தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 47

1st Aug 2021 06:00 AM | கி. வைத்தியநாதன்

ADVERTISEMENT


பிரணாப் முகர்ஜி திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்தபோது, அதன் சிறப்பு அதிகாரியாக இருந்தவர் இப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் ஆலோசகர்களில் ஒருவருமான ஜெயராம் ரமேஷ். பொருளாதாரம் குறித்த புரிதல், நிர்வாகத் திறமை மட்டுமல்லாமல், ஜெயராம் ரமேஷ் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளரும்கூட.ஜெயராம் ரமேஷின் பங்களிப்பும், பரிமாணமும் பலருக்கும் தெரிவதில்லை. அறிவுஜீவிகளின் வட்டாரத்தில் மட்டுமே அவர் குறித்துத் தெரிந்திருக்கிறது. அவரது கல்வித் தகுதிகள் பற்றிக் கேள்விப்பட்டால் வாய் பிளக்க வேண்டும்.

மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.டெக். தேர்ச்சி பெற்று, அமெரிக்கா சென்று பொது நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர் அவர். மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

இந்தியா திரும்பிய ஜெயராம் ரமேஷ், 1983-இல் அரசுப் பணியில் சேர்ந்து பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றி இருக்கிறார். வி.பி. சிங், நரசிம்ம ராவ் ஆட்சியில் பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த அனுபவத்தின் பின்னணியில், பிரணாப் முகர்ஜி திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்தபோது, சிறப்பு அதிகாரியாகப் பணியேற்றார். 1996 - 98 ஐக்கிய முன்னணி ஆட்சியில், நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தின் ஆலோசகராகவும் அவர் பணியாற்றினார் என்பதையும் குறிப்பிட
வேண்டும்.

ஜெயராம் ரமேஷ் நிர்வாகியும், அரசியல்வாதியும் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், சிந்தனாவாதி, பத்திரிகையாளர். "கெளடில்யா' என்கிற பெயரில் அவர் எழுதும் பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வழிகாட்டும் தன்மையுடையவை. எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெயராம் ரமேஷ் எழுதும் ஒவ்வொரு புத்தகமும் ஆவணப் பதிவு. இந்திரா காந்தி குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் குறித்தும், சமீபத்தில் வி.கே. கிருஷ்ணமேனன் குறித்தும் அவர் எழுதியிருக்கும் புத்தகங்கள் காலம் கடந்தும் அவரை நினைவில் நிறுத்தும்.

ADVERTISEMENT

நான் முன்பே கூறியதுபோல, பிரணாப் முகர்ஜி திட்டக் கமிஷன் துணைத் தலைவரான பிறகு அவரை அடிக்கடி சந்திப்பது குறைந்துவிட்டது. அப்படியே சந்தித்தாலும், வெஸ்டர்ன் கோர்ட்டில் ஓய்வெடுக்கவும், படிக்கவும் அவர் வரும்போது சந்திப்பதுதான் அதிகம். வெஸ்டர்ன் கோர்ட்டுக்கு அவர் எப்போதாவது வரும்போது சந்திக்கலாமே என்கிற எதிர்பார்ப்பில்தான் நான் அடிக்கடி வெஸ்டர்ன் கோர்ட்டுக்குச் செல்வதை வழக்கமாக்கினேன் என்று சொன்னால்கூடத் தவறில்லை.

இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தில்லிக்குச் சென்றாலும், அங்கே சென்றுவிட்டால் தொடர்ந்து இரண்டு மூன்று வாரங்கள் வரை இருந்துவிடுவது வழக்கம். வெஸ்டர்ன் கோர்ட்டில்தான் ஜி.கே. மூப்பனார் தங்கியிருப்பார் என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். மூப்பனாரின் அறைக்கு நேர் எதிராக, கட்டடத்தின் வலது பகுதியில் பிரணாப்தாவின் அறையை ஒட்டினாற்போல இருந்தது மக்களவை உறுப்பினராக இருந்த கே.வி. தங்கபாலுவின் அறை.

தங்கபாலு இருக்கும்போதும் சரி, அவர் இல்லாத நேரத்திலும் சரி, அவரது அறைக்கு உரிமையுடன் சென்று வரும் அனுமதியை எனக்கு அவர் வழங்கி இருந்தார். தமிழக அரசியலில் கே.வி. தங்கபாலுவின் பங்களிப்பு என்பது வித்தியாசமானது, குறிப்பிடத்தக்கது. அது குறித்து இன்றைய தலைமுறையினர் பலருக்கும், ஏன் காங்கிரஸ்காரர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான்.

1969 காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு பெரும்பாலான தலைவர்களும், தொண்டர்களும் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸில் தங்கி விட்டனர். இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸில் சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம், ஈ.வெ.கி. சம்பத், கவிஞர் கண்ணதாசன், மரகதம் சந்திரசேகர் போன்றவர்கள் இருந்தாலும் தொண்டர்கள் மத்தியில் அதற்கு செல்வாக்கு இருக்கவில்லை.

1969-இல் சேலம் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸின் வட்டார கமிட்டி தலைவராக தங்கபாலு தனது அரசியலைத் தொடங்கி, தாலுகா தலைவர், மாவட்டத் தலைவர் என்று வளர்ந்து 1981-இல் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக அவர் உயர்ந்ததன் பின்னணி அசாதாரணமானது.

காமராஜரின் மறைவுக்குப் பின்னால், பல காங்கிரஸ் தலைவர்கள் முக்கியத்துவம் இழந்தனர். பலர் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் வழியாகத் தலைவர்களானவர்கள்தாம் ப. சிதம்பரம், எம். அருணாசலம், கே.வி. தங்கபாலு ஆகியோர்.

1984-இல் எம்ஜிஆரின் நேரடி தலையீட்டுடன் தங்கபாலு மாநிலங்களைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளிலும் இளைஞர்களுக்கான அமைப்புகள் இருந்தாலும், இளைஞர் காங்கிரஸ் தலைவராகத் தங்கபாலு பதவியேற்ற பிறகுதான், திமுக உள்பட எல்லா கட்சிகளிலும் இளைஞர் அமைப்புக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது என்பதுதான் நிஜம்.

இளைஞர் காங்கிரஸ் காலத்திலிருந்து தொடங்கிய கே.வி. தங்கபாலுவுடனான தொடர்பும், நெருக்கமும் எனக்கு இன்றுவரை தொடர்கிறது என்பது மட்டுமல்ல, நாங்கள் இருவரும் பலமுறை இணைந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பன்மார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

வெஸ்டர்ன் கோர்ட்டிலுள்ள தங்கபாலுவின் அறையில் வைத்து எனக்குக் கிடைத்த நண்பர்தான், தஞ்சை மருதுபாண்டியர் கலைக் கல்லூரியின் நிறுவனரும், தாளாளருமான மருது பாண்டியன்.

வெஸ்டர்ன் கோர்ட்டில் அப்போது இன்னொரு தமிழ்நாட்டுப் பிரமுகரும் தங்கி இருந்தார். அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த "எஸ்கேடியார்' என்று ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தவரால் மரியாதையுடன் அழைக்கப்பட்ட எஸ்.கே.டி. ராமச்சந்திரன் வெஸ்டர்ன் கோர்ட்டின் மாடி அறை ஒன்றில் தங்கி இருந்தார். அவர் மாவட்டத் தலைவராக இருக்கும்போது அம்பாசமுத்திரத்தில் காங்கிரஸ் ஊழியர் கூட்டங்களில், அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன் என்பது மட்டுமல்ல, நான் எனது மாணவப் பருவத்திலேயே அறிமுகமானவன்.

நெல்லை மாவட்டத்தில் எங்களுக்குள் தொடங்கிய அந்த உறவு, தில்லியில் நாங்கள் சந்தித்துக் கொண்டபோது மேலும் வலுவடைந்தது. "ஜென்டில்மேன்' என்கிற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தேடி அலையத் தேவையில்லை. எஸ்கேடியாரைப் பார்த்தாலே போதும். "தினமணி' ஆசிரியர்கள் டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் குறித்து அவர் பேசத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது. பின்னாளில் நான் "தினமணி' ஆசிரியராவேன் என்றும் அப்போது எனக்குத் தெரியாது.

டி.எஸ். சொக்கலிங்கத்தைத் தென்காசி சொக்கலிங்கம் பிள்ளை என்றும், ஏ.என். சிவராமனை ஆம்பூர் சிவராம ஐயர்வாள் என்றும்தான் எஸ்கேடியார் குறிப்பிடுவார். இப்போது அந்த உரையாடல்களை நினைவுகூரும்போது சிரிப்பு வருகிறது. சென்னை மாவட்டக் காங்கிரஸ் தலைவர்கள் பற்றியும், அவர்கள் தொடர்பான சம்பவங்கள் குறித்தும் எஸ்.கே.டி. ராமச்சந்திரனுடன் மணிக்கணக்காகப் பேசி நான் தெரிந்து கொண்ட செய்திகள் ஏராளம்.

கே.டி. கோசல்ராம், ஏ.பி.சி. வீரபாகு, லூர்தம்மாள் சைமன், ராஜாத்தி குஞ்சிதபாதம், எஸ். செல்லப்பாண்டியன், தென்காசி சட்டநாதக் கரையாளர், சிதம்பரம் பிள்ளை, அப்துல் மஜித், கோமதி சங்கர தீட்சிதர், சங்குமுத்துத் தேவர், ஆர்.எஸ். ஆறுமுகம் உள்ளிட்ட பல தலைவர்கள் குறித்து பல சுவாரஸ்யமான செய்திகளை எஸ்கேடியார் தெரிவித்திருக்கிறார்.

திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 1962 தேர்தலில் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், அதற்கு முதல்வராக இருந்த காமராஜர் வகுத்த வியூகம் குறித்தும் எஸ்கேடியார் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன். அடிமட்டத் தொண்டர்களைத் தட்டிக் கொடுத்தும், அரவணைத்தும் திறம்படக் கட்சியை வழிநடத்தும் திறமை படைத்த எஸ்கேடியார், தேர்தல் அரசியலில் தோல்வியாளர் என்பதுதான் சோகம்.

1971, 1977 சட்டப்பேரவைத் தேர்தல்களில் கடையநல்லூரிலிருந்தும், ஆலங்குளத்திலிருந்தும் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய எஸ்.கே.டி. ராமச்சந்திரன், மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஜி.கே. மூப்பனார்தான் காரணம். அதைக் கடைசிவரை நன்றியுடன் நினைவுகூர்ந்தார் அவர்.

பட்டம், பதவி என்று எது வந்தாலும் எளிமையாக இருப்பது எப்படி என்பதை எஸ்.கே.டி. ராமச்சந்திரனிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். நிறையப் படிப்பார். அவரால் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அந்த எதிர்ப்பையும் கோபத்தையும் வெளியில் காட்ட முடியாமல் அடக்கி வைத்திருந்தார். அதையெல்லாம் சொல்வதற்கு நான் வடிகாலானேன். அதனால் அவருக்கு என்னைப் பிடிக்கும்.

வெஸ்டர்ன் கோர்ட்டில் அடிக்கடி சந்திக்காவிட்டாலும், எப்போதாவது சந்திக்கும் பிரமுகர் ஜி.கே. மூப்பனார். அதிகம் பேசமாட்டார் என்பது வெளித்தோற்றம். பேசத் தொடங்கினால் அவரைப் போல கலகலப்பான மனிதரை சந்திக்க முடியாது. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் அரவணைப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு அங்கீகாரம் ஏற்படுத்தித் தருவதிலும் குறியாக இருந்த ஒரே ஒரு தமிழகக் காங்கிரஸ் தலைவர் அவராகத்தான் இருக்கும்.

மூப்பனாரைப் பல தடவைகள் பேட்டி எடுத்திருக்கிறேன். எப்போது பேட்டி எடுத்தாலும் எந்தவித முன்னேற்பாடோ, தயாரிப்போ இல்லாமல் சரளமாகப் பதிலளிப்பதில் அவர் சமர்த்தர். ஒருசில வார்த்தைகளில் மிகத் தெளிவாகத் தனது கருத்துகளை அவரால் சொல்லிவிட முடிகிறது என்பதைப் பார்த்து நான் பிரமித்திருக்கிறேன்.

மூப்பனாரை நான் வெஸ்டர்ன் கோர்ட்டில் சந்தித்ததைவிட காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திலும், சென்னை மயிலாப்பூர் வாரன் சாலையிலுள்ள அவரது வீட்டிலும்தான் அதிகம் சந்தித்திருக்கிறேன். பிரணாப் முகர்ஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்பதுதான் அவர் எனக்குத் தரும் மரியாதைக்குக் காரணம் என்பதை நான் அறிவேன். அதற்கும் மேலாக எங்களது நெருக்கத்துக்கு இன்னொரு காரணம், சஞ்சய் காந்தியுடனான தொடர்பு.

ஜனதா ஆட்சிக் காலத்தில்தான் அவர் முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் இணைந்துவிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்தார். தில்லிக்கு அவரும் புதிது; நானும் புதிது.

தில்லியில் எனக்கு அறிமுகமான முக்கியமான தலைவர்களில் ஒருவராக ஜி.கே. மூப்பனார் இருந்தார். அவரிடம் தமிழில் பேச முடியும் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கும் என்னைப் பிடித்திருந்தது.

சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி அப்போது "சூர்யா' என்கிற ஆங்கில மாதமிருமுறை இதழை நடத்தி வந்தார். அதில் மூப்பனாரின் எனது பேட்டி விரிவாக வெளிவந்தது. அதைப் பார்த்துவிட்டு, அவரை அழைத்துப் பாராட்டியவர்கள் எனக்கு ஏற்கெனவே அறிமுகமான பிரணாப் முகர்ஜியும், 1977-இல் முதல்வராகப் பதவியேற்று ஒரே மாதத்தில் பதவி இழந்த கே. கருணாகரனும் மட்டுமல்ல, சஞ்சய் காந்தியும்கூட.

"சூர்யா' இதழை மக்கள் விரும்பிப் படித்தார்களோ இல்லையோ, தில்லியில் இருந்த எல்லா முக்கியத் தலைவர்களும் சந்தா கட்டி வாங்கிப் படித்தார்கள். சஞ்சய் காந்தியைப் பார்க்கப் போகும்போது, திமுகவினர் முரசொலியும் கையுமாக அறிவாலயத்தில் வளையவருவதுபோல, "சூர்யா' இதழுடன்தான் இருப்பார்கள். அதனால் அனைவராலும் மூப்பனாரின் அந்தப் பேட்டி படிக்கப்பட்டிருந்தது.

தில்லி காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் என்னைப் பிரபலமாக்கியதில் அந்தப் பேட்டியின் பங்கு மகத்தானது. அந்தப் பேட்டிக்குப் பிறகு, முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எனக்குப் பேட்டி தருவதற்குக் காத்துக் கொண்டிருந்தார்கள். மூப்பனார்ஜியிடம் சிபாரிசுக்கு வந்தவர்கள் கூட உண்டு. அதை அவரே என்னிடம் சொல்லிச் சிரித்திருக்கிறார்.

ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு முக்கியமான பிரமுகர் மட்டும், எனக்குப் பேட்டி தர மறுத்தது மட்டுமல்ல, தொடர்ந்து பலமுறை அணுகியபோதும் உடன்படவில்லை.

Tags : கி.வைத்தியநாதன் K Vaidiyanathan பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் pranab mukherjee
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT