தினமணி கதிர்

இந்தியாவின் முதல் பனிக்குடில் உணவகம்!

பனுஜா

காஷ்மீரில் ஸ்ரீநகருக்குச் சற்று தள்ளி உள்ள குல்மார்க், பனிச்சறுக்கு விளையாட்டுக்கும், பனி படர்ந்த மலைகளுக்கும், பெயர் பெற்றது. அங்கு இந்தியாவின் முதல் "பனிக் குடில் கஃபே' ஜனவரி 25 -இல் திறக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய "பனிக் குடில் உணவகம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

கரோனா காலம் என்பதால் சுற்றுலாப்பயணிகள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். ஊரடங்கு வெகுவாகத் தளர்த்தப்பட்டிருந்தாலும், காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் குறைந்துள்ளது.

உள்ளூர் மக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அதிக அளவில் ஈர்க்க , இந்தப் "பனிக் குடில் உணவகம்' திறக்கப்பட்டுள்ளது. கோலஹோய் பனிச் சறுக்கு சதுக்கத்தில் இந்தப் "பனிக் குடில் உணவகம்' உள்ளது.

ஃபின்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பனிக் குடில் உணவகங்கள் பல உள்ளன. இந்தியாவில் இது போன்ற ஓர் உணவகம் திறக்கப்படுவது இதுவே முதல்முறை. பனிக் குடில் உணவகத்தில் கூரை முதல், மேஜை, நாற்காலி பெஞ்சுகள் அனைத்தும் பனிக்கட்டியால் செய்யப்பட்டுள்ளன.

பனி இருக்கை மீது மக்கள் எப்படி அமர்வார்கள்? ஐஸ்ஸின் ஜில்லிப்பில் எப்படி ஒருவர் அமர முடியும் ?

ஐஸ் இருக்கை மீது குளிர் தெரியாதவாறு கதகதப்பாக அமரவும், உணவு வகைகள் சீக்கிரம் சூடு ஆறாமல் இருக்கவும், இருக்கை, மேஜைகளில் ரோமங்கள் உள்ள ஆட்டு தோல் விரிக்கப்பட்டுள்ளது. ஆட்டுத் தோல் விரிக்கப்பட்டிருக்கும் இருக்கையில் பல மணி நேரம் அமர்ந்தாலும் பனிக்கட்டியின் குளிர் அமர்பவரைத் தீண்டாது.

ஒரே நேரத்தில் 16 பேர் வரை இந்த உணவகத்தில் உணவருந்த முடியும். வெளியில் உள்ள குளிரைவிட இந்தப் பனிக்குடிலில் குளிர் சற்று குறைவாக இருக்குமாம்! அந்தக் குளிரில் உணவு வகைகள் ஆவி பறக்க வழங்கப்பட வேண்டும். வேறு வழியில்லை.

இந்தப் பனிக் குடில் உணவகம் 15 மீஉயரமும், 26 மீ சுற்றளவும் கொண்டது. இதனைக் கட்டி முடிக்க 15 நாட்கள் ஆனதாம். இந்தப் பனிக் குடில் உணவகத்தில் உணவு அருந்த முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். எல்லா வகை உணவுகளும் படு சூடாகப் பரிமாறப்படும். பிப்ரவரிக்குப் பிறகு குல்மார்க்கில் பனி உருகத் தொடங்கும் என்பதால் "பனிக் குடில் உணவகம்' பிப்ரவரி 28 வரை மட்டுமே செயல்படும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பேருந்தில் ஏற முயன்றவா் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

கயத்தாறு அருகே 88 மது பாட்டில்கள் பறிமுதல்

ஜனநாயகத்தைக் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்: செல்வப்பெருந்தகை

திருச்செந்தூா் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

SCROLL FOR NEXT