தினமணி கதிர்

உபதேசம்

10th Jan 2021 06:00 AM | மலர்மதி

ADVERTISEMENT


துபாய்க்கு நான் வந்து பத்து வருடங்களாகிவிட்டன. நேற்று வந்தது போலிருக்கிறது. அதற்குள் பத்து வருடங்கள் ஓடிவிட்டன. காலச்சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுழல்கிறது என்பதை எண்ணும்போது மலைப்பாகத்தான் இருக்கிறது.

எனக்கு "உம்அல்குவைன்' என்ற ஊரில் உள்ள கோ ஆப்பரேடிவ் சொûஸட்டியின் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் சேல்ஸ்மேன் உத்தியோகம். யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் மொத்தம் ஏழு மாநிலங்கள். அபுதாபிதான் தலைநகரம். துபாய் வர்த்தக நகரம். இவ்விரண்டு நகரங்கள் போக, ஷார்ஜா,
அஜ்மான், உம்அல்குவைன், ஃபுஜைரா, ராசல்கைமா என்று ஐந்து வேறு மாகாணங்கள். ஒவ்வோர் அமீரகத்துக்கும் ஒரு மன்னர் ஆட்சி புரிந்து வருகிறார். அடுத்த மன்னர் யார் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அவரைப் பட்டத்து இளவரசராகப் பிரகடனப்படுத்தி வைக்கிறார்கள்.

ஃபேமிலி எல்லாம் அழைக்கும் அளவுக்கு எனக்குச் சம்பளம் இல்லை. எனவே கடந்த பத்து வருடங்களாக நான் "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'' வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வருடத்தில் ஒரு முறை ஒரு மாதவிடுப்பில் ஊருக்குப் போய் வருவேன். நான் எப்போது வருவேன் என்று வழி மேல் விழிவைத்துக் காத்திருப்பாள் என் தர்ம பத்தினி. அவளுக்கும் பொழுதுபோக, ஆண்டவன் எனக்கு இரண்டு குழந்தைகளையும் கொடுத்துவிட்டான். ஓர்ஆண், ஒரு பெண். நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஒரு வேடிக்கையானநிகழ்வு நடந்தது.

என்னுடைய மேனேஜர் எகிப்து நாட்டுக்காரர். மிகவும் கறார் பேர்வழி.

ADVERTISEMENT

சில எலெக்ட்ரானிக்ஸ் ஹோம் அப்ளையன்ஸ் மற்றும் வாட்ச் போன்ற பொருள்களில் விலை அரபுமொழியில் குறிப்பிடப்பட்டிருக்கும். அரபுமொழியில் ஐந்து என்பதை 0 என்று குறிப்பிடுவார்கள். அப்படியென்றால், ஜீரோவை எப்படிக் குறிப்பார்கள் என்றுநீங்கள் வினவுவது கேட்கிறது. ஒரு புள்ளி வைத்தால் அதுவே ஜீரோ. அதாவது, 100 என்றால் 155 திர்ஹம் என்று பொருள். 1.. என்றால்தான் 100 திர்ஹம். இதை அந்த எகிப்து மேனேஜர் எனக்கு முதல்நாளே சொல்லிக் கொடுத்திருந்தார்.

வாடிக்கையாளர்களின் கூட்டம் நிரம்பி வழிந்த ஒரு நாளில், கஸ்டமர்களைச் சமாளிக்கும் அவசரத்தில் 155 திர்ஹம் மதிப்புள்ள கடிகாரம் ஒன்றை வெறும் 100 திர்ஹத்துக்கு விற்றுவிட்டேன்.

மூன்றுமாதங்கள் கழித்து நடந்த ஆடிட்டிங்கில் அதைக் கண்டுபிடித்துவிட்டார்
மேனேஜர்.

""என்ன மிஸ்டர்..? 155 திர்ஹம் மதிப்புள்ள வாட்ச்சை 100 திர்ஹத்துக்கு பில் போட்டிருக்கீங்க?'' என்று அவர் கேட்டபோதுதான் நான் செய்த தவறு எனக்குத் தெரிய வந்தது.

நான் மெளனமாக இருந்ததைப் பார்த்தவர், ""உங்களுடைய இந்த மாச சம்பளத்தில் 55 திர்ஹம் பிடித்துக் கொள்வேன்'' என்றார். அவர் சும்மா என்னைப் பயமுறுத்துகிறார் என்று எண்ணியிருந்தால், உடனேஅவர் அக்கெளண்டன்டை இன்டர்காமில் அழைத்து விவரத்தைச் சொல்லிவிட்டார். அக்கெளண்டன்ட் வேற்று மொழிக்காரர். தமிழன் என்றதும் மகிழ்ச்சியுடன் 55 திர்ஹத்தை என் சம்பளத்தில் பிடித்துக் கொண்டார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் ஜாக்கிரதை உணர்வுடன் செயல்படுகிறேன்.
வெள்ளி, சனி இரண்டு தினங்களும் அரசு விடுமுறை. ஆனால், எனக்கோ வெள்ளிக்கிழமை மட்டும் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தான் விடுமுறை. மற்ற எல்லா தினங்களும் வேலைதான்.

வழக்கம்போல் வெள்ளிக்கிழமை அறைக்கு வந்து மதிய உணவுக்குப் பிறகு ஒரு குட்டித்தூக்கம் போட்டேன். மாலை 4 மணிக்குரெடியாகி வெளியே வந்தபோது எங்களை ஏற்றிச் செல்லும் வேன் தயாராக நின்றிருந்தது. ஏறிஅமர்ந்ததும் அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி. எடுத்துப்பார்த்தேன். என்மனைவிதான்.

""அடுத்த வாரம் என் தம்பி கதிர் துபாய் வருகிறான். அவனுக்கு ஃபார்மஸி ஒன்றில் வேலை கிடைத்திருக்கிறது'' என்ற அந்த வாட்ஸ்அப் செய்தியைப் பார்த்து, "வாழ்த்துகள்' என்ற பதிலை அப்போதே டைப் செய்து தட்டி விட்டேன்.

""அவன் முதன்முதலாக வெளிநாடு வருகிறான். அவனுக்கு வேண்டிய உதவிகள் செய்து பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும்' என்ற கரிசனத்துடன்அக்கறை கலந்த குறுஞ்செய்தி ஒன்றும் ஓடியது என் அலைபேசி திரையில்.

"கவலைவேண்டாம். நான்கவனித்துக்கொள்கிறேன்' என்ற என்னுடைய பதிலைப் பார்த்த பிறகுதான் என் மனைவிக்கு நிம்மதி பிறந்திருக்கும்.

ஒரு வாரம் ஓடிய பின் மூன்று மணி நேர பெர்மிஷனில் டாக்ஸி பிடித்து உம்அல்குவைனிலிருந்து துபாய் சர்வதேச விமானநிலையத்துக்கு வந்தபோது, மலங்க, மலங்க விழித்துக் கொண்டு நின்றிருந்தான் கதிர். அவனை வரவேற்று அழைத்துக் கொண்டு போனேன்.

முதல் இரண்டு நாட்கள் என்னுடனேயே தங்கியிருந்தவன், மூன்றாவது நாள் துபாயில் உள்ள ஒரு ஃபார்மஸியில் டூட்டிக்குச் சேர்ந்தான். என்னதான் அவன் டி.ஃபார்ம். படித்து முடித்திருந்தாலும் ஐக்கிய அரபு அமீரக அரசு சட்டப்படி தேர்வு ஒன்றை எழுதி அதில் வெற்றி பெற்றால்தான் ஃபார்மஸிஸ்ட் ஆக பணி புரிய முடியும். இல்லையேல், வேறு வேலை தேட வேண்டியதுதான். அது படித்த படிப்புக்குச் சம்பந்தமில்லாத வேலையாகக் கூட இருக்கலாம்.

கதிர் நல்ல ஷார்ப்பாக இருந்ததால் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டான். அதுவரை அவனைஅலுவலகத்தில் வைத்திருந்த நிர்வாகம், "ஃபார்மஸிஸ்ட்' என்ற தகுதி பெற்றதும் ஸத்வாவிலிருந்த ஒரு ப்ராஞ்சில் ஃபார்மஸிஸ்ட் ஆக வேலைக்கு அமர்த்தியது.

வெள்ளிக்கிழமையில் ஒரு நாள் விடுப்பு போட்டுவிட்டு கதிரைப் பார்க்க ஸத்வாவில் அவன் தங்கியிருந்த அறைக்குப் போனேன். அவனுக்கு அன்றைக்கு விடுமுறை என்பதால் அறையிலேயே இருந்தான்.

அவனை அழைத்துக் கொண்டு "அல்ஹனா' சென்ட்டருக்கு அருகிலிருந்த ஒரு சிறிய ரெஸ்ட்டாரெண்ட்டுக்குப் போனேன். இரண்டு டீக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வெளியே போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தேன். எதிர்சேரில் கதிர் அமர்ந்தான்.

""இதோ பார்கதிர்... இந்த நாடு மிகவும் பாதுகாப்பான நாடு. இங்கு எந்தவித சட்டவிரோத செயலும் நடப்பதில்லை. தப்பித் தவறி ஒரு க்ரைம் நடந்தால் அதற்கு தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும். எனவே, யார் எதைச் சொன்னாலும் அது சந்தேகத்துக்குரியதாக இருந்தால் அதைச் செய்யாதே. உடனே என்னிடம் ஃபோன் செய்து விவரம் கேள். புரியுதா?''

""சரி மாமா'' என்றான் டீயை உறிஞ்சிக் கொண்டே.

""அப்புறம், இங்குள்ள சில ஒழுங்குமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கணும். தவறினால், அபராதம் உண்டு. உதாரணத்துக்கு, கார் ஓட்டுபவர்கள் சாலைவிதிகளைஅனுசரித்து ஓட்ட வேண்டும். ஒவ்வொரு சாலையிலும் ஒரு குறிப்பிட்ட வேகத்துக்குத்தான் வாகனத்தை ஓட்டலாம். எந்த சாலையில் எவ்வளவு வேகம் என்பதை ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பார்கள். வேகம் அதிகரித்தால் கண்காணிப்பு கேமராவில் அந்த குறிப்பிட்ட வாகனம் சிக்கிக் கொள்ளும். அதற்கானஅபராதம் வாகன உரிமையாளரின் பெயரில் கம்ப்யூட்டரில் பதிவாகிவிடும். அதிக வேகத்தில் போகிறவர்கள், சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போதுகடப்பவர்கள், அனுமதி இல்லாத இடங்களில் வாகனத்தை நிறுத்துபவர்கள் இப்படி விதியை மீறுபவர்கள் மீதுஅபராதம் பாயும். அதேபோன்று சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் சாலையைக் கடக்க விரும்பினால், ஆங்காங்கே இருக்கும் சிக்னல்களிலோ அல்லது ஜீப்ரா க்ராஸிங்கிலோதான் கடக்க வேண்டும். கண்ட இடங்களில் சாலையைக் கடந்தால் 420 திர்ஹம் ஃபைன் உண்டு. நம்ம ஊருக்கு எட்டாயிரம் ரூபாய்'' என எச்சரித்தேன்.

""அடேங்கப்பா... அவ்வளவு ஃபைனா?'' எனஆச்சரியப்பட்டான் கதிர்.

""எல்லாம் நம் நன்மைக்குத்தானே? சாலையில் கண்மூடித்தனமா கடந்து வாகனம் ஏதும் மோதினால் உயிருக்கே ஆபத்து அல்லவா? அதனால, நீ கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கணும்''

""ஓ.கே. மாமா''

அன்று துபாயில் வேலை விஷயமாக என் மேனேஜர் என்னை அனுப்பியிருந்தார்.
தேராவில் அல்பர்ஹா என்ற பகுதியில் இருந்த ஓர் அலுவலகத்திலிருந்து செக் ஒன்றை வாங்கி வர வேண்டிய வேலைதான்அது.

ஈத்கா மைதானத்தை ஒட்டியிருந்த சந்துக்குள்நுழைந்து நடந்தேன். ஆள் அரவமற்ற அந்தச் சாலையில் நின்று இருபுறமும் கவனித்தேன். ஒருவரையும் காணோம். சிக்னல் வெகுதொலைவில் இருந்தது. மேலும், எந்தவித வாகன ஓட்டமும் அந்தச் சாலையில் இல்லை. ஏதோ நினைவில் நான் சாலையைக் கடந்து மறுபுறம் வந்து விட்டேன்.

பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் மறைந்து நின்றிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் திடீரென வெளிப்பட்டார்.

அவரைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது எனக்கு.

""ஹலோ... மிஸ்டர்... எமிரேட்ஸ் ஐ.டி. எடுங்க'' என்றார்அவர்.

எமிரேட்ஸ் ஐ.டி. என்பது நம்ம ஊர்ஆதார்கார்டு போன்றது.

""சார்...'' என்றேன்.

""சாலையைக் கடந்தீர்இல்லையா?''

""யெஸ் சார்''

""ம்... எடுங்க எனஅதட்டலாய்அவர் சொல்ல, வேறுவழியின்றி என் எமிரேட்ஸ் கார்டை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

அவர் அதை வாங்கிக் கொண்டு ரசீது ஒன்றைத் தந்தார்.

""உங்கள் கார்டை ஏர்போர்ட் டெர்மினல் 2-க்கு அருகிலிருக்கும் ட்ராஃபிக் ஆபீசில் நாளை ஃபைன் கட்டி பெற்றுக் கொள்ளலாம்'' என்று அவர் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அடக்கடவுளே... நாளைஅதற்காக நான் மீண்டும் உம்அல்குவைனிலிருந்து துபாய்க்கு வந்து அவர் சொல்கிற இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து அபராதத் தொகையைச் செலுத்தி என்கார்டை வாங்கணும். ஹூம்...

நினைக்கும்போதே தலைசுற்றியது.

வேறுவழி?

மறுநாள்.

மேனஜரிடம் பெர்மிஷன் வாங்கிக் கொண்டு துபாய் வந்து ஃபைன் கட்டி எமிரேட்ஸ் ஐ.டி.யைப் பெற்றுக் கொண்டு மீண்டும் டாக்சியில் உம்அல்குவைன் திரும்பிக் கொண்டிருந்தபோது என்அலைபேசி ரிங்டோனை வெளியிட்டது.
எடுத்துப் பார்த்தேன்.

கதிர்.

""சொல்லுகதிர்?''

""மாமா... நேத்து நான் மன்கூல் ரோடு வழியா போய்க்கிட்டிருந்தேன். ரோடை க்ராஸ் செய்யணும். எனக்கு உடனே உங்க அட்வைஸ் ஞாபகத்துக்கு வந்தது. கொஞ்சதூரத்தில் இருந்த சிக்னல் கிராஸிங்கை அடைந்து அங்கிருந்து பச்சை கலர்சிக்னல் விழுந்தப்ப க்ராஸ் செய்து மறுபக்கம் போனேன். அங்கே நாலைஞ்சு பேர் கும்பலா நின்னுக்கிட்டிருந்தாங்க. என்ன விஷயம்னு எட்டிப் பார்த்தேன். அவங்க சிக்னல் இல்லாத இடத்தில் ரோடை க்ராஸ் செஞ்சவங்களாம். டிராஃபிக் போலீஸ்காரர் அவங்களுக்கு ஃபைன்போட்டுக்கொண்டிருந்தார். நல்லவேளை, நான்தப்பிச்சேன்'' என்றான்கதிர்.

""வெரிகுட்கதிர்!'' என்றேன் நான், சுரத்தில்லாமல்.

Tags : தினமணி கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT