் அதிலிருந்து ஆஸ்பத்திரியில் ஊசிபோடும் சிரஞ்ச் போன்று சிறிய வடிவில் ஒன்று வெளிப்பட்டது. அதிலிருந்து மையை அதுவே உறிஞ்சி எடுத்துக் கொண்டது. அப்போதுதான் அந்த தங்க நிப் எப்படி இருக்கிறது என்று பார்த்தேன். அதில் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. மற்ற பேனாவில் உள்ளதைப் போன்றுதான் அதிலும் இருந்தது. ஆனால் அதன் முனை மட்டும் மினுங்கி தன் தற்பெருமையினைக் காட்டிக் கொண்டது.

அப்பா அந்தப் பேனாவில் கடை கணக்குகள் எழுதியது போக, எனது பள்ளிக்கூட தேர்ச்சி அட்டையிலும் அந்தப் பேனாவால்தான் கையெழுத்துப் போடுவார். அதில் சிவப்பு மற்றும் பச்சைக் கலரில் நான் வாங்கிய மதிப்பெண்களுக்குக் கீழே கோடுகள் போட்டிருக்கும் அது என்னவென்று எனக்கு அப்போது தெரியாது. நான் எந்தெந்த பாடத்தில் அபாய கட்டத்தில் இருக்கிறேன் என்று குறிப்பதற்காக வரையப்பட்ட கோடு என்பதை நான் என் பெரிய பையனுக்கு போடும்போதுதான் தெரிந்து கொண்டேன்.

அப்பா கையெழுத்துப் போடும்போது எதுவும் திட்டியதில்லை. அப்போது மார்க் எத்தனை வாங்கி இருக்கிறான் என்று எந்தப் பெற்றோரும் கவலைப்படாத காலம். ஆண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்பிற்கு சென்றுவிட்டால் போதும் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம். பள்ளி இறுதித் தேர்வு கூட அப்படித்தான். பாஸா? இல்லை பெயிலா? என்று கேட்பார்கள்.

ஒரு தடவை அப்பா அந்தப் பேனாவில் கையெழுத்துப் போட்டு விட்டு அவசரமாக வாசலில் யாரோ கூப்பிடுகிறார்கள் என்று சென்று விட்டார். வந்தவருக்கு திண்ணையில் பாயைப் போடச் சொல்லி அம்மாவிற்கும் காபி போடச் சொல்லி பாட்டிக்கும் உத்தரவாகியிருந்தது. வீட்டிற்கு சாம்பசிவம் மாமா வந்திருந்தார். அவர் மாரியம்மன் கோயில் தர்மகர்த்தா. அப்பாவும் அவரும் ரொம்ப சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்த வேளையில் அப்பாவின் பேனாவை எடுத்து என்னுடைய கணக்கு நோட்டில் சின்னையா என்று என் பெயரை எழுதி விட்டு அந்தப் பேனாவை பைக்குள் வைக்கும் சமயம் வேணி பார்த்துவிட்டாள். "அம்மா சின்னையா அப்பா பேனாவை எடுத்து எழுதிட்டான்' என்று கத்தியது இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிப் பரப்பின் சத்தத்தில் யாருக்கும் கேட்காமல் மறைந்து விட்டது.

பள்ளிக்கூடம் சென்ற பிறகு தங்கப் பேனாவில் நான் எழுதிய என் பெயரை பலமுறை ஏதோ அரிய சித்திரத்தை வரைந்து விட்டதைப் போல் பார்த்து வியந்து போனேன். அப்பா அந்தப் பேனாவால்தான் அக்கா கல்யாணத்திற்கு பத்திரிகையில் ஒவ்வொருவர் பெயராக எழுதி ஸ்டாம்ப் ஒட்டி என்னைக் கொண்டு போய் போஸ்டாபீஸில் போட்டு வரச் சொன்னார். போஸ்டாபீஸ் அப்போது அக்ரகாரத்து முனையில்தான் இருந்தது.

அப்போதெல்லாம் பள்ளிக் கூடம் விட்டபிறகு கடைக்குப்போய் அப்பாவுடன் உட்கார்ந்திருப்பேன். மாலை ஆறு மணிக்கு கணேச அய்யர் பட்டாணி சுண்டலும் பக்கோடாவும் போட்டு கண்ணாடி கதவுடன் கூடிய வண்டியில் கொண்டு வருவார். வண்டிக்குள் பெட்ரோமாஸ் லைட் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கும். செவ்வாய் வெள்ளி மட்டும் அல்வா கூடுதலாக வண்டியில் வரும். வண்டி வரும்போது கடையில் இருந்தால் சுண்டல் கண்டிப்பாக எனக்குக் கிடைக்கும். அப்படித்தான் சுண்டலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, ""வீட்டுக்கு போறேன்ப்பா'' என்று சொல்லிவிட்டு நான் வீட்டிற்கு புறப்பட்ட போது அப்பா கடை பையை என்னிடம் கொடுத்து பத்திரமா இதை கொண்டு வீட்டில் வை அப்பா நாளைக்கு சேலம் போறேன் என்று சொன்னார். கடைத்தெருவில் இதனை அப்பா சத்தமாகச் சொல்லவும் அதனை யாரோ கேட்டிருக்க வேண்டும். நான் எல்லையம்மன் கோயில் தெற்கு தெரு முனை திரும்பியதும் தேர்முட்டிவரும். அந்த இடம் கொஞ்சம் இருட்டாக இருக்கும். என் கூடவே வந்த யாரோ அடையாளம் தெரியாத ஒருவன், ""தம்பி வீட்டுக்கு போறீயா... பையில் என்ன கொண்டு போற? எங்க குடு பாப்போம்'' என்று நைசாகப் பேசி என்னிடமிருந்த பையை வாங்கி கொஞ்சம் நேரம் கையில் வைத்திருந்து விட்டு பிறகு என்னிடம் மீண்டும் கொடுத்து விட்டு சென்று விட்டான்.

இது நடந்தது எதுவும் தெரியமால் பையை வீட்டில் வைத்துவிட்டு நான் தூங்கி விட்டேன். விடியற்காலை தூங்கிக் கொண்டிருந்த என்னை முதுகில் விழுந்த அறை எழுப்பி உட்கார வைத்தது.

""பையில் வச்சிருந்த பணம் எங்கடா?'' என்று அப்பா கோபமாக கேட்கவும் நான் எதுவும் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். அதற்குள் அம்மா ஓடி வந்து, ""அத்தனை பணத்தை எடுப்பானா?'' என்று அப்பாவை கோபமாகத் திட்டிய அம்மா நடந்ததை விசாரிக்க, தேர்முட்டி அருகே இருட்டில் நடந்து வந்தபோது அடையாளம் தெரியாத ஒருத்தன் பையைக் கேட்டதாகவும் அவனிடம் பையைக் கொடுத்ததைப் பற்றியும் சொல்லவும், ""புள்ளகிட்ட பையை யாராவது கொடுப்பார்களா? என் புள்ள தலையைப் திருகி போட்டுட்டு போயிருந்தானா என்ன செய்றது?'' என்று அம்மா புலம்பவும் தொடர்ந்து விழ இருந்த அடியிலிருந்து நான் தப்பித்துக் கொண்டேன்.

அத்தனை களேபரத்திலும் அந்த திருடன் அந்த பேனாவின் மகிமைத் தெரியாமல் அதனை பையிலே விட்டுவிட்டுச் சென்று விட்டான். அப்பாவிற்கு அந்த மட்டுமாக ஆறுதலாக இருந்தது. வாழ்க்கையில் ஏமாறுவது என்பதையும் ஏமாற்றுவது என்று ஒன்று இருப்பதையும் முதன் முதலாக வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்தது.

அத்தை இறந்தபோது அப்பா அந்தப் பையோடுதான் வாசலில் உட்கார்ந்திருந்தார். துக்கம் விசாரிக்க வந்தவர்கள் பெரியப்பாவிடம் எப்படி இறந்தார் என்பதை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அப்பா பேனா பையோடு வாசலில் உட்கார்ந்து எட்டாக மடித்த வெள்ளைத் தாளில் செலவுக் கணக்குகளை எழுதி சட்டை பையில் வைத்துக் கொண்டார். அப்போது எல்லாம் வீட்டில் யாராவது இறந்து விட்டால் தந்திதான் கொடுப்பார்கள். அஞ்சல் நிலையத்தில் அதைக் கொண்டு செல்வதற்கென்றே ஊழியர்கள் இருந்தார்கள். அவர்களது பணி ஒரு தந்தி வந்தாலும் அதனை எடுத்துக் கொண்டு உரியவர்களிடம் சேர்ப்பார்கள்.

ஆனால் எட்டியலூர் வடுகச்சேரிக்கெல்லாம் தந்தி கிடையாது. ஆட்கள் மூலமாகத் தான் சொல்லி அனுப்ப வேண்டும். இது போன்று துக்கச் செய்திகளை கொண்டு செல்வதற்கென்று கிராமத்தில் ஆட்கள் இருப்பார்கள். அவர்களிடம் முகவரியை எழுதிக் கொடுத்தால் அவர்கள் வாடகைக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு முகவரியை விசாரித்துக் கொண்டு அவர்களிடம் போய்ச் செய்தியை தெரிவிப்பார்கள். செய்தியை தெரிவித்ததற்கான அடையாளமாக அவர்களிடம் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு வந்து காண்பித்திட வேண்டும். பிரேதம் அடக்கம் செய்துவிட்டு இடுகாட்டில் அவர்களுக்கான ஊதியத்தை கொடுத்து விடுவார்கள். ஒரு வெள்ளைத் தாளில் இன்னார் இன்ன தேதியில் இறந்து விட்டார், நல்லடக்கம் இத்தனை மணிக்கு என்று தெளிவாக எழுதி அனுப்ப வேண்டும்.

இது போன்ற செய்தி அனுப்பும் வேலையைச் செய்வது அப்பாதான். எங்கள் குடும்பத்தில் பெரியப்பாவிற்கு கையெழுத்து மட்டும் தான் போடத் தெரியும். எழுதத் தெரியாது. குடும்பத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தது அப்பாவிற்கு மட்டுமே. அப்பா எழுதியதில் கடைசியாக குடும்பத்தில் மூத்தவர் என்ற முறையில் ஒவ்வொரு காகிதத்திலும் பெரியப்பா ஒப்பம் இட்டு அனுப்பி வைத்தார்.

ஆயுதபூஜை வந்துவிட்டால் சரஸ்வதி படத்தின் அருகில் யாருடைய புத்தகத்தை வைப்பது என்று எனக்கும் வேணிக்கும் சண்டை நடக்கும். அம்மாவின் முன்னிலையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் படத்தின் இரண்டு பக்கமும் புத்தகம் வைத்துக் கொள்ள முடிவு பண்ணி எங்களிடையே யுத்த உடன்படிக்கை கையெழுத்தாகி எந்தப் பாடத்தில் மதிப்பெண் மிகக் குறைவாக உள்ளதோ அது சரஸ்வதி படத்தின் பக்கத்தில் தவறாது இடம் பெறும். ஆனால் பூஜை போடும்போது அப்பாவின் பார்க்கர் பேனா முருகன் கை வேல் போன்று சரஸ்வதி படத்தில் சாய்ந்து கொண்டு ஒய்யாரமாக நின்று கொண்டிருக்கும்.

பெரியப்பா இறந்த பிறகு அப்பா அந்த வீட்டை விற்று பெரியப்பா பிள்ளைகளுக்கு கொடுத்துவிடலாம் என்று சொன்னார். ஆனால் அக்காதான் சித்தப்பா இருக்கின்றவரை இந்த வீட்டை விற்கக்கூடாது. அதன் பிறகே பாகப்பிரிவினை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டது. அப்பா கடைசி வரை பூர்வீகமான விஜயபுரத்தில் இருந்த வீட்டிலேயேதான் வசித்தார். அப்பா இறந்த வருடம் நான் பியூசி படித்துக் கொண்டிருந்தேன்.

இறுதித் தேர்வு அன்று அம்மாவிடம் சொல்லாமல் அப்பாவின் பேனாவை எடுத்துக் கொண்டு தேர்வெழுதச் சென்றேன். இரண்டு பக்கம் எழுதுவதற்குள் அதிலிருந்து மை தீர்ந்துவிட்டது. பிறகு என்னுடைய பேனாவினால் தேர்வை எழுதி முடித்து விட்டு வந்தேன். அப்பா இறந்த அன்று அழுததைவிட அம்மா அதிகமாக அழுதது அன்றுதான்.

அந்த முறை நான் பியூசி தேர்ச்சிப் பெறவில்லை. நான் பெயில் ஆனதற்கு பேனாவின் புனிதம் கெட்டுவிட்டதுதான் காரணம் என்று அம்மா நான் அரசுப் பணிக்கு சேரும்வரையில் சொல்லிக் கொண்டே இருந்தது.

அப்பா இறக்கும் வரை அந்தப் பேனாவை யாரும் தொடாமல் காப்பாற்றி வைத்திருந்தார். அப்பா இறந்தபோது சாவு செய்தி சொல்வதற்காக சித்தப்பாவிடம் அந்தப் பேனா கொடுக்கப்பட்டு அதில் தான் செய்திகள் எழுதி அனுப்பப்பட்டன. காரியம் எல்லாம் முடிந்த பிறகும் தன் பையிலேயே சித்தப்பா அந்தப் பேனாவை வைத்துக் கொண்டிருந்தார். அப்பா படம் திறக்கும் போது அழுது கொண்டிருந்த அம்மாவிற்கு அப்பாவின் பேனாவின் நினைவிற்கு வர, படத்திற்கு பக்கத்தில் அந்தப் பேனாவை கொண்டு வந்து வைக்கச் சொல்ல அப்போதுதான் பேனா எங்கே போனது என்று தெரியாமல் சித்தப்பா தேடிக் கொண்டிருந்தார்.

அப்பா இறந்து போன துக்கத்தைவிட அந்தப் பேனா தொலைந்து போனதற்கு அம்மா வருத்தப்பட்டு அழுததுதான் அதிகம். இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அம்மா அழுததைப் பார்த்து, சித்தி சித்தப்பாவை வெளுத்து வாங்க, சித்தப்பா அன்றைக்கு இரவே பேனாவைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிட்டு, ""அம்மாகிட்ட கொடுத்துடு'' என்று சொல்லிவிட்டு வாசலோடு போய்விட்டார்.

நான் கல்லூரியெல்லாம் படித்து முடித்த பிறகு முதல் முதலில் சர்வீஸ்கமிஷன் எழுதச் செல்லும்போது, அம்மா அந்தப்பேனாவை முதன் முதலாக என்னிடம் கொடுத்து, ""சின்னையா இந்த பேனாவால எழுதுடா... அப்பாவோட பேனா... எழுதினா பாஸாயிடுவ'' என்று சொல்லியது.

அப்பா இறந்த பிறகு வீடு விற்பனை செய்யப்பட்டு பாகப்பிரிவினை செய்யப்பட்டது. நான் தஞ்சாவூருக்குப் பணி மாறுதல் ஆன பிறகு அம்மா என்னோடு வந்து விட்டார்.

அப்பாவின் பெட்டியில் பாதுகாப்பாக இருந்த அப்பாவின் பேனா ஒவ்வொரு வருடமும் சரஸ்வதி பூஜை அன்று அம்மா அதனை பயபக்தியுடன் எடுத்து வந்து சரஸ்வதி படத்தின் அருகில் வைத்து வணங்கிவிட்டு உடனே எடுத்துச் சென்று அதன் பெட்டியில் வைத்துக் கொள்ளுவார். அம்மா சாகிறவரைக்கும் அந்த நடைமுறை வழக்கத்தில் இருந்தது.

அம்மா இறந்த வருடம் சரஸ்வதி பூஜை அன்று அம்மாவின் பெட்டியில் இருந்த அந்தப் பேனாவை எடுத்து பூஜைக்காக வைத்த நான் திரும்ப எடுத்து வைக்க மறந்து விட்டேன். நான் வெளியில் சென்றுவிட்டு திரும்ப வந்து பார்க்கிறேன் அப்பாவின் பேனாவை எனது மூன்று வயது பையன் தரையில் கிறுக்கி எழுதிக் கொண்டிருந்தான். உமா என்று சத்தமாகக் கூப்பிட்டு, ""பேனாவை எடுத்து இப்படி தரையில கிறுக்கிக்கிட்டு இருக்கானே பாத்துக்கிட்டிருக்கியே'' என்று சத்தம் போட்டேன்.

சமையல் காரியமாக கிச்சனிலிருந்து ஓடி வந்தவள், ""இதுக்குத்தான் இப்படி சத்தம் போடுறீங்களா.... புள்ள அழுதான் நான் தான் எடுத்து கொடுத்தேன் பழைய பேனாதானே? நான் கூட ஏதோ ஒரு புது பேனாவைத்தான் எடுத்துத் தரையில் தேய்த்துவிட்டான் என்று பதறிப் போய் ஓடி வர்றேன்'' அலட்சியமாக சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT