தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 50

சந்திரசேகர் அரசு அமைந்தது, மக்களவைத் தேர்தல், ராஜீவ் காந்தி படுகொலை, நரசிம்ம ராவ் அரசு பதவிக்கு வந்தது உள்ளிட்ட நிகழ்வுகளால் மண்டல் பிரச்னையும், அயோத்தி பிரச்னையும் அநேகமாக மறக்கப்பட்டன என்றே சொல்லலாம். நரசிம்ம ராவ் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையும், உலகமயமாக்கல் போன்ற சந்தைப் பொருளாதாரத்தை நோக்கிய நகர்வுகளும் ஊடக விவாதமானதைத் தொடர்ந்து, ராமர் கோயில் பிரச்னை வலுவிழந்தது என்றுதான் அனைவரும் நினைத்தனர்.

1991-இல் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையில் காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தது என்றாலும் கூட, உத்தர பிரதேசத்தில் ஜனதா தளத்தையும், காங்கிரûஸயும் பின்னுக்குத் தள்ளி பாஜக ஆட்சியைக் கைப்பற்றி இருந்தது. 425 பேர் கொண்ட உத்தரபிரதேச சட்டப்பேரவையில் 221 உறுப்பினர்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் கல்யாண் சிங் தலைமையில் ஆட்சி அமைத்திருந்தது பாஜக.

மக்களவைத் தேர்தலிலும், தேர்தல் நடந்த 84 தொகுதிகளில் 51 தொகுதிகளை பாஜக கைப்பற்றி இருந்தது. காங்கிரஸால் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

மண்டல் கமிஷன் பிரச்னையால் காங்கிரஸின் வாக்கு வங்கி ஜனதா தளத்துக்குச் சென்றுவிட்டதால், முலாயம்சிங் யாதவ் தலைமையிலான ஜனதா தளம் இரண்டாவது பெரிய கட்சியாக 24 மக்களவைத் தொகுதிகளையும், 92 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் பெற்றிருந்தது.

தேசிய அளவில் அயோத்தி பிரச்னை பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், உத்தரபிரதேசத்தில் கல்யாண் சிங் அரசு அந்தப் பிரச்னை முக்கியத்துவம் இழந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் இறங்கியது. அயோத்தியில் மீண்டும் கரசேவை நடக்கும் என்கிற அறிவிப்பு வந்தபோது, அதன் அதிர்வலை இந்தியா முழுவதும் தாக்கத் தொடங்கியது. இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் ராமர் கோயில் கட்டுவதற்காகச் செங்கல் சேகரிப்பது என்கிற திட்டம் "விஸ்வ ஹிந்து பரிஷத்' அமைப்பால் அறிவிக்கப்பட்டது.

அசோக் சிங்கால், உத்தரபிரதேச முதல்வர் கல்யாண் சிங், பாஜக தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, எல்.கே. அத்வானி என்று நான் சந்திக்காத தலைவர்களே இல்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதில் அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல சட்டத்தை மீறி மசூதியை இடிப்பது, கோயில் கட்டுவது என்கிற எண்ணம் அவர்கள் யாருக்குமே இருக்கவில்லை என்பதை எனது பேட்டிகளில் நான் உணர முடிந்தது.

தில்லி செல்லும்போது எப்படி பிரணாப்தா, சந்திரசேகர், ஐ.கே. குஜ்ரால் ஆகியோரை நான் சந்திப்பது வழக்கமோ, அதேபோல லால் கிஷண் அத்வானியையும் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது சந்தித்து விடுவேன். எந்தவொரு பிரச்னை, விஷயம் என்றாலும் அவருக்கு அதில் தெளிவான, உறுதியான கருத்து இருக்கும்.

கருத்துத் தெளிவு, கொள்கையில் உறுதி, சிந்தனையில் தெளிவு இவை மூன்றிலும் சந்திரசேகர்ஜி, எல்.கே. அத்வானி இருவரிடமும் இருக்கும் ஆழம் நான் சந்தித்த வேறு எந்தத் தலைவர்களிடமும் பார்த்ததில்லை.

""அயோத்தியில் கோயில் கட்டுவது என்பது நிலத்தகராறு தொடர்பான பிரச்னை அல்ல. அது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. வேறு எந்த மதத்திலும் அவர்கள் நம்பிக்கைக்குரிய தெய்வத்தின் பிறப்பிடம் குறித்த சர்ச்சை நீதிமன்றத்துக்கு இழுக்கப்படுவதில்லை. ஏசுநாதர் அந்த இடத்தில்தான் பிறந்தார் என்பதற்கு ஆதாரமா இருக்கிறது? நம்பிக்கை. அந்த நம்பிக்கையைப் போலத்தான் ராமஜென்ம பூமியும்'' என்று அத்வானி எனக்களித்த பேட்டி அப்போது மிகப் பெரிய விவாதப் பொருளானது.

""சட்டத்திற்குப் புறம்பாகவோ, கலவரத்தின் மூலமோ அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை நாங்கள் விரும்பவில்லை. இது ஒரு புனிதமான நடவடிக்கை. அனைவரது ஒத்துழைப்புடனும்,சட்ட அங்கீகாரத்துடனும் அங்கே ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். சோமநாதபூரில் கட்டியதுபோல, அயோத்தியிலும் கோலாகலமாகக் கோயில் கட்ட வேண்டும் என்பதுதான் எனது ஆசை'' - இதுவும் கூட அதே பேட்டியில் எல்.கே. அத்வானி என்னிடம் தெரிவித்த கருத்து.

ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சிகள் வலியப் போய் வம்பை விலைக்கு வாங்கி பிரச்னைக்கு ஆளாக விரும்புவதில்லை. இஸ்லாமிய அமைப்புகளும் அயோத்தி பிரச்னை தீவிரமடையாமல் இருந்தால் போதும் என்றுதான் நினைத்தன. கடுமையான நிலைப்பாடு எடுப்பது சிறுபான்மை முஸ்லிம்களைப் பெரும்பான்மை ஹிந்துக்களிடமிருந்து அகற்றி நிறுத்திவிடும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியிலிருந்த முஸ்லிம் தலைவர்கள் கருதினார்கள்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த நான்கு தலைவர்கள், "நரசிம்ம ராவ் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நிலைமை விபரீதமாகக்கூடும்' என்று எனக்கு அளித்த பேட்டியில் எச்சரித்திருக்கிறார்கள் - அவர்கள் சந்திரசேகர், ஐ.கே. குஜ்ரால், ராமகிருஷ்ண ஹெக்டே, இந்திரஜித் குப்தா.

தில்லி ஃபெரோஷா ரோடில் ராமகிருஷ்ண ஹெக்டேக்கு ஒரு வீடு இருந்தது. அவர் தில்லியில் இருக்கிறார் என்பது தெரிந்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் என்னை எதிர்பார்த்ததுபோல உடனே வரச் சொன்னார்.

""காங்கிரஸ் என்ன செய்யப் போகிறதாம்? அயோத்தியில் கரசேவைக்கான ஏற்பாடுகள் மும்முரமாகத் தொடங்கி இருந்தும், ஏன் பிரதமர் அதுகுறித்து மெளனம் சாதிக்கிறார்? யாரையாவது பார்த்தீர்களா? ஏதாவது சொன்னார்களா?'' என்று கேட்டார்.

""காங்கிரஸ் தரப்பில் நான் யாரையும் சந்திக்கவில்லை. ஓரிருமுறை வி.என். காட்கிலை அக்பர் ரோடு பத்திரிகையாளர் சந்திப்பின்போது பார்த்தேன், அவ்வளவுதான்'' என்றேன்.

""பிரணாப் முகர்ஜி?''

""இல்லை. நான் அவரைப் பார்த்து ஒரு மாதமாகிறது. இப்போதெல்லாம் அவர் வெஸ்டர்ன் கோர்ட்டுக்கு வருவது குறைந்துவிட்டது. ஏன் என்று தெரியவில்லை. யோஜனா பவனில் அவரை சந்திக்க நான் முயலவில்லை.''

""எனது பேட்டியாக வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், நிலைமை கைமீறிப் போய்விடும் என்று பிரதமருக்கு உணர்த்த வேண்டும். நானும் சில பொது நண்பர்கள் மூலம் தகவல் தெரிவித்திருக்கிறேன். நீங்களும் நான் தெரிவித்ததாகத் தகவல் அனுப்புங்கள்'' அவரது பேட்டியை வெளியிட்டது மட்டுமல்லாமல், அதைப் பிரதமர் அலுவலகத்துக்கும் அனுப்பினேன். வி.என். காட்கில், புவனேஷ் சதுர்வேதி போன்றவர்களிடம் பிரதமரிடம் தெரிவிக்கும் படியும் சொல்வேன்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 19 ஆண்டுகளாகப் போகிறது. பல தவறான கருத்துகளும், புரிதல்களும் இன்னும் கூட தொடர்கின்றன. அந்த பரபரப்பான சூழலில் எல்லாத் தரப்பு அரசியல் தலைவர்களுடனும் தொடர்பில் இருந்தவன் என்பதால், அந்தத் தவறான புரிதல்களை நான் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

ராமகிருஷ்ண ஹெக்டே பேட்டி வெளியாவதற்கு முன்பே, பிரதமர் நரசிம்ம ராவ் தனது பாணியில் எல்லாத் தரப்பினரையும் நேரிடையாகவும், ரகசியமாகவும் தொடர்பு கொண்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் எடுத்தார் என்பதை நான் அறிவேன். அதிகாரிகள் தரப்பில் அது குறித்து எனக்கு அவ்வப்போது தகவல்கள் கிடைத்த வண்ணம் இருந்தன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் "ராம்' என்று பொறிக்கப்பட்ட செங்கற்களைச் சேகரித்து அனுப்புவதை ஒரு திருவிழாவைப்போல பாஜகவினரும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரும் நடத்தி வந்தார்கள். எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடாமல் இருப்பதற்கு என்ன செய்வது என்கிற ஆலோசனை அமைச்சரவை மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் நடந்து வந்தன.

மத்திய அரசு தேசிய ஒருங்கிணைப்புக் குழுவை (நேஷனல் இன்டக்ரேஷன் கவுன்சில்) கூட்டுவது என்று முடிவெடுத்ததற்குப் பின்னால், பிரணாப் முகர்ஜி, கே. கருணாகரன் இருவரின் ஆலோசனையும் இருந்ததாக என்னிடம் வி.என். காட்கில் தெரிவித்தார். இடதுசாரிக் கட்சிகளும் அதற்கு அழுத்தம் கொடுத்தன. முன்னாள் பிரதமர்களான வி.பி. சிங், சந்திரசேகர் இருவரிடமும் கலந்தாலோசிக்கப்பட்டது.

தேசிய ஒருங்கிணைப்புக் குழுவில் எதிர்க்கட்சியான பாஜக மட்டுமல்லாமல், உத்தரபிரதேச முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்ட எல்லா பாஜக முதல்வர்களும், தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று பிரதமர் நரசிம்ம ராவ் எதிர்பார்த்தார். தேசிய ஒருங்கிணைப்புக் குழுவில் எடுக்கப்படும் ஒருமனதான தீர்மானத்தின் அடிப்படையில் அயோத்தி கரசேவைப் பிரச்னையை சுமூகமாக எதிர்கொள்ளலாம் என்பது அவரது திட்டமாக இருந்தது.

ஆரம்பம் முதலே அத்வானியும், பாஜகவும் தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூட்டப்படுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் நிஜம். இடதுசாரிக் கட்சிகளின் நிர்பந்தத்தால்தான் தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது என்று கருதினார் அத்வானி. அவரைச் சந்திக்க பண்டாரா பார்க்கிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

""நான்காவது முறையாக அயோத்தி பிரச்னை குறித்து விவாதிக்க தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். அயோத்தி என்பது சிக்கலான ஒரு பிரச்னை. அதற்குப் பேச்சுவார்த்தை மூலமும், கலந்தாலோசனை மூலமும்தான் முடிவு செய்ய முடியுமே தவிர, விவாதத்தால் எந்தப் பிரயோஜனமும் கிடையாது. அவரவர் கருத்தை முன்வைப்பார்களே தவிர, அதனால் எந்த முடிவுக்கும் வர முடியாது'' - மிகத் தெளிவாகத் தனது நிலைப்பாட்டை என்னிடம் தெரிவித்தார் அவர்.

""அப்படியானால் நீங்கள் அதில் கலந்து கொள்வீர்களா, இல்லை புறக்கணிப்பீர்களா?''

""நாளை நாங்கள் அதுகுறித்து முடிவெடுப்பதாக இருக்கிறோம். கலந்து கொள்வதால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்பதுதான் எனது கருத்து.''
அவர் தெரிவித்ததுபோலவே, பாஜக செயற்குழு கூடி தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்தது. அதனால், உத்தரபிரதேச முதல்வர் கல்யாண் சிங் உள்பட யாரும் கலந்து கொள்ளவில்லை.

இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் அயோத்தியில் பாபர் மசூதி கட்டடத்துக்கு எதுவும் நேர்ந்து விடாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கி இருந்தது. அயோத்திக்கு அருகில் உள்ள ஃபைசாபாதில் தயார் நிலையில் ஹெலிகாப்டர்களுடன் ராணுவம் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது என்பதால், நரசிம்ம ராவ் அரசு மசூதி இடிக்கப்படுவதை தடுப்பதற்கு முன்கூட்டியே தயாராகவில்லை என்பது உண்மையல்ல.

ஜனவரி மாதம் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் பதவிக்காலம் முடிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார் ஹர்கிஷண்சிங் சுர்ஜித். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் இந்திரஜித் குப்தா. தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று உரக்கக் குரல் எழுப்பியவர்கள் அவர்கள் இருவரும்தான்.

பொருளாதாரக் கொள்கைகளில் கருத்துவேறுபாடு கொண்டிருந்தாலும், அயோத்தி பிரச்னையில் இடதுசாரிக் கட்சிகளும், ஜனதா தளம், மாநிலக் கட்சிகள் என்று நரசிம்ம ராவ் அரசுக்கு ஆதரவாக - பாஜக அல்லாத எல்லா கட்சிகளும் ஒன்று திரண்டன.

1992 நவம்பர் மாதம் 23-ஆம் நாள் தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தில்லியில் கூடியது. பாஜக புறக்கணித்ததால், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகள் அனைத்தும் ராமர் கோயில் கட்டுவதற்கு எதிரானவர்களாக மட்டுமே இருந்தன என்பது தெளிவு. அந்தக் கூட்டத்தில், மற்றவர்களில் இருந்து வேறுபட்டு, கரசேவைக்கு ஆதரவாகக் குரல் ஒன்று எழுந்தது. அது அன்றைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் குரல்.

ஜெயலலிதா கரசேவைக்கு ஆதரவாகப் பேசினார் என்பது மட்டும்தான் கூறப்படுகிறது. ஆனால், அவர் கூறிய முழுமையான கருத்து அதுவல்ல. அது மறைக்கப்பட்டது. தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் என்னதான் பேசினார் ஜெயலலிதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT