தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 21

31st Jan 2021 06:00 AM | கி. வைத்தியநாதன்

ADVERTISEMENT

 

அயோத்தி போக வேண்டும் என்று ரயிலேறிவிட்டேன். முதல்நாள் கடந்து அடுத்தநாள் காலையில் பெல்லார்ட்ஷா ரயில்நிலையத்தை அடைந்தபோது, காலை தினசரிகளைப் பார்த்தேன்.

அன்று பாஜக தலைவர் அத்வானியின் ரத யாத்திரை பிகார் மாநிலத்துக்குள் நுழைய இருக்கிறது என்பது தலைப்புச் செய்தி. உயிரே போனாலும் ரத யாத்திரை பிகாரில் நுழைய அனுமதிக்க மாட்டேன் என்கிற முதல்வர் லாலு பிரசாத் யாதவின் அறிவிப்பு, பெட்டிச் செய்தி. அத்வானி கைது செய்யப்பட்டால், நாடு தழுவிய அளவில் கொந்தளிப்பு எழும் என்பது சொல்லாமல் சொல்லப்பட்ட செய்தி.

ரயில் வாராணசி போய் சேருமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாகபுரியில் பெரும் கலவரம் நிகழக்கூடும் என்றும், அதற்கு மேல் ரயில் போகாது என்றும் சக பயணிகள் பேசிக் கொண்டிருந்தனர். பாதி வழியில் கலவரத்தில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்கிற கவலை என்னைத் தொற்றிக் கொண்டது.

ADVERTISEMENT

எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் ஐந்து பேர் அமர்ந்திருந்தனர். அத்தனை களேபரங்களுக்கு இடையேயும் எந்தவிதப் பரபரப்பும் இல்லாமல் அவர்கள் அமர்ந்திருந்தனர். நான் அவர்களிடம் பேச்சு கொடுத்தேன்.

""நீங்கள் எங்கே போகிறீர்கள்?''

""நாங்கள் காசர்கோட்டிலிருந்து வருகிறோம். சேவாகிராம் காந்தி ஆஸ்ரமத்துக்குப் போகிறோம்.''

அதற்குப் பிறகு சேவாகிராம் குறித்தும் ஆசிரமம் குறித்தும் அவர்கள் நிறைய செய்திகளைச் சொன்னார்கள். நானும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன். சேவாகிராமில் ரவீந்திர வர்மா இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டபோது, எனது ஆர்வம் அதிகரித்தது. அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணம் எனக்குப் புதிய சிந்தனையை ஏற்படுத்தியது.

இன்றைய தலைமுறையினருக்கு ரவீந்திர வர்மா யார் என்றே தெரியாதது மிகப் பெரிய துரதிருஷ்டம். ஜே.சி. குமரப்பாவின் வழியில் வந்த தலைசிறந்த காந்தியவாதி அவர்.

கேரள மாநிலம் மாவேலிக்கரை அரச குடும்பத்தில் பிறந்தவர் ரவீந்திர வர்மா. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும்போது, விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு 1942-இல் அண்ணல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் பொது வாழ்க்கைக்கு வந்தவர். 1962-இல் கேரள மாநிலம் திருவல்லா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ரவீந்திர வர்மா, ஜவாஹர்லால் நேருவின் அன்புக்குப் பாத்திரமானார்.

காந்திஜியின் வசிப்பிடம் - சேவாகிராம்.

1969-இல் காங்கிரஸ் பிளவுபட்டபோது, காமராஜர், நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாயுடன் ஸ்தாபன காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார் ரவீந்திர வர்மா. "எமர்ஜென்சி' காலத்தில் தலைமறைவாகி, நாடு முழுவதும் அடக்குமுறைக்கு எதிராக இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டார்.

கேரளத்தைச் சேர்ந்த ரவீந்திர வர்மா, தனக்குத் தொடர்பே இல்லாத அன்றைய பிகார் மாநிலத்தின் ராஞ்சி மக்களவைத் தொகுதியிலிருந்து 1977-இல் ஜனதா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால் அவரது செல்வாக்கும் மரியாதையும் எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 1980-தேர்தலில் அவர் மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் ரவீந்திர வர்மா என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். மக்களவை உறுப்பினராக இருக்கும்போது, ரவீந்திர வர்மாவைப் பலமுறை சந்திக்கவும் அவரைப் பேட்டி எடுக்கவும், எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. பிறகு தொடர்பு விட்டுப் போய்விட்டது. அவரும் தீவிர அரசியலிலிருந்து விலகி, வார்தாவிலுள்ள சேவாகிராம் காந்தி ஆசிரமத்துடன் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டார்.

கங்கா காவேரி விரைவு ரயில் வார்தா ரயில்நிலையத்தை அடைந்தபோது, என்னுடன் பயணித்துக் கொண்டிருந்த காந்தியத் தொண்டர்களுடன் நானும் இறங்கி விட்டேன். ரயில்நிலைய அதிகாரியிடம் சென்று "இடை நிறுத்தம்' (பிரேக் ஜர்னி) அனுமதியைப் பெற்றுக்கொண்டு, அவர்களுடன் சேவாகிராமுக்குக் கிளம்பினேன்.

நாங்கள் சேவாகிராம் ஆசிரமத்துப் போய்ச் சேர்வதற்குள், ஆங்காங்கே கூட்டம் கூடுவதும் "ஜெய் சியாராம்!' கோஷங்கள் எழுப்புவதும் தொடங்கிவிட்டன. பிகார் எல்லையில் எல்.கே. அத்வானி கைது செய்யப்பட்டு விட்டார் என்று நாங்கள் பேசிக் கொண்டோம்.

ஆசிரம வாசலில் ஏகப்பட்ட காவல்துறை கெடுபிடி. எங்களை உள்ளே அனுமதிக்க மறுத்துத் தடுத்து நிறுத்திவிட்டனர். ஆசிரமத்திலிருந்து வந்திருந்த அழைப்புக் கடிதத்தை அவர்கள் காட்டினார்கள். எனக்குக் காட்டுவதற்கு எதுவும் கிடையாது. நான் கதராடையும் அணிந்திருக்கவில்லை. அதனால் அவர்களை மட்டும் அனுமதிக்க முற்பட்டனர் காவல்துறையினர்.

வேறு வழியில்லாத கையறு நிலை. ஒரு காகிதத்தை எடுத்து ரவீந்திர வர்மாவுக்கு மளமளவென்று ஒரு கடிதம் எழுதினேன். என்னை அவருக்கு நினைவுபடுத்தி, அவரைச் சந்திக்க வெளியில் காத்திருப்பதாகவும், அனுமதிக்கும்படியும் அதில் எழுதினேன். அவர்களிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்து விட்டேன். ரவீந்திர வர்மாவை எல்லாம் தங்களால் சந்திக்க முடியாது என்றும், யார் மூலமாவது அந்தக் கடிதத்தைச் சேர்ப்பிப்பதாகவும் கூறி அவர்கள் உள்ளே சென்றுவிட்டனர்.

அடுத்த நான்கு மணி நேரம் ஆசிரம வாசலில் நான் காத்துக் கிடந்த அனுபவம் இந்த ஜென்மத்துக்கும் மறக்காது. காவல்துறையினர் குவிந்திருந்ததால் போராட்டக்காரர்கள் யாரும் அந்தப் பகுதிக்கே வரவில்லை. காவல்துறையினருக்குத் தேநீர் வழங்குவதற்கு ஒரு சிலர் சைக்கிளில் வந்தனர். என்மீது பரிதாபப்பட்டு பிஸ்கட்டும், தேநீரும் சில காவலர்களால் வழங்கப்பட்டன.

மணி சுமார் மூன்றாகிவிட்டது. உள்ளேயிருந்து எந்தவொரு தகவலும் கிடையாது. அவர்கள் அந்தக் கடிதத்தை ரவீந்திர வர்மாவிடம் சேர்ப்பித்தார்களா, இல்லையா என்கிற விவரமும் தெரியாது. அடுத்தாற்போல என்ன செய்வது? தோள் பையும் பெட்டியுமாக நான் ஆசிரம வாசலில் பரிதாபமாக நின்று கொண்டிருந்தேன்.

ஒரு காவல்துறை ஜீப் விரைந்து வந்தது. அத்தனை காவலர்களும் சுறுசுறுப்பானார்கள். விரைப்புடன் நின்றனர். அந்த ஜீப்பிலிருந்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் இறங்கினார். அவரது பார்வை என்மீது விழுந்தது. யார் அது என்று விசாரித்தார் போலிருக்கிறது. என்னை அழைத்தார்கள்.

அவரிடம் நான் எனது முகவரி அட்டையைக் கொடுத்து, பெரியவர் ரவீந்திர வர்மாவை சந்திக்கக் காத்திருப்பதாகவும், முன் அனுமதி பெறாமல் வந்துவிட்டதாகவும் தெரிவித்தேன். என்னிடம் எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு, இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் என்னை உள்ளே அழைத்துச் சென்று, ரவீந்திர வர்மாவை சந்திக்க ஏற்பாடு செய்யச் சொன்னார். ஒருவேளை எனக்கு அனுமதி மறுக்கப்பட்டால், போலீஸ் ஜீப்பிலேயே பத்திரமாக வார்தா ரயில்நிலையத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்படியும்
உத்தரவிட்டார்.

ஆபத்பாந்தவனாக வந்த அந்த அதிகாரியின் பெயர் நினைவில்லை. ஆனால், அவரது உருவமும், குரலும், நினைவில் பசுமையாக என் மனதில் பதிந்து விட்டது.

வார்தா சேவாகிராம் ஆசிரமத்துக்குள் நுழையும்போது எனக்கு மெய்சிலிர்த்தது. அண்ணல் காந்தியடிகளின் மூச்சுக் காற்று பரவிய இடம். கஸ்தூர்பா காந்தியுடன் அண்ணல் வாழ்ந்த இடம். சேவாகிராம் ஆசிரமத்தின் வரலாற்றுச் சிறப்பு ஏனோ உணரப்படவில்லை. இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தப்படவும் இல்லை.

1930-இல் தண்டி உப்பு சத்தியாகிரகத்துக்காக காந்திஜி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து அகமதாபாதுக்குப் பாதயாத்திரை கிளம்பினார். கைது செய்யப்பட்டார். தனது இரண்டாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை பெற்றவர், இந்தியா சுதந்திரம் அடையாமல் சபர்மதி ஆசிரமத்துக்குத் திரும்புவதில்லை என்று முடிவெடுத்தார்.

சிறைச் சாலையிலிருந்து விடுதலையானதும் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து தொண்டர்களைத் திரட்டினார். இந்தியாவின் மையப் பகுதியைத் தனது தலைமையிடமாக்கிக் கொண்டால், எல்லா பகுதிகளுக்கும் பயணம் செய்வது சுலபமாக இருக்கும் என்று கருதினார். 1934-இல் வார்தா வந்தபோது, ஜமன்லால் பஜாஜின் பஜாஜ்பாடி கிராமத்தில் அவரது தோட்டத்தில் தங்கினார். அந்த இடம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.

1936-ஆம் ஆண்டு வார்தாவின் புறநகர் பகுதியிலுள்ள சீகாங் என்கிற கிராமத்தைத் தத்தெடுத்துக் கொண்டு அதற்கு "சேவாகிராம்' (சேவைக்கான கிராமம்) என்று பெயரிட்டார். அப்போது அண்ணல் காந்தியடிகளுக்கு வயது 67.
வார்தா நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், நாகபுரியிலிருந்து 75 கி.மீ. தொலைவிலுள்ள சேவாகிராமை நிர்மாணிப்பதில் அவருக்கு ஜே.சி. குமரப்பாவும், ஆச்சார்ய வினோபா பாவேயும் உறுதுணையாக இருந்தனர். பிற்காலத்தில் வார்தாவின் இன்னொரு பகுதியில் வினோபா பாவே "பெüனார்' என்கிற இடத்தில் தனியாக ஓர் ஆசிரமம் அமைத்து அதில் தான் தனது இறுதிக் காலத்தைக் கழித்தார்.

சேவாகிராம் ஆசிரமத்தில் ரவீந்திர வர்மாவின் அலுவலகம் நோக்கி நடந்தபோது, இந்த வரலாறு எல்லாம் எனது மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்தது. அண்ணல் காந்தியடிகள் தனது இறுதிக் காலம்வரை சேவாகிராமைத்தான் தனது தலைமையகமாகக் கொண்டிருந்தார். இந்தியா விடுதலை பெற்ற பிறகும் கூட அவர் சபர்மதி ஆசிரமத்துக்கு மாறவில்லை. காந்தியடிகள் நடந்த புனித பூமியில் நான் நடந்து கொண்டிருக்கிறேன் என்கிற எண்ணம், எனது ஜென்மம் சாபல்யம் பெற்றுவிட்டது போன்ற நினைப்பை ஏற்படுத்தியது.

ரவீந்திர வர்மா நல்லவேளையாக அவரது அலுவலக அறையில் இருந்தார். எனது கடிதம் உள்ளே அனுப்பப்படாமல் அங்கிருந்த மேசையில் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது. அடக்கிக் கொண்டேன்.

உள்ளேயிலிருந்து அழைப்பு எனக்கு வரவில்லை, போலீஸ்காரருக்கு வந்தது. அவர் என்னையும் அழைத்துக் கொண்டு ரவீந்திர வர்மாவின் அறையில் நுழைந்தார். அங்கே நான் பார்த்த காட்சி என்னை ஒரு வினாடி திகைக்க வைத்தது. முன்னாள் மத்திய அமைச்சர், காந்திய சிந்தனை ஆளுமை ரவீந்திர வர்மா புத்தக அலமாரியிலுள்ள புத்தகங்களை தூசி தட்டி அடுக்கிக் கொண்டிருந்தார்.

திரும்பிப் பார்த்தார். ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் தில்லியில் பார்த்த பரிச்சயம் நினைவுக்கு வந்திருக்கக் கூடும். புரிதலுடன் புன்னகைத்தார். அவரைப் பார்க்க நான் ஆசிரமத்துக்கு வெளியில் காத்திருந்ததாகவும், அழைத்து வந்திருப்பதாகவும் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். என்னை உரிய இடத்தில் சேர்த்துவிட்ட திருப்தியில் அந்த இன்ஸ்பெக்டர் விடையும் பெற்றார்.

பெட்டி படுக்கையை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, புத்தகங்களை தூசி தட்டித் தரும்படியும், வேலை செய்து கொண்டே பேசுவோம் என்றும் ரவீந்திர வர்மா கூறியபோது, நான் அவரால் ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டேன் என்கிற மகிழ்ச்சி எனக்கு. அங்கிருந்த துணியால் தூசிதட்டி, புத்தகங்களை நான் எடுத்துக் கொடுக்க அவர் ஒரு ஸ்டூலில் நின்றபடி அதை அலமாரியில் அடுக்கினார்.

சென்னையிலிருந்து ரயிலேறியது முதல், அவரது வெளி அலுவலக மேசையில், உள்ளே அனுப்பப்படாமல் இருக்கும் நான் அனுப்பிய கடிதம் வரை எல்லாவற்றையும் மளமளவென்று கொட்டினேன். அவர் எந்தவித சலனமும் இல்லாமல் கேட்டுக் கொண்டே புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்.

புத்தகங்களை அடுக்கி விட்டோம். எனக்கோ நல்ல பசி. காலையில் பெல்லார்ட்ஷாவில் சிற்றுண்டி அருந்தியது. மதியம் சாப்பிடவில்லை.

நாற்காலியில் வந்தமர்ந்த ரவீந்திர வர்மாவுக்கு என்னை நன்றாகவே நினைவிருந்தது. பேட்டி தந்தது, ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகருடன் ஓரிரு முறை என்னைப் பார்த்தது எல்லாமே நினைவிருந்தது.

அடுத்தாற்போல அவர் சொன்னதைக் கேட்டபோது எனக்கு "பகீர்' என்றது. அவர் சொன்னது இதுதான் - ""இது காந்தியத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர்களுக்கான "சேவாகிராம்' ஆசிரமம். வழிப்போக்கர்கள் தங்கிப் போவதற்கான இடமல்ல!''

நான் தளர்ந்து மட்டுமல்ல, தகர்ந்தே போய்விட்டேன்.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT