தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நெஞ்சு எரிச்சல், வயிறு உப்புசம், கண் எரிச்சல்!

21st Feb 2021 06:00 AM | பேராசிரியர்எஸ். சுவாமிநாதன்

ADVERTISEMENT

 

என் சகோதரருக்கு வயது 62 ஆகிறது.கடந்தஓர் ஆண்டாக அவருக்கு சாப்பாடு சாப்பிட்ட பிறகு சிறிது நேரத்தில் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.சில சமயம் வயிறு உப்புசமாக உள்ளது. காலை நேரத்தில் தலை சூடாக இருப்பதாகவும், தலையில் வியர்வை மற்றும் கண் எரிச்சல் உள்ளதாகவும் கூறுகிறார்.இவற்றை எப்படிக் குணப்படுத்துவது?

ரவி, திருச்சி.

இதயத்திற்கு மேற்பகுதி அனைத்தும் குளிர்ந்த குணமுடைய கபதோஷத்தின் இருப்பிடப் பகுதிகளாகும்.அவ்விடத்தில்எரிச்சல், சூடு,வியர்வை போன்ற அறிகுறிகள் காணப்பட்டால்,வயிற்றின் மத்தியப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் பித்ததோஷத்தின்வரவைக் குளிர்ந்த பகுதியில் பெற்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது. அதை அங்கிருந்து அப்படியே வெளியேற்றுவதா? அல்லது அதன் குணங்களை அடக்கக் கூடிய மருந்துகளைப் பயன்படுத்துவதா?என்பது உடல் வலு சார்ந்த விஷயமாகும்.

ADVERTISEMENT

நல்ல வலுவான உடல் உள்ளவர்களுக்கு வெளியேற்றக் கூடிய சிகிச்சை முறைகளால், பித்தம் நீக்கப்பட்டுவிட்டால், அது மறுபடியும் சீற்றமடையக் கூடிய குணங்கள் இல்லாததால், அது சிறந்த சிகிச்சை முறையாகும்.உடல் வலுவானது குறைவாக உள்ளவர்களுக்கு, அடக்குமுறை சிகிச்சையே நல்லது. இருந்தாலும், சிறு சிறு காரணங்களால், அக்குணங்கள் மீண்டும் தூண்டப்பட்டு, அவருக்குள்ள பிரச்னைகள் மீண்டும் வந்துவிடும்.

வெளியேற்றக் கூடிய சிகிச்சைமுறைகளில் பேதியை ஏற்படுத்தும் திருவ்ருத் லேகியம் சிறந்தது. காலையில் பசி உள்ள நிலையில் இம்மருந்தை சுமார் இருபத்து ஐந்து கிராம் வரை எடுத்து, வெறும் வயிறாக இருக்கும்போது நக்கிச் சாப்பிட , நீர் பேதியாகி, பித்ததோஷத்தின் சீற்றமடைந்தகுணங்கள் தலைப்பகுதியிலிருந்து கீழ் இறக்கப்பட்டு வெளியேறிவிடும்.இந்த சிகிச்சையைத் தினமும்செய்ய வேண்டிய அவசியமில்லை.பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை செய்தாலே போதுமானது.இடைப்பட்ட நாட்களில் உணவில் இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவைகளைத் தூக்கலாகச் சேர்ந்துக் கொள்ள வேண்டும். மனதில் கோப, தாபங்கள் ஏற்படாத வண்ணம் அமைதியாகவாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.ஆயுர்வேத ஆராய்ச்சிகளின் மூலம் தற்சமயம் வெளிவந்துள்ள அல்சன்ட் என்ற சிரப்பை, 15 மி.லிட்டர் காலை, மதியம் உணவுக்குப் பிறகும், ஆக்டிவ் அன்டாஸிட் எனும் சிரப்பை இரவு உணவுக்குப் பிறகும் சாப்பிடுவது நல்லது.

அடக்குமுறை சிகிச்சையில் கபதோஷத்துடன் உறவு கொண்டாடிக் கொண்டிருக்கும் பித்த குணங்களை மட்டுப்படுத்த, குடூச்யாதி எனும் கஷாயத்தை காலை, மாலை வெறும் வயிற்றில், சிறிது தேனுடன் கலந்து சாப்பிடலாம்.மேற்குறிப்பிட்ட சிரப் மருந்துகளையும் உணவுக்குப் பிறகு
சாப்பிடலாம்.

தலைக்கு சந்தனாதி தைலத்தையோ, அமிருதாதிதைலத்தையோதேய்த்துக் குளிக்கப்பயன்படுத்தலாம்.

உணவுக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்தும் பித்தம், நாளடைவில்புண்களை ஏற்படுத்தும் அபாயமிருப்பதால்,அவ்வாறு ஏற்படாமலிருக்க, இரவில் படுக்கும் முன் திரிபலை சூரணத்துடன் சிறிது அதி மதுரத்தூள் கலந்து, தேன், நெய் குழைத்துச் சாப்பிட உகந்தது.இதனால் கண்எரிச்சல், தலைச்சூடு, வியர்வை போன்றஉபாதைகளும் நன்கு குறையும்.

சியவனப்பிராசம், சந்தனாதி லேகியம், விதார்யாதி கிருதம், அப்ரக பஸ்மம், சங்க பஸ்மம், வராடிகா பஸ்மம், ப்ராம்ஹ ரசாயனம் போன்ற ஆயுர்வேத மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி உங்கள் சகோதரர் சாப்பிட உகந்தது.

(தொடரும்)

Tags : நெஞ்சு எரிச்சல் வயிறு உப்புசம் கண் எரிச்சல்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT