தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குறைந்த உடல் எடையை அதிகரிக்க!

3rd Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

 

என் வயது 83. சாப்பாடு திருப்தியாக எடுத்துக் கொள்கிறேன்.  ஆனால் எடை குறைகிறது.  எனது எடை சில மாதங்களுக்கு முன்பாக 82 கிலோகிராம் இருந்தது.  தற்சமயம் 68 கிலோ கிராம் உள்ளது. மறுபடியும் எடை கூட என்ன செய்வது?

கே.வி.எஸ்.பாண்டியன், பரமக்குடி.

நிலம் மற்றும் நீரின் அம்சத்தை உள்ளடக்கிய உணவுப் பொருள்களை உண்ணும்போது, வயிற்றிலுள்ள  வெற்றிடமான பகுதியானது, அங்குள்ள நகரும் தன்மையுடைய வாயுவின்  உதவியினால், பசித்தீயின் அருகில் கொண்டு சென்று தகனத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து உதவுகின்றன.  

ADVERTISEMENT

தகனம்   நிதானமாகவும் அதேசமயம் சரியான விகிதத்திலும் செய்யப்படும் தறுவாயில்  வெளிப்படும் நிலம்  சார்ந்த குணங்களாகிய கனம், நிலைப்பு, கட்டு மற்றும் புஷ்டி ஆகியவையும், நீர் சார்ந்த குணங்களாகிய நெய்ப்பு, பிசுபிசுப்பு, பசைத்தன்மை, மந்தம் போன்றவையும்  ஒருங்கே சேர்ந்து , குடல் வழியாக உறிஞ்சப்பட்டு, அணுக்களின்  உள் பிரவேசிக்கப்பட்டு, உடல் போஷணைக்கான பங்கைப் பிரித்துத் திசுக்களை வளர்க்கின்றன.

உடல் புஷ்டியை நிலைநிறுத்தக் கூடிய  இந்த பாஞ்சு பெளதிக சித்தாந்தத்தில் எவ்விடத்திலும் தொய்வு ஏற்படாவண்ணம் உடல் செயல்படும்போது, உடலின் ஸ்திரத்தன்மையும், எடை குறையாத உடற்கட்டையும் மனிதர்கள் பெறுவதாக ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.

நெய்ப்பும், பிசுபிசுத்தன்மையும், பசைத்தன்மையும் உள் வாங்கப்படாமல் மலம் வழியாகவும், சிறுநீர் வழியாகவும் வெளியேறினால் உடல் வலுவானது குறைவதுடன், உடல் எடையும் குறைந்துவிடும்.  அவற்றை இழக்காமல், அணுக்களின் பரிணாம வளர்ச்சியை மேம்படுத்தித் தரும் சாமர்த்தியம், குடல்சார்ந்த வெற்றிடம்  வாயு, பசித்தீ ஆகியவற்றின் கைகளில் மட்டுமே இருப்பதால்,  நீங்கள் இந்த மூன்றையும் இந்த வயோதிகத்தில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறீர்கள்.

மேற்குறிப்பிட்ட மூன்றையும் சீராகப் பெறுவதற்கு, எண்ணெய் தேய்ப்பும்,  உடற்பயிற்சியும் பெரும்பங்கு வகிக்கின்றன.  காலையில் சூரியோதயத்திற்குப் பிறகு, நல்லெண்ணெய்யை இளஞ்சூடாக  வயிறு காலியாக உள்ள நிலையில் , தலை முதல் கால்வரை  தேய்த்து, குறைந்தது முக்கால் மணி நேரமாவது ஊற வைத்து, சிறு சிறு அங்க  அசைவுகளைச் செய்து,  பின்னர்  வெதுவெதுப்பான நீரில் குளித்த பின்னர், நிலம் மற்றும் நீர் சார்ந்த இனிப்புப் பொருட்களாகிய நெய்,  சர்க்கரை, வாழைப்பழம், பலாப் பழம், அதிமதுரம், பால், கரும்புச்சாறு, தேன், உலர் திராட்சை போன்றவற்றில் கிடைத்ததைக்   காலை உணவாகக் கொள்ளலாம். 

எண்ணெய் தேய்ப்பினாலும், அங்க அசைவுகளாலும், வெந்நீரில் குளித்ததாலும், உச்சம் தொட்டிருக்கக் கூடிய பசித்தீயால் இவற்றின் வரவானது வரவேற்கப்பட்டு,  அவற்றில் பொதிந்துள்ள சத்தான குணப்பகுதிகளின் சேர்க்கையால் அணுக்களின் வளர்ச்சிப் பணியானது தொய்வின்றி காப்பாற்றப்படும்.

இதை அறிந்தே நம் முன்னோர், காலையில் எண்ணெய் தேய்த்து வெதுவெதுப்பான கிணற்று நீரை மொண்டு குளிப்பதைக் கிராமங்களில் செய்தனர்.  மறந்துபோன இந்த வாழ்க்கைமுறை உங்களுக்கு நல்ல பலனை 
அளிக்கலாம்.

வயோதிகத்தில் வெளிப்புற எண்ணெய்ப் பூச்சுகளும், உட்புற நெய்ப் பிரயோகங்களும் வாயுவின் சீற்றத்தை அடக்கி ஆள்பவையாக இருக்கும். அந்த வகையில்  தங்களுக்கு வெளிப்புற தைலமுறைகளில் மஹாமாஷ தைலம், பலா அஸ்வகந்தாதி தைலம் போன்றவை சிறந்தவை.  உட்புற நெய் மருந்துகளில் காலையில் இந்துகாந்தம் க்ருதம் எனும் மருந்தும், மாலையில்  விதார்யாதி  எனும் நெய் மருந்தும் உதவக்கூடும்.

எதற்கும் ஓர் ஆயுர்வேத மருந்துவரின் ஆலோசனையையும் ஏற்று அவர் கூற்றுப்படி இம்மருந்துகளின் அளவை தீர்மானித்துக் கொள்ளலாம்.

குடலில் வறட்சியை  ஏற்படுத்தி  வாயுவின்  நடையை துரித்தப்படுத்தும்  வாயு மற்றும் ஆகாய ஆதிக்கம் கொண்ட  கொண்டைக்கடலை,  சிறுதானியங்கள். வேர்க்கடலை போன்றவற்றை சூடு ஆறிய நிலையில் நீங்கள் தவிர்க்க வேண்டும்.  

(தொடரும்)

Tags : தினமணி கதிர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT