தினமணி கதிர்

இந்த உலகம்... ஒரு மாயமான்!

ஜி. அசோக்


""சினிமா பார்ப்பவர்களை மட்டுமல்ல... அதைப் படைத்தவனையும் மாற்றிவிடும் என்பது உண்மை. "உன்னில் இருந்தே தொடங்குகிறது உலகம்' இல்லையா..? அப்படித்தான் என்னிலிருந்து இறங்கி, இந்த சினிமாவை அடைந்திருக்கிறேன். எனக்கான உலகத்தை நீங்களும் உங்களுக்கான உலகத்தை நானும், ஏதோ ஓர் புள்ளியில் வந்தடைந்துவிடுவோம்.'' நெஞ்சில் கை வைத்து பேசுகிறார் இயக்குநர் பாபு தமிழ். ஏற்கெனவே ஜீ.வி. படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி கவனம் ஈர்த்தவர். இப்போது "க்' படத்தின் இயக்குநர்.

"க்' எதன் குறியீடு... தலைப்பு என்ன சொல்ல வருகிறது....

சதா இரை தேடி அலையும் மானுடம், காகம் போல் கரையும் மனம். ஜனத்திரட்சி, நெரிசல் காடு, எப்போதும்பரபரப்பு, தாளாது விம்மும் எண்ணங்கள், தூக்கத்திலும் துரத்தும் தொலைக்காட்சி விவாதங்கள்... இன்னும் எவ்வளவோ இருக்கிறது இங்கே. இவற்றுக்கு நடுவே நானும் ஒரு சாராசரி மனிதன். இந்த உலகம்... ஒரு மாயமான். கனவுக்கும் எதார்த்தத்துக்குமான பயணம்.

நான் இந்த சாலையில் பார்க்கிற மனிதர்கள், குழந்தைகள், பெண்கள் எல்லோரும் என் கதை வழியாக உங்களை வந்து சேருகிறார்கள்.

நான் கதைக்காக வேற்று கிரகம் போகவில்லை. இதோ இப்போது பேசும் போது கூட உங்களிடம் ஒரு விஷயம் தட்டுப்படுகிறது. அது என் கதை வழியாகஉங்களின் பார்வைக்கே வரலாம். அது இல்லாமல், ஒரு படம் அந்த மொழி சார்ந்த சமூகத்தில் விவாதத்தை முன் வைக்கிறது என்றால், அது வெற்றியே. அந்த விதமாக அது எனக்கு மகிழ்ச்சி.

ஒரு படம் என்பது ஒரு விளக்கு போல. மழை, புயல், வெள்ளம் என எது வந்தாலும், அதை அப்படியே பொத்தி பாதுகாத்து ரசிகனிடம் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். அப்படித்தான் நான் இதைப் பார்க்கிறேன்.


வாழ்க்கை இங்கே மிகவும் எளிமையானது. விசித்திரமானது. அதுதான் இது. ஊர் பக்கங்களில் ஒரு ரகசிய வார்த்தையை மறைக்கும் போது, "க்' வைத்து பேசாதே என்போம். அதுதான் இது.

இங்கே இரு கதாபாத்திரங்களுக்குள் ஒரு "க்' வைத்து பேசப்படுகிறது. அது என்ன... அதன் பின்னணி என்னஎன்பதே படம்.

கதை எதன் பொருட்டாக நகர்ந்து வரும்...

விழுப்புரம் பக்கம் ஆற்றுப் படுகையில் கிடந்த ராட்சத பாம்பின் படிமங்கள்... கரூர் கலெக்டர் ஆபீஸ் பக்கம் கிடைத்த சோழர் கால நாணயங்கள்..... திருவாரூர் பக்கம் குக்கிராம் ஒன்றில் கிடைத்த புத்தர் சிலைகளுக்கும், நமக்கும் என்ன சம்பந்தம்... செஞ்சி ஆற்றங்கரையில் கிடைத்தது உண்மையிலேயே டைனோசர் முட்டைகள்தானா... கொள்ளிடம் அருகே ஒரே இடத்தில் கிடைத்த ஏராளமான முதுமக்கள் தாழிக்குள் என்ன இருந்திருக்கும். பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்லப்பட்ட நடராஜர் சிலையை மீட்டு வர இப்போதும் இந்திய வெளியுறவுத்துறை பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்... அன்றாட அரசியல் நிகழ்வுகளைத் தவிர்த்து நம் மூளைக்குள் தினந்தோறும் உருவாகிக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை.

அது மாதிரியான ஒரு சராசரி மனிதனின் வாழ்வுதான் கதை. இதை நம் சம காலத் தமிழ்ச் சூழலில் வைத்து பார்த்தேன். அதிலுள்ள முகமூடிகளை எளிமையான சகல மனிதர்களுக்கும் போய் சேர்க்கும் முயற்சியாக கை சேர்ந்திருக்கிறது. அன்பும் போராட்டமும் மட்டுமே இந்த மானூடத்தின் நிரந்தரம். அது ஒரு போதும் வற்றிப் போவதே இல்லை. சக மனிதனை நேசிப்பதுதான் வாழ்க்கை. எல்லா இழப்புகளையும் இட்டு நிரப்புவதற்கு மனசு மட்டுமே போதும்... போதும்..

குரு சோமசுந்தரம்.... என்ன விசேஷம்?

எல்லாமே மனதில் ஊறிக் கிடந்ததுதான். குரு சோமசுந்தரம் இந்த கதைக்கு பொருத்தமானவர். அதை அவரும் புரிந்து வைத்திருக்கிறார். அது இப்போதுதான் நகர்ந்து கைகளுக்கு வந்திருக்கிறது. எல்லா காட்சிகளையும் நடிப்பால் கையாளக் கூடிய நடிகர் வேண்டும். அதற்கு அவர்தான்... அவரின் திறமைக்கு இங்கே பல உதாரணங்கள் இருக்கிறது.

இந்தக் கதைக்கு பெரும் பொறுப்பு மிகுந்த நடிகர் தேவை என்பது முதல் விதி. நடிப்பை முழுத் தகுதியாக கொண்டவர் ஒருவர் இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்த போதுதான், அவர் உள்ளே வந்தார்.

அவர் வந்ததும் படம் இன்னும் அழகானது. எனக்கான வேலை வாங்கும் சிரத்தை குறைந்தது. வடிவாக்கத்தை மட்டுமே நான் பார்த்துக் கொண்டேன். மற்றவற்றை அவராகவே பார்த்துக் கொண்டார். அவருடன் வேலை பார்த்த கணங்கள் அத்தனையும் அற்புதம். வாழ்க்கை மேல் அவர் கொண்டிருக்கிற பற்றும், நடிப்பின் மீது அவருக்கு இருக்கிற வெறியும் ஆச்சரியமாக இருக்கிறது. அதே போல் யோகேஷ், அனிகா இருவரும் புதுமுகங்கள். எல்லோருக்கும் ஒரு பொறுப்பு வந்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறேன். கடைசி அரை மணி நேரம் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத பரபரப்பு இருக்கிறது.

ஜீவி.... நல்ல படத்துக்கான தகுதிகள் கொண்ட களம்... அதை ஏன் நீங்களே இயக்கவில்லை...

எனக்கு அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. அந்த படத்தின் இயக்குநர் கோபி என் நண்பர். பத்து ஆண்டு கால நட்பு. அவருக்கு படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த கதை அவரிடம் அப்போது இல்லை. என்னிடம் இருந்தது. கேட்டார். கொடுத்தேன். அவ்வளவுதான். நமக்கான இடம் நமக்கு கிடைத்தே தீரும். மகிழ்ச்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT