தினமணி கதிர்

வித்தியாசமான மெல்லிசைக்குழு!

22nd Aug 2021 07:35 PM | -எஸ். சந்திர மெளலி

ADVERTISEMENT

 

ரோட்டரி சங்கங்கள் கல்வி, மருத்துவம், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு என பல்வேறு வகைகளிலும் சமூகப்பணிகள் ஆற்றி வருவது நமக்குத் தெரியும். ஆனால், சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் ஒரு வித்தியாசமான சேவையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. இவர்கள் "இதயகானம்' என்கிற பெயரில் ஓர் இசைக்குழுவைத் தொடங்கி, மெல்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இதில் மொத்தம் சுமார் முப்பத்தைந்து பேர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அவர்களது மனைவியர்மற்றும் அவர்களின் பையன்களும், பெண்களும்தான். அந்த இசைக்குழுவின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் அந்தக் குழுவின் தலைவரானராமமூர்த்தி:

""பொதுவாக எங்கள் சங்கங்களின் மூலமாக செய்யப்படும் பல்வேறு வகையான சமூகப் பணிகளில் ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகள் செய்வதும் அடங்கும். அத்தகைய இல்லங்களில் இருப்பவர்களுக்கு விருந்தளிப்பது, இல்லங்களுக்குத் தேவையான பொருள்களை வழங்குவது போன்ற சேவைகள் வழக்கமாக எல்லாரும் செய்வதுதான். நாமே ஓர் இசைக்குழுவினை உருவாக்கி, முதியோர் மற்றும் ஆதரவற்றவர்கள் இல்லங்களுக்குப் போய் அவர்களுக்கு பொழுதுபோக்காக மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்தினால் என்ன? என்று தோன்றியது. அதன் விளைவுதான் "இதயகானம்' இசைக்குழு. ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினரில் இருந்து பாட்டு மற்றும் இசைக்கருவிகள் வாசிப்பதில் திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து, இந்தக் குழுவை 2010 -ஆம் ஆண்டு உருவாக்கினோம்.

மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஓர் முதியோர், ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று, சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மெல்லிசை நிகழ்ச்சிகள் வழங்குவோம். பாடகர்கள், பாடகிகள் தவிர எங்கள் குழுவில் புல்லாங்குழல், கிடார் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பவர்களும் உண்டு.

ADVERTISEMENT

ஒரு விசில் ஸ்பெஷலிஸ்ட் கூட இருக்கிறார். வழக்கமாக, முதியோர் இல்லங்களுக்குச் சென்றால், பழைய படப் பாடல்களை அதிகம் பாடுவோம். ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில் புதுப்படப் பாடல்களே அதிகம் இருக்கும். சில சமயங்களில், நேயர் விருப்பமாக சில பாட்டுக்களைப் பாடச் சொல்லுவார்கள். சில சமயங்களில், கர்நாடக இசை கீர்த்தனைகளைப் பாடும்படியும் கேட்பார்கள். மெல்லிசை நிகழ்ச்சி முடிந்தவுடன், வாய்க்கு சுவையான விருந்து அளிப்போம். அத்துடன், அந்த இல்லத்துக்குத் தேவையான கட்டில், பீரோ, நாற்காலிகள், டெலிவிஷன் என ஏதாவது பொருள்கள் தேவைப்பட்டால், அவற்றையும் வாங்கிக்கொடுப்போம்.

எங்களுடைய நிகழ்ச்சிகளின்போது எங்களுக்கு பல சமயங்களில் நெகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்பட்டது உண்டு. முட்டுக்காடு அருகில் உள்ள ஒரு மன நலம் குன்றியவர்களுக்கான இல்லத்தில் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தபோது, ஏராளமான இல்லவாசிகள் தங்களை மறந்து பாடல்களைப் பாடியபடியே, டான்ஸ் ஆடியதை மறக்க முடியாது. ஒரு முதியோர் இல்லத்தில் இருந்த பாட்டிகள் எல்லோரும் எழுந்து ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்கள்.
ஒரு முறை, சென்னையின் பெரிய அரங்கம் ஒன்றில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, பல்வேறு இல்லங்களில் இருந்தும் சிறுவர், சிறுமியரை அழைத்துக் கொண்டு வந்திருந்தோம். அவர்களில் ஒரு பையன், " எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட ஆசையாக இருக்கிறது!' என்று சொல்ல, உடனே அரங்கத்தில் இருந்த அத்தனை குழந்தைகளும் ஐஸ்கிரீம் சாப்பிட ஏற்பாடு செய்தோம் . கடந்த சிலபல மாதங்களாக, லாக்டவுன் எங்களைக் கட்டிப் போட்டிருக்கிறது. ஆனாலும் எங்கள் குழுவினர் பாடல் ஒத்திகையை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்கிறார் ராமமூர்த்தி நம்பிக்கையோடு.

ADVERTISEMENT
ADVERTISEMENT