தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பகல் தூக்கம்... நல்லதும் கெட்டதும்!

17th Jan 2021 06:00 AM | பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

ADVERTISEMENT


பள்ளிகள் திறக்காத நிலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகள், மதிய உணவு சாப்பிட்டதும் சுமார் 2 மணி நேரமாவது பகலில் படுத்து உறங்குகிறாள். எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை. அவ்வாறு அவள் படுத்துறங்கலாமா? பகல் தூக்கம் நல்லதா? கெட்டதா? யாருக்கு நல்லது?

மோகனா, சென்னை.

பொதுவாக பகலில் தூக்கமும் இரவில் விழிப்பும் கெட்டதே. பகல் ரஜோகுணம் இயற்கையாகத் தூக்கி நிற்கும் வேளை. அதன் இயற்கை விளைவான இயற்கையுடன் ஒட்டி அமைகிறது. இரவு தமோ குணம் தூக்கி நிற்கும் வேளை. அப்போது தூக்கம் இயற்கையுடன் ஒட்டி அமைகிறது. இயற்கை ஒட்டி அமையும் பழக்கம் எதுவும் நல்லதே.

மகளுக்கு காலையில் உண்ட உணவு செரிமானமாகாமல் அஜீரணம், வயிறு கனத்திருக்கிறது. அப்படியென்றால், மதிய உணவேற்கும் முன் சிறிது நன்கு தூங்கி எழுந்தால், வயிற்றிலுள்ள உணவு செரித்து நல்ல பசி ஏற்பட்டுள்ளதை உணரலாம். அந்த அளவில் அவளுக்குப் பகல் தூக்கம் நல்லதே. மாறாக நீங்கள் குறிப்பிடுவது போல, பகல் உணவைச் சாப்பிட்டதும், இரண்டு மணி நேரம் படுத்துறங்கினால் உடலில் ஊளைச் சதையும், நெஞ்சில் கபக்கட்டும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தொண்டையில் சதை வளர்ச்சி ஏற்பட்டு டான்சில் உபாதையை ஏற்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக மாறலாம். நெய்ப்பு - குளிர்ச்சி- கனம் - மந்தம் - வழுவழுப்பு போன்ற குணங்களைப் பகல் தூக்கம் அதிகப்படுத்தும் என்பதால், ரத்தத்தில் கெட்ட கொழுப்பு வளர்ந்து, குழாய்களின் உட்புறச் சுவர்களில் தடிப்பை ஏற்படுத்தி, சீரான ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். வாயுவிற்கு தடையை ஏற்படுத்தி, அதன் நகரும் தன்மையைப் பாதிப்பதனால், சுவாசக்கோளாறுகள், இதய உபாதை போன்றவையும் ஏற்படுத்தக் கூடும்.

ADVERTISEMENT

ஆனால் பகல் தூக்கம் சிலருக்கு நன்மை தரும். பாடுவதில் அதிகம் ஈடுபடுவர். மூச்சுக்காற்றை அதிகம் பயன்படுத்துவதால் பிராண சக்தியை அதிகம் செலவிடும் தொழில்களாகிய வேதம் ஓதுதல், வாய்விட்டு உரக்கப் படித்தல், திரும்பத் திரும்ப ஒன்றையோ சொல்வதும், செய்வதும், உடல் உழைப்பு அதிகம் தேவையான தச்சு, கொத்து, வெட்டுதல், தோண்டுதல் முதலியன, சுமைதூக்கிச் செல்லுதல், அதிக தூரம் வழி நடத்தல் முதலியவற்றால் பிராண சக்தியை அதிகம் செலவு செய்தவர்கள் பகலில் தூங்கி, இழந்ததை மீண்டும் பெறலாம்.

மேலும் வயிற்றுவலி, அஜீரண நோயுள்ளவர், அடிபட்டு ரத்தம் அதிகம் சேதமானவர், உடல் இளைத்தவர், நோய் முதலியவற்றால் பலம் இழந்தவர், சுவாச கஷ்டம் தரும் இளைப்பு விக்கல் நோயுள்ளவர், உயரத்திலிருந்து கீழே விழுந்தோ அடிபட்டோ கடும் வேதனைக்குள்ளானவர், மனக்கலக்கம் உள்ளவர், கோபம், சோகம், பயம் முதலிய உணர்ச்சிக் கொந்தளிப்பால் துன்புற்றவர் இவர்களுக்கு வேதனை குறையவும் இழந்த அமைதியை மீண்டும் பெறவும் உடல் இயக்கம் சுறுசுறுப்படையவும் பகல் தூக்கம் நல்லதே.

பகல் நீண்டு இரவு குறைந்த நாட்களான கோடை முதலிய பருவங்களில் வெப்ப மிகுதியால் உடலில் படிந்துள்ள புஷ்டிச்சத்து குறைந்து வறண்டுவிடும். பகல் தூக்கத்தால் கப சக்தி மிகுந்து உடல் மீண்டும் வலிவு பெறும். இரவின் குறைவால் ஏற்பட்ட தூக்க நேரக் குறைவை இதனால் ஈடு செய்து கொள்ள முடியும்.

வயதானவர்கள், குழந்தைகள், சிறுவர்கள் பகலில் தூங்கலாம். இவர்களுக்குப் பகல் தூக்கம் அமைதியையும், பலத்தையும் தரும். வயதானவர்களுக்கு உணவால் தேய்வை ஈடுகட்ட முடியாது. ஓய்வால் தேய்வின் அளவைக் குறைக்கலாம். அதனால் நல்ல ஓய்வு தரும் பகல் தூக்கம் இதமாகிறது. சிறுவர்களுக்கு வளர்ச்சியின் வேகத்தைத் துரிதப்படுத்த - தேய்வைக் குறைக்க பகல் தூக்கம் உதவுகிறது.

மகள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தவும், பகலில் உறங்குவதைத் தவிர்க்கவும், பின்னாளில் உடல் குண்டாகி மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்படாதிருக்கவும், ரத்தத்தில் கொழுப்பின் தடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும், திரிகடுசூரணம் எனும் சுக்கு, மிளகு, திப்பிலியின் நுண்ணிய சேர்க்கையை சுமார் ஐந்துகிராம் எடுத்து, பத்து மி.லி. தேன் குழைத்து, காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம். அனு தைலத்தை நான்கு சொட்டு மூக்கினுள் விட்டு உறிஞ்சித் துப்புவதை, காலையில் பல் துலக்கிய பிறகு செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். மதிய உணவிற்குப் பிறகு, இளஞ்சூடான வெந்நீரை வாயினுள் விட்டுக் கொப்பளித்துத் துப்பலாம்.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT