பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று எஸ்.பி. அரவிந்தன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதற்காக பல்வேறு செயலிகளையும் (ஆப்) அறிமுகம் செய்து வருகிறார். இதனை அடிப்படையாகக் கொண்டு, பாடல் ஒன்றை எழுதி, அனைவரையும் கவரும் வகையில் மகளிர் காவலர் ஒருவர் பாடி அசத்தியுள்ளார்.
அவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் மகளிர் காவலர் சு.சசிகலா.
""பொதுமுடக்கக் காலகட்டத்தில் கரோனா குறித்து விழிப்புணர்வுப் பாடல் எழுதி பாடி இணையத்தில் வெளியிட்டேன்.
இதற்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, பெண் குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "குட்டிமா' என்ற தலைப்பில் காவல்துறை சார்பில் புது ராகக் கோர்வையில் "பாலியல் கொடுமையை பாடுறேனே' என்ற விழிப்புணர்வுப் பாடலை எழுதி பாடியுள்ளேன். அதேபோல் பெண்கள் மற்றும் பதின்பருவ பெண்கள் செல்லிடப் பேசியில் அதிக நேரம் பேசக்கூடாது. ஆபாசமாக யாராவது பயமுறுத்தினால் உடனே காவல் நிலையம் அல்லது பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். மாறாக, தற்கொலை செய்யும் முடிவுக்கு செல்லக் கூடாது.
மேலும், குழந்தைகளை எங்கும் தனியாக அனுப்பக் கூடாது. குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்ற அம்சங்களை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வுப் பாடல் அமைந்துள்ளது.
இந்த குறுந்தகட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. அரவிந்தன் வெளியிட்டு பாராட்டினார்'' என்றார்.