ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவ, மாணவியர் இன்று அதிக நேரம் செல்போன், லேப்டாப் போன்றவற்றைப் பயன்படுத்தி கண் மற்றும் காதுகளை மிகவும்வருத்திக் கொள்கின்றனர். இந்த இருபுலன்களும் வாழ்க்கையின் மிக முக்கிய உறுப்புகளாகும். அவற்றை நன்கு பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறதா?
- சங்கரன், திருநெல்வேலி.
ஆன்லைன் வகுப்புகளோடு நிறுத்திக் கொள்கின்றனரா? வகுப்பு முடிந்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் என்றெல்லாம் சென்று மேலும் மேலும் கண் - காதுகளைத் துன்புறுத்துகின்றனர்.
இரவு வெகுநேரம் கழித்து படுத்துறங்குவதும், காலையில் மிகவும் தாமதமாக எழுவதும் இயற்கைக்கு உகந்த செயல்களல்ல. ஆனால் சொன்னால் கேட்பதில்லையே என்று பல பெற்றோரும் புலம்புகின்றனர்.
நம் முன்னோர் கண் - காது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்தனர். அவற்றின் பாதுகாப்பிற்காக அஞ்சனம் எனும் கண்களுக்கு மையிடுவதையும், நஸ்யம் எனும் மூக்கில் ஓரிரு சொட்டு எண்ணெய் விட்டு உறிஞ்சுவதையும் வழக்கத்தில் கொண்டு வந்தனர். மறந்து போன இந்த இரு வழக்கங்களையும் நாம் மறுபடியும் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்.
அஞ்சனக்கல் என்றொரு மருந்து சரக்கு. அதனை 15 கிராம் அளவு வாங்கி இரும்புக் கரண்டியில் போட்டு அனலில் நன்கு சுட வைத்துப் பாலில் சூட்டுடன் போட வேண்டும். 100 மி.லி. பால் போதுமானது. பிறகு கல்லை எடுத்து அலம்பி உலர்த்தி மெல்லிய தூளாக்கிக் கொண்டு தேன் அல்லது நல்லெண்ணெய் விட்டரைத்து மையாக்கிக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் காலையில் கண்ணிலிட்டு கண்களை மூடி, சிறிது நேரம் பொறுத்திருந்து கண்களைத் திறந்து, தண்ணீரில் நனைத்த பஞ்சால் துடைத்துவிட வேண்டும்.
சிறு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கூட ஏற்ற முறை இது.
மூக்கில் ஓரிரு சொட்டு உறிஞ்சுவதற்கு நல்லெண்ணெய் ஏற்றது. அணு தைலம் என்ற ரசாயன கல்பமாக உள்ள தைலம் ஆயுர்வேத முறையில் பிரபலமானது. மூளை நரம்புகளுக்கு வலிமை தர மிகச்சிறந்தது.
அதுவும் இந்த நஸிய முறைக்கு ஏற்றது. காலையிலும் இரவும் தூங்கும் முன்னும் நஸ்யமிடுவது வழக்கம். மல்லாந்து தலையணையின்றி படுத்து, தலையைச் சிறிது முகவாய்க்கட்டை மேலெழுமாறு வைத்துக் கொண்டு இரு மூக்குத் துவாரங்களிலும் ஒவ்வொரு சொட்டு விட்டு நன்கு உறிஞ்சி, நெற்றி மூக்கின் இருபுறங்கள், மென்னி இவற்றை இதமாக அழுத்தித் தேய்த்துவிட்டுக் கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் எளிதில் இதனைச் செய்பவர்கள் உண்டு. அவர்கள் முகத்தில் உள்ள மழமழப்பு, பூரிப்பு, நித்திய யெüவனத்தைக் காட்டும்.
இவ்விருமுறைகளையும் மாணவ, மாணவியருக்குச் சொல்லித் தர வேண்டும். இதனால் அவர்களின் பார்வை, காதுகளின் சக்தி குன்றுவதில்லை. தலை முடி வெளுப்பதில்லை. உதிர்வதில்லை. முகம் தெளிந்து பூரித்துக் காணும். குரல் கம்மாமல் வலுத்து இனிதாயிருக்கும். கழுத்துக்கு மேற்பட்ட இடங்களில் வரும் நோய்கள் எளிதில் பற்றாது. தலையிலுள்ள ரத்தக்குழாய்கள் அடைபடாது. தசைகள் வலுவாக இருக்கும். வயதானாலும் மூளையும் கண், காது முதலியவையும் தளர்ச்சியுறாது.
கண் பாதுகாப்பிற்காக திரிபலை சூரணத்தை இரவு பயன்படுத்துவதையும், காதின் நுண்ணிய நரம்புகள் வலு இழக்காமலிருக்க வசாலசுனம் எனும் தைலத்தைப் பயன்படுத்துவதையும் வழக்கமாக்கிக் கொள்வது நலம்.
(தொடரும்)